புதன், 22 ஏப்ரல், 2015

ஒரு சமூக வரலாற்றுக்

கிறிஸ்த்தவமும் தமிழ் வசன நடையும்
“பண்பாடு என்ற பெருவட்டத்திற்குள் அடங்கும் சமயமானது, பண்பாட்டைப் போன்றே அது தோன்றும் சமுதாயத்தின்  பொருள் உற்பத்திமுறை என்ற அடித்தளத்தைப் பெரும்பாலும் சார்ந்து நிற்கிறது. சமுதாயத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் உருவாகும் சமூக உறவுகளும் சமூகத்தின் வளர்ச்சி நிலைகளைப் பாதிக்கின்றன. அதே நேரத்தில் சமயமும் தன் பங்கிற்கு அடித்தளத்தைப் பாதிக்கின்றது. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கைத் தற்காலிகமாகவேனும் தடுத்து நிற்கிறது அல்லது அதன் திசைவழியை மாற்றுகிறது. சில நேரங்களில் துரிதப்படுத்தவும் கூடச் செய்கிறது. எனவேதான் வரலாற்றில் சமயங்களின் பங்கை அறிவது தவிர்க்க இயலாததாகின்றது.” (ஆ.சிவசுப்பிரமணியன்)
எனவே சமயங்கள் தொடர்பான வரலாற்றாய்வும் முறையாக நடத்தப்பட்டால் அதிலிருந்து பெறப்படும் செய்திகள் ஒரு குறிப்பிட்ட காலத்திய சமுதாயத்தின் உண்மையான சமூக வரலாற்றை அறிய உதவும்.
தமிழ் சமூகத்தில் நவீன வசனஉருவாக்கம் நிகழ்ந்தது 16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களின் நுழைவை அடுத்தே. உண்மையில் ஐரோப்பியர் என்பதை விட கிறிஸ்த்தவ மதத்தின் வருகையை அடுத்து தமிழில் வசன உருவாக்கம் நிகழ்ந்தது.
தமிழகம் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் நிலத்தில் ஐரோப்பியரினதும் கிறிஸ்தவத்தினதும் வருகையும் விளைவுகளும் ஒரே மாதிரியானவையாக இருக்கவில்லை. தமிழகத்தின் மேற்குக் கரைக்கு முதலில் வந்த போர்ச்சுக் கிசர்கள் அங்கே ஆக்கிரமிப்பாளராக நிலைகொண்டார்கள். அவர்களின் மதமாக கிறிஸ்தவம் அரச ஆதரவுடன் கால்பதித்து நிலைகொண்டது. ஏறக்குறை இலங்கையிலும் இவ்வாறுதான். ஆனால் தமிழகத்தின் தென்கரையில் கிறிஸ்தவம் அவ்வாறு கால்பதிக்கவில்லை.
தமிழ்நிலத்தின் தென்கோடிக்கரையிலிருந்த கிராமங்களிலேதான் கத்தோலிக்கம் அடிவைத்தது. அதற்கு அன்றிருந்த அரசியல் நிலமைகளும் சமூகப் போட்டிகளும் கொடுமைகளுமே காரணமாக அமைந்தன. காலம்காலமாக தென்கோடிமுத்துகுளிக்கும் துறைகளில் முத்துக்குளிக்கும் உரிமையுடன் வாழ்ந்து வந்தவர்கள் பரதவர்கள் ஆவர்கள். 2ம் பாண்டிய அரசு காலம் வரை இவர்கள் வலிமையுடனும் வளத்துடனும் இருந்தார்கள். பாண்டியப்பேரசு மறைய அராபிய மூர்கள் முத்துக்குளித்துறைகளில் பொருளியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதே நேரம் உள்ளுர் சிற்றரசுகளுக்கு கடுமையான திறைகள் கட்டவேண்டிய கட்டாயத்தில் பரவர்கள்  மிகுந்த துன்பத்தை அனுபவிக்கத் தொடங்கினர். 1516ஆம் ஆண்டு காயல்ப் பட்டிணம் இஸ்லாமியர்கள் உதயமார்த்தாண்ட வர்மனிடமிருந்து முத்துக்குளிக்கும் உரிமையை குத்தகையாகப் பெற்றனர். இதனால் இதுவரை முத்துக்குளிக்கும் உரிமையில் இருந்த பரதவர்கள் புறந்தள்ளப்பட்டு முத்துவணகத்தில் அராபிய மூர்களின் ஏகபொகம் உருவானது. கடல்ப்பகுதியில் அராபியர்களின் ஆதிக்கம் நிலப்பகுதியில் குறுநில மன்னர்களின் ஆதிக்கம் என பரதவர்கள் இரண்டிற்குமிடையே சிக்கித்தவித்தனர்.
இவ்வாறு பரதவர்களுக்கும் மூர்களுக்கும் இடையே பகைமனநிலை தோன்ற ஆரம்பித்தது. பாண்டிய நாட்டின் வடபகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பு மூர்களுக்கு பலத்தையும் ஊக்கத்தையும் அளித்தன.
ஒரு நாள் பரதவகுலப் பெண் ஒருத்தி பணியாரம் விற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அராபிய மூர் ஒருவன் அவளிடம் பாலியல் உறுப்பை குறிக்கும் வகையில் பேச, அப்பெண் தன் கணவனிடம் கூறினாள். கோபத்துடன் வந்த அப்பெண்ணின் கணவன் அவ்வராபியனிடம் இது குறித்து சண்டையிட்டான். சண்டையின் உச்சக் கட்டமாக அப்பெண்ணின் கணவனது காது அறுபட்டுக் காதில் அணிந்திருந்த கடுக்கன் விழுந்து விட்டது. காது கடுக்கனை அறுப்பது என்பது பெரிய அவமானகரமான செயலாக அக்காலத்தில் கருதப்பட்டமையால், இதற்கு பழிவாங்க முனைந்த பரவர்கள் அராபிய மூர்களின் பண்டக சாலைகளுக்கும் மரக்கலங்களுக்கும் நெருப்பிட்டழித்தனர். சில அராபிய மூர்களை கொலை செய்தனர்.
ஆரம்பத்தில் தீவிரமான தாக்குதல் தொடுத்த பரவர்களால் பொருளியல் செல்வாக்கு மிகுந்த மூர்களின் எதிர்த்தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தூத்துக்குடியின்  சுற்றுப்புறப் பகதிகளில் உள்ள பாளையக்காரர்களின் ஆதரவோடு பரதவர்களைக் கடுமையாகப் பழிவாங்கத் தொடங்கினர் அராபியர். பரதவரின் தலை ஒன்றை கொண்டுவருபவர்க்கு ஐந்து பணம் கொடுப்பதாக அறிவத்தார்கள் அராபியர். ஐந்துபணம் பின்னர் இரண்டு பணமாக குறைக்கப்படும் அளவிற்கு பரதவர்களின் தலைகள் ஏராளமாக வரத்தொடங்கியது.
கள்ளிக் கோட்டையிலிருந்து வந்த ஜான் டெக்ரூஸ் என்ற குதிரை வணிகன் இக்கொடுமையை நேரில்கண்டான். அராபிய மூர்களின் கொடூரமான தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, கொச்சியிலிருந்த போர்ச்சுக்கீசியர்களின் உதவியை நாடும்படி அவர்களுக்கு அறிவுரைகூறினான்.
அதன்படி பரவதவர்களின் ஊர்த்தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று கொச்சி சென்று போர்ச்சுக்கீசிய அதிகாரிகளைச் சந்திதித்தது. பரதவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவினால் அவர்களுக்கு உதவுவதாக போர்ச்சுக்கீசியர்கள் கூறவே, உதவி கேட்டுச் சென்ற பரதகுலத் தலைவர்கள் அங்கேயே கத்தோலிக்கராக மதம் மாறினர். ‘ஒரு கையில் வாளுடனும் மறுகையில் சிலுவையுடனும்’ வந்த போர்ச்சுக்கிசியர்கள்கடற்கரை கிராமங்களில் வாழும் பரதவர்களை மதம் மாற்றுவதற்காக மிக்கேல் வாஸ் என்ற விகார் ஜெனரலையும் மூர்களிடமிருந்து பரதவர்களைப் பாதுகாக்க ஒரு படையையும் கப்பல் வாயிலாக அனுப்பிவைத்தனர். வலிமை வாய்ந்த போர்ச்சுக்கல் படையின் பாதுகாப்பைப் பரதவர் பெற்றதால் அராபிய மூர்களின் தாக்குதல் மட்டுப்பட்டது. மிக்கேல் வாஸ் பரதவகுல மக்களை முழமையாகக் கத்தோலிக்கராக மதம் மாற்றினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த பெரிய குழும மதமாற்றமான இது 1534இல் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மானுவல் டெக்‌ஷிலா அடிகள் இச்சம்பவத்தை “ நம் ஆண்டவர் ஒரு காதைக் கிழித்து ஆயிரம் ஆத்மாக்களை இரட்சித்தார்” என்று குறிப்பிடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினர். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் கிறிஸ்த்தவர்களாக மாறியவர்களின் நோக்கம் பற்றி நிக்கோலஸ் லான்ஸிலாட்டோ என்ற இத்தாலிய யேசுசபைத் துறவி இவ்வாறு கூறுகிறார்.
“இந்நாட்டில் மக்கள் முற்றிலும் பொருளாதார நன்மைகளுக்காகவே கிறஸ்த்துவர்களாகினர். மூர்களிடமும் இந்துக்களிடமும்  அடிமைகளாக இருந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் கரங்கள் மூலம் தம் விடுதலையைப் பெற திருநீராட்டை (ஞானஸ்நானம்) நாடினர். கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாப்புப் பெற மற்றவர்கள் கத்தோலிக்கராயினர். சிலர் ஒரு தலைப்பாகைக்காகவும், சிலர் ஒரு சட்டைக்காகவும், வேறு சிலர் தாங்கள் ஏங்குகின்ற ஒரு சிறு பொருளுக்காகவும், சிலர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்கவும், வேறு சிலர் கத்தோலிக்கப் பெண்களோடு தொடர்புகொள்ளவும் கத்தோலிக்கராயினர்.”
மேற்கூறிய கூற்றில் இடம்பெறாத வேறு சில செய்திகளும் சமய மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமைந்தன என்பதையும் இங்கு கூறியாக வேண்டும். தாழ்ந்த சாதியாக இருந்தவர்களைப் பொருளாதாரச் சுரண்டல் ஒரு பக்கம் வருத்தியது என்றால் மற்றொரு பக்கம் சமூகக் கொடுமைகள் அவர்களை வருத்தின. உயர்சாதியினருக்கான ஆலயங்களில் அவர்கள் நுழைய முடியாது. ஆனால், அந்த ஆலய நிலங்களில் உழைத்து உடல்மாயவேண்டும். ஆலய வவழிபாடுகளிலும் திருவிழாக்களிலும்  நெருங்கி நின்று உரிமையுடன் பங்கேற்க முடியாது ஆனால்தேரிழுக்க கட்டாயம் போகவேண்டும்.
இதற்கு நேர்மாறானதாக கத்தோலிக்கத்தைத் தழுவிய தாழ்த்தப் பட்டவர்களின் சமய வாழ்வு அமைந்தது. அவர்கள் தழுவிய ஐரோப்பிய நாட்டுச் சமயம் அவர்களுக்கென்று வழ்பாட்டுக் கூடங்களையும் கோவில்களையும் கட்டித்தந்தது. புரியாத வடமொழி மந்திரங்கள் முணுமுணுக்கப்படும் சமய மற்றும் வாழ்வியல்  சடங்குகள் மறுக்கப்பட்டிருந்ததற்கு மாறாக புரியாத லத்தீன் மொழி மந்திரங்கள் கத்தோலிக்கரான தாழ்த்தப்பட்டவர்களின் பிறப்பு, திருமணம், இறப்புச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டன.
மேலும் கத்தோலிக்க திருச்சபையில் கன்னி மேரிக்கு முக்கியத்துவம் இருந்ததால் தாய்த்தெய்வ வழிபாட்டுக்காரர்களான இம்மக்களுக்கு எளிதில் மேற்கொள்ள உகந்த சமயமாகவும்  கத்தோலிக்கம் அலிக்கமைந்தது. தேரும் சப்பரமும் கத்தோலிக்க ஆலங்களில் பயன்படுத்த எவ்வித தடைமில்லை. பல்வேறு திருவிழாக்களும்  பண்டிகைகளும் ஆரவாரத்துடன்  இங்கு கொண்டாடப்பட்டன.
எல்லாவற்றிக்கும் மேலாக, கூட்டுவழிபாடும், கூட்டிசையுடன் கூடிய திருப்பலிப் பூசையும் அவர்களை ஒரு குழுமமாக ஒன்றிணைத்தன. தேவாலயத்தில் சமசமான நிலையில் நின்று கூட்டுவழிபாடு செய்து கூட்டிசைப்பாடல்கள் பாடும் முறை அவர்களின் முந்தைய வாழ்வில் இல்லாத ஒன்றாகும். இவ்வழிபாட்டு முறை ஒருவகையான சமத்துவ உணர்வை, உளவியல் முறையில் அவர்களுக்கு வழங்கியது.
ஒவ்வொரு கிறிஸ்த்தவரும் கூட்டுவழிபாட்டின் போதும் வாழ்க்கை வட்ட சடங்குகளை ஒட்டிய வழிபாடுகளின் போதும் கூறுவதற்கு சில அடிப்படை ஜெபங்கள் அறிந்து வைத்திருப்பது கட்டாயமானது. இது அவர்களின் சமய வாழ்வின் அடிப்படைக் கடமையாகும்.
ஆனால் எழுத்தறிவு மிகவும் குறைந்த புதிதாக மதம் மாறிய பரவதவர்களுக்கு கத்தோலிக்க அடிப்படை ஜெபங்களை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் அங்கே பணியாற்றிய கத்தோலிக்க குருக்களுக்கு இருந்தது. தமிழி மொழியை எழுதி வாசிக்கும் ஆற்றல் மிக்க மிசனரி இல்லாமையால்  சவேரியாரைப் பின்பற்றி அடிப்படை ஜெபங்களை குரு உரக்கச் சொல்ல அதைக் கேட்கும் மற்றவர்கள் திரும்பி சொல்லி மனப்பாடமாக்கினர்.
தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பாதிரிமார்கள் ஜெபங்களை படித்துக் கூறுவதற்காக தமிழில் மொழிபெயர்த்த ஜெபத்தை போர்ச்சுக்கீசிய வரிவடிவில் அச்சிட்டு வெளியிட்டார்கள். இது முற்றிலும் குருக்களின் உபயாகத்திற்கானது. இப்படி அச்சான நூல்தான் “கார்ட்டிலா” (Cartilha). 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11திகதி லிஸ்பனில் அச்சான இந்நூல் பற்றிய விபரங்களை 1954ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகள் கண்டு விபரங்களுடன் வெளியிட்டார். தமிழின் ஒலி வடிவத்தைப் பெரிய எழுத்திலும் அதற்கு இணையான போர்ச்சுகீசிய எழுத்தைச் சிறிய வடிவத்திலும் அச்சிட்டிருந்தனர். தமிழெழுத்து கருநிறமாகவும் போர்ச்சுக்கீசிய சொல் செந்நிறமாகவும் அமைந்திருக்கிறது. 38 பக்கங்களைக் கொண்டது இந்நூல்.
கார்ட்டிலா நூலை அடுத்து தமிழ்மொழியிலேயே கத்தோலிக்க மந்திரத்தை அச்சிடும் பணியை தமிழ்நாட்டின் தென்கரையில் முத்துக்குளித்துறை என்னுமிடத்தில் பணிபுரிந்த ஹென்றிக் ஹென்றிக்கஸ் (Henrique Hentriquez)  தொடங்கி வைத்தார். இவரே தமிழில் முதல் அச்சுநூல்களை வெளியிட்டவர். இதனால் இவர் தமிழ் அச்சுச் தந்தை என அழைக்கப்படுகிறார்.
ஹென்றிக் அடிகளார் தமிழில் முதலில் அச்சிட்ட நூல் தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Tamul)என்னும் நூலாகும்.  முதன் முதலில் தமிழ் அச்செழுத்தால் அச்சிடப்பட்ட பிரதியை உருவாக்கும் முயற்ச்சி 1577இல் கோவாவில் ஆரமப்பிக்கப்பட்டது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை இதனைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியாக தம்பிரான் வணக்கத்தை கொல்லத்தில் 1578இல் தமிழ் அச்சுக்கட்டையின் மூலம் ஹென்றிக் அடிகளார் உருவாக்கினார்.
கொல்லத்தில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி1578ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அந்நூல் பிரார்த்தனைப் பாடல்களையும், வினாவிடை முறையில் மதத்தைக் கற்பிக்கும் வழிமுறைகளையும் கொண்டதாக அமைந்திருந்தது.  16 பக்கங்களில், அமைந்த அச்சிறுநூல் ‘Doctrina Christian or Tambiran Vanakkam’  (தம்பிரான் வணக்கம்) என்று தலைப்பிடப்பட்டது. இதன் மூலம் இந்திய மற்றும் இலங்கை மொழிகளில் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.
தம்பிரான் வணக்கத்தை தொடர்ந்து ஹென்றிக்ஸ் அடிகளார் 1579ஆம் ஆண்டு “கிரீசித்தியானி வணக்கம்” (Doctrina Christam ) எனும் நூலை வேறு சிலருது துணையுடன் ஹென்றிக் அடிகளார் உருவாக்கி கொச்சியில் அச்சிட்டார். வினாவிடை வடிவில் அமைந்த இந்நூல் 120 பக்கங்களைக் கொண்டது.
இந்நூலை அச்சிடுவதற்கு முத்துக்குளித்துறைப் பரதவர்கள் வழங்கியுள்ளதுடன் அவர்களுக்கு இது இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நூலின்  முகவுரையில் “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் சொற்கத்துக்குப் பொற வழி படிப்பிக்கத்தக்க பலபல பொத்தகங்கள் அச்சிலெ உண்டாக்கவேணுமென்று அனெக முதல் அச்சுண்டாக்க சிலவளித்தீர்களெ ஆகையினால் இந்தப் பொத்தகம் உங்களுக்கு நன்கொடையாக வர விட்டோம். அனெக முதல் சிலவளித்து அச்சுண்டாக்கி வித்ததினாலே சங்கையும் கீர்த்தியும் உலொகா முன்பாகப் பெற்றீர்களெ’’ என எழுதப்பட்டிருப்பதிலிருந்து இதனை அறியலாம்.
இதனைத் தொடர்ந்து ஹென்றிக்ஸ் அடிகளார் பதமிழ்நாட்டிலே புன்னைக்காயல் என்ற இடத்திலே அச்சகம் ஒன்றை முத்துக்குளித்துறை பரவதவர்களின் உதவியோடு நிறுவினார். இதுவே தமிழ் நாட்டிற்குள் உருவான முதல் அச்சகம். இவ்வச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல் வெளியீடு ‘கொம்பெசியொனாயரு’ என்ற கிறிஸஸ்தவ பாவமன்னிப்பு ஜெபமாகும்.
அதனைத் தொடர்ந்து ஹென்றிக்ஸ் அடிகளார் கிறிஸ்தவ புனிதர்களின் வரலாற்றை கூறும் ‘போல்ஸான்டரம்’ (Fols sanctorum) எனும் 669 பக்கங்கள் கொண்ட வசன நூலை 1586 ஆம் ஆண்டு புன்னைக்காயல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார். இது ஸ்பானிய மொழியில் கத்தோலிக்க புனதர்களின் வரலாற்றைக்கூறும் Fols Sannctorum இன் மொழிபெயர்ப்பு ஆகும்.
“முத்துக்குளித்துறையில் வாழும் மலபார் கிறிஸ்தவ மக்களுக்காக அச்சிடப்படுவதால் இந்நூல் முழுவதும் தமிழ் என்ற சொல்லப்படும் மலபார் எழுத்துக்களில் அச்சாகியிருக்கின்றது” எனது அந்நூலுக்கு ஸ்பானியமொழியில் எழுதப்பட்ட முன்னுரையில் குறிபிடப்பட்டுள்ளது.
புதிதாக மதம் மாறி பரதவர்கள் முன்பு நாட்டார் தெய்வங்களையும் வழிபாடுகளையும் உடையவர்களாக நீண்டகாலம் வாழ்ந்தவர்கள். அவர்களின் முந்தைய சமயத்தில் பல இடைத்தெய்வங்களும் புனிதர்களும் நிறைந்து இருந்தார்கள். புதிதாக மாறிய கிறிஸ்தவத்திலோ ஒரேஒரு தெய்வம் மட்டும்மதான் உண்டு. இது பரதவர்களிடை ஒரு உளவியல் இடைவெளி உண்டுபண்ணியது. இதனை நீக்கி பரவர்களுக்கும் கர்த்தருக்கும் இடையில் ஒரு தொடர்பாளர்களா நின்று பரவதர்கள் சார்பாக வேணடிக்கொள்கிறவர்களாக கிறிஸ்தவ புனிதர்களை பரதவர் மத்தியில் பதியவைப்தினூடாக முந்தி அனுபவித்த அதே இறைவிசவாத்தை வளர்ப்பதற்காக ஹென்றிக்ஸ் அடிகாளார் போல்ஸான்டரத்தை எழுதினார் என்றும் கருதப்படுகிறது.
கிறிஸ்தவ மூலநூல்கள் வசனங்களிலே அமைந்திருந்ததாலும் பதிதாக மதம்மாறிய பரதவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகவும் இந்நூற்களில் பயன்படுத்தப்பட்ட தமிழ் பொதுவழக்கான பேச்சுத்தமிழாக இருந்தது. இது பின்னாளில் வசனம் என அழைக்கப்பட்டது. அத்துடன் முதன் முதலாக உயர் அறிவு வர்கத்திற்காக அல்லாமல் சாதராண சனங்களுக்காக நூல் தமிழில் உருவாக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நில்லாது ஹென்றிக்ஸ் அடிகளார் முதன்முதலில் பேச்சுத் தமிழ் இலக்கண நூலையும் உருவாக்கினார். இவ்வாறு கிறிஸ்தவம் தமிழுக்கு புதிய திசைவழியைக் காட்டியதுடன் தமிழ் சமூகத்தில் வெகுசனப்பட்ட வசன உருவாக்கத்திற்கும் வழிகோலியது.


தமிழ்ச் சமூகத்தில் உரையும் வசன உருவாக்கமும் – ஒரு சமூக வரலாற்றுக் குறிப்பு – 2

வசனமும் கல்வெட்டு இலக்கியங்களும்
நீண்ட தமிழ் உலகில் பொதுவழக்கான பேச்சுமொழியின் பதிவுகள் குறித்த கேள்வி எழுவது இயல்பே. செய்யுள் போன்றே பொதுவழக்கு மொழிக்கும்  தமிழ் உலகில்  பதிவுகள் நெடுங்கலமாக காணப்படுகின்றன. வரலாற்று எழுத்தியலின் நம்பகமான சான்றான கல்வெட்டுக்கள் பொதுவழக்கு மொழியிலமைந்த பதிவுகளே. கல்வெட்டுக்கள் என்பவை பொதுபார்வைக்காகவும்,  பொதுமக்களுக்கான அறிவுறுத்தலாகவும் எழுதப்படுபவை என்பதனால் அவை சமகால பேச்சுமொழிக்கு மிகநெருக்கமான மொழிநடையிலே எழுதப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்கும்.
காலத்தால் முந்திய கல்வெட்டுக்கள் ஒரு வரியிலும் பிந்தியவை இரண்டு வரியிலும் அதற்கு பிந்தியவை மூன்று வரிகளிலும் அமைந்து படிப்படியாக வளர்ச்சியுற்று நெடிய சிலாசனமாக மாறின. இவ்வாறான கல்வெட்டுக்கள் பல தமிழகத்திலும்  இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் வரலாற்று ஆரம்பகாலக் கல்வெட்டுக்கள் பொதுவழக்கில் அமைந்தவை என்று கூறுவதற்கில்லை. பிராமி மற்றும் தமிழ்பிராமி வரிவடிங்களைக் கொண்ட தொடக்க கால கல்வெட்டுக்கள் பெரும்பாலும் இரண்டுவகை. ஒன்று சமணத்துறவிகளுக்கு கல்படுக்கையும் அறை, நடுபகல் உணவு போன்ற ஏற்பாடுகள் செய்ததையும் அவற்றை   தானமளித்தவர் பெற்றுக்கொண்டவர் விபரங்களையும்  தெரிவிக்கின்றவாக அமைகின்ற கல்வெட்டுக்கள். இரண்டாவது  ஆகோள் பூசல் போன்ற வற்றிலும் ஏனையவற்றிலும் இறந்தவர்களுக்கான  அவர்களின் பெயர் மரணமடைந்த செயல் என்பவற்றைக் கொண்ட நடுகற்கள் அல்லது  வீரக்கற்கள் ஆகும். இந்த நடுகல் முறையே இன்றுவரை கல்வெட்டு அழைக்கப்படும் இலக்கிய த்திற்கு மூலமாகும்.
பிற்பட்ட பல்லவர்காலத்தில் கல்வெட்டு  சாசன மொழிநடையில் வளர்ச்சி ஏற்படுகிறது. இருபகுதிகளைக் கொண்டவனவாக அமைந்துள்ள இவற்றின் முற்பகுதி ‘பிரசஸ்தி’என்ற பல்லவ பரம்பரையின் புகழ்பாடும் கிரந்த வரிவடிவ சமஸ்கிருத்திலிருக்கும். இரண்டாவது பகுதி செய்திகளை கூறுவதாக தமிழில் அமைந்திருக்கும். இப்பகுதியை வியவஸ்த்தை என்பார்கள். இப்பகுதி மிகவும் நெகிழ்சியானதாக  ஏறத்தாழ பொதுவழக்கான பேச்சுமொழியாகவே அமைந்திருக்கும்.
தொடர்ந்து வந்த சோழர்கால கல்வெட்டுக்களின் உள்ளடக்கம் இலக்கிய இலக்கணப் பொருள்களாக அல்லாமல் நிலஉரிமை மாற்றம், அரசியல் ஆணைகள்,அவை நிறைவேற்றப்படும் முறை, கோயில் நிர்வாகம் என்பன பற்றியதான,  மக்களுக்கான தகவல்களாக அல்லது அறிவுறுத்தல்களாக அமைவதால் இவை பேச்சுமொழிநடைக்கு மிககிட்டடியனவாக அமைந்த மொழியிநடையிலே எழுதப்பட்டன. செப்பேடுகள் சிறிது மாறுபட்டவை.3
முன்பு குறித்த  நடுகல் அல்லது  வீரக்கல் என்ற வழக்கத்தின் தொடர்ச்சி இன்று வரை தொடர்கின்ற ஒன்றாக இருக்கின்றது. இன்றும் யாழ்ப்பாணத்தில் இறப்பு சடங்கின் 31ம் நாள் நடக்கும் சடங்கை கல்லுப்போடுதல் என்றே  குறிப்பிடுவார்கள்.
நினைவுக்கல் என்பது இறந்த மனிதனின் நினைவாக நடப்படும் கல்லாகும். இது பெரும்பாலும் இயல்பான இறப்புக்கு மாறான நிலையில், போர்க்கள இறப்பையோ, கொலையையோ, விபத்தையோ எதிர்கொண்ட மனிதனின் நினைவாக நடப்படுகிறது.  போரில் இறந்த வீரன் அல்லது காட்டு விலங்கினால் கொல்லப்பட்ட வீரனின் நினைவாக நடப்படும் நினைவுக்கல் வீரக்கல்  எனப்படுகிறது.  ஆநிரை கவர்தலுடன் அல்லது கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்டலுடன் தொடர்புடையதாகவே இப்போர்கள் பெரும்பாலும் அமைந்தன.  புலி போன்ற கொடிய காட்டு விலங்குகளுடன் போரிட்டு மரணமடைந்தோருக்காகவும் நடுகற்கள் நடப் பட்டன.  உடன்கட்டை ஏறிய பெண்களுக்கும் பொது நன்மைக்காக உயிர்துறந்தவர்களுக்கும் நடுகற்கள் நடப்பட்டன. உடன்கட்டை ஏறிய பெண்ணின் நினைவாக நடப்படும் கல் சதிக்கல் அல்லது  மாசாத்திக்கல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இறந்த விலங்கின் நினைவாகவும் நினைவுக்கல் நடப்படுவதுண்டு.
ஆதிகாலத்தில் வெறும் கல்நடுதலாகத் தொடங்கிய வழக்கம் பின்னர் அக்கல்லில் இறந்தபோன வீரரின் உருவத்தை பொறிப்பதாக வளர்ச்சியடைந்தது.  வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை “எழுத்துடை நடுகல்” என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது.  இவ்வாறு தோன்றிய கல்வெட்டுக்கள் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியினால் இறந்தவரின் பெருமைகளையும் அவரது வம்ச விபரங்களையும் விரித்துகூறும் கல்வெட்டு எனும் இலக்கியவகையாக உருவானது.
இன்றுவரை யாழ்ப்பாணத்தில் மரணசடங்கின் இறுதி நிகழ்வான அந்தியேட்டியை கல்லுப்போடுதல் என்ற குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. அந்தியேட்டிக் கிரியை முடிந்த பின்னர் சபையோர் முன்னிலையில் இறந்தவர்களைப் பற்றி கல்வெட்டுப் பாடும் வழக்கம் ஈழத்தமிழரிடையே நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இன்று யாழ்ப்பாணத்திலே இறந்தவரின் வம்ச விபரங்கள்அடங்கிய கல்வெட்டு வெளியிடுதல் கட்டாயமானதான இருந்து வருகிறது.
வரலாற்றும்சங்கள் பொருந்திய சில வகையான ஈழத்து இலக்கியங்களை ‘கல்வெட்டு’ என்ற குறிப்பிடுவது இலங்கையிலே மத்திய காலத்திலிருந்து வழங்கிவருகின்றது. கோணேசர் கல்வெட்டு, நாடுகாட்டு பரவணிக் கல்வெட்டு ஆகிய இரண்டும் கல்வெட்டு என்றே அழைக்கப்படுகின்றன. வையாபாடல் எனும் நூல் சில இடங்களில் ‘கல்வெட்டும் செய்யேடும்’ எனவும்  குறிப்பிடப்படும். ‘மட்டக் களப்பு மான்மியம்’ என்று அறியப்படும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் நூலும் கல்வெட்டு இலக்கிய வகையாகவே அமைகின்றது.
இக்கல்வேட்டு இலக்கியங்கள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. அதுவும் இலங்கையின் கிழக்கு கரையோரமாகவே தோன்றியுள்ளன. சிலாசனங்களில் உள்ள மெய்க்கீர்த்தி வாசகங்களை உதாரணமாகக் கொண்டு பெரியோரின் புகழினைக் குறிப்பிடும் பாடல்களை கல்வெட்டு எனக்குறிப்பிடும் வழக்கம் இலங்கையில் நிலைபெற்றதென பேராசியர் சி.பத்மநாதன் குறிப்பிடுவார்.
பொலநறுவையிலுள்ள சோழர்காலத்தைய சிலாசனம்
பொலநறுவையிலுள்ள சோழர்காலத்தைய சிலாசனம்
16இற்கும் 17இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இந்நூல்களுள் கோணேசர் கல்வெட்டு முற்பகுதி செய்யுள் வடிவத்திலும் 2ம் பகுதி வசனத்திலும் அமைந்திருக்கிறது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் முற்பகுதி வசனத்திலும் 2ம் பகுதி செய்யுளிலும் அமைந்திருகிறது. நாடுகாட்டு பரவணிக் கல்வெட்டு முழுவதும் வசனத்தில் அமைந்துள்ளது.
இவை. தமிழ்நாட்டில் சம காலத்தில் வழங்கிய மணிப்பிரவாளம் போலல்லாது சமஸ்கிருதச் சொற்கள் குறைந்த இலங்கைத் தமிழரிடையே வழங்கிவந்த தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. . தம் வழமைகளையும் வராலற்றறையும் அழியாது காக்கும் நோக்குடன் ஆக்கப்பட்டுள்ள இவை, தொடர்ந்த தமிழ் சமூகத்தின் பொது வழக்கின் மரபிலிருந்து தோன்றியவை. தமிழ் சமூகத்தில் பிறமொழிகளின் இடையீடின்றி இயல்பாக உருவான வசன உருவாக்கத்தின் ஆரம்பமாக இந்நூல்களைக் கொள்ளலாம். இவை செய்யுள் வழக்கா அமையாதவற்றை ‘வசனம்’ என்றே குறிப்பிடுகின்றன. கோணேசர் கல்வெட்டில் வசனம் என்ற சொல்பல இடங்களில் வருகின்றது.
ஏறக்குறை ஐரோப்பியர் தமிழ்நாட்டில் வசன உருவாக்கங்களை செய்ய முற்பட்ட சமகாலத்தில் இறுதிவடிவை அடையத் தொடங்கின. ஆயினும் இவை தமிழ்நாட்டில் தோன்றிய ஐரோப்பிய கிறிஸ்த்தவ பாதிரிகளால் உருவாக்கப்பட்ட வசனநடையிலிருந்து வேறுபட்டதாக அமைந்திருக்கின்றமை விசேட அம்சமாகும்.
தமிழில் வசனநடை உருவாக்கம் பற்றிய ஆய்வில் முக்கியமாகக் கொள்ளப்படவேண்டிய இவ்விலக்கியங்கள்  தமிழ் வசன நடை வரலாறுகளில் அறிஞர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இங்கே கல்வெட்டிலக்கியங்களை வாசிக்கலாம்
1. கோணேசர் கல்வெட்டு


தமிழ்ச் சமூகத்தில் உரையும் வசன உருவாக்கமும் – ஒரு சமூக வரலாற்றுக் குறிப்பு

தொடர்ச்சியறா நீண்ட பழமைப் பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூத்தில்  அச்சுக்கருவியின் வருகையும், அதன் காரணமாக பரவலடைந்த வசனநடை உருவாக்கமும் புதிய மாற்றங்களை உருவாக்கின. அச்சுக்கருவியும், வசனநடையும்  ஐரோப்பியரின் வருகையின் விளைவாகவே, இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் கிறிஸ்தவ சமயத்தின் வருகையோடே தமிழ் சமூகத்தில்அறிமுகமாகின்றன. சமண,பௌத்த சமங்களினால் பொழிவும் செழுமையும்  சீரும் பெற்ற தமிழ் கிறிஸ்தவதால் நவீனமயமாகியது.
ஆனால் தமிழையும் சைவத்தையும் ஒன்றாகச் சேர்த்து அணுகுகின்ற போக்குகளால் அவை பதிவுகளோ, ஆய்வுகளோ  குறைந்தவளவே இடம்பெற்றுள்ளன. அவ்வாறு எழுதப்பெற்றவைகூட மொழிவழிப்பட்ட இலக்கியவரலாறாக அவற்றை  நோக்குகின்றனவேயன்றி,  இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழ் பா ரம்பரியத்தில் மிகவும் பிற்காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் சமூகநிலைப்பட்ட காரணிகளை உள்ளடக்கிய சமூக வரலாறுகளாக பார்க்கவில்லை.
FrThaninayagamஇவ்விடயத்தில் பேராயர்.சபா.குலேந்திரன், கலாநிதி.சரோஜினி பாக்கியமுத்து, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. ஆயினும் அவர்களுடைய  ஆக்கங்கள் போதியளவு எம்மத்தியில் இனங்காட்டப்படவில்லை.  தமிழின் முதல் அச்சு நூல்களை தேடிகண்டுபிடித்து,  அவற்றின் ஒளிநகல்ப்படங்களை தமிழ் சமூகத்திற்கு  அறிமுகப்படுத்தி , இத்துறையில் மேலும் ஆய்வுகள் சிறக்க வழிகோலியவர் தமிழ்த்தூது வண.தனிநாயகம் அடிகளும் இவ்விடயத்தில் மிகமுக்கியமானவரே
-1-
உரையும் வசனமும்
உரையும் வசனமும் ஒரே பொருளைத் தருகின்ற சொற்கள்தானே?  அவற்றை  ஏன் இருவேறு பொருள்பட எழுதவேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால் சாதியமும் வர்க்க வேறுபாடுகளும் அதிகார நிலைப்பட்ட கல்வியும் ஆழநிலைபெற்ற  தமிழ் சமூகத்தில் ‘தமிழ் சமூகம்’ என்று அடையாளப்படுத்தப்படும் தமிழ்கூட ஏறக்குறைய 19ம் நூற்றாண்டுவரை இருவேறு வழக்குகளுடன் இருந்தது.
எல்லா மொழிகளிலும் பேச்சுமொழி, எழுத்துமொழி என இருபிரிவுகள் உண்டு. வாழும் நிலப்பகுதி, மேற்கொள்ளும் தொழில் ஆகியவனவற்றின் அடிப்படையில் பேச்சுமொழி சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். தமிழ் சமூகத்தில் இவற்றுடன் சாதியமும் பேச்சுமொழியில் வேறுபாட்டை உண்டுபண்ணியது. இவ்வாறு வேறுபடும் பேச்சுமொழியை கிளைமொழி என மொழியியல் அறிஞர்கள் குறிப்பார்கள். தொல்காப்பியர்  செய்யுளியல் நூற்பா 239ல் சேரி மொழியால் செவ்விதிற் கிளந்து என்று குறிப்பது கிளைமொழியைத்தான் என பேரா.ஆ.சிவசுப்ரமணியன் கூறுகிறார்.  இதில் சேரி மொழி என்பதற்கு பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல் என நச்சினார்க்கினியர் பொருளுரைப்பர்.
தமிழ் அறிவுச்சமூகத்தில் மொழியும் அறிவும் உயர்ந்தோருக்குரியதாகவே காணப்பட்டு ‘வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே ‘ எனலாயிற்று. அறிவும் கல்வியும் குறிப்பிட்ட சாதியையும் வர்க்த்தையும் சேர்ந்தவர்களின் வட்டத்திற்குள்ளேயே மட்டுப்பட்டு இருந்தது. 18ம் நூற்றாண்டுவரை இலக்கியங்கள் மட்டுமின்றி , மருத்துவம், சோதிடம் போன்ற அறிவியல் நூல்களும் பொதுவழக்கான சேரிமொழியைத் தவிர்த்து உயர் வழக்கான  செய்யுள் வடிவிலேயே இருந்தது.
பண்டைக்காலத்தில் நூலை எழுதுவது மிகவும் சிரமமானதாயும் செலவுமிகுந்ததாயும் இருந்தது.  பதப்படுத்தப்பட்ட பனையோலை ஏடுகளிலே இரும்பாணி கொண்டே அன்றைய நூல்களை எழுதிவைக்க வேண்டி இருந்தது. இதனாலே சுருங்கச் சொல்லல் எனும் முறையைக் கைகொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. தவிரவும்  அக்காலத்தில்  ஏட்டுப்பிரதிகள் மிகச்சிலவே இருந்ததனால் குருகுல முறையில் கற்கும் மாணவர்கள் எல்லா நூல்களையும் மனனஞ்செய்யவேண்டி இருந்ததோடு, கற்பிக்கும் குருவும் எல்லா நூல்களையும் மனனஞ் செய்யவேண்டி இருந்தது. இது காரணம் பற்றியே பண்டைத்தமிழர்கள் சுருங்கச் சொல்ல வாய்ப்பானதும் மனனஞ்செய்ய இலகுவானதுமான செய்யுள்நடையைக் கைக்கொண்டு இதற்கு வசதியற்ற உரைநடையை புறமொதிக்கினர் என்பதுவும் இதற்கு முக்கிய காரணமாகும்.1
ஆயினும் தமிழின் சமகால ஐரோப்பிய,மத்தியாசிய மொழிகளான எபிரேயம், அரமிக் போன்ற மொழிகளில் வசனநடை உருவாகி வளர்ந்துள்ளது. கிறிஸ்த்துவுக்கு முந்திய யூத சமூகத்தின் பழைய ஏற்பாடு வசனத்தில் தான் அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பனையேடுகளை விட தாயரிப்பு சிரமும் செலவும் கூடிய பதப்படுத்தபட்ட தோல் மற்றும் பாப்பிரஸ் என்பவற்றிலேயே அவற்றை  எழுதி பாதுகாத்தனர் .   செலவுமிகுதியும், தயாரிப்பு வேலைகளின் சிரமமும் மட்டுமே  செய்யுள் வடிவம் தமிழில் தொடர்ந்தமைக்கான காரணம் என்பதை என்பதை  முற்றுமுழுதாக ஏற்கமுடியாது.
7ம் 8ம் நூற்றாண்டுகளில் நிலைபெற ஆரம்பித்த வைதீகச் சார்புகொண்ட பார்ப்பனிய, வேளாள நிலவுடமை சமூகம் தமிழ் சமூகத்தின் மேலாண்மையாக மாறியபோது சாதியத்தை இறுக்கமாகப் பேணிக்கொண்டனர். இக்காலத்தில்த்தான்  செய்யுள் வடிவம் அதன் உச்சநிலையை அடைந்தது. மறுதலையாக இக்காலத்திலேதான் ஏற்கனவே உயர்ந்தோர் மாட்டாக வந்த  தமிழ் மரபை இறுக்கமாக அனுசரித்து அறிவு மற்றும் கற்றல் செயற்பாட்டில் உயர்தோர் தவிர ஏனையவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டனர்.
முன்பு இனக்குழும மற்றும் ஆரம்ப அரசுருவாக்கம் நிகழ்ந்த காலப்பகுயில் அவைதீக சமயச் சார்பானவர்களால் இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு தமது வைதீக சார்பு ஏற்றுவதற்காகவும்,  காலமாற்றத்தால்  ஏற்பட்ட மாற்றத்தினால் மயக்கமேற்படுத்திய செய்யுள்களை புதிய மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் பழைய நூற்களுக்கு உரைகள் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. பண்டைத்தமிழ்நூல்களுக்கு உரை எழுதுகிற செயற்பாட்டினூடாக அந்நூல்கள் வைதிக கருத்துக்களுடன் இணைக்கப்பட்டன.Students+in+Temple+School+in+Rameswaram,+Tamil+Nadu+-+India+1928 ss
இவையே தமிழ்ப் பாரம்பரியத்தில் உரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வுரைகள்  எல்லோருக்குமானதாக பொதுவழக்கான மொழியில் எழுதப்படவில்லை.  இலக்கண இலக்கியங்களை கற்றறிதற்குரிய புலமையுடையோராக முடிந்தவருக்காகவே அவை எழுதப்பட்டன.  அத்துடன் அவை புலமைமிக்க  மொழியில் எழுதப்பட்டும் இருந்தன. சைவவேளாள சமூக ஆதிக்ககம் சார்பானதாக அமைந்த சைவ சித்தாந்த நூல்கள், பொதுவானவர்களுக்காக எழுதப்பட்டபோதும்,  அவை சைவவேளாள மடங்களுக்குள்ளும் ஆதீனங்களுக்குள்ளும் முடங்கிக் கொண்டன.
குருகுலக் கல்விமுறை நிலவிய தமிழ் சமூகத்தில் உரைகள் கொண்டு பழந்தமிழ் நூல்களை அறிதல் என்பது கடினமான ஒன்றே. உரையாசிரியர்களும் உரைகளில் பலவிடங்களில் ‘இதனை வல்லார்வாய்க் கேட்டுணர்க’  என்று எழுதிச் சென்றமையால் தமிழ் முன்போலவே உயர்ந்தோர்  மாட்டாக குறுகிய வட்டத்திற்குள்ளேயெ வழங்கிற்று.
இக்காலங்களிலேதான் முத்தையும் பவளத்தையும் மாறிமாறி ஒரு மாலையிற் கோத்தது போல் சமஸ்கிருதச் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் சரிக்குசரியாக கலந்தெழுதிய தொடர்மொழி நடையான மணிப்பிரவாள நடை என்பது புழக்கத்திற்கு வந்து கற்றோர் மொழியாக  மாறுகிறது. நடையினைத் தோற்றுவித்தவர்கள் சமணர்கள்.
வடஇந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சமணசமயத்தின் சமஸ்கிருதச் சுலோகங்களை முழுமையாகத் தமிழ் எழுதுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்கிய சமணர்கள் அவற்றை எழுதுவதற்கு பிரதேச மொழியையும் கலந்து  பொதுவரிவடிவமான கிரந்த மொழியைத் தோற்றுவித்தார்கள்.  இது சில பல்லவர்கால சாசனங்களில் காணப்படுகிறது.
சம்பந்தர்காலத்தில் இக்கிரந்த மொழியிலேயே சமண நூல்கள் இயற்றப்பட்டன இதனை “சம்பந்தர் ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாது உருச்சிதைத்து உரைப்பது” என்று எதிர்த்துப்பாடினார். இக்கிரந்தநடையே பின்னர் மணிப்பிரவாளமாக வளர்ச்சியடைந்தது. சமணர்களைத் தொடர்ந்து வைணவ உரையாசிரியர்களால் வளர்க்கப்பட்ட இந்த மணிப்பிரவாள நடையே உரையாசிரியர் காலந்தொட்டு நாவலர்காலம் வரை பெருவழக்கிலிருந்தது.2
தமிழ் வரலாற்றில் உரை என்ற சொல்லால் குறிக்கப்படுவது  மணிப்பிரவாள நடையிலமைந்த உரையாசிரியர்களின் உரைகளே. இது பொதுவழக்கான சாராதண பேச்சுவழக்கிலிருந்து வேறுபட்டே இருந்தது. உயர்குழாத்திலும் குறிப்பிட்ட வட்டத்தினருக்குரியாகவே உரை என்பது தமிழ் வரலாற்றில்அமைந்திருந்தது. இந்த வித்தியாசத்தை நாம் குறித்துக் கொண்டால்த்தான்  உரையும் வசனமும் ஒரு பொருள் குறித்தல்ல தமிழ் சமூகத்தின் இரு நிலைகளில் இயங்கி வந்திருப்பதையும் வசனம் என்பது உரையிலிருந்து வேறாக இருப்பதையும் அறியமுடியும்.

கருத்துகள் இல்லை: