குட்டுவன் கடலைத்தாண்டி
குட்டுவன் கடலைத்தாண்டி

ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது இப்பிரபஞ்சம் என்றும் இறுதியில் ஒரு கனவின் வழி உரைத்துப்போகிறார். கிட்டத்தட்ட பைபிளின் கடைசி நூலான ‘வெளிப்படுத்தின சுவிசேஷத்திற்கு இணையானதொரு படிமக்கனவு.
ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான் நீதியார் செய்த தவம் என்கிறது ஒளவைக்குறள். தனது 51வது வயதில் போரும் அமைதியும் (1869), ஆன்னா காரனீனா (1877) எனும் இரு நாவல்களை எழுதிய தல்ஸ்தோய், தான் எதையும் சாதிக்கவில்லை, வாழ்க்கை அர்த்தமற்றதென எண்ணலானார். அப்போது ‘நான் யார்’ எனும் சுயசரிதையின் மூலம் தன் தேடலைப்பற்றியும், தான் கண்டறிந்தவற்றையும் எழுதினார். 1882ல் ரஷிய சஞ்சிகையில் வெளியானாலும் பிறகு ‘வாக்குமூலம்’ என 1884ல் ஜெனீவாவில் பிரசுரமானது. அந்நூல் தனக்குள்ளான விசுவாசம் சார்ந்த மனப்போராட்டங்களை, ஆதியிலிருந்து பல மகான்களால் தேடப்பட்ட அல்லது அத்தேடல்களின்வழி மகான்களான, வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளினூடே தன்னறிதலைப் பகிர்ந்துகொண்டார். அவரது மெய்ஞானத் தேடலின் சுருக்கம்.
தன் மெய்வழிப்பாதையில் ஆர்தர் ஷோப்பனவர், சாக்கியமுனி புத்தர், சாக்ரடீஸ், பழைய ஏற்பாட்டின் சாலமன் ஆகியோரை எதிர்கொண்டார். பழைய ஏற்பாட்டின் நீதிமொழிகளில் சாலமனின் ‘எல்லாம் விருதா’ எனும் கூற்றையே ஆரம்பத்தில் அவரால் உணர முடிந்தது. அவ்வறிதல் கசப்பானதாகவே இருந்தது. உண்மையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குள் செல்வதாய் உணர்ந்தார்.
அதன் சாரத்தைப் பேசுகிறார். ‘ஒன்றுமின்மை பற்றிய நமது அச்சமே வாழவேண்டுமெனும் அவாவாகப் பரிணமிக்கிறது. ஒருவிதத்தில் நிஜமென உணரப்படும் இப்பிரபஞ்சமேகூட ஒன்றுமின்மையாகத்தான் திகழ்கிறது என்று உற்றறிந்தார் தல்ஸ்தோய். சாலமன் கூறுகிறான், ‘சூரியனுக்கீழே மனிதனின் அத்தனை உழல்வுக்குமான லாபம்தான் என்ன? ஒரு சந்ததி கழிய அடுத்தது தழைக்கிறது. எனினும் பூமி என்றைக்குமாய் நீள்கிறது. இங்கு எதுவுமே புதிதல்ல.’ இம்மாமனிதர்களைப் போன்றே நானும் எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்கும் காரண காரியங்களுக்கும் உட்பட்டும் அப்பாற்பட்டும் இங்கு எதுவுமில்லை என்பதே என் பதில்.
பகுத்தறிவால் கண்டதென்னவோ எல்லைக்குட்பட்டதை எல்லைக்குட்பட்டதுடனும் அதற்கு அப்பாற்பட்டதை அதனுடனும் ஒப்பிட்டு பொருண்மை பொருண்மையாகவும், ஆற்றல் ஆற்றலாகவும் அவா அவாவாகவும் எல்லைக்குட்பட்டது எல்லைக்குட்பட்டதாகவும், ஒன்றுமின்மை ஒன்றுமின்மையாகவுமே தொடர்கின்றன. அதுதாண்டிப் போக இயலவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாயினும் அவ்வாழ்வுக்கான நம்பிக்கை அதற்கான அர்த்தத்தையும் வாழ்வதற்கான சாத்தியத்தையும் பெற்றுத்தருவதாக அறிந்தேன் என்கிறார்.
‘செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாயுள்ள அறிந்தரனை ஆய்ந்து கொளல்’ என ஒளவைக்குறள் உரைப்பதுபோல் ஆரம்பம் முதலே எல்லைக்குட்பட்டதற்கும் அதற்கு அப்பாற்பட்டதற்கும் இடையிலான உறவை வார்த்தைக்குட்படுத்த முயல்வதே மானுடத்தின் தேடலாக இருந்துவருகிறது’ என்றறிகிறார்.
‘அனைத்தின் தோற்றம் போல, அனைத்தைப் பற்றிய விளக்கமும் மறைபொருளாய் எல்லையற்றதில் பொதிந்திருக்க வேண்டுமென்பதை நானறிவேன். எனினும் தவிர்க்கவியலாமல் உய்த்ததுணர முடியாத நிலைக்கு ஆளாவேன் என்பதால் அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. உய்த்ததுணர முடியாதவை அப்படியே இருக்கட்டுமென்றே விரும்புகிறேன். நுண்ணறிவு அத்தனை திடமானதல்ல என்பதால் அல்ல (அது திடமானதுதான் ஆனால் அதற்கு அப்பால் அதுபற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை). ஆனால் நுண்ணறிவு எல்லைக்குட்பட்டது என்பதால்தான். உய்த்ததுணர இயலா தருணங்கள் வாய்க்கையில் அது காரணகாரியங்களின் தேவையைக் கொண்டதாக இருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருத்தல் கூடாது என்பதாலேயே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’
வெறும் அறிவின் வழியன்றி உணர்வின் வாயிலாகவும் மெய்ஞானப் பயணம் தொடர்தல் சித்தர்வழி. திருமந்திரம் பாடலொன்று ‘வெளியில் வெளிபோய் விரவிய வாறும், அளியில் அளிபோய் அடங்கிய வாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்தெளியும் அவரே சிவசித்தர் தாமே’ என்கிறது. பிரபஞ்ச உணர்வு வெளியில் வியாபித்து அன்பில் நெகிழ்ந்தடங்கி ஞானப் பேரொளியில் அமிழ்ந்து தெளிந்துணரும் சித்தரே அவராகிறார்.
ரூமி பாடுகிறார்:
ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு அன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும்
புலப்படுவதாய் இல்லை.
அவ்வகண்ட பரப்பின் வெளியில்தான் தல்ஸ்தோய் எனும் மகானும் உலவுகிறார்.
நிகழ்வொன்றுக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்
மகாமேகவனத்தின் கொடிவீட்டில் அமர்ந்தபடி, இலங்கையின் வரலாற்றில் மாறாப்பெருமையும், முக்கியமும் பெற்ற பண்டுகாபய மன்னனின் வாரிசான மூத்தசிவன் தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்களை எண்ணி காத்துக்கொண்டுருந்தார். மூத்தசிவனுக்கு 10 புதல்வர்களும் 2 புதல்வியரும் இருந்தனர். மரபுரிமையின் பிரகாரம் தந்தைக்கு பின்பு தலை மகனையே ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும். எனினும் இங்கு அவ்வாறு நிகழவில்லை. அநுராதபுர ஆட்சியின் வரலாற்றில் அவருக்கிணையான அமைதியான ஆட்சியை பிறிதொரு மன்னரும் மேற்கொண்டதில்லை. 60 வருடங்களாக தன்னுடைய ஆட்சியில் நிலவிய அமைதியும், சௌபாக்கியமும் தனக்கு பின்னும் தொடர்வதற்கு உரியதோர் அரசியல் வாரிசை ஆட்சியில் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டிருந்ததை மூத்தசிவன் உணரத்தலைப்பட்டார். தன் மைந்தருள் திறமையும் அறிவும் மிக்கவனான தீசன் எனும் இரண்டாவது புதல்வனை அடுத்த அரசனாக பிரகடனம் செய்து மூத்தசிவன் தன்னுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக்கொண்டு இறையடி சேர்ந்தார்.
கி.மு.307 இன் மார்கழி பூர்ணிமை அன்று தீசன் இலங்கையின் புதிய மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். தீசனின் ஆட்சியில் மக்கள் சொல்லுமளவுக்கு எந்த குறைகளும் இல்லாது இனிதாக வாழ்ந்து வந்தனர். தீசனின் ஆட்சியில் இலங்கை தீவின் பல பகுதிகளிலும் சிறப்பான நன்னிமித்தங்கள் தோன்றின. பல்லாண்டுகாலமாக நிலமகளின் மடியில் புதையுண்டிருந்த உலோகங்களும், மாணிக்கங்களும் தன்னியல்பாக வெளிப்பட்டன. செல்வங்கள் நிறைந்த பெரும் நாவாய் ஒன்று சூறைக்காற்றால் அடிக்கப்பட்டு சிதைவுண்டு இலங்கையின் கரைகளை அடைந்தது. தீவின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து தெற்கு திசையில் இரண்டு யோஜனா தொலைவில் அமைத்திருந்த சத்தாமலை எனும் பகுதியில் தேர்த்துலாவின் தடிப்பை கொண்ட தங்க,வெள்ளி,பலவர்ண பூக்களின் நிறத்தில் விளைந்த மூன்று பெரும் மூங்கில்கள் தோன்றின. கயா, ஹாயா, ரதா, அமலகி, அங்குலி, வைத்தக, கும்பக், வளைய, பரகதிக எனும் எண்வகை முத்துக்களும் ஒரே நாளில் கரையொதிங்கின. இதனை கண்ட மக்கள் இவ்வனைத்து செல்வங்களையும் ஒன்று திரட்டி அனுராதபுரத்திற்கு கொண்டுவந்து மன்னன் தீசனுக்கு அன்பளித்தனர். அவற்றை மனமுவந்து வாங்கிக்கொண்ட தீசன் அச்செல்வங்களின் மதிப்பை உணர்ந்து அவற்றை தன்னுடைய மனதுக்கினிய நண்பனுக்கு அளிப்பதே பொருத்தமானதாக அமையும் என எண்ணினான். அந்நண்பன் உலக வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் பெரும் சக்ரவர்த்தியான அசோகர்.
அசோகரை சந்தித்து பரிசில்களை கையளிப்பதற்காக விசேட தூதுக்குழு ஒன்று ஒதுக்கப்பட்டது. அசோகருக்கும் தனக்கும் நிலவிய நட்பினை மனதில் நிறுத்தி, அக்குழுவின் தலைவனாக தன்னுடைய சொந்த மருமகனும் முதன்மை அமைச்சனுமான மகா அரிட்டனை நியமித்தார். மேலும் அரசின் பிரதம புரோகிதர், அரசின் தனாதிகாரி, அமைச்சர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவாக அது அமைந்தது. மூவகை இரத்தினங்கள், சத்தாமலையில் இருந்து பெறப்பட்ட அரசுதேருக்கான மூன்று மூங்கில் துலாக்கள், வலம்புரி சங்குகள், எண் வகை முத்துக்கள் மற்றும் மேலும் பல செல்வங்களுடன் தூதுக்குழுவானது ஜம்புகோளப்பட்டினத்தின் (தற்போதைய யாழ்ப்பாணம்) துறையில் இருந்து பயணப்பட்டனர்.
பதினான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்து, மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் பாடலிபுத்திரத்தை அடைந்தனர் தீசனின் தூதுக்குழுவினர். லங்காபுரியில் இருந்து தன் அன்பு நண்பன் அனுப்பிய அனைத்து பரிசல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட அசோக சக்ரவர்த்தி தூதுக்குழுவினர்க்காக தனிமாளிகை ஒன்றை ஒதுக்கி விருந்தினரை சிறப்பாக கவனித்து கொண்டார். அடுத்துவந்த நாட்களில் தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மகா அரிட்டனுக்கு ‘சேனாபதி’ என்ற பட்டத்தையும், பிராமனருக்கு ‘புரோகிதர்’ பட்டத்தையும், தனாதிகாரிக்கு ‘தண்டநாயகன்’ பட்டத்தையும், அமைச்சருக்கு ‘சேதி’ பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். ஐந்து மாத காலம் பாடலிபுத்திரத்தில் தங்கிய அரிட்டனின் குழுவினர் நாடு திரும்பும் போது அசோகர் தீசனுக்காக பட்டாபிஷேக வஸ்துக்களை பரிசில்களாக அனுப்ப முடிவு செய்தார். அதன் பிரகாரம் யாக் மாட்டின் மயிரால் செய்யப்பட்ட பீலிவிசிறி, மகுடம், உடைவாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, காதணிகள், சங்கிலிகள், பொற்குடங்கள், சந்தனக்கட்டைகள், உயர் பட்டாலான துவாய்கள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத்தைலங்கள், செம்மண், கங்கைநதி நீர், அனோத்தை ஏரி நீர், தங்கப்பாத்திரங்கள், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், நூற்றியறுபது மூட்டை மலையரிசி என பல்வேறு பரிசில்கள் தயார்செய்யப்பட்டன. இவற்றுக்கு மேலாக தீசனுக்காக மௌரிய அரசகுலத்தில் பிறந்த இளவரசி ஒருத்தியும் பரிசாக வழங்கப்பட்டது அவர்கள் நட்பின் உறுதியை வெளிப்படுத்தி காட்டியது. இந்த பரிசில்களுடனும், தீசனுக்கான ஒரு தனிப்பட்ட செய்தி ஓலையுடனும் அரிட்டனின் குழு தாமிரலிப்தி (தமியிற்றியா) துறையில் இருந்து புறப்பட்டு கடல்வழியாக தாய்த்தேசம் திரும்பினார்கள்.பாடாலிபுரத்தில் இருந்து மீண்ட அரிட்டன் தீசனை சந்தித்து அசோகரின் ஓலையை கையளித்தான். அவ்வோலை இலங்கையின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை உருவாக்கவுள்ளதை தீசனோ, அரிட்டனோ அறிந்திருக்கவில்லை. ஓலையை பிரித்த தீசன் அவற்றில் பொதிந்திருந்த வார்த்தைகளின் மீது கண்களை ஓட்டினான்.
“நான் புத்தரின் அடிமை, அவரின் தர்மத்திலே சரணடைந்தவன். மனிதருள் சிறந்தவனே! நீயும் புத்தம்,சங்கம்,தர்மம் எனும் மும்மணிகளை ஏற்று அவரிடம் சரணடைவாயாக”
கலிங்க யுத்தத்தின் பின் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த அசோகர் பௌத்த மதத்தை தழுவினார். அது தன்னளவில் ஏற்படுத்திய பல மாற்றங்களை உணர்ந்து பௌத்தத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பலநாடுகளுக்கு தர்ம மஹா மாத்ராக்கள் எனும் தூதுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் ஒரு அங்கமாகவே இலங்கைக்கான இந்த செய்தியும் காணப்பட்டது. உடனடியாக எந்த முடிவையும் எடுக்க விழையாத தீசன் இதுகுறித்தான ஆலோசனையை தள்ளிவைத்தான். அசோகரின் பரிசில்களை கொண்டு மீண்டும் மாகுடதாரண விழாவை நடத்த நன்னாள் குறிக்கப்பட்டது. மௌரிய குலா இளவரசியை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பின்பு, அசோகர் தீசனுக்கு வழங்கிய ‘தேவநம்பிய’ என்ற பட்டதுடன் மௌரிய முறையின் படியே முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் ஆட்சிக்கட்டில் முதல் முறையாக மௌரிய அரசவம்சம் நிலைகொண்டது இந்நிகழ்வுக்கு பின்னேயாகும். அன்றில் இருந்து அவன் தேவநம்பிய தீசன் எனவே அனைவராலும் அறியப்பட்டான்.

தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்தமும், இன்னும் சில பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர். வைகாசி மாத பௌர்ணமி தினமொன்றில் தேவநம்பிய தீசன் நாற்பதாயிரம் பேர்கொண்ட பெரும் பரிவாரத்துடன் மிசாகபர்வதத்தின் (மிகிந்தலை) அடிவாரத்திற்கு வேட்டையின் பொருட்டு விஜயம் செய்திருந்தார். விதியின் வலிமையை வெல்லும் ஆற்றல் மானுடருக்கு அரிது, லங்காபுரியின் வரலாற்றில் பாரிய மாற்றத்தை உருவாக்க விதியானது அன்று மாரீசன் என மாயமான் உருக்கொண்டது. மிரளும் மணிவிழி கொண்ட அந்த மானை தன் வில்லுக்கு இறையாக்குவதன் பொருட்டு விரட்டிச்சென்றான் தீசன். மாரீசன் மாயமான் என அது கணப்பொழுதில் மின்னிமறைந்து ஓடியவண்ணமே இருந்தது. அரசனின் கைவில்லில் இருந்து தன்னுயிரை காக்க அம்மான் அம்பத்தாலா சிகரத்தை அடைந்தது. எண்ணித்துணிந்த கருமத்தை நிறைவுற்றத விரும்பிய மன்னனோ மானை தொடர்ந்து சிகரத்தை அடைந்தான்.

*மன்னர் மூத்தசிவனின் ஆட்சிக்காலத்திலேயே மகாமேகவன பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவிற்கான நிலம் அரண்மை யானைகளால் தெரிவுசெய்ப்பட்டவுடன், ஆகாயத்தில் கருமேகங்கள் பல சேர்ந்து மக்கள் காணாத பெரும் மழையை கொட்டித்தீர்த்தது. இந்நன்னிமிதத்தை கருத்தில் கொண்டு அப்பூங்கா மகாமேகவனம் (பெரும் முகில்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வனம்) என பெயரிடப்பட்டது.
மழைக்காலத்தை கழிக்கும் எண்ணத்துடன் சேத்திய பர்வதத்தில் தங்கியிருந்த மகிந்ததேரரை கண்டு அரிட்டனும் அவனது 55 தோழர்களும் பிக்குகளாக அபிடேகம் செய்துகொண்டனர். இலங்கையின் முதல் பிக்குசாசனம் அமைக்கப்பட்டது. அங்கு பிக்குகள் மழைக்காலத்தை கழிக்க 32 கற்குகைகள் கட்டப்பட்டது. சிலகாலத்தில் மகிந்தரின் முயற்சியால் கயாவில் இருந்து புத்தரின் தாடையெழும்பு, பிச்சைப்பாத்திரங்கள் என்பன இலங்கைக்கு பெறப்பட்டன. புத்தரின் தாடையெழும்பை கொண்டு இலங்கையின் முதல் தாதுகோபமான தூபாராம தூபி அமைக்கப்பட்டது.

புத்தர் ஞானம் அடைந்த போதிமரத்தின் கிளையை பெற்றுவர தீசன் தனது அமைச்சனும், முதல் பிக்குவுமான அரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் பாடாலிபுரத்துக்கு சென்றது. சங்கமித்ரா பிக்குனியின் தலைமையில் வெள்ளரசு கிளை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் 18 பிக்குனிகள், 18 அரசகுலத்தவர்கள், 18 பிரபுக்கள், 8 பிராமணர்கள், 8 வர்த்தக குடும்பங்கள், யாதவர்கள், நெசவாளர்கள் என பெரியதொரு குழு இலங்கையை அடைந்தது. ஜம்புகோலத்தை அடைந்த பிக்குனியின் கப்பலை தேவநம்பிய தீசன் தானே சென்று வரவேற்றான்.

அரசன் தானே வெள்ளரசு கிளையை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தான். அனுராதபுரத்தின் தெற்கு வாயில் வழியாக மேகவன வளாத்திற்குள் கொண்டுவரப்பட்ட போதிக்கிளை 16 அரச பிரதானிகளால் மகிந்தர் நிர்ணயித்த இடத்தில் நடப்பட்டது. போதிமரம் செழித்து வளர்ந்ததும் நாட்டின் எட்டு பகுதிகளுக்கு அதன் கிளை கொண்டு சென்று நடப்பட்டது. மகாராணி அனுலாவும் அவளின் 500 தோழிகளும் சங்கமித்ரா மூலம் பிக்குனிகளாக அபிடேகம் செய்துகொண்டு இலங்கையில் பிக்குனி சாசனத்தை ஏற்படுத்தினர்.
ஈழத்தீவை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறான். “கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே” என்பதற்கு பொருந்தி தீசனின் தனிப்பட்ட முடிவினால் இலங்கையின் முழுவரலாறும் மாற்றி அமைக்கப்பட்டது.
தகவல்கள் உதவி : மகாவம்சம்
உறவொன்று எனக்கென்று
ஊரெல்லாம் சொல்ல
எனக்கான தங்கை அவள் !
சுடு சுடு
பேச்சில்
குடும்பத்தின் உறவில்
தன்னலம் இன்றி
உடன்பிறந்த உறவை
தங்கமாய் உயர்த்தும்
சொப்பனக்காரி அவள் !
சிந்திக்கவும் தெரிந்தவள்
சித்தரிப்பையும் புரிந்தால்
எங்கள் குடும்பத்தின்
தாய்மை அவள் !
வீட்டின்
ரகசியங்களை
ரகசியமாய் சொல்லி
சகோதர பாசத்தை
ரகசியமாய் தன்
நாங்கு சுவருக்குள்
புதைத்து வைத்திருக்கும்
பாசக்காரி அவள் !
அண்ணனோ தம்பியோ
இவளின் உலகம்
தாய்மை இருக்கும்
இவள் உலகம்
எங்கள் வாழ்வில்
எங்கள் தந்தைக்கு
பிறகு
எங்கள் குடும்பத்தை
விரல் பிடித்து
நடத்திய
இரண்டாவது ஆண்
என் தங்கை அவள் !
-பங்கிரையன்-
பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது.
பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது.
புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம்.
பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும். சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆகியன சிறுவழிப் பிரிவுகளாகும். பெருவழிப் பிரிவுகள் சீனா, ஜப்பான், திபெத் போன்ற நாடுகளுக்குப் பரவின. சிறுவழிப் பிரிவுகள் தென்னிந்தியாவில், பர்மாவில், இலங்கையில் பரவின.
துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கும் பௌத்த சமயத்தின் உயர் வாய்மைகள் ஆகும். துக்க நிவாரணமே நிர்வாணம் எனப்படும் நிறைநிலை ஆகின்றது. துக்க நிவாரணத்திற்கு எட்டு வழிகளைப் பௌத்தம் காட்டுகிறது. நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய இவ்வெட்டும் துக்க நிவாரணத்திற்கான வழிகள் ஆகும்.
பௌத்த சமயத்தில் ஐவகை நெறிகள் கடைபிடிக்க நெறிப்படுத்தப்படுகிறது. அவை கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, விலக்கப்பட்ட காலங்களில் உண்ணாமை, ஆடல் பாடல் கூத்துகளை நாடாமை, ஒப்பனை செய்யாமை, அதனுடன் இருக்கைகளைப் பயன்படுத்தாமை ஆகியனவாகும்.
கௌதமன் என்ற இளவரசன் ஞானத்தைத் தேடி அடைந்ததன் வாயிலாக பௌத்தம் என்ற தத்துவ நெறி ஆளுமை பெற்றது. “புத்தர் கி.மு. 573இல் பிறந்தார் என்றும், கி.மு. 563 இல் பிறந்தார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. புத்தர் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வைகாசி மாதம் முழுமதி நிறைந்த நன்னாளன்று போதிஞானம் பெற்றார்” என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. புத்தர் கி.மு. 573இல் பிறந்தார் என்று வைத்துக்கொண்டால் கி.மு. 538 ஆம் ஆண்டளவில் ஞானம் பெற்றார் என்பது உறுதியாகும்.
கௌதமர் துறவு நெறியைக் கைக்கொள்ளுதல், ஆசிரியரைச் சார்ந்து தத்துவ விளக்கம் பெறுதல், நோன்பிருத்தல் போன்ற பல செயல்களைச் செய்தும் தாம் தேடியதை அவரால் பெற இயலவில்லை. சமணம், ஆசீவகம், வைதீக மத குருக்களை அண்டி நோன்பிருந்து உடலை வருத்தித் துக்கத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டார். இருப்பினும் ஒருபயனும் கிடைக்கவில்லை. தானே தன் முயற்சியின் அடிப்படையில் ஆன்மா பற்றியும், மனிதர்களின் முடிவு பற்றியும், உலகம் பற்றியும் தெரிந்து கொள்ளப் பெரிதும் சிந்தித்தார்.
நெரஞ்சரா அல்லது நைரஞ்சரை என்று அழைக்கப்படும் என்ற ஆற்றின் கரையில் உருவெலா என்ற இடத்தில் அவர் தனிமையில் சிந்திக்கத் தொடங்கினார். அவரின் சிந்தனை ஊண் உறக்கம் இன்றி இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்தன. இது நாற்பத்தொன்பது நாட்கள் தொடர்ந்ததாகவும் குறிக்கப்பெறுகிறது, அவர் ஒற்றைச் சிந்தனையில் ஆழ்ந்தார். பகலும், இரவும் உண்ணாமல், துயிலாமல் துக்க நீக்கத்திற்கான வழி யாது எனத் தேடினார். இருபத்தொன்பதாவது நாளில் புத்தர் தெளிவான காட்சிகள் சிலவற்றைக் கண்டார்.
போதி விருஷத்தினடியேயிருந்த நாட்களுள் ஒரு நாளிரவில் புத்தர் தியானஞ் செய்கையில் முதல் யாமத்திற் செய்த தியானத்திற் பழம்பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. இரண்டாம் யாமத்திற் செய்த தியானத்தில் அப்பொழுதுள்ள பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. மூன்றாம் யாமத்திற் செய்த தியானத்தில் துவாதச நிதானரூபமாகிய ஏது நிகழ்ச்சி அவருக்குத் தெரியவந்தது. நான்காந் தியானத்திற் சூரியன் உதியா நிற்கையில் முழுவதும் அவருக்குத் தெரியவந்தது என்று அவர் ஞானம் பெற்ற அனுபவநிலை குறிக்கப்பெறுகிறது.
உடலுக்கு நோயும் நோய்க்குக் காரணமும், நோயின் நீக்கமும், நோய் நீக்கும் வழியும் உளவாதல் போல, துக்கம் என்பதும் அதன் காரணமும் துக்க நீக்கமும் அவை நீக்கும் வழியும் உள. … துக்கம், துக்கத் தோற்றம் (சமுதய);, துக்க நீக்கம் (நிரோத), துக்க நீக்க நெறி (மார்க்க என்னும் வாய்மை) நான்கும் உள. இவற்றை ஒப்புக் கொள்ளாமல் மெய்ப்பொருளைத் தேடுதல் பொருளற்றதாகும். என்பதும் புத்தர் கண்ட உண்மையாகின்றது.
உலகப் புலனின்பங்களை நாடும் வைதிக நெறிக்கும், புலனின்பங்களைக் கடுமையாக ஒறுக்கும் சமண நெறிக்கும் இடைப்பட்டதான நடுவழி ஒன்றைத் தேர்ந்து, மனித குலம் முழுவதையும் நேசிக்கும் அன்பும் அருளும் பரிவுணர்வும் மிக்க புது நெறியை புத்தர் உபதேசித்தார் என்று புத்தர் கண்ட நெறி மதிப்பிடப்பெறுகிறது.
புத்தர் நிர்வாணம் அடைந்த பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரின் வாழ்வு, கொள்கைகள் பற்றிய பதிவுகள் எழுதப்பெற்றன. இந்த நிலையில் அவ்வாறு எழுதப்பெற்ற பதிவுகள் வழியாக புத்தர் இவற்றைத்தான் கண்டிருக்க இயலும் என்ற முடிவிற்கே ஆய்வாளர்கள் வருகின்றனர்.
கௌதமர் ஞான அனுபவத்தைப் பெற்றதன் பெருமை கருதி மக்களால் பல பெயர்களால் அழைக்கப்பெற்றார். ஜினன், சர்வக்ஞன், சுகதர், ததாகதர், பகவன் என்பன அவற்றுள்ள சிலவாகும். கௌதம புத்தருக்கு முன்னதாக பல புத்தர்கள் இருந்ததாகவும் குறிப்புகள் பல கிடைக்கின்றன. சுத்த பிடாகத்தின் முதல் நான்கு நிகாயங்களில் கௌதம புத்தருக்கு முன் ஆறு புத்தர்கள் இருந்தனர் என்ற செய்தி காணப்படுகிறது. புத்தவமிசம் என்ற நூலில் 24 புத்தர்கள் இருந்ததாகக் குறிக்கப்பெறுகிறது. விபஸி, சிகி, வெஸபு, ககஸந்தா, கொன்னாகமன, கசப்பா ஆகிய அறுவரும் கௌதம புத்தருக்கு முந்தைய புத்தர்களாகக் கெர்ளளப்பெறுகின்றனர். இவர்களுள் கௌதமபுத்தர் பௌத்த சமயம் பரவ வழி செய்தவர் ஆவார்.
பௌத்த சங்கம்
புத்தர், தருமம், சங்கம் என்பன பௌத்த மும்மணிகள் ஆகும். இவற்றில் சங்கம் வழியாக பௌத்தம் பெருவளர்ச்சியைப் பெற்றது. புத்தர் ஞானக் காட்சியைப் பெற்ற பின்னர் தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடனுறைந்த ஐந்து துறவிகளைத் தேடிச் சென்றார். அவர்களுடன் தான் கண்ட நெறி குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் இறப்பை எய்தினர் என்றறிந்து புத்தர் வருந்தினார்.
கௌதம புத்தரின் கடந்த கால வாழ்வில் ஒருமுறை உருவேலாவனத்தில் தாம் கண்ட ஐந்து துறவியரை அவர் மீளவும் காணும் வாய்ப்பு தற்போது கிடைத்தது, அவர்களிடத்தில் தான் பெற்ற ஞானத்தைக் கூறினார். அவர்கள் முதலில் மறுத்தாலும் பின்னர் புத்த ஞானத்தை ஏற்று புத்தரின் சீடர்கள் ஆயினர். தன் கருத்துகளை மற்றவர்களிடம் விவாதித்து அவர்களைத் தம் கொள்கைக்கு உடன்படச் செய்தல் என்ற முறைமை இதுமுதல் பௌத்தத்திற்கு வாய்க்க ஆரம்பித்தது.
இவ்விவாதப் பண்பே புத்த சங்கம் தோற்றம் பெறக் காரணம் ஆகியது. இதன்பின் யசன் என்பவன் தன் 54 நண்பர்களுடன் புத்தரை அடைந்தான். அவரிடம் ஞானத்தைப் பயின்றான். அவரின் சீடனாகத் தான் ஆனது மட்டுமில்லாமல் தன் நண்பர்களையும் ஆக்கினான். தற்போது கௌதம புத்தரின் சீடர்களின் தொகை அறுபதை எட்டியது.
புத்தர் தன் சீடர்களுடன் உடன் உறைந்தார். அவர்களின் உள்ளும் புறமுமாகக் கலந்தார். சீடர்களுக்கு ஞான உரை வழங்குவது அவர்களுடன் உடன் உறைவது என்பது புத்தரின் அன்றாடச் செயல்பாடாகியது. புத்த சங்கம் மெல்ல வலுப்பெறத் தொடங்கியது. சீடர்களின் ஞானப் பரப்பலால் மேலும் அது தன் எல்லையை விரிக்கத் தொடங்கியது.
மழைக்காலத்தில் புத்தர் சீடர்களைத் தான் இருக்கும் தலைமை இடத்திற்கு வரச்செய்வார். தன்னுடன் சீடர்களை அமைத்துக் கொண்டு அவர்களிடம் ஞான போதனை செய்து வலுவூட்டுவார். தன் சமயப் பரப்பலில் எழும் ஏற்ற இறக்கங்களை மதிப்பிடுவார். மழைக்காலம் முடிவுற்ற பின் அடுத்து வரும் காலங்களில் அவர்களை சமயம் பரப்பும் கடமைக்கு அனுப்பிவிடுவார்.
எளிமையான வாழ்க்கை வாழ புத்த சங்கத்தார் கற்றுக்கொண்டனர். பிட்சை எடுத்து உண்ணும் வழக்கமே அவர்களின் உயிர் வாழ்க்கைக்கான உணவாக இருந்தது. அதிலும் ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டுமே பிட்சையாகப் பெற வேண்டும் என்பதும் அவர்களுக்கு விதிக்கப்பெற்றிருந்தது. பிட்சைக்குச் செல்லும்போது, இவர் வீட்டுக்குப் போகலாம், அவர் வீட்டுக்குப் போகக்கூடாது என்ற வேறுபாடு காட்டக் கூடாது. எல்லாருடைய வீடுகளுக்கு முன்பும் சென்று நிற்கவேண்டும். பிட்சை தரவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது.
புத்த பிட்சுகளுக்கு உரிமையுடையதாக அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களில் சில மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்ற நெறியும் வகுக்கப்பெற்றிருந்தது. பிட்சை பாத்திரம் ஒன்று, துணிவகை மூன்று, இடையிற் கட்டும் கச்சைகள், கந்தை தைக்க ஊசி, சவரக்கத்தி, நீர் வடிகட்டுகிற துணி ஆகிய எட்டு மட்டுமே கைக்கொண்டவர்களாக புத்தப் பிட்சுகள் வாழவேண்டும் என்பது கட்டளையாகும்.
மாமன்னர் அசோகர் புத்தரின் சீடராக விளங்கி அவரின் கருத்துகளை இந்தியா முழுவதும் பரவ வழி செய்தான். ஆசிய நாடுகளிலும் அவர் காலத்தில்தான் பௌத்தம் பரவ ஆரம்பித்தது. மன்னர் கனிஷ்கர் காலத்தில் மகாயான பௌத்தம் பரவலான தழுவலைப் பெற்றிருந்தது.
இந்திய அளவிலான பௌத்த நூல்கள்
கௌதம புத்தருக்குப் பின்பு, அவரின் சீடர்களான சாரிபுத்தர், மௌத்கல்யாயனர், காசியபர், ஆனந்தர் போன்றோர் பௌத்த சமயம் பரவ வழி செய்தனர். கௌதம புத்தருக்குப் பிற்காலத்தில் பௌத்த சமயக் கருத்துகள் தொகுக்கப்பெற்றன. அவை த்ரிபீடங்கள் என வகைப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பாலி மொழியில் எழுதப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.
1. வினய பீடகா
2. சுத்த பீடகா
3. அபிதம்ம பீடகா
இவையே த்ரிபீடங்கள் ஆகும். புத்த பிட்சுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றி உரைப்பது வினய பீடகா என்பதாகும். புத்தர் மற்றும் அவர்தம் சீடர்கள் வழங்கிய மதம், தர்மம் இவை பற்றிய கருத்துகள் சுத்த பீடகா எனத் தொகுக்கப்பெற்றது. இலக்கியச் செறிவுடன் எழுதப்பெற்றது அபிதம்ம பீடகா ஆகும்.
இவை தவிர வடமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் பௌத்த சமயத்தின் அடிப்படைகளாக விளங்குகின்றன. மகாவத்க, லலிதவிஸ்தாரா, புத்தசரிதம், ஜாடக மாலா இலங்காவதார சூத்திரம், சத்தரும புண்டரீகம், சுகாவதி வியூகம், கருணா புண்டரிகம், பிரஞ்யுபாரதமித சதகம் போன்றன இங்குக் குறிக்கத்தக்கன.
பௌத்தத்தின் அடிப்படைகள்
புத்தர் கண்டறிந்த நற்காட்சிகளின் அடிப்படையில் அவரின் பௌத்த சமயக் கொள்கைகள் அவரின் சீடர்களால் உருவாக்கப்பெற்றன. அவற்றில் குறிக்கத்தக்க சில பின்வருமாறு.
புத்தர் நிறுவிய பௌத்த மதம் நான்கு உன்னத உண்மைகளையும், எட்டு (அஷ்டாங்க) மார்க்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது. உலகில் நிறைந்துள்ள துன்பங்களுக்கு முதுமை, மரணம், பிறவி, மறுபிறவி, சிற்றின்பங்கள், மூவாசைகள். முற்பிறவிகளின் கர்மம், அறியாமை, உடல், உள்ளம் ஆகியவையே காரணம். நன்னெறி(சீலம்) , மனக்கட்டுப்பாடு (சமாதி), அறிவு (பிரக்ஞை) ஆகியவற்றின் அடிப்படையிலான அஷ்டாங்க மார்க்கம் மோட்சமளிக்கும். சரியான பேச்சு, சரியான செயல். அஹிம்சை, திருடாமை, பொய் சொல்லாமை, தகாத பாலுறவு தவிர்த்தல், கள்ளுண்ணாமை, சரியான வாழ்க்கை முறை ஆகியவை நன்னெறிகள். மனத்தில் தவறான எண்ணங்கள் தோன்றாமல் தடுத்தலும், மனம், மெய், மொழி மூலமாகத் தவறுகள் செய்யாமல் இருத்தலும், தியானத்தில் ஈடுபடுதலும் மனக்கட்டுப்பாடு ஆகும். நிஜத்தைச் சரியாக உய்த்துணர்தலும் சுயநலமின்மை, கருணை , பற்றறுத்தல் ஆகியவற்றைப் பற்றிய சரியான சிந்தனைகளும் அறிவு ஆகும். (கே.என். ராமச்சந்திரன், சமண சமய வரலாறும், விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்,ப. 408)
புத்தருடைய உபதேசங்களை நான்கு சீரிய உண்மைகளாக பௌத்த மரபு கூறுகிறது.(ஆர்யசத்யம்) அவை பொருள்களின் தோற்றம் சார்ந்த கொள்கையுடன் தொடர்புள்ளவை. (பிரதீத்ய-சமுத்பாதம்) உலகத் துன்பங்களுக்கு பன்னிரெண்டு காரணங்கள் இருப்பதாகவும், நிர்வாணம் பற்றியும் நான்கு உண்மைகளில் கூறப்பட்டுள்ளன. (துவாதச நிதானம்) பிரதீத்ய சமுதாயத்தில் உலகின் நிரந்தரமற்ற தன்மை(அநித்யதா வாதம்) ஆத்மா என ஒன்று இல்லை என்பதும் (அனாத்ம வாதம்) இரண்டும் இடம் பெற்றுள்ளன.நான்கு சீரிய உண்மைகளாவன: 1. எல்லாமும் துன்பத்தில் வாழ்ந்தவை 2. துன்பத்திற்கு ஒரு காரணம் உள்ளது. 3. துன்பத்தை அழிக்கமுடியும். 4. முடிவுக்கு ஒரு வழி உள்ளது. (தேவிபிரசாத் சட்டோபத்யாயா,இந்தியத் தத்துவ இயல்) என்ற கருத்து பௌத்த அடிப்படையை விளக்குவதாக உள்ளது.
பௌத்த சமயப் பிரிவுகள்
கால வெள்ளத்தில் பௌத்த சமயத்தில் இரு பிரிவுகள் தோன்றின. அவை ஹீனயானம், மகாயானம் என்பனவாகும். ஹீனயான பௌத்தம் புத்த கொள்கையில் சிறிதும் மாறுபடாதது. மகாயான பௌத்தம் புத்தர், போதி சத்துவர் ஆகியோரைச் சிலைகளாக வடித்து அவர்களைக் கடவுளாக வணங்கும் தன்மையது. இப்பிரிவினர் தவிர,
வைபாடிகர்கள்,
சௌத்திராந்திகர்கள்,
யோகசாரர்கள்,
மாத்யமிகர்கள்
என்ற பிரிவினரும் பௌத்த சமயம் சார் பிரிவினராக விளங்குகின்றனர்.
வைபாடிகர்கள்
காஷ்மீர் பகுதியில் விளைந்த பௌத்த சமயம் தனக்கான தனித்தன்மைகளின் வழியாக வைபாடிகம் என்னும் தனிப்பிரிவாக ஆனது. இவர்கள் காட்சி அளவையாக புற உலகைக் கண்டனர். அபிதம்ம பீடகாவிற்கு விபாஷா என்ற பேருரை செய்யப்பெற்றது. இப்பேருரை செய்யப்பெற்ற காலம் கனிஷ்கர் என்ற அரசரின் காலமாகும். இப்பேருரையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தோன்றிய பௌத்த சமயம் வைபாடிகம் ஆயிற்று. இவ்வைபாடிகமும் இருவகைப்பட்டதாக அமைந்தது. காஷ்மீரத்து வைபாடிகர், அபராந்தகர்கள் என்பன அவ்விரு பிரிவுகள் ஆகும். இவற்றில் அபராந்தகர்கள் என்பவர்கள் மேற்கு எல்லை சார்ந்தவர்கள் ஆவர்.
சௌந்திராந்திகர்கள்
குமாரலாதர் என்பவரால் உருவாக்கப்பெற்ற பௌத்த சமயப்பிரிவு சௌந்திராந்திகம் ஆகும். இவர்கள் உலகை கருதல் அளவையால் உணர்ந்தனர்.
யோகசாரம்
கருத்து முதல் கொள்கை, யோகம் பயிலல் ஆகியவற்றினைக் கொண்ட பௌத்தப் பிரிவு யோகசாரம் ஆகும். யோக சாரம் என்பது சமாதி நிலையைக் கூட்டுவிக்கிற அனுபவம் ஆகும். இது விஞ்ஞான வாதம் என்றும் கொள்ளப்பெறுகிறது. மைத்ரேய நாதர் என்பவர் இப்பகுப்பை முறைமை செய்தார்.
மாத்யமிகர்கள்
நாகார்ஜுணர் மூல மாத்யமகக் காரிகை என்ற நூலை எழுதினார். இதனுள் இச்சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவரின் சீடரான ஆரிய தேவர் சதுசாதிகா என்ற நூலை எழுதினார். மற்றொரு சீடரான சந்திரகீர்த்தி என்பவர் மாத்யமகக் காரிகை பெரிதும் விளக்கம் செய்தார். புத்தர் கண்ட நடுநெறியைப் பின்பற்றுபவர்கள் மாத்யமிகர்கள் ஆவர்.
இவ்வாறு சமயம் என்ற கட்டமைப்பில், பல்கிப் பெருகிப் பரவலாக மக்களிடம் செல்வாக்கு பெற்ற சமயமாக பௌத்த சமயம் விளங்குகிறது. இது தமிழகத்திற்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வந்திருக்க இயலும் என்று முடிவு காண்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி (மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப. 2). அசோகர் காலத்தில் மகிந்தர் என்பவரால் பௌத்தம் சமயம் தமிழகத்தில் பரவச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களால் ஏற்கப்பெற்ற கருத்தாகும்.
தமிழகத்திற்கு பௌத்த வருகை
தமிழகத்திற்கு பௌத்த மதம் சங்க காலத்திற்கு முன்பே பரவியிருந்திருக்கிறது. பௌத்த சமயக் கருத்துகளைப் பல சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடிகின்றனது. பக்குடுக்கை நன்கணியார், இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண்தேரையார், தேரதரன் முதலிய சங்க இலக்கியப் புலவர் தம் பெயர்கள் பௌத்தச் சார்பினவாகும். மோரியர், திகிரி, வம்ப மோரியர் போன்ற குறிப்புகள் சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்பெறுகின்றன. இதன் காரணமாக சங்க காலத்திலேயே பௌத்த சமயக் கூறுகள் காணப்படுகின்றன என்பது உறுதியாகின்றது. மேலும் சாத்தன் என்ற பெயரை உடைய புலவர்கள் பலர் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றனர். அவர்களின் பாடல்களும் பௌத்தச் சார்பினைப் பெற்றனவாக அமையத்தக்கன.
புறநானூற்றில் பல பாடல்களில் பௌத்த மதக் கருத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, 360, 363 ஆகிய பாடல்களில் பௌத்தமதக் கருத்துகள் காணப்படுகின்றன.
“பெரிது ஆராச் சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண்ணுணாவினாற் பெருங் கொடையா
கலுழ் நனையால் தண் தேறலா
கனி குய்யாற் கொழுந் துவையர்,
தாழ் உழந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலாக்கு ஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே பெரும் கேள் இனி நாளும்,
பலரே தகை அ.து அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று, அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி
அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு,
ஆழல்வாய்ப் புக்க பின்னம்,
பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே? (புறநா. 360)
என்ற பாடலில் பௌத்த சமயக் கருத்துகளில் முக்கியமான மூன்று சுட்டப்பெறுகின்றன. செல்வம் நிலையில்லாதது, உயிரில் பொருள், உயிருள் பொருள் இரண்டும் நிலையில்லாதவை, நாளம் ஒழுக்கத்தில் குறைவு படாது வாழவேண்டும்
ஐயாதிச் சிறுவெண்டேரையர் எழுதிய 563 ஆம் பாடலில் நிலையாமை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக
காடுபதியாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப்புழுகல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கலனாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறநா. 363) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 91)
என்ற பாடலில் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்றன சுட்டப்பெற்று, துறவு நெறி வலியுறுத்தப்பெறுகிறது.
புறநானூற்றுப் பாடலான
“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” (ஒளவையார், புறநானூறு, பாடல்எண்.187)
என்ற பாடல் தம்மபதத்தின் மொழி பெயர்ப்பு என்று ஆய்வாளர்களால் முடிவு கட்டப்பெற்றுள்ளது.
“நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும்
பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும்
எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ
அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”
என்ற தம்மபதப் பாடல் மேற்காட்டிய பாடலுடன் ஒற்றுமைப் பட்டு நிற்கிறது. அசோகரின் தர்ம சக்கரத்தைப் பற்றிய குறிப்பு புறநானூறு 175 ஆம் பாடலில் சுட்டப்பெற்றுள்ளது. இவ்வாறு புறநானூற்றில் பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய பாடல்கள் இருப்பதன் வாயிலாக சங்க காலத்தில் பௌத்தம் நிலைபெற்றிருந்தது என்பதை உணரமுடிகின்றது.
மதுரைக்காஞ்சியில் பௌத்தப்பள்ளி பற்றிய குறிப்பு தரப்பெற்றுள்ளது.
திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஒம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்|| (மதுரைக்காஞ்சி, 461- 468)
கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் இணைந்து தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பௌத்தப்பள்ளிக்குச் சென்ற காட்சியை மேற்கண்டவாறு மதுரைக்காஞ்சி குறிக்கிறது.
இவ்வகையில் மணிமேகலை காப்பியத்திற்கு முன் காலமான சங்க இலக்கியத்தில் பல்வேறு பௌத்த சமயக் கருத்துகள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழக மக்களிடத்தில் பௌத்தமதம் செல்வாக்கு பெற்றிருந்ததை உணரமுடிகின்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பரவலாக பௌத்த சமயக் கருத்துகள் விரவி வந்திருப்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். சோ.ந. கந்தசாமி, சு.மாதவன் ஆகியோர் தம் கருத்துகள் இங்கு நோக்கத்தக்கன. பாதபீடிகை வணக்கம் வள்ளுவரால் ஏற்கப்பெற்ற பௌத்த வழிபாட்டு நெறியாகும். மேலும் கள்ளுண்ணாமை, காமமின்மை, கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை ஆகிய ஐந்து திறக் கோட்பாடுகளையும் வள்ளுவர் தம் நூலில் வலியுறுத்தியுள்ளார். மேலும் தம்மபதக் கருத்துகளான சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைகோடல், நீத்தார் பெருமை, அவாவறுத்தல் ஆகியனவும் திருக்குறளில் காட்டப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருக்குறள் பௌத்த சமயக் கருத்துகளை உள்வாங்கி அதனை மக்கள் நலத்திற்கேற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது. இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஒப்புரவு அறிதல், கூடா ஒழுக்கம் போன்றனவும் பௌத்த சாயல் பெற்றன என்கிறார் மாதவன். இவ்வகையில் திருக்குறளில் பௌத்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்று துணியலாம்.
நாலடியாரில் பௌத்த சமயக் கருத்துக்களான பல் சமய அற ஒருமை, பேதைமை, நிலையாமை, ஐவகை நெறிகள் ஆகியன சுட்டப்பெற்றுள்ளன. சமண சமயத்தவர்களால் எழுதப்பெற்ற போதும் இதனுள் பௌத்த நெறிகளும் காட்டப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம் ஆகியவற்றிலும் பௌத்த சமய பஞ்சசீலக கொள்கைகள் வலியுறுத்தப்பெற்றுள்ளன.
சங்கம் மருவிய காலத்திற்கு அடுத்த நிலையில் மணிமேகலைக்கு முன்னதாக எழுந்த காப்பியம் சிலப்பதிகாரம். இதனுள் பௌத்த சமயக் கருத்துகள் படைக்கப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் பௌத்த மும்மணிகளான புத்தம், தருமம், சங்கம் ஆகியன பற்றிய குறிப்பு கிடைக்கிறது.
பணைணைத் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி|| ( சிலப்பதிகாரம் 10:11-14)
என்ற நிலையில் பௌத்த மும்மணிகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. போதி அணிதிகழ் நீழல்அறவோன் என்பது புத்தரைக் குறிப்பதாகும். திருமொழி என்பது தருமத்தைக் குறிப்பதாகும். அநதர சாரிகள் என்பது சங்கத்தைக் குறிப்பதாகும்.
கோவலன் கொலையுண்ட பிறகு, கோவலனின் தந்தை மாசாத்துவான் தன் செல்வங்கள் அனைத்தையும் பௌத்த நிலையத்திற்கு அளித்தான் என்று இளங்கோவடிவகள் குறிக்கிறார்.
கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான் பொருள் ஈந்தாங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு ( சிலப்பதிகாரம் 27: 91-93)
என்ற நிலையில் பௌத்த விகாரம் குறிக்கப்படுகிறது.
மாதவி மணிமேகலையைப் பௌத்த சமயத்திற்கு அளித்தாள் என்பதையும் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும்|| (சிலப்பதிகாரம், 15: 103-104)
என்ற பகுதியில் போதி அறவோன் என்று புத்தர் குறிக்கப்பெறுகிறார். இச்செய்திகள் தவிர காவிரிப்பூம்பட்டிணம், மதுரை, திருத்தங்கால், வஞ்சி ஆகிய ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. மேலும் பௌத்த கதைகளான சிபிச் சக்கரவர்த்தி கதை, மணிமேகலா தெய்வக் கதை போன்றன பற்றிய குறிப்புகளும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேலும் காப்பியத்தில் நிறைவில் வரும் பொது அறங்கள் அனைத்தும் பௌத்தசமய அறங்கள் சார்ந்தனவாகும். இவ்வகையில் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் பௌத்த சமயக் குறிப்புகள் கிடைப்பதன் வழியாக சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பௌத்தசமயம் தமிழகத்தில் விளங்கிவந்த சமயமாக இருந்தது என்பதை உணரமுடிகின்றது.
இதனைத்தொடர்ந்து சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலையே பௌத்த சமயத்தின் இருப்பை நிலைநிறுத்துகிறது. இதுவே முதன் முதலில் எழுந்த பௌத்த சமய நூலாக அமைகின்றது. இதிலிருந்தே பௌத்த சமய நூல்களின் ஆக்க வளர்ச்சி தொடங்கப்பெறுகிறது.