திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஊர் வாசம். கட்டுவன் . சோ. சிவகலை.

.
“ஐயனார் கோயில் ஆலமரமும் உண்டு
 அதன்விழுதில் கட்டிய ஊஞ்சலும் உண்டு
 ஆடின எம் உறவுகள் தான் அங்கில்லை.”
            இது முகநூல் நண்பன் ஒருவரின் கவிதை. 
  இதைப்படித்த போது தான் கட்டுவன் என்ற அழகிய கிராமத்தின் நினைவுகள் துளிர்த்தன. இந்த பழம்பெரும் கிராமம் யாழ்ப்பாண நகரிலிருந்து பன்னிரண்டு மைல்தொலைவில் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதிக்கு கிழக்கேயும், யாழ்ப்பாணம் பலாலி வீதிக்கு மேற்;கேயும் அமைந்திருக்கும் இவ்வள பூமியானது வடக்கே மயிலிட்டியையும், கிழக்கே வசாவிளானையும், மேற்கே தெல்லிப்பளையினையும், தெற்கே ஏழாலையையும் அயலூர்களாக கொண்டமைந்த ஊராகும். மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான், கட்டுவன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஊராகும். ஒரு காலத்தில் வளமிகு ஊராக இருந்தாலும் இன்று ஊரே பொலிவிழந்து கிடக்கிறது. சிறுபகுதி மட்டும் துளிர்பெற்று வருகின்றபோதும் ஏனைய பகுதிகள் காடுமண்டிக் கிடக்கின்றன. இடிந்த கட்டிடங்களும், நாயுண்ணி பற்றைகளும், எருக்கலையும் நிறைந்த பாழ்நிலமாய்க் கிடக்கிறது.  
  இந்த ஊர்மக்களில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்து வேறுநாடுகளில் தமது வாழ்க்கையை வடிவமைத்து இருபது வருடங்களாகிறது. அறிவிலும், ஆற்றலிலும், ஆன்மீகத்திலும், சிறந்திருந்த ஊர், கலை பண்பாட்டு விழுமியத்திலும் தனித்துவம் பெற்றிருந்தது. செல்வச்செழிப்பு மிக்க இவ்வூரின் குழந்தைகள் உலகின் பல பாகங்களிலும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். தாம் சென்ற இடங்களிலெல்லாம் தனித்துவத்தோடு வாழும் இவர்கள் தம்மூரின் பெயர் கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். 
       உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகள் என்று வரும்போது வசந்தன் ஆட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதனை பார்க்கவும் ரசிக்கவும், தாம் ஆடவும் விரும்புமளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்றால் அது இந்த ஊரின் குழந்தைகள் ஊர்மேல் கொண்ட பற்றின் அடையாளம் என்றுதான் கூறவேண்டும்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன் அலவத்தை வீரபத்திரர் மீது உட்குடை வரகவி விஸ்வநாதப்புலவரால் பாடப்பட்ட வசந்தன் பாடல்கள் இவ்வூருக்கே சொந்தமான கலை வடிவமாகும். ‘வசந்தன் என்றால் கட்டுவன் தான்’ என்று அவ்வூரவர் இன்றும் உரிமை கொண்டாடுவர்.  ஆலயங்கள் நிறைந்த பிரதேசமான இங்கு திருவிழாக்காலங்களில் இந்த வசந்தன் நாடகம் ஆடினர். இது கோலாட்டத்தை ஒத்த வடிவமாக காணப்பட்டாலும், இது தனியான கூத்து வடிவமாகும். ‘வசந்தநாடகம், வசந்தன் கூத்து.’ என்றெல்லாம் கூறப்பட்ட இது காப்பு தொடங்கி மங்களம் வரை  கொண்ட முழுவடிவத்தை கொண்ட கலை வடிவமாகும். வயதான ஆண்களே ஆடுவர். மாலையில் தொடங்கினால் அதிகாலை வரையில் தொடரும் இக்கூத்தில் மழை, இரங்கல்பாட்டு, கப்பல் பாட்டு என பலவகையான பாடல்கள் இடம்பெறும். முறைப்படி ஆலய வாசலில் வசந்தன் ஆடினால் மறுநாள் காலை மழை பொழிந்து ஊரவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அவ்வளவு சக்தி வசந்தன் நாடகத்திற்கு உண்டு. 
“மூவரால் தண்டலை கொள் அலவத்தைநகர் 
ஆதி வீரபத்திரர் மேல் வசந்த நாடகம் நான் பாட.....”
  என்று காப்பு தொடங்கும் இப்பாடல்களில் கல்தோட்டம் பிள்ளையார், முத்துமாரியம்மன், மருதடிப்பிள்ளையார், கண்ணகை அம்மன், துறட்டையிட்டி ஞானவைரவர், ஐயனார் ஆகிய தெய்வங்களை எல்லாம் வேண்டுதல் செய்து வளம் அருள வரம்வேண்டி ஊரின் வளச்சிறப்புக்கூறி சொல் நயத்தோடும் இசை நயத்தோடும் அமையும் வசந்த நாடகம் பக்தியுடன் ஆடப்பட்டது. ஊர்க்கோயில் திருவிழாக் காலங்களில் தான் இடம் பெறும். 
விவசாயத்தில் கூடிய விளைச்சலை பெற உடல் வலுவால் மண்ணை பண்படுத்திய உடற்பலங்கொண்ட வயதானவர்கள் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்வர். திரண்ட தோளும் பருத்த உடலும் கொண்ட கம்பீரமான ஆண்கள் விருத்தங்களிற்கு துள்ளியும், குதித்தும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், நிமிர்ந்தும், முகத்தில் புன்னகைசிந்தி அபிநயங்காட்டி ஆடுவதைப் பார்த்தால் இருப்பவர்களுக்கும் ஆட்டம் வரும்.   
வயதில் முதிர்ந்தவர்களும் இளமையை வரவழைத்து சிறியவர்கள் போல் ஆடுவது அவர்களுக்கு மகிழ்வை தருவதுடன் தேக ஆரோக்கியத்திற்கும் வழிசமைக்கும் விடயமாகும். எல்லோரும்  இரண்டு கைகளிலும் தடியை வைத்திருப்பர். அத்தடிகளால் மற்றவர்களுடன் தட்டி ஆடுவர். மேல் உயர்த்தித்தட்டி, குனிந்து தட்டி, இடம் வலம் மாறித்தட்டி என பாடலுக்கும் விருத்த அமைவுகளுக்கும் ஏற்ப தட்டி ஆடுவர். ஆடும் போது எழும் ஒலியும், தடிகளைத் தட்டுவதால் ஏற்படும் ஒலியும், மத்தளமும் தான் வாத்தியங்களாகும். இத்தனை எளிமையான வசந்தன் ஆட்டமானது விடியவிடிய ஆடும் போது   பொங்கி வழியும் வியர்வையானது, அவர்களின் தேக ஆரோக்கியத்தை பேணவும் புத்துணர்ச்சிமிக்கவர்களாக திகழவும் வழிவகுத்திருக்கலாம். ஏனெனில் அவ்வளவு வியக்கத்தக்க வகையில் ஊரின் அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் இருந்ததை காணமுடியும். 
துறட்டையிட்டி ஞானவைரவர் ஆலயம், விறுமர் கோயில், மருதடிப்பிள்ளையார் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம், கற்கோட்டப்பிள்ளையார் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், நாச்சிமார் கோயில், ஐயனார் ஆலயம் என இன்னும் பல ஆலயங்கள் சிறப்பான முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்றுவந்தன. அங்கெல்லாம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்றன. வசந்தனோடு ஒயிலாட்டமும் இப்பகுதி மக்களால்; ஆடப்பட்டுள்ளது.
முந்நூறு ஆண்டுகள் பழமையான வசந்தனாட்டத்தை ஆயிரத்துதொழாயிரத்து ஐம்பத்திநான்காம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலாசார விழாவில் அரங்கேற்றி பாராட்டுப்பரிசில்களை பெற்றுவந்து ஊருக்கு பெருமை சேர்த்தனர். இதுபற்றி கூறும்போது நாகலிங்க விதானையார் எடுத்த பெருமுயற்சி அந்த நிகழ்வில் வசந்தனாட்டத்தை மேடையேற்ற காரணமாய் அமைந்தது என்கின்றனர்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஊர் ஆலயவாசலில் ஆடப்பட்ட வசந்தன் பற்றிய நினைவுகள் இருக்கின்ற போதும், கடைசியாக எப்போது ஆடினோம் என்பதை கூறமுடியாது அவர்களின் மனங்கள் தவிக்கின்றன. குந்த இடமின்றி ஓடியவர்களுக்கு இன்னமும் ஆறி அமர்ந்து நினைவுகளை மீட்க ஊர்முற்றம் திரும்பாதவர்களாகவே இருக்கின்றனர்.
பாடி ஆடியவர்கள் பலர் ஆயுள் முடிந்து போய்விட்டனர். மூலப்பிரதி கூட தற்போது எங்கென அறியமுடியவில்லை. வீ.ரீ.வீ. சுப்பிரமணியம்.(ஓதுவார் மூர்த்தி பட்டம் பெற்றவர்) மற்றும் மதுரைப்பண்டிதர் முத்துக்குமாரு போன்றவர்களால் வாய்வழியாக பேணப்பட்டபோதும் அவர்களது காலத்துடன் அவை வழக்கொழிந்து போயின. பல்கலைக்கழக மட்டத்திலும் ஆவணப்படுத்தல்கள் நடைபெற்றுள்ளன. வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஊரவர்கள் கூடி பல நிகழ்வுகளில் வசந்தனடித்து மகிழ்ந்து வருகின்றனர். விதானையார் நாகலிங்கம், பண்டிதர் நமசிவாயம், மத்தள முருகேசு போன்ற பலருடைய சந்ததியினர் தமக்கு இயன்றளவில் பாடல்களைத் தொகுத்து தமது ஊரின் கலைப்பொக்கிசத்தை அரங்கேற்றி மகிழ்ந்து வருகின்றனர். ஆயினும் சொந்த ஊரில் வீரபத்திரர் வாசலில் ஆடி வியர்வைசிந்தி களைத்திருக்கையில் பெய்யும் மழையில் நனையும் ஆனந்தம் பற்றி, தம் முன்னவர் கூறிய கதைகளின் நினைவுகளை சுமந்து எப்போது அந்தப்பேரானந்தம் பெறுவோம் என காத்திருக்கின்றனர், இந்த ஊர் வாரீசுகள். 
ஊர் மண்ணின் நிறம் தெரியாமலும், அதன் வாசம் நுகராமலும் இருக்கும் அவர்களுக்கு இந்த ஊரின் அறிவியல் வளம், அழகியல் வளம், பொருளாதார வளம், இன்னும் மறக்கப்பட முடியாத மனிதர்கள் கூற நிறைய உண்டு
வசந்தனாடி மகிழும் கட்டுவன் ஊரின் நினைவுகளில் நனைந்த  எமக்கு அவ்வூர் பற்றிய தகவல்களை அறிய சில அன்பர்களை சந்திக்க முனைந்தபோது வியத்தகு தகவல்கள் பல கிடைத்தன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயிலெடுத்து மகிழ்ந்த போது இங்கும் கோயில்கட்டினான் என்றும், ‘குட்டுவர்’ வந்திருந்ததால் ‘குட்டுவனூர்’ என பெயர் பெற்றதாகவும் பின்னர் ‘கட்டுவனாய்’ மருவியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அதனை நம்பச்செய்யும் வகையில் இங்கு மிகப்பழைய கண்ணகை அம்மன் ஆலயமும் காணப்படுகின்றது. ஆனால் துறை சார் ஆய்வுகள் எதுவும் இதனை உறுதி செய்ததாக தெரியவில்லை. ஆயினும் கலாசார தொன்மைமிக்க கட்டுவனூரின் அழகையும் அறிவியல் பொருளாதார செழுமை பற்றியும் அறிய முடிந்தது. அது கூட வியப்பிற்குரிய வகையிலே அமைந்திருப்பதை காணலாம்.
  வசந்தன் பாடல்களை இயற்றிய உட்குடை வரகவி விஸ்வநாதப்புலவர் மட்டுமல்ல இன்னும்பல புலவர்கள், கல்விமான்கள் இக்கிராமத்துக்கு அணிகலமாய் இருந்து புகழ் சேர்த்துள்ளனர். மயிலிட்டி தெற்கு மதுரைப்பண்டிதர், வீ.ரீ.வீ.சுப்பிரமணியம்(ஓதுவார் மூர்த்தி), மயில்வாகனப்புலவர், தொல்காப்பியக்கடல் கணேசையர், பண்டிதர் நமசிவாயம் என பல இலக்கிய கர்த்தாக்களுடைய பிறப்பிடமாக இந்த மண் திகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாது சைவத்துக்கு தன்பணியினால் பெருமைசேர்த்த கிரியாவித்தகர் கணேசக்குருக்களின்(சிவஸ்ரீ கந்த. சிவபாதசுந்தரக்குருக்கள்) பரம்பரையும் இந்த மண்ணிலேயே தோன்றி வளர்ந்தது எனலாம். இங்கிருக்கும் அற்புதம்மிகு ஆலயங்களில் வழிபாடியற்றும் பெரும்பணியை அவரது மூதாதையர் தொடங்கி பரம்பரையினரே இயற்றி வருகின்றனர். சமயம் பற்றி கூறுகையில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உண்டு. அதாவது இலங்கையிலேயே முதன் முதலாக ஐயப்ப சுவாமிக்கு தனியான ஆலயம் அமைக்கப்பட்டதும் இந்தக் கட்டுவன் கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்துக்கு அண்மையிலே தான். கிரியாவித்தகர் கணேசக்குருக்கள் தனது குடும்ப சந்தான விருத்திக்காக சபரிமலை யாத்திரை சென்று 1983ம் ஆண்டு அழகிய ஐயப்பசுவாமியின் திருவுருவச்சிலையை  இந்தியாவிலிருந்து கொண்டுவந்து கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்தில் அதே வருடத்தில் பிரதிஸ்டை செய்ததுடன்;, அன்றைய தினமே பதினெட்டுப்படிகளுடன் அமைந்த ஐயப்பன் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்தார். அடுத்த ஆண்டே அதற்கான அருட்கடாட்சத்தை அவர் பெற்று விட்டார். ஆலயமும் விரைவாக அமைக்கப்பட்டு இலங்கையில் அமைக்கப்பட்ட பதினெட்டுப்படிகளுடனான கோயிலாக இது பெருமையுடன் திகழ்ந்து வருகிறது. தற்போதும் பக்தியுடன் விரதமிருந்து இங்கு வரும்பக்தர் குறை தீர்க்கும் பொம்மானாய் சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து அருளீர்ந்து வருகிறார்.
 
  வளமான மண்ணின் வனப்போடு பல சுவையான கதைகள் இன்னும் உண்டு. இன்று நாம்காணும் இரட்டைச்சைக்கில் இலங்கைக்கு வராத காலத்தில் இங்கு சைக்கில் கடை நடத்திய வைத்திலிங்கம் ஜெயராஜசிங்கம் என்பவர் தானே அதனை வடிவமைத்து ஓடி பிரபலம் பெற்றவர், பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இதன் மூலம் இலங்கை முழுவதும் பேசப்பட்டவர். அதே போல வட மாகாணத்தில் முதன்முதலாக பம்பாய் வெங்காயச்செய்கையை மேற்கொண்டு அதிக விளைச்சல்பெற்று ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்தி நான்காம் ஆண்டு வடபகுதி விவசாயிகளுள் முன் மாதிரியாகவும் வழி காட்டியாகவும் திகழ்ந்து பாராட்டுக்களைப் பெற்று விளை பூமிக்கு பெருமை சேர்த்தவர். 
   கூட்டுணர்வால் சிறந்திருந்த இங்கு பத்து கிளைச்சங்கங்களை கொண்ட ‘பாலன் ஞான உதய சங்கம்’ சிறப்பாக திகழ்ந்தது. இதனூடாக விளையாட்டு செயற்பாடுகள், நாடக, கலைச்செயற்பாடுகள் போன்;றன முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் நாடக மற்றும் கலை செயற்பாடுகள் குறித்து நினைவு கூர்ந்த இவ்வூரின் முதியவர் ஒருவர் தனது நினைவுக்கெட்டிய சிலர் பெயர்களை குறிப்பிட்டார். ஊரைப்பிரிந்து இருபது ஆண்டிற்கு மேல் சென்று விட்டதால் முளுமையாக என்னால் பெற முடியவில்லை “இவர்களை விட இன்னும்பலர் இருந்தார்கள்” என்று கூறிய அவரால் பெயர்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனாலும் தெரிந்தவர்களை நினைவுபடுத்தினர். திரு.சின்னத்துரை புவனராஜா, திரு.கே.ரீ. பாலசுப்பிரமணியம், திரு.ஏ.வீ. பாலசுப்பிரமணியம், திரு.சி.சர்வானந்தம், திரு.மு. கணேசானந்தம், திரு.இ.பாலச்சந்திரன், திரு.ந.சண்முகலிங்கம், திரு.அ.கந்தையா (இவரை ஈழத்து சிவாஜி என்று அழைப்பார்களாம்)
  புராணக்கதைகள் சமூககதைகள் என நாடகங்கள் போட்ட இம்மக்கள் மத்தியில் கல்வியறிவு மிகுந்திருந்ததால் ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தொட்டு அறுபதுகளிலேயே ‘சோக்கிட்டீஸ்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். தக்கன் யாகம், வள்ளிதிருமணம், சூரசங்காரம், போன்ற புராண கதைகளை மட்டுமன்றி பலதுறைசார்ந்த நாடகங்களையும் இம்மக்கள் அரங்கேற்றியிருப்பதன் மூலம் அவர்களிடம் காணப்பட்ட குறுகிய தன்மையற்ற சமூகமயப்பட்ட தன்மையை அறியமுடிகிறது. வாத்திய கலைஞர்களும் சிறப்பாய் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சுப்பையா, வல்லிபுரம் போன்ற பறைமேளக்கலைஞர்கள் ஊரின் கடைசிக்காலத்தில்(1980 களில்) சிறப்பான பணியை செய்துள்ளனர். 
  இங்கு வாழ்ந்து தமிழுக்கு பெருமைசேர்த்த  தொல்காப்பியக்கடல் கணேசையர் பற்றி குறிப்பிடல் முக்கியமானதாகும். நிறைந்த தமிழறிவும், வடமொழி அறிவும் பெற்றவர், அத்துடன் பக்தியிலும் மிகுந்தவர். வேத ஆகமங்களிலும் சோதிடம், மருத்துவம் போன்ற சகல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். ஒரு முனிவனைப்போல வாழ்ந்த இவரின் மாணவர்களில் தமிழ்த்துறை விற்பனராக பண்டிதர் நமசிவாயம் அவர்களும், வேத ஆகம துறையில் விற்பனராக கிரியாவித்தகர் கணேசக்குருக்கள்(சிவஸ்ரீ. கந்த. சிவபாதசுந்தரக்குருக்கள்) அவர்களும் விளங்கினார்கள் என்பதனை மகிழ்வுடன் கூறினார் அந்த ஊரின் முதியவர் ஒருவர். 
  இப்படியான இவ்வூரில் றம்மியமான ஆலமர சோலையில் அமைந்திருக்கும் ஐயனார் ஆலயத்தின் சக்தி மிக அற்புதமானது. இன்றும் பல அற்பு தங்களை ஐயன் நிழ்த்திக் கொண்டு தான் இருக்கிறான் என்று கூறும் ஊர்மக்கள்  தமது காவல்தெய்வமாக அவரையே நம்பியிருக்கின்றனர். இரண்டாயிரமாம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழலில் இப்பிரதேசம் மீள் எழுச்சி பெற்ற பின்னர் மக்கள் தமது ஆலயத்தை சிறப்பாக அமைத்து வருகின்றனர். சபரிகிரி ஐயப்பன் ஆலயத்திலும் விரதமிருந்து படியேறி விழா எடுத்து மகிழ்கின்றனர். ஐயனார் அலயத்தின் ஆலமரசோலை இன்னும் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஆதி தல விருட்ஷமான அரசும் தற்போதும் காணப்படுகின்றது. இந்த அரசமரத்தடியில் தான் முன்னைய காலங்களில் புராண படிப்புக்கள் செய்யப்பட்டன. புற்று ஒன்று காணப்படுகிறது, அதில் நாக தம்பிரான் இருப்பதாக கூறப்படுகிறது. 
  அருகில் காணப்படும் பலாலி இராணுவ முகாமின் பாதுகாப்பு வேலி ஆலயத்திற்கு அண்மையில் காணப்படுகிறது. அங்கு கடமையில் இருப்பவர்களின் வசதி கருதி இடர்மிகுந்த காலத்தில் ஒருநாள் இராணுவ அணியொன்று ஆலமரத்தின் கிளைகளை வெட்டும் நோக்குடன் வந்து ஆலயச்சூழலில் உள்ள ஆலமரத்தை வெட்ட தயாரான போது அங்கு திடீரென தோன்றிய நாக பாம்புகள் அவர்களுடைய ஆயுத தளபாடங்களை அவ்விடத்திலேயே போட்டு விட்டு ஓடுமளவு நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறியாது பூசைக்கு வந்த ஆலயக்குருக்கள் ஆலயச்சுழலில் இராணுவ ஆயுத தளபாடங்கள் இருப்பது கண்டு விபரீதம் என்ன என அறியாது திகைத்து, பின்னர் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தபின்னர் குறிப்பால் உணர்ந்துகொண்டார். ஆயினும் இராணுவதளபாடங்கள் ஆலய சூழலில் இருப்பது பொருத்தமற்றது. ஏனெனில் அக்காலத்தில் போராளிகள் இரகசியமாக இருந்து தாக்குதல்களை நடத்துகின்ற காலம். இவ்வாறு ஆலய சூழலில் ஆயுதங்களிருப்பது விபரீதமானது என்பதால். ஆலயக்குருக்கள் பாதுகாப்பு வேலியில் இருப்பவர்களுக்கு விடயத்தினை தெரியப்படுத்தினார். சமகாலத்தில் ஓடிய இராணுவ அணியினரும் அதிகளவான சகாக்களுடன் வாகனங்களில் வந்து தமது ஆயுதங்களை பெற்றுச்சென்றனர். படையினர் மறுநாள் பெரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அறியாத அயற்கிராமவாசிகளான சிறுவர்கள் ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக என்று வருவதுண்டு. இப்போது அவர்களை வெட்ட விடாது இராணுவத்தினர் கலைத்து வருகின்றனர்.
  என்றும் குறையாத அற்புதங்களும் அழகும் நிறைந்த பெரும்பகுதி மக்கள் வாழாத உயர்பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகின்றது. குடியமர விடப்பட்ட இடங்களில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று மக்கள் வாழத்தொடங்கிவிட்டார்கள். ஏனைய பகுதிகளும் விரைவில் அப்படி மாறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  
குளிர்தேசங்களில் கூடுகட்டி வாழும் 
ஊர்க்குருவிகளின் நெஞ்சுக் கூட்டினுள்ளும்
தாய் மண்காணும் ஆசையின் தவிப்பு 
சூடாய் இருக்கிறது. 
முதாதையர்களில் கால் ரேகை வழி சுவறிய 
செம்மண்ணின் வாசம் நுகரும் ஆவல் தொகையாய் இருக்கிறது.
வசந்தனும், ஒயிலும் ஆடிக்களித்த ஆலயமுற்றத்தில் 
ஆறஅமர்ந்து மூச்சுவிடும் கனவு கனதியாய் அழுத்துகிறது.
சனிதோறும் சுவாமி கோசமிட்டு ஐயப்பனைப் பாடிக்களைத்து
ஆலமரநிழலில் படுத்துறங்கும் சுகம் காணும் எண்ணம் 
நிறைய இருக்கிறது.
பனங்கீற்று தடவிவரும் காற்று ஆலிலையில் ஓய்வெடுத்து
குளிரோடு தவளும் சுகம் பெறுவதற்காய் உடல்கள் பல காத்திருக்கு.
தீராத நோய் அழிய, பிள்ளை வரமருளும் ஐயப்பன் அருள் 
கரண்டைக்குளத்தின் வற்றிவிட்ட நீர் மீண்டும் வருமட்டும்
காத்திருக்கும் தாமரை போல எப்போதுமிருக்கும். 
குலம் தளைக்கும். நலன் விளங்கும் 
குட்டுவர்கள் வந்து பக்தியுடன் அமைத்த கண்ணகியின் காற்சிலம்பு
கட்டுவனூர் தழைக்க நல்ல இசை எழுப்பும். 
பிள்ளைகளின்  காற் சதங்கை கணகணக்க 
ஆடிமகிழ்வர் இனி ஒயிலும், வசந்தனும். 
 
கட்டுவனூர் ‘சிவமீனா’வின் தன்னூர் பற்றிய கவிதையுடன் விடைபெறுகிறோம்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உறவை இழந்த

களிப்புடன் காதலர் தினம்
கடந்துபோனது...
கவலையோடு மலர்களைப் பிரிந்த‌
ரோஜாச் செடிகள்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழில் ரகுவம்சம்






இரகுவம்சமும் யாழ்ப்பாணமும்

ரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்தே பரதகண்டம் பண்பட்ட வாழ்வு கண்டது.
ந்த வாழ்வை நிலை பெறுமாறு செய்தவர்கள் அக்கால அரசர்களேயாவர். அவ்வரசர்களது வாழ்வைப் போற்றிப் பாடுவதில் புலவர்கள் அடங்காத ஆர்வம் கொண்டிருந்தனர். காவியங்களாக வரைந்து இன்பம் கொண்டனர்.
ந்த கவிஞர்களுக்கெல்லாம் மஹாகவியாக வந்தவர் தான் காளிதாசர். செம்மொழியான வடமொழியில் இருதுசங்கார கவிநூலையும், மேகசந்தேச காதல்நூலையும், சாகுந்தல நாடக நூலையும், குமாரசம்பவ வீரம் கலந்த பக்தி நூலையும் படைத்த அந்தக் கவி வல்ல பெருமானார் தந்த வரலாற்று நூலாக, ஸ்ரீ ராமனின் உன்னத வம்ச பாரம்பரியத்தைக் கூறும் நூலாக,  இரகுவம்சம் விளங்குகிறது.
காளிதாசர்
ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து,  அக்கினி வருணன் வரை சென்று,  அந்நூல் நிறைவடைகிறது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைச் சங்ககாலப்புலவரான ‘ஈழத்துப்பூதந்தேவனார்’ என்னும் புலவரிலிருந்து தொடங்குவதே மரபு என்றாலும், அதன் தொடர்ச்சியான நூல்களைப் பொ.பி 13-ஆம் நூற்றாண்டு வரை காண இயலவில்லை.  எனவே, யாழ்ப்பாண அரசு அமைந்து அதில் சோதிடம், வைத்தியம், வரலாற்று நூல்கள் நிறைவாக எழுந்த காலமே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.
க்கால நூல்களில் தலைமை மிக்கது இரகுவம்சமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் செய்தது போலவும், வில்லிபுத்தூரர் வியாசபாரதத்தைத் தமிழாக்கியது போலவும், கச்சியப்பச் சிவாச்சார்யார் ஸ்கந்தத்தை தமிழில் கந்தபுராணமாகச் செய்தது போலவும், யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தைத் தமிழில் செழுங்கவிகளாக, பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.

தமிழ் இரகுவம்சம்

ம்ஸ்கிருத மொழியில் எழுந்த பஞ்சமஹா காவியங்களுள் ஒன்றான,  19 சர்க்கங்களையும்  1569 செய்யுள்களையும் கொண்ட ரகுவம்ச மஹாகாவ்யம்,  தமிழில் அரசகேசரியால் இரகுவம்ச காவியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
15-ஆம் , 16-ஆம் நூற்றாண்டுக்குரிய வித்துவச் சிறப்பைக் காட்டும் மிகக் கடுமையான தமிழ் நடையில் இது எழுந்திருக்கிறது. பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என்கிற மூன்று பெரும்பிரிவுகளை உடைய இந்தத் தமிழ் நூல் 26 படலங்களையும் 2444 செய்யுள்களையும் கொண்டிருக்கிறது.
காவியப் பொருள் மரபை மூல பாடத்திலிருந்து நேரடியாக அப்படியே முழுமையாக அரசகேசரி தமிழில் பின்பற்றவில்லை. வடமொழியில் இராமகாதை விரிவாகச் சொல்லியிருப்பது போலத் தமிழில் இல்லை. அது போல நிறைவுப்பகுதியான அக்கினி
வர்மன் வரலாறு தமிழில் காணப்படவில்லை.

படலங்களும் செய்யுள்களும்.

காவிய மரபிற்கேற்ப எழுந்த இத்தமிழ் நூல் பல படங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை முறையே,
காப்பு- 1 செய்யுள்
பாயிரம்- 9 செய்யுள்

பொதுக்காண்டம்

ஆற்றுப்படலம்- 26 செய்யுள்
நாட்டுப்படலம்- 64  செய்யுள்
நகரப்படலம்- 75 செய்யுள்
அரசியல் படலம்- 22 செய்யுள்
குறைகூறு படலம்- 74 செய்யுள்
தேனுவந்தனப் படலம்- 122 செய்யுள்
இரகுவுற்பத்திப் படலம்- 51 செய்யுள்
யாகப்படலம்- 105 செய்யுள்
திக்கு விசயப்படலம்- 277 செய்யுள்
அயனுதயப்படலம் -55 செய்யுள்
அயனெழுச்சிப் படலம்- 139 செய்யுள்
மாலையீட்டுப் படலம்- 129 செய்யுள்
கடிமணப்படலம்- 85 செய்யுள்
மீட்சிப்படலம்- 129 செய்யுள்
இரகு கதியுறு படலம்- 47 செய்யுள்
இந்துமதி பிறப்பு நீங்கு படலம்- 96 செய்யுள்

சிறப்புக் காண்டம்

தசரதன் சாபமேற்ற படலம்- 125 செய்யுள்
திருவவதாரப்படலம்- 56 செய்யுள்
சீதை வனம்புகு படலம்- 157 செய்யுள்
இலவணன் வதை படலம்- 108 செய்யுள்
சம்புகன் வதை படலம்- 53 செய்யுள்
அவதார நீங்கு படலம்- 71 செய்யுள்

பொதுச் சிறப்புக் காண்டம்

குசன் அயோத்தி செல் படலம்- 108 செய்யுள்
வாகு வலயப்படலம்- 104 செய்யுள்
முடிசூட்டுப் படலம்- 123 செய்யுள்
குலமுறைப்படலம்- 33 செய்யுள்

சில மாற்றங்கள்

ரசகேசரி இராமன் வரலாற்றைச் சொல்லாமைக்கு அவரே தனது நூலில் காரணம் சொல்கிறார்.
‘பொற்றாமரை மான் ஒழியாது பொலியு மார்ப
வெற்றாழு மேனி ரகுராம சரிதை யாவும்
கற்றார் கவியின் பெரிதாம் தமிழ்க்கம்பநாடன்
உற்றான் அங்குரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்’
கம்பன்
னும் பாடலில் கவிஞர் சொல்வதன் வண்ணம், கவியில் பெரிய கம்பநாடாழ்வான் கம்பராமாயணமாக ராமசரிதையைச் சொல்லியிருப்பதால், அதை நீக்கி பிறவற்றைச் சொல்கிறோம் என்கிறார். ஆக, கம்பராமாயணத்தில் அரசகேசரிக்கு மிகுந்த பற்றும் நிறைவணர்வும் இருந்திருக்கிறது.
நிறைவுப்பகுதியான அக்கினிவர்மன் கதையை அரசகேசரி ஏன் தமிழாக்கவில்லை என்று தெரியவில்லை. அது ஒழுக்கம் குறைவான அக்கினி வர்மன் கதையாதலால் அரசகேசரி தவிர்த்திருக்கலாம் என்று சிலரும், அரசகேசரி அப்பகுதியை எழுதியிருக்கலாம் ஆனால், இன்று  நமக்குக் கிடைக்கவில்லை என்று சிலரும், இன்னும் காவியம் முற்றுப்பெறவில்லை என்று சிலரும் கருதுகின்றனர்.

நூல் எழுந்த சமூக -அரசியல் பின்னணி

ரசகேசரியின் காலம் 15-ஆம் 16-ஆம் நூற்றாண்டுகள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர் யாழ்ப்பாண அரசவம்சத்தவர் என்றும் கருதப்படுகிறது.
க்காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மூவேந்தரின் அரசும் உடைந்து போயிருந்தது. விஜய நகரப் பேரரசு ஓங்கியிருந்தது. ஆனால், திருநெல்வேலிப்பகுதியில் சிற்றரசர் போல ஒதுங்கியிருந்த பாண்டிய அரசர்கள் தமிழிலக்கியப்பணியில் ஈடுபாட்டுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக, அதிவீரராம பாண்டியன் கூர்மபுராணம், லிங்கபுராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, மதனகோவை, நைடதம் போன்றவற்றைத் தமிழ்ப்படுத்தியிருப்பது சிந்திக்கத்தக்கது.
மது இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி இவற்றால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க அரசகேசரி இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம் என்றும், எதிர்கால மன்னர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பியிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுவர்.
கு என்பதற்கு கலைக்கடலையும் கைக்கடலையும் கடக்கவல்லவன் என்று பொருள் கொள்வர். இச்சிறப்பு யாழ்ப்பாணத்தரசரிடமும் இருந்தமையால் (அதாவது கல்வி, கலை அறிவும், பகைவரை அடக்கும் திறனும்) அவர்கள் ரகுவம்சத்தை விரும்பி ஆதரித்திருக்கலாம் என்பதும் சிலரது ஊகம்.

பரராஜசேகரன்
க்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்ற பரராஜசேகரனே இந்நூலாக்கத்திற்குத் துணையாகவும் ஊக்கமாகவும் இருந்தான் என்பது வெளிப்படை. அது இரகுவம்சத்திலேயே அரசகேசரியால் ‘பன்னு செஞ்சொல் பரராசசேகர மன்னன் இன்பம் மனங்கொள வாய்த்தது’ என்று சொல்வதாலும் பிற வசனங்களாலும் தெளிவாகிறது. யாழ்ப்பாணத்து நல்லூரில் வைத்து இரகுவம்சத்தை அரசகேசரி எழுதினான் என்றும் அதனை தஞ்சாவூர் இரகுநாத நாயக்கர் அரச சபையில் அரங்கேற்றியதாகவும் சிலர் கருதுகின்றனர். இவற்றுக்கு மாறாகக் கருதுவோரும் உளர்.

தமிழ் இரகுவம்சமும் கவிச்சிறப்பும்

ரசகேசரியின் கவிதைகளில் வித்துவச்சிறப்பு நிறைந்திருக்கிறது என்று கருதும் பலருள் அதில் கவித்துவம் நிறைவாக உள்ளது என்று கருதுதல் குறைவே. ஏனெனில் இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.
காளிதாசர் வடமொழியில் எழுதாது தமிழில் அரசகேசரியே எழுதியிருக்கும் இரகுவம்சத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றில் அரசகேசரியின் கவித்துவம் புலப்படுகிறது.
ங்கு ஒன்று கரு ஒன்றை ஈனும் நுணுக்கமான காட்சி அரசகேசரியால் படமாக்கப்படுகிறது.
‘பசிய இலைகளை உடைய தாமரையாகிய தாதி பக்கத்தில் இருக்க, பாய்கிற கால்வாய் நீர் உண்மையாகவே மருத்துவம் செய்ய, நீலோத்பலங்கள் மனம் நெகிழ, தேரைகள் வாய் விட்டுப் புலம்ப, மெல்லிய அணை போல இருக்கிற ஆமை மீது ஏறி சங்கு கருவை ஈனும்’ என்று காட்டும் கற்பனைக்கு அளவேது..?
‘பச்சடைப் பதும தாதி பாங்குறப் பாய் கால் பாணி
நிச்சய மருத்துச் செய்ய நீலங்கள் நோக்கி நெக்க
வச்சில தேரை வாய் விட்டலாற்ற மெல்லணையினாய
கச்சபவேரிந் மீதேறிக் கம்புசூல் கழிக்குமாறோ’
வ்வாறெல்லாம் சிறப்பொடு காவியம் படைத்த அரசகேசரியின் இரகுவம்சம் பிரபலமடையாமைக்குக் காரணமாக பலவற்றைக் காட்டுவர்.
வற்றுள் முக்கியமானதாக, வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்கள் கூற்று என்னவெனில் ‘கடினமான சொற்பிரயோகங்கள் உடைமையானும், வடமொழி நூலைப் பெயர்த்துப் பாடியமையானும் கற்றார்க்கன்றி மற்றோர்க்கு உவந்து சுவைத்தல் கூடாததாயிற்று’ என்கிறார்.
சைவனாயினும் அரசகேசரி இராமபக்தி மிக்கவனாயிருந்திருக்கலாம் என்றும் இந்நூல் மூலம் தெரிகிறது. இவற்றை விட தமிழ்ச் சொற்பயன்பாட்டிலும் அரசகேசரி அக்கறை செலுத்தியிருக்கிறார்.
பேரருளாளரான இராமானுஜாச்சார்யார் தமது கையொப்பத்தை ‘இராமானுசர்’ என்றே இட்டிருக்கும் சிறப்போடு இதனை ஒப்பு நோக்கலாம்.
குவம்சத்தை இரகுவம்மிசம் என்றும், திக் விஜயத்தை திக்கு விசயம் என்றும், அஜனை அயன் என்றும் அரசகேசரியார் பயன்படுத்தியிருக்கக் காணலாம். ஆனாலும், காவியம் முழவதும் அங்கிங்கெணாத படி அக்கால வழக்கிற்கு ஏற்ப வடசொற்கள் விரவிக் கிடக்கின்றன.
ன்றைக்கும் அரசகேசரி பேரில் பல ஐதீக, செவி வழிக் கதைகள் யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற. இவற்றின் ஊடாகவும் அரசகேசரி எவ்வளவு தூரம் அக்கால மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டான் என்பது புலப்படுகிறது.
திலும் வரலாற்றை நோக்குகிற போது அரசகேசரி என்பவன் ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது கண்டு இன்புறத்தக்கது.
ரசகேசரியின் கவி வன்மை பற்றி அறிய இன்னும் சில செய்யுள்கள் தருதலே பொருந்தும்..
பாயிரத்தில் அவர் தாம் எழுதுகிற இரகுவம்சம் காளிதாசரது வடமொழிச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்பதுடன், அது ஒரு ஒலியை பெரிய மலை தடுத்து எதிரொலி செய்வது போல என்கிறார்.
‘வன்றிசைக் காளிதாசன் வடமொழி
தென்றிசைத் தமிழால் நனி செப்புகேன்
நன்றிசைக்கும் உரைவழி நன்னெடும்
குன்றிசைப்பது போலும் குறிப்பரோ’
வரது உவமையணியைக் காண ஒரு பாடல்..
ந்துமதிக்குச் சுயம்வரம் நடக்கிறது.. அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்து செல்கிறாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிற போது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவு செய்கிறது இப்பாடல்..
‘தேடுலாம் குமுதச் செவ்வாய் சுந்தரி இரவில் தொக்க
மாடு சால் அரசவீதி வயின் வயின் ஒருவிச் செல்லும்
வீடிலா தெரிசெஞ் சோதி விளக்கமதொத்தாள் வேந்தர்
நீடுகாள் இருள்சேர் மாட நிரையினை நிகர்த்திட்டாரே’
தாவது இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிற போது ஒவ்வொரு மாடமும் ஒளி பெற்று பின்னர் இருளடைவது போல, இவள் வருதலைப் பார்த்து ஒளி பெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார்.
க, வடமொழியில் சொல்லமுதமெனப் பிறந்த இரகுவம்சத்தின் சிறப்பை தமிழர்கள் அறியும் வண்ணம் தமிழில் அதே சுவையுடன் தந்த பெருமை அரசகேசரிக்கே உரியதாகும். எனவே, அதனைத் தமிழர்கள் யாவரும் சாதாரணமாகவேனும் அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது எனலாம்.

இரகுவம்ச பதிப்பு முயற்சிகள்

கணேசையர்
ந்நூல் முழுவதையும் காரைக்குடி மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுதலின் பேரில் ஆறுமுகநாவலரின் மருகரான பொன்னம்பலப்  பிள்ளை அவர்கள் 1887-ல் பதிப்பித்திருக்கிறார்கள்.
னினும், கற்றோரும் மலைக்கத் தக்க இக்காவியச் செய்யுள்களுக்குச் சீரிய பொருள் கண்டு இரு பகுதிகளாக 1915-லும் 1932-லும் வெளியிட்டவர் வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்களாவர். இவரது இவ்வுரையோடு கூடிய இரகுவம்சத்தை மஹாமஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் படித்து
‘உலம் பூத்த புயவரசகேசரி ஆராய்ந்து முனதுரைத்ததாய
நலம் பூத்த சுவை இரகுவம்சத்திற்கினிய உரை நன்கியற்றி
பலம் பூத்த தமிழ்வலவர் மதிப்பவெளிப்படுத்தினன் யாழ்ப்பாண மேயோன்
குலம் பூத்த நலமுடையான் கணேசையப்பேராளன் குணமிக்கோனே’
என்று சிறப்புப் பாயிரம் அளித்திருக்கிறார்.
ன்றாலும், நுண்ணிய தமிழ் இலக்கண இலக்கிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமற் போயுள்ள இன்றைய சூழலில் இரகுவம்சம் காணற்கரிய நூலாய் புலவரகங்களில் உள்ள பெட்டகங்களுள் மறைந்து வாழ்தல் வருத்தத்திற்குரியதேயாகும்.
க, தமிழ் ஹிந்து தர்மத்திற்கு சிறப்புச் சேர்க்க வல்லதாய் திகழ்கிற இந்நூல் பற்றித் தமிழ்ஹிந்துக்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியம் மிக்கதாகும்.
ooOOOOoo

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

யா / தெல்­லிப்­பழை யூனியன் கல்­லூரி கல்விப் பணியில் 200 ஆண்­டுகள்…


123
கல்விப் பணியில் இரு சகாப்­தங்­களை நிறைவு செய்­ய­வுள்ள ஆசி­யாவின் முதல் கலவன் பாட­சா­லை­யா­கிய தெல்­லிப்­பழை யூனியன் கல்­லூரி தனக்கு வேண்­டிய பல்­வேறு வளங்­களை பூர­ணப்­ப­டுத்­து­வதன் மூலம் பய­னு­றுதி மிக்க கல்­லூ­ரி­யாக மிளிர்­வ­தற்­காக காத்­தி­ருக்­கின்­றது. இன்று வலி­காமம் வடக்கில் நிலை­மாறும் ஒரு பாட­சா­லை­யாக இக் கல்­லூரி காணப்­ப­டு­கின்­றது. இக் கல்­லூ­ரியை வளப்­ப­டுத்­து­வதன் மூலம் வலி­காமம் வடக்கு பிர­தே­சத்தின் மீளக் குடி­ய­மர்­வையும் அப்­பி­ர­தே­சத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளையும் துரி­தப்­ப­டுத்த முடியும். மத்­திய தர குடும்­பங்கள் மீள குடி­ய­மர்­வ­தற்கு இழு­விசைக் கார­ணி­யாக இப் பாட­சா­லையின் பய­னு­றுதி மிக்க கற்றல் பேறு உறு­து­ணை­யாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
வண. கலா­நிதி. டானியல் பூவர், வண. எட்வேட் வாறன் தலை­மை­யி­லான அமெ­ரிக்க மிஷன­ரி­யினர் யாழ்ப்­பா­ணத்தில் தேவ ஊழியம் செய்­வ­தற்­காக 1816ஆம் ஆண்டு indexஐப்­பசி மாதம் 15ஆம் திகதி தெல்­லிப்­ப­ழையை தமது மதப்­ப­ணிக்­கு­ரிய மத்­திய நிலை­ய­மாகத் தேர்ந்தெடுத்­தனர். இந்நாள் தெல்­லிப்­ப­ழையின் கல்வி வர­லாற்­றிலே மிகவும் முக்­கி­ய­மான நாளாக அமையப் பெற்­றது. 1816.10.15 அன்றே யூனியன் கல்­லூ­ரியின் நிறு­வுநர் நினைவு நாளாகக் கொள்­ளப்­பட்­டது. 1816இல் தெல்­லிப்­ப­ழையில் பொது இல­வசப் பாட­சாலை (Common FreeSchool) வண. கலா­நிதி டானியல் பூவர் ஆரம்­பித்து வைத்தார். இத் தமிழ் மொழிப் பாட­சா­லையில் தமிழ் மொழி, தமிழ் இலக்­கியம், கணிதம், புவி­யியல், விவி­லியத் திரு­மறை ஆகி­யன கற்­பிக்­கப்­பட்­டன. சிறிது காலத்தின் பின்னர் ஆங்­கிலம் போதிக்­கப்­பட்­டது. இதன் மூலம் அமெ­ரிக்க மிஷனரி முத­லா­வது ஆங்­கிலப் பாட­சா­லை­யாக இப் பாட­சாலை அமையப் பெற்­றது. இப் பாட­சா­லையில் ஆசி­ரி­யரும் மாண­வர்­களும் சைவ சம­யத்­த­வர்­க­ளாக அமையப் பெற்­றி­ருந்­தனர். இவர்கள் தத்தம் வீடு­களில் இருந்தே நாளாந்தம் பாட­சா­லைக்கு சமுகமளித்­தனர். இதனால் அமெ­ரிக்க மிஷன­ரி­யி­னரின் மத மாற்ற நோக்கம் பெரி­த­ளவில் வெற்றி அளிக்க வில்லை. இக் குறை­பாட்டை நீக்கும் முயற்­சி­யாக 1818ஆம் ஆண்டு 06 மாண­வர்­க­ளுடன் குடும்ப விடுதிப் பாட­சாலை தொடங்கப் பட்­ட­­து. வசதி படைத்த அமெ­ரிக்க ஆங்­கி­லேயர் இவ் விடுதிப் பாட­சா­லைக்கு நிதி­யீட்டம் செய்­தனர். இங்கு ஒவ்­வொரு மாண­வனும் சரா­சரி 10 ஆண்­டுகள் கல்வி கற்­ற­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 1828இல் முத­லா­வது சுதே­சிய கிறிஸ்­த­வ­ராக இக் கல்­லூ­ரியின் பழை­ய­மா­ண­வ­ரான சாமுவேல் வோசெஸ்ரர் ஆசி­ரிய நிய­ம­னத்தை இங்கு பெற்­றுள்ளார். 1818இல் 5 பெண் மாண­வி­களும் இங்கு கல்வி கற்­க­தொ­டங்­கி­ய­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இக் கல்­லூ­ரியில் கல்வி கற்ற முதல் பெண் மாண­வியின் பெயர் மிறாண்டா செல்­லாத்தை என அறி­ய­மு­டி­கின்­றது. 1825இல் தெல்­லிப்­பழை அமெ­ரிக்க மிஷன் வளா­கத்­திலே ஆயத்தப் பாட­சாலை ஒன்றும் ஆரம்­பிக்­கப்­பட்டு இதில் திறமை மிக்க மாண­வர்கள் மேற்­ப­டிப்­பிற்­காக வட்­டுக்­கோட்டை செமி­ன­றிக்கு அனுப்­பப்­பட்­டனர்.
இந்­நி­லையில் இலங்கை அமெ­ரிக்­க­மிஷன­ரியின் செயற்­பாட்­டினை மீள் நோக்­கு­வ­தற்­காக வந்த அன்­ரசன் தொம்சன் குழு­வினர் அமெ­ரிக்க மிஷன­ரி­யி­னரின் முயற்­சி­க­ளுக்கு தெல்­லிப்­ப­ழையில் மதம் மாறி­ய­வர்­களின் எண்­ணிக்கை மிகக் குறை­வா­கவே அமையப் பெற்­றதால் இக் குறித்த பாட­சா­லை­களை மூடி விடு­மாறு பணிப்­புரை விடுத்­தனர். இந்­நி­லையில் 1856 முதல் 1869 வரை­யான 13 வருட காலத்தில் எந்­த­வொரு கல்வி முயற்­சி­களும் தெல்­லிப்­பழை வளா­கத்தில் இடம்­பெ­ற­­வில்லை என அறி­ய­மு­டி­கின்­றது. தெல்­லிப்­ப­ழையில் பாட­சா­லைகள் இயங்­காத நிலையில் 1869இல் உள்­ளூர்­வா­சி­யான சைவப் பெரு­மகன் உயர்­திரு செல்­லப்பா என்­பவர் ஆங்­கிலப் பாட­சாலை ஒன்றை நிறு­வினார். 1901ஆம் ஆண்டு வரை அதன் தலைமை ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி தான் இறக்கும் தறு­வாயில் அப்­பா­ட­சா­லையை அமெ­ரிக்க மிஷன­ரி­யி­ன­ரிடம் ஒப்­ப­டைத்தார். இப் பாட­சா­லை­யி­லேயே பின் நாளில் தெல்­லிப்­பழை மகா­ஜனாக் கல்­லூ­ரியின் நிறு­வு­ன­ராக பரி­ண­மித்த பாவலர் துரை­யப்­பா­பிள்ளை கல்வி கற்று 1901இல் செல்­லப்­பாவின் மறை­விற்கு பின் இப் பாட­சா­லையின் தலைமை ஆசி­ரி­ய­ரானார்.
1878ஆம் ஆண்டு தெல்­லிப்­பழை வளா­கத்­திற்கு வண. சிமித் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். இவர் இவ் வளா­கத்­திலே தொழில் பாட­சாலை ஒன்­றையும் ஆரம்­பித்து வைத்தார். இத் தொழில் பாட­சா­லையில் மர­வேலை, மேசன் வேலை, தக­ர­வேலை, அச்­சுக்­கலை, புகைப்­படக் கலை என்­பன போதிக்­கப்­பட்­டன. 1910ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் இயங்­கிய 2 தொழிற்­பா­ட­சா­லை­களில் இது முதன்­மை­யான தொழிற்­பா­ட­சா­லை­யாக துலங்­கி­யது. 1921இல் தெல்­லிப்­ப­ழையில் இருந்த அமெ­ரிக்க மிஷனரிப் பாட­சா­லைகள் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியின் மேற்­பார்­வைக்குள் வந்­தன. யாழ்ப்பாணக் கல்­லூ­ரியின் அதிபர் வண. பிக்னெல் இவ் வளா­கத்தின் முகா­மை­யாளர் ஆனார். இந்­நி­லையில் 1929 செப்­டம்­பரில் தெல்­லிப்­பழை விடுதிப் பாட­சா­லை­யா­னது இரு­மொழிப் பாட­சா­லை­யாக தர­மு­யர்த்­தப்­பட்­டது. இப் புதிய இரு­மொழிப் பாட­சா­லைக்கு 1930ஆம் ஆண்டு முத­லா­வது சுதேச அதி­ப­ராக ரட்­ண­வ­ரதர் பொறுப்­பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் 225 மாண­வர்கள் இக்­கல்­லூ­ரியில் பயின்­ற­துடன் இவர்­களில் 1/3 பகு­தி­யினர் விடுதி மாண­வர்­க­ளாக காணப்­பட்­டனர். யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியின் ஆசி­ரி­ய­ராக இருந்­த­வரும் இப் பாட­சாலை பழைய மாண­வ­ரு­மா­கிய ஐ.பி. துரை­ரத்­தினம் 1935இல் இப் பாட­சா­லையின் அதி­ப­ராக பத­வி­யேற்றார். இவர் பத­வி­யேற்­றது முதல் அமெ­ரிக்க மிஷன­ரியின் தெல்­லிப்­பழை வளாகம் புதுப்­பொ­லிவு பெற்­றது. 1939ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி தெல்­லிப்­பழை வளா­கத்தில் இருந்த அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் ஒன்­றி­ணைத்து யூனியன் கல்­லூரி எனப் பெயர்­சூட்­டினார். அன்று தொட்டு 1964 ஜன­வரி வரை யூனியன் கல்­லூ­ரியின் வளர்ச்­சியும் உயர்ச்­சியும் அப­ரி­த­மாக இருந்­தது. கல்­லூ­ரியை அவ­ரி­ட­மி­ருந்து தவிர்த்து நோக்க இய­லாத அள­விற்கு கடின உழைப்­பினை வழங்­கினார். 1960ஆம் ஆண்டு The Union Magazine துரை­ரத்­தினம் அவர்­க­ளது வெள்ளி மல­ராக வெளி­வந்­தது. இம் மல­ரா­னது கல்­லூ­ரியின் வர­லாற்­றிற்கு சிறந்த மூலா­தா­ர­மாக இன்றும் இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.
கல்­லூ­ரியின் சஞ்­சி­கை­யினை எடுத்து நோக்­கு­மி­டத்து 1940ஆம் ஆண்டு முதல் கல்­லூ­ரியின் சஞ்­சி­கை­யாக The Union Magazine வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றது. 1970களின் பிற்­ப­கு­தி­களில் இம் மலர் இடை­நி­றுத்­தப்­பட்ட போதும் முன்­னைநாள் அதிபர் திரு. புண்­ணி­ய­சீலன் அவர்­க­ளது முயற்­சி­யினால் 2001ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளி­யி­டப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. 1659இல் Union Primary என்ற பெயரில் பாட­சா­லையின் கனிஷ்ட பாட­சா­லையின் இதழ் வெளி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. யூனியன் கல்­லூ­ரியின் ஆரம்பப் பிரிவு 1979 முதல் தந்தை செல்வா தொடக்கப் பள்ளி என்ற நிலையில் தனிப்­பா­ட­சா­லை­யாகUnion_College_Logo இயங்கி வரு­கின்­றது. 1987இல் யுத்த நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கல்­லூ­ரியின் நிர்­வாக கட்­டி­ட­மா­கிய சான்டேஸ் கட்­டிடம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­துடன் கல்­லூ­ரியின் அனைத்து நிர்­வாக ஆவ­ணங்­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இந் நிகழ்­வா­னது கல்­லூ­ரியின் நிறு­வக ஞாப­கத்தை பல­மி­ழக்கச் செய்­த­துடன் நிர்­வாக ரீதி­யாக பல பின்­ன­டை­வுகள் உரு­வா­கு­வ­தற்கும் கார­ண­மாக அமைந்­தது.
இக் கல்­லூ­ரி­யா­னது 1947ஆம் ஆண்டு அதி­உயர் தர பாட­சா­லை­யாக (Super Grade School) தர­மு­யர்த்­தப்­பட்­ட­முதல் இன்று வரை பாட­வி­தான, இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­களில் மாகாண, தேசிய, சர்­வ­தேச சாத­னை­களை நிலை­நாட்டி வரு­கின்­றது. இக் கல்­லூ­ரியின் மூன்­றா­வது அனர்த்த செயற்­பா­டாக 1990ஆம் ஆண்டு யுத்த நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக தனது சொந்த வளா­கத்தை விட்டு இடம்­பெ­யர்ந்­தது. 1990.06.16 அன்று தெல்­லிப்­ப­ழையில் இருந்து இடம்­பெ­யர்ந்து மல்­லாகம் மகா­வித்­தி­யா­லயத்­திலும், பின்னர் இரா­ம­நாதன் கல்­லூ­ரி­யிலும் இயங்­கி­யது. 1995ஆம் ஆண்டு இடப்­பெ­யர்வின் போது தென்­ம­ராட்சி வீர­சிங்கம் மகா­வித்­தி­யா­லயத்­திலும் இக் கல்­லூரி இயங்­கி­யது. பின்னர் மீண்டும் இரா­ம­நாதன் கல்­லூ­ரியில் 10.09.2002 வரை இயங்கி பின்னர் 12 வரு­டங்­களின் பின்னர் தனது சொந்த வளா­கத்தில் உயர் பாது­காப்பு வல­யத்தில் பல்­வேறு வகைப்­பட்ட வளப் பற்­றாக்­கு­றை­க­ளுடன் இயங்­கத்­தொ­டங்கி படிப்­ப­டி­யாக தன்னை நிலை­நி­றுத்திக் கொள்ள முய­லு­கின்­றது. உயர்­பா­து­காப்பு வல­யத்­தினுள் 2002 முதல் 2009 வரை­யான காலப்­ப­கு­தியில் கல்­லூரி இயங்­கிய போது அக் காலத்தில் கட­மை­யாற்­றிய அதி­பரும் ஆசிரியர் குழாத்­தி­னரும் பல்­வேறு பட்ட இடர்­பா­டு­க­ளுடன் கல்­லூ­ரியை இயங்கச் செய்து பல்­வேறு சாத­னை­களை நிலை­நாட்­டினர். இக்­காலத்தில் வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் மாகாண, தேசிய, சர்­வ­தேச சாத­னை­களை இக் கல்­லூரி பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதற்­காக கடின உழைப்பை வழங்­கிய முன்­னைநாள் அதிபர் திரு. புண்­ணி­ய­சீ­லனும், ஆசி­ரியை திரு­மதி ஜெயந்தி ஜெய­தரன் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள். ஏறத்­தாழ 14வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக மாகாண மட்­டத்தில் சம்பி­யன்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கவை. 2009ஆம் ஆண்டு க.பொ.த. சாதா­ர­ண­த­ரத்தில் 100% சித்­தி­க­ளையும் பெற்று வட­மா­கா­ணத்தில் முதல் நிலைப் பாட­சா­லை­யாக தன்னை தர­மு­யர்த்­தி­யது. இவ்­வாறு கல்­லூ­ரியின் கடந்த கால புகழ்­பூத்த அதி­பர்கள் வரி­சையில் அமரர் ஐ.பி. துரை­ரத்­தினம் மற்றும் திரு.கே.பால­சுந்­தரம், திரு. புண்­ணி­ய­சீலன் முத­லானோர் குறிப்­பி­டத்­தக்கோர். இன்று கல்­லூ­ரி­யா­னது அதிபர் திரு.வே.க.இரத்­தி­ன­குமார் தலை­மையில் இயங்கி வரு­கின்­றது. இது தனது சொந்த வளா­கத்தில் இயங்கி வரு­கின்ற போதிலும் பிர­தான ஒன்­று­கூடல் மண்­டபம், மூடிய வகுப்­ப­றைகள், மனை­யியல் கூடம், விவ­சாய அறை, செயற்­பாட்­ட­றைகள், சிற்­றுண்­டிச்­சாலை, மைதான பார்­வை­யாளர் கூடம் மற்றும் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கு, வலைப்­பந்­தாட்­ட­திடல், கூடைப்­பந்­தாட்­ட­திடல், ரெனிஸ் மைதானம் முத­லா­னவை இன்று அழி­வுற்­றுள்­ளன.
கல்­லூரி தனக்­கு­ரிய ஏந்­து­பி­ர­தே­சத்­தினை 1990 ஆம் ஆண்டு முதல் இழந்­துள்­ளது. தற்­பொ­ழுது இக் கல்­லூ­ரியின் ஏந்­து பி­ரதேசத்தில் ஒரு­ப­குதி மக்கள் மீளக்­கு­டி­ய­மர்வு நடை­பெற்று வரு­கின்­றது. இம் மக்கள் நீண்ட கால­மாக முகாம் வாழ்க்­கையில் அடிப்­படை வச­திகள் அற்ற நிலையில் வாழ்ந்­தனர். இம் மக்­க­ளது பிள்­ளைகள் உரிய தரங்­களில் உரிய தேர்ச்­சி­களை அடை­யாது இன்று வகுப்­ப­றை­களில் விளிம்பு நிலை மாண­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இம் மாண­வர்­க­ளுக்கு வேண்­டிய அத்­தி­யா­வ­சிய கற்றல் தேர்ச்­சி­களை மாண­வர்­க­ளது நாளாந்த கலைத்­திட்­டத்­திற்கு மேல­தி­க­மாக கற்­பித்து வரு­வதில் தற்­போ­தைய அதிபர் திரு.வே.க.இரத்­தி­ன­குமார் அதீத கவனம் செலுத்தி வரு­கின்றார்.
கல்­லூரி தனது வர­லாற்றுத் தடத்­திலே புகழ்­பூத்த பழைய மாண­வர்­க­ளான சி.வை தாமோ­த­ரம்­பிள்ளை, தந்­தை செல்­வ­நா­யகம் முன்­னை நாள் யாழ்ப்­பாண பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் குணரட்ணம் மற்றும் பல்வேறு நிலைப்பட்ட பழையமாணவர்களை உருவாக்கியுள்ளது. எனினும் இக் கல்லூரியானது இன்று ஒரு நிலைமாறும் பாடசாலையாக (Transition of school) காணப்படும் நிலையில் தனது 200 வருட நிறைவை எதிர்வரும் 15.10.2016 அன்று கோலாகலமாக கொண்டாடவுள்ளது. இதற்காக இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபமொன்றினை இலண்டன் பழையமாணவர் சங்கத்தினை முதன்மையாகக் கொண்டு ஏனைய அனைத்து பழைய மாணவர் சங்கங்களும் இணைந்து கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. இதன் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் 05.12.2014அன்று மாலை கொழும்பு பழையமாணவர் சங்கம் இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபத்திற்கு நிதி சேகரிப்பதற்காக மாபெரும் கலைவிழாவினை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் கலை அரங்கில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இவ் விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிவடக்கு பிரதேசத்தை வலுவூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல் லண்டன் பழைய மாணவர் சங்கம், சிட்னி பழையமாணவர் சங்கம், மெல்போர்ன் பழைய மாணவர் சங்கம், கனடா பழையமாணவர் சங்கம் முதலானவை நிதியீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்