ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

யா / தெல்­லிப்­பழை யூனியன் கல்­லூரி கல்விப் பணியில் 200 ஆண்­டுகள்…


123
கல்விப் பணியில் இரு சகாப்­தங்­களை நிறைவு செய்­ய­வுள்ள ஆசி­யாவின் முதல் கலவன் பாட­சா­லை­யா­கிய தெல்­லிப்­பழை யூனியன் கல்­லூரி தனக்கு வேண்­டிய பல்­வேறு வளங்­களை பூர­ணப்­ப­டுத்­து­வதன் மூலம் பய­னு­றுதி மிக்க கல்­லூ­ரி­யாக மிளிர்­வ­தற்­காக காத்­தி­ருக்­கின்­றது. இன்று வலி­காமம் வடக்கில் நிலை­மாறும் ஒரு பாட­சா­லை­யாக இக் கல்­லூரி காணப்­ப­டு­கின்­றது. இக் கல்­லூ­ரியை வளப்­ப­டுத்­து­வதன் மூலம் வலி­காமம் வடக்கு பிர­தே­சத்தின் மீளக் குடி­ய­மர்­வையும் அப்­பி­ர­தே­சத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளையும் துரி­தப்­ப­டுத்த முடியும். மத்­திய தர குடும்­பங்கள் மீள குடி­ய­மர்­வ­தற்கு இழு­விசைக் கார­ணி­யாக இப் பாட­சா­லையின் பய­னு­றுதி மிக்க கற்றல் பேறு உறு­து­ணை­யாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
வண. கலா­நிதி. டானியல் பூவர், வண. எட்வேட் வாறன் தலை­மை­யி­லான அமெ­ரிக்க மிஷன­ரி­யினர் யாழ்ப்­பா­ணத்தில் தேவ ஊழியம் செய்­வ­தற்­காக 1816ஆம் ஆண்டு indexஐப்­பசி மாதம் 15ஆம் திகதி தெல்­லிப்­ப­ழையை தமது மதப்­ப­ணிக்­கு­ரிய மத்­திய நிலை­ய­மாகத் தேர்ந்தெடுத்­தனர். இந்நாள் தெல்­லிப்­ப­ழையின் கல்வி வர­லாற்­றிலே மிகவும் முக்­கி­ய­மான நாளாக அமையப் பெற்­றது. 1816.10.15 அன்றே யூனியன் கல்­லூ­ரியின் நிறு­வுநர் நினைவு நாளாகக் கொள்­ளப்­பட்­டது. 1816இல் தெல்­லிப்­ப­ழையில் பொது இல­வசப் பாட­சாலை (Common FreeSchool) வண. கலா­நிதி டானியல் பூவர் ஆரம்­பித்து வைத்தார். இத் தமிழ் மொழிப் பாட­சா­லையில் தமிழ் மொழி, தமிழ் இலக்­கியம், கணிதம், புவி­யியல், விவி­லியத் திரு­மறை ஆகி­யன கற்­பிக்­கப்­பட்­டன. சிறிது காலத்தின் பின்னர் ஆங்­கிலம் போதிக்­கப்­பட்­டது. இதன் மூலம் அமெ­ரிக்க மிஷனரி முத­லா­வது ஆங்­கிலப் பாட­சா­லை­யாக இப் பாட­சாலை அமையப் பெற்­றது. இப் பாட­சா­லையில் ஆசி­ரி­யரும் மாண­வர்­களும் சைவ சம­யத்­த­வர்­க­ளாக அமையப் பெற்­றி­ருந்­தனர். இவர்கள் தத்தம் வீடு­களில் இருந்தே நாளாந்தம் பாட­சா­லைக்கு சமுகமளித்­தனர். இதனால் அமெ­ரிக்க மிஷன­ரி­யி­னரின் மத மாற்ற நோக்கம் பெரி­த­ளவில் வெற்றி அளிக்க வில்லை. இக் குறை­பாட்டை நீக்கும் முயற்­சி­யாக 1818ஆம் ஆண்டு 06 மாண­வர்­க­ளுடன் குடும்ப விடுதிப் பாட­சாலை தொடங்கப் பட்­ட­­து. வசதி படைத்த அமெ­ரிக்க ஆங்­கி­லேயர் இவ் விடுதிப் பாட­சா­லைக்கு நிதி­யீட்டம் செய்­தனர். இங்கு ஒவ்­வொரு மாண­வனும் சரா­சரி 10 ஆண்­டுகள் கல்வி கற்­ற­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 1828இல் முத­லா­வது சுதே­சிய கிறிஸ்­த­வ­ராக இக் கல்­லூ­ரியின் பழை­ய­மா­ண­வ­ரான சாமுவேல் வோசெஸ்ரர் ஆசி­ரிய நிய­ம­னத்தை இங்கு பெற்­றுள்ளார். 1818இல் 5 பெண் மாண­வி­களும் இங்கு கல்வி கற்­க­தொ­டங்­கி­ய­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இக் கல்­லூ­ரியில் கல்வி கற்ற முதல் பெண் மாண­வியின் பெயர் மிறாண்டா செல்­லாத்தை என அறி­ய­மு­டி­கின்­றது. 1825இல் தெல்­லிப்­பழை அமெ­ரிக்க மிஷன் வளா­கத்­திலே ஆயத்தப் பாட­சாலை ஒன்றும் ஆரம்­பிக்­கப்­பட்டு இதில் திறமை மிக்க மாண­வர்கள் மேற்­ப­டிப்­பிற்­காக வட்­டுக்­கோட்டை செமி­ன­றிக்கு அனுப்­பப்­பட்­டனர்.
இந்­நி­லையில் இலங்கை அமெ­ரிக்­க­மிஷன­ரியின் செயற்­பாட்­டினை மீள் நோக்­கு­வ­தற்­காக வந்த அன்­ரசன் தொம்சன் குழு­வினர் அமெ­ரிக்க மிஷன­ரி­யி­னரின் முயற்­சி­க­ளுக்கு தெல்­லிப்­ப­ழையில் மதம் மாறி­ய­வர்­களின் எண்­ணிக்கை மிகக் குறை­வா­கவே அமையப் பெற்­றதால் இக் குறித்த பாட­சா­லை­களை மூடி விடு­மாறு பணிப்­புரை விடுத்­தனர். இந்­நி­லையில் 1856 முதல் 1869 வரை­யான 13 வருட காலத்தில் எந்­த­வொரு கல்வி முயற்­சி­களும் தெல்­லிப்­பழை வளா­கத்தில் இடம்­பெ­ற­­வில்லை என அறி­ய­மு­டி­கின்­றது. தெல்­லிப்­ப­ழையில் பாட­சா­லைகள் இயங்­காத நிலையில் 1869இல் உள்­ளூர்­வா­சி­யான சைவப் பெரு­மகன் உயர்­திரு செல்­லப்பா என்­பவர் ஆங்­கிலப் பாட­சாலை ஒன்றை நிறு­வினார். 1901ஆம் ஆண்டு வரை அதன் தலைமை ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி தான் இறக்கும் தறு­வாயில் அப்­பா­ட­சா­லையை அமெ­ரிக்க மிஷன­ரி­யி­ன­ரிடம் ஒப்­ப­டைத்தார். இப் பாட­சா­லை­யி­லேயே பின் நாளில் தெல்­லிப்­பழை மகா­ஜனாக் கல்­லூ­ரியின் நிறு­வு­ன­ராக பரி­ண­மித்த பாவலர் துரை­யப்­பா­பிள்ளை கல்வி கற்று 1901இல் செல்­லப்­பாவின் மறை­விற்கு பின் இப் பாட­சா­லையின் தலைமை ஆசி­ரி­ய­ரானார்.
1878ஆம் ஆண்டு தெல்­லிப்­பழை வளா­கத்­திற்கு வண. சிமித் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். இவர் இவ் வளா­கத்­திலே தொழில் பாட­சாலை ஒன்­றையும் ஆரம்­பித்து வைத்தார். இத் தொழில் பாட­சா­லையில் மர­வேலை, மேசன் வேலை, தக­ர­வேலை, அச்­சுக்­கலை, புகைப்­படக் கலை என்­பன போதிக்­கப்­பட்­டன. 1910ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் இயங்­கிய 2 தொழிற்­பா­ட­சா­லை­களில் இது முதன்­மை­யான தொழிற்­பா­ட­சா­லை­யாக துலங்­கி­யது. 1921இல் தெல்­லிப்­ப­ழையில் இருந்த அமெ­ரிக்க மிஷனரிப் பாட­சா­லைகள் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியின் மேற்­பார்­வைக்குள் வந்­தன. யாழ்ப்பாணக் கல்­லூ­ரியின் அதிபர் வண. பிக்னெல் இவ் வளா­கத்தின் முகா­மை­யாளர் ஆனார். இந்­நி­லையில் 1929 செப்­டம்­பரில் தெல்­லிப்­பழை விடுதிப் பாட­சா­லை­யா­னது இரு­மொழிப் பாட­சா­லை­யாக தர­மு­யர்த்­தப்­பட்­டது. இப் புதிய இரு­மொழிப் பாட­சா­லைக்கு 1930ஆம் ஆண்டு முத­லா­வது சுதேச அதி­ப­ராக ரட்­ண­வ­ரதர் பொறுப்­பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் 225 மாண­வர்கள் இக்­கல்­லூ­ரியில் பயின்­ற­துடன் இவர்­களில் 1/3 பகு­தி­யினர் விடுதி மாண­வர்­க­ளாக காணப்­பட்­டனர். யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியின் ஆசி­ரி­ய­ராக இருந்­த­வரும் இப் பாட­சாலை பழைய மாண­வ­ரு­மா­கிய ஐ.பி. துரை­ரத்­தினம் 1935இல் இப் பாட­சா­லையின் அதி­ப­ராக பத­வி­யேற்றார். இவர் பத­வி­யேற்­றது முதல் அமெ­ரிக்க மிஷன­ரியின் தெல்­லிப்­பழை வளாகம் புதுப்­பொ­லிவு பெற்­றது. 1939ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி தெல்­லிப்­பழை வளா­கத்தில் இருந்த அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் ஒன்­றி­ணைத்து யூனியன் கல்­லூரி எனப் பெயர்­சூட்­டினார். அன்று தொட்டு 1964 ஜன­வரி வரை யூனியன் கல்­லூ­ரியின் வளர்ச்­சியும் உயர்ச்­சியும் அப­ரி­த­மாக இருந்­தது. கல்­லூ­ரியை அவ­ரி­ட­மி­ருந்து தவிர்த்து நோக்க இய­லாத அள­விற்கு கடின உழைப்­பினை வழங்­கினார். 1960ஆம் ஆண்டு The Union Magazine துரை­ரத்­தினம் அவர்­க­ளது வெள்ளி மல­ராக வெளி­வந்­தது. இம் மல­ரா­னது கல்­லூ­ரியின் வர­லாற்­றிற்கு சிறந்த மூலா­தா­ர­மாக இன்றும் இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.
கல்­லூ­ரியின் சஞ்­சி­கை­யினை எடுத்து நோக்­கு­மி­டத்து 1940ஆம் ஆண்டு முதல் கல்­லூ­ரியின் சஞ்­சி­கை­யாக The Union Magazine வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றது. 1970களின் பிற்­ப­கு­தி­களில் இம் மலர் இடை­நி­றுத்­தப்­பட்ட போதும் முன்­னைநாள் அதிபர் திரு. புண்­ணி­ய­சீலன் அவர்­க­ளது முயற்­சி­யினால் 2001ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளி­யி­டப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. 1659இல் Union Primary என்ற பெயரில் பாட­சா­லையின் கனிஷ்ட பாட­சா­லையின் இதழ் வெளி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. யூனியன் கல்­லூ­ரியின் ஆரம்பப் பிரிவு 1979 முதல் தந்தை செல்வா தொடக்கப் பள்ளி என்ற நிலையில் தனிப்­பா­ட­சா­லை­யாகUnion_College_Logo இயங்கி வரு­கின்­றது. 1987இல் யுத்த நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கல்­லூ­ரியின் நிர்­வாக கட்­டி­ட­மா­கிய சான்டேஸ் கட்­டிடம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­துடன் கல்­லூ­ரியின் அனைத்து நிர்­வாக ஆவ­ணங்­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இந் நிகழ்­வா­னது கல்­லூ­ரியின் நிறு­வக ஞாப­கத்தை பல­மி­ழக்கச் செய்­த­துடன் நிர்­வாக ரீதி­யாக பல பின்­ன­டை­வுகள் உரு­வா­கு­வ­தற்கும் கார­ண­மாக அமைந்­தது.
இக் கல்­லூ­ரி­யா­னது 1947ஆம் ஆண்டு அதி­உயர் தர பாட­சா­லை­யாக (Super Grade School) தர­மு­யர்த்­தப்­பட்­ட­முதல் இன்று வரை பாட­வி­தான, இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­களில் மாகாண, தேசிய, சர்­வ­தேச சாத­னை­களை நிலை­நாட்டி வரு­கின்­றது. இக் கல்­லூ­ரியின் மூன்­றா­வது அனர்த்த செயற்­பா­டாக 1990ஆம் ஆண்டு யுத்த நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக தனது சொந்த வளா­கத்தை விட்டு இடம்­பெ­யர்ந்­தது. 1990.06.16 அன்று தெல்­லிப்­ப­ழையில் இருந்து இடம்­பெ­யர்ந்து மல்­லாகம் மகா­வித்­தி­யா­லயத்­திலும், பின்னர் இரா­ம­நாதன் கல்­லூ­ரி­யிலும் இயங்­கி­யது. 1995ஆம் ஆண்டு இடப்­பெ­யர்வின் போது தென்­ம­ராட்சி வீர­சிங்கம் மகா­வித்­தி­யா­லயத்­திலும் இக் கல்­லூரி இயங்­கி­யது. பின்னர் மீண்டும் இரா­ம­நாதன் கல்­லூ­ரியில் 10.09.2002 வரை இயங்கி பின்னர் 12 வரு­டங்­களின் பின்னர் தனது சொந்த வளா­கத்தில் உயர் பாது­காப்பு வல­யத்தில் பல்­வேறு வகைப்­பட்ட வளப் பற்­றாக்­கு­றை­க­ளுடன் இயங்­கத்­தொ­டங்கி படிப்­ப­டி­யாக தன்னை நிலை­நி­றுத்திக் கொள்ள முய­லு­கின்­றது. உயர்­பா­து­காப்பு வல­யத்­தினுள் 2002 முதல் 2009 வரை­யான காலப்­ப­கு­தியில் கல்­லூரி இயங்­கிய போது அக் காலத்தில் கட­மை­யாற்­றிய அதி­பரும் ஆசிரியர் குழாத்­தி­னரும் பல்­வேறு பட்ட இடர்­பா­டு­க­ளுடன் கல்­லூ­ரியை இயங்கச் செய்து பல்­வேறு சாத­னை­களை நிலை­நாட்­டினர். இக்­காலத்தில் வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் மாகாண, தேசிய, சர்­வ­தேச சாத­னை­களை இக் கல்­லூரி பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதற்­காக கடின உழைப்பை வழங்­கிய முன்­னைநாள் அதிபர் திரு. புண்­ணி­ய­சீ­லனும், ஆசி­ரியை திரு­மதி ஜெயந்தி ஜெய­தரன் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள். ஏறத்­தாழ 14வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக மாகாண மட்­டத்தில் சம்பி­யன்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கவை. 2009ஆம் ஆண்டு க.பொ.த. சாதா­ர­ண­த­ரத்தில் 100% சித்­தி­க­ளையும் பெற்று வட­மா­கா­ணத்தில் முதல் நிலைப் பாட­சா­லை­யாக தன்னை தர­மு­யர்த்­தி­யது. இவ்­வாறு கல்­லூ­ரியின் கடந்த கால புகழ்­பூத்த அதி­பர்கள் வரி­சையில் அமரர் ஐ.பி. துரை­ரத்­தினம் மற்றும் திரு.கே.பால­சுந்­தரம், திரு. புண்­ணி­ய­சீலன் முத­லானோர் குறிப்­பி­டத்­தக்கோர். இன்று கல்­லூ­ரி­யா­னது அதிபர் திரு.வே.க.இரத்­தி­ன­குமார் தலை­மையில் இயங்கி வரு­கின்­றது. இது தனது சொந்த வளா­கத்தில் இயங்கி வரு­கின்ற போதிலும் பிர­தான ஒன்­று­கூடல் மண்­டபம், மூடிய வகுப்­ப­றைகள், மனை­யியல் கூடம், விவ­சாய அறை, செயற்­பாட்­ட­றைகள், சிற்­றுண்­டிச்­சாலை, மைதான பார்­வை­யாளர் கூடம் மற்றும் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கு, வலைப்­பந்­தாட்­ட­திடல், கூடைப்­பந்­தாட்­ட­திடல், ரெனிஸ் மைதானம் முத­லா­னவை இன்று அழி­வுற்­றுள்­ளன.
கல்­லூரி தனக்­கு­ரிய ஏந்­து­பி­ர­தே­சத்­தினை 1990 ஆம் ஆண்டு முதல் இழந்­துள்­ளது. தற்­பொ­ழுது இக் கல்­லூ­ரியின் ஏந்­து பி­ரதேசத்தில் ஒரு­ப­குதி மக்கள் மீளக்­கு­டி­ய­மர்வு நடை­பெற்று வரு­கின்­றது. இம் மக்கள் நீண்ட கால­மாக முகாம் வாழ்க்­கையில் அடிப்­படை வச­திகள் அற்ற நிலையில் வாழ்ந்­தனர். இம் மக்­க­ளது பிள்­ளைகள் உரிய தரங்­களில் உரிய தேர்ச்­சி­களை அடை­யாது இன்று வகுப்­ப­றை­களில் விளிம்பு நிலை மாண­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இம் மாண­வர்­க­ளுக்கு வேண்­டிய அத்­தி­யா­வ­சிய கற்றல் தேர்ச்­சி­களை மாண­வர்­க­ளது நாளாந்த கலைத்­திட்­டத்­திற்கு மேல­தி­க­மாக கற்­பித்து வரு­வதில் தற்­போ­தைய அதிபர் திரு.வே.க.இரத்­தி­ன­குமார் அதீத கவனம் செலுத்தி வரு­கின்றார்.
கல்­லூரி தனது வர­லாற்றுத் தடத்­திலே புகழ்­பூத்த பழைய மாண­வர்­க­ளான சி.வை தாமோ­த­ரம்­பிள்ளை, தந்­தை செல்­வ­நா­யகம் முன்­னை நாள் யாழ்ப்­பாண பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் குணரட்ணம் மற்றும் பல்வேறு நிலைப்பட்ட பழையமாணவர்களை உருவாக்கியுள்ளது. எனினும் இக் கல்லூரியானது இன்று ஒரு நிலைமாறும் பாடசாலையாக (Transition of school) காணப்படும் நிலையில் தனது 200 வருட நிறைவை எதிர்வரும் 15.10.2016 அன்று கோலாகலமாக கொண்டாடவுள்ளது. இதற்காக இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபமொன்றினை இலண்டன் பழையமாணவர் சங்கத்தினை முதன்மையாகக் கொண்டு ஏனைய அனைத்து பழைய மாணவர் சங்கங்களும் இணைந்து கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. இதன் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் 05.12.2014அன்று மாலை கொழும்பு பழையமாணவர் சங்கம் இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபத்திற்கு நிதி சேகரிப்பதற்காக மாபெரும் கலைவிழாவினை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் கலை அரங்கில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இவ் விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிவடக்கு பிரதேசத்தை வலுவூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல் லண்டன் பழைய மாணவர் சங்கம், சிட்னி பழையமாணவர் சங்கம், மெல்போர்ன் பழைய மாணவர் சங்கம், கனடா பழையமாணவர் சங்கம் முதலானவை நிதியீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்