புதன், 1 பிப்ரவரி, 2017

மனித வாழ்வின் கனவு


இலக்கியம் மனித வாழ்வின் கனவு. வாசிப்போ, எழுத்தோ இலக்கியத்தைத் தன்விருப்பமாகத் தேர்ந்தெடுக்கிற ஒருவரின் வாழ்வு முழுக்கவும் கனவுகளால் நிறைந்தது. ஒரு கனவு, அதற்குள் ஒரு கனவு என ஒவ்வொரு படைப்புக்குள்ளும் புகுந்து, திளைத்து வெளியேறி, தன்னைத்தானே அவன் தரிசித்துக் கொள்கிறான். சுய அலசல், எள்ளல், தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்குதல் எல்லாமே அவனுக்கு இதன்மூலம் சாத்தியமாகிறது.
படைப்பு தனி உலகம். ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்த சமூக அமைப்பில் மரபை மீறுகிறவராக, சமகாலச் சூழலின் செயல், நெறிகளை விமர்சிப்பவனாக, சித்தரிப்பவனாக படைப்பாளி இருக்கிறான். அவனுக்கென்று பொறுப்புகளும், கடமைகளும் இருக்கிறதா? அவை வரையறுக்கப்பட்டவையா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது அசலான பதிவாக இருக்காது. நான்கு கட்டம் வரைந்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிச் சென்று மீண்டும் திரும்பி வருவதைப்போல விளையாட்டு அல்ல அது. பாரம்பரியங்களின் தார்மீக மதிப்புகள், சரிந்து கொண்டிருக்கும் ஒழுக்க மதிப்பீடுகள் ஆகியவற்றை ஒவ்வொரு படைப்பும் பதிவு செய்கிறது.
ஒரு படைப்பாளியின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை புனைவுலகின் மூலமே முழுமையடையச் செய்ய முடியும். கட்டுரைகள், உடனடி எதிர்வினைகள் எனத் தொழில்நுட்பச் சாத்தியங்கள் பல முளைத்திருந்தாலும் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற வடிவங்கள் காலத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. அவற்றின் கூர்மையான வார்த்தைகள் நம்மைச் சீவிக்கொண்டேயிருக்கிறது. நமக்குப் பிறகு காலத்தின் ஆவணமாக வருங்காலத்திற்கும் அவை பேசப்படும். இன்னும் சொல்லப்போனால், கவிதை வடிவத்தைவிட நாவல்களும், சிறுகதைகளும் தொடர்ந்து பேசப்படுவதற்கான காரணம் இதுதான். அவையே நம் காலத்தின் தேவைகள். உணர்வுகளும், வாழ்வின் அர்த்தங்களும், கேள்விகளும், சமூக நிலைப்பாடுகளும் கவிதையாக மட்டுமே பதியப்படாமல் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பதியப்பட வேண்டும். அவலங்கள் சாட்டைச் சொடுக்கைப் போல கவிதைகளில் பதியப்பட்டாலும், அவற்றின் தழும்புகளை உணர்த்த, காலங்களுக்கு அவ்வுணர்வுகளைக் கடத்த புனைவுகளால் மட்டுமே சாத்தியமாகும்.
தமிழ் இலக்கியத்தில் நன்கு எழுதக்கூடிய பெண் கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புனைவுலகை எடுத்துக் கொண்டோமென்றால் அவர்களின் பங்களிப்பின் சதவிகிதம் மிகமிகக் குறைவானது என்பதே உண்மையான நிலை. அதுவும் பெண்கள் அதீத அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற, சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிற அல்லது குறைந்தபட்ச எல்லைகளுக்குள்ளாக சுதந்திரமாகப் புழங்க அனுமதிக்கப்பட்டிருக்கிற நம் சமூக கட்டமைப்பில் பெண்ணெழுத்தின் பங்கு இன்னும் அதிகமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?
பல சமயங்களில் நான் வாசித்தவைகளிலிருந்து மேற்கோள் காட்டி முகநூலில் பகிர்கிறதை நீங்கள் வாசித்திருக்கலாம். அப்போதெல்லாம் எனக்குள் எழுகிற கேள்வி இது. கவிதைகள் என்றால் நிறைய அழுத்தந்திருத்தமாக, ஆழமான கருத்துகளை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற பெண் கவிஞர்கள் (கவிஞர்களை பால் சார்ந்து பிரித்துச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை; இப்பத்தியின் நோக்கம் கருதி இங்கு குறிப்பிடுகிறேன்.) நிறைய இருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்தமான பல பெண் கவிஞர்களின் கவிதைகளை நான் பகிர்ந்திருக்கிறேன்.
ஆனால், புனைவுலகை எடுத்துக்கொண்டோமெனால், எனக்கு உடனே நினைவுக்கு வருகிற பெண் எழுத்தாளர்களின் பெயர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஹெப்சிபா ஜேசுதான், அம்பை, ஆர்.சூடாமணி, அநுத்தமா, கிருத்திகா, ராஜம்கிருஷ்ணன், உமா மகேஸ்வரி, பாமா அவ்வளவுதான் உடனடி நினைவுக்கு வருகிற பெயர்கள்.
இன்னும் சற்று யோசித்துச் சொல்வதானால், திலகவதி, சிவகாமி, தேன்மொழி, சு.தமிழ்ச்செல்வி, சல்மா, வெண்ணிலா, தமிழ்நதி, ஷர்மிளா செய்யத் இவர்கள் பெயர்களைக் குறிப்பிடலாம். இதுதவிர, நன்கு எழுதப்பட்ட ஒற்றைச் சிறுகதைத் தொகுப்போடு தேங்கிப்போன சிலரது பெயர் நினைவிருக்கிறது. வேறு எவரேனும் விடுபட்டிருந்தால் நீங்கள் குறிப்பிடலாம்.
உலக இலக்கியங்களில் எடுத்துக்கொண்டோமென்றால் காத்திரமான பல பெண் படைப்பாளிகளின் பெயர்களைப் பட்டியலிட முடியும். ஆனால், இந்திய/தமிழ்ச் சமூகச் சூழலில் புனைவுலகைப் பொறுத்தவரை பெண்ணெழுத்தின் பங்களிப்பு மிகமிகக் குறைவான சதவிகிதமே உள்ளது.
பெண்கள் தொடர்ந்து அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிற, காலம்காலமாக மறைமுக வரையறைகள் விதிக்கப்பட்டு, திணிக்கப்பட்டிருக்கிற சூழலைக் கொண்டது நம் சமூகம். கட்டுப்பாடின்றி வாழ்கிற ஆண் சமூகம் ஒரு புறம், ஒழுக்கப்பிறழ்வு என்ற ஒற்றைச் சொல்லில் அடிப்படையான பெண்ணுணர்வுகளை கீழ்மைப்படுத்திவிட முடிகிற பெண் சமூகம் ஒரு புறம். இந்த இரு பக்கத் தராசுத் தட்டுகளின் அநியாயமான கீழிழுத்தல்கள் நாம் கண்கூடாகப் பார்க்கிற ஒன்றுதான். இது அறிவுஜீவிகளின், பெண்ணியவாதிகளின், நவீன பெண் எழுத்தாளர்களின் பிரச்னை மட்டுமில்லை. சமூகத்தில், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லோரது பிரச்னையும்கூட.
வெளியே மகிழ்ச்சியாகவும், சுதந்திரத்தோடும், வலுவானதாகவும், வெகுளித்தனத்தோடும் இருப்பதாகக் காட்டிக் கொள்கிற பெண் மனம் ஆழ்மனதில் வர்ணிக்க இயலாத துயரங்களையும், தர்மசங்கடங்களையும், சமூக நிர்ப்பந்தங்களையும், கட்டுப்பாடுகளையும் நினைத்துக் கொண்டேதான் இருக்கிறது. சிந்தனைத் திராணியற்ற சாதாரண பெண்களுக்கு இது மிகவும் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அறிவுத்தளத்தில் செயல்படுகிற பெண்களுக்கும் இதே அகச்சிக்கல்கள் இருக்கிறது என்பதை அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற வார்த்தைகளில், வரிகளில் வாசித்து உணர முடிகிறது. தனிமையும், பாதுகாப்பின்மையும் வெவ்வேறு தளத்தில் இயங்குகிற பெண்களின் மன உலகை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது என்பதே நிதர்சனம்.
பெண்கள் அவமதிக்கப்பட்டு, உணர்வுகளுக்கு மதிப்பேதுமற்று எல்லாவிதத்திலும் நிர்ப்பந்திக்கப்படுகிற வாழ்க்கையை வாழ்கிற நிலையுள்ள சூழல் அப்படியேதான் இருக்கிறது. பெரும்பான்மைப் பெண்களின் நிலைமை இதுதான். இது பரிவு பேசுகிற விஷயமோ, அனுதாபப் பார்வையோ அல்ல. பெண்ணைத் தன்வயப்படுத்தி, சுயமாகச் சிந்திக்க விடாமல் தன் கருத்தைத் திணித்து, போகத்திற்குக் கொண்டாடப்படுகிறவளாய் ஆணால் ஆக்கப்படுகிறாள். இழந்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே எதிர்ப்புக் காட்டாத, விடுதலையாகாத, விடுதலை உணர்வற்றவளாக பெண் கட்டமைக்கப்படுகிறாள்.
எவ்வளவு மோசமான படைப்பிலும் அக/புற வய பாதிப்புகளும், அவற்றின் உணர்வுகளும் நிச்சயம் பதிவாகவே செய்கிறது. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எழுத விஷயமா இல்லை? பெண் சுதந்திரம் பற்றி மட்டும் எழுத வேண்டுமென்றில்லை. எவ்வளோ இருக்கிறதே? ஆனால், தமிழ்ப் படைப்புலகில் பெண்களின் புனைவுலகின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது ஏன் என்பதைக் குறித்து நாம் யோசிக்க வேண்டும். வெறும் பெண்களுக்கான சிக்கலாக இதைப் பார்க்காமல், எழுதும் முனைப்பும் திறனும் உள்ள பலரை நம் தமிழ்ச்சூழல் கொண்டிருந்தாலும் அவர்களின் வெளிப்பாடுகள் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் மட்டுமே இருந்துவிடுவதன் சாதக, பாதகங்கள் என்ன என்பதைக் குறித்து ஆராய வேண்டும்.
பெண் ஏன் புனைவுலகை எழுத வேண்டும்? கருத வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? அதை ஏன் விவாதப் பொருளாக்க அல்லது உரையாடலுக்கான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விகள் இங்கு எழலாம். அதுவும் ஒரு (எழுதுகிற) ஆணாக இதைப் பேசுவதன் அரசியல் என்ன என்ற நுட்பமான கேள்விகள் கூட இங்கு எழுப்பப்படலாம்.
பெண் புனைவுலகைப் பொறுத்தவரை பெரும் வெற்றிடம் இங்கே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் புனைவுலகில் பெண்களின் பங்களிப்பை யாரேனும் ஆய்வு செய்தால் இது தெளிவாகும். என்னுடைய சிறிய வாசிப்புப் பரப்பில் நான் அறிந்து கொண்டதுதான் இது. கவிஞர்களாக நிறைய எழுத வருகிறார்கள். சிறந்த பெண் கவிஞர்கள் கட்டுரையாளர்கள் அதிகம்பேர் தங்கள் எழுத்துக்களால் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், நாவல், சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் இங்கே யாருமில்லை அல்லது வெகு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களும் தொடர்ந்து இயங்குகிறவர்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
இன்றைய சமூகச் சூழலில் எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் உடனடி வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்ய எதிர்வினையாற்றல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் மட்டுமே போதாது. உணர்வுரீதியான பங்களிப்பை நிகழ்த்த, அதை வரும் காலத்திற்குக் கடத்த, ஆவணப்படுத்த நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றின் தேவை நிறைய உள்ளது.
அறிவுத்தளத்தில் தற்காலச் சூழலில் செயல்படுகிற பெண் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் எல்லோரும் தாங்கள் வாழ்கிற சமகால சமூகச்சூழல் மீதான அக எதிர்வினைகளையும், அறிவெதிர்வினைகளையும், அற எதிர்வினைகளையும் புனைவுலகில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான அவசியம் நிறையவே உள்ளது