திங்கள், 13 பிப்ரவரி, 2017
சனி, 4 பிப்ரவரி, 2017
மர்மயோகி - நாஸ்டிரடாமஸ்...
நாஸ்டிரடாமஸ் எது நடந்ததோ, அதைத்தான் சொன்னார். எது நடக்கிறதோ, அதை சொல்லியிருக்கிறார். எது நடக்கப் போகிறதோ, அதைக்கூட சொல்லியிருப்பார்.
யார்? இந்த நாஸ்டிரடாமஸ்.
கி.பி 1503 - 1566 ஆண்டில் பிரான்சில் வாழ்ந்த தீர்க்கதரிசி Michael De Nostredame. அதாவது ஜோசியர். பளபளக்கும் சட்டை போட்டுக்கொண்டு, கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டையுமாக கும்பராசி நேயர்களே! என, டீவியில் தினசரி ராசிபலன் சொல்லும் சாதாரண ஜோசியர் இல்லை இவர். இந்த உலகில் நடந்ததை நடப்பதை நடக்கப் போவதை கணித்த உலகமகா ஜோசியர். இவர், அப்படி என்ன சொன்னார் ? சொன்னதெல்லாம் நடந்ததா?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Every thing has a reason behind it " அதுபோல் இந்த உலகில் நிகழும் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரு காரணம் புதைந்துள்ளது. சில சம்பவங்கள் நிகழும்போது அதற்கான காரணங்கள் புரிந்துவிடும். சில, அந்த சம்பவத்தோடு ஏதோ ஒரு வழியில் தொடர்புடையதாக இருக்கும். இந்த விளைவு "பட்டர்பிளை விளைவு" (Butterfly Effects) எனப்படும்.அதன் தொகுப்பே "கயோஸ் தியரி" (Chaos theory) என்கிறார்கள்.
சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அதை உணர்ந்து, இப்படித்தான் நடக்கும் என அடித்துக் கூறுபவர்கள் சிலரே. அவ்வாறு முன்னமே அறிந்து, எதிர்காலத்தைக் கூறுவதை ஜோதிடம், ஆருடம், தீர்க்கதரிசனம் என்றெல்லாம் வகைப்படுத்தலாம். அறிவியல் படி இது ESP - Extra Sensory Perception. நம்ம சித்தர்கள், ஞானிகள் போன்றோர் இந்த வகையறாதான். சினிமாவில் பார்த்திருப்போம், ஹீரோயின் ஊருக்கு போகும் டிரையின் கவிழப் போவது ஹீரோவின் தலைக்குள் முன்கூட்டியே பல்பு எறியும், உடனே பின்னணி இசையோடு ஓடிச்சென்று டிரையினை நிறுத்தி, அனைவரையும் காப்பாற்றி, ஹீரோயினைக் கட்டிபிடித்து டூயட்பாட சென்றுவிடுவார். நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் சக்தி நம்ம ஹீரோவுக்கு இருக்கும் . அதுபோல நிஜத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த ஹீரோதான் இந்த நாஸ்டிரடாமஸ். இவர் கொஞ்சம் ஒருபடி மேலே சென்று, இன்றுவரை உலகத்தில் நடந்ததையும், நடக்கப் போவதையும், இந்த உலகம் எப்போது அழியப் போகிறது என்பதையும் மனுசன் புரியாத சூத்திரங்கள் நிரம்பிய பாடல்களாய் எழுதி வைத்துவிட்டு சிவனே என்று போய்விட்டார். அதற்குப்பின் இன்றுவரை, உலகில் நடந்த முக்கிய சம்பவங்கள் அவரது குறிப்புகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி, ஹென்றி மன்னர் மரணம், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், நெப்போலியனின் ஆட்சி, டயானா மரணம், கென்னடி மரணம், லண்டன் தீவிபத்து, பிளாக் செப்டம்பர் மற்றும் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை, ராஜிவ்காந்தி கொலை என அவர் முன்கூட்டியே கணித்தது ஏராளம். 2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற புரளி பரவியபோது, விஞ்ஞானிகள் பலர் வானத்தை வெறித்தபடி ஆராய்ந்து கொண்டிருக்க, அதைவிட இரண்டு மடங்கு ஆராய்ட்சியாளர்கள் குப்புற படுத்துக்கொண்டு நாஸ்டிரடாம்ஸின் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தனர்.
ஏன்? அவர் இவற்றையெல்லாம் மறைமுகமாக குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதியிருந்தால் முன்கூட்டியே தடுத்திருக்கலாம் இல்லையா? ( நம்ம சினிமா ஹீரோ மாதிரி) எனத் தோன்றும். அங்குதான் பிரச்சனையே. அரசர்களும், மதகுருமார்களும் கடவுளின் பிரதிநிதியாக வணங்கப்பட்ட அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இது சாத்தியமில்லை. வாயைத் திறந்தால், வாயிலே வெட்டுவார்கள். அதனால்தான் அவர் குறியீடுகளால் யாருக்கும் விளங்காத தமிழ் சினிமா பாடல் போல் தான் கணித்ததை எழுதிவைத்தார். இவ்வளவு கணித்தவர் தன் மரணத்தையும் கணித்திருப்பார் அல்லவா. அதுவும் உண்மைதான். "சார் காலையில் பார்க்கலாம்" என அவரது உதவியாளர் Jean- Aymes -de chavigh இரவு வேலைகளை முடித்துவிட்டு கூறும்போது, சாரி "காலையில் நான் இருக்கமாட்டேன்" என ஜாலியாக கூறி, பல மண்டைகளை இன்றுவரைக்கும் குழம்ப வைத்துவிட்டு மண்டையைப் போட்டு விட்டார்.
இந்த புத்தகம் உலகில் நடந்த சில முக்கிய சம்பவங்களையும், அதற்கு நாஸ்டிரடாமஸ் எழுதிவைத்த குறிப்புகளையும் தெளிவாக காட்டுகிறது. இடையே அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அறிய புகைப்படங்களையும் தொகுத்திருப்பது அழகு. அவரது நான்குவரி பாடல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கொடுக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் கார்த்திக் ஸ்ரீநிவாஸின் படைப்பை பாராட்ட தகும். இவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் அளித்த உழைப்பையும் புத்தகத்தை படிப்பவர்கள் உணரலாம். இன்றளவும் நாஸ்டிரடாமஸின் புத்தகமான "தீர்க்கதரிசனங்கள் (The Prophecies)" பற்றி ரூம்போட்டு ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆராய்ந்து கொட்டிய முடிகள் தாராளம்.
இதெல்லாம் கட்டுக்கதை அவர் எழுதியது வெறும் பா..பா பிளாக்ஷீப் ரைம்ஸ், என வாதிடுபவர்களும் உண்டு. எது எப்படியோ, நாஸ்டிரடாம்ஸ் ஒரு மர்மயோகி, அவரது குறிப்புகள் புரியாத புதிர். அவற்றில் சிலவற்றை இந்த புத்தகத்தில் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் . நாஸ்டிரடாமஸ் பற்றியும் அவரது குறிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு சிறு துளிதான் ஆனால் கடல் அளவு அடுத்த புதிர்களுக்கு வழிவகுக்கிறது. தவறாமல் வாசியுங்கள்.
புதன், 1 பிப்ரவரி, 2017
மனித வாழ்வின் கனவு
இலக்கியம் மனித வாழ்வின் கனவு. வாசிப்போ, எழுத்தோ இலக்கியத்தைத் தன்விருப்பமாகத் தேர்ந்தெடுக்கிற ஒருவரின் வாழ்வு முழுக்கவும் கனவுகளால் நிறைந்தது. ஒரு கனவு, அதற்குள் ஒரு கனவு என ஒவ்வொரு படைப்புக்குள்ளும் புகுந்து, திளைத்து வெளியேறி, தன்னைத்தானே அவன் தரிசித்துக் கொள்கிறான். சுய அலசல், எள்ளல், தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்குதல் எல்லாமே அவனுக்கு இதன்மூலம் சாத்தியமாகிறது.
படைப்பு தனி உலகம். ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்த சமூக அமைப்பில் மரபை மீறுகிறவராக, சமகாலச் சூழலின் செயல், நெறிகளை விமர்சிப்பவனாக, சித்தரிப்பவனாக படைப்பாளி இருக்கிறான். அவனுக்கென்று பொறுப்புகளும், கடமைகளும் இருக்கிறதா? அவை வரையறுக்கப்பட்டவையா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது அசலான பதிவாக இருக்காது. நான்கு கட்டம் வரைந்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிச் சென்று மீண்டும் திரும்பி வருவதைப்போல விளையாட்டு அல்ல அது. பாரம்பரியங்களின் தார்மீக மதிப்புகள், சரிந்து கொண்டிருக்கும் ஒழுக்க மதிப்பீடுகள் ஆகியவற்றை ஒவ்வொரு படைப்பும் பதிவு செய்கிறது.
ஒரு படைப்பாளியின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை புனைவுலகின் மூலமே முழுமையடையச் செய்ய முடியும். கட்டுரைகள், உடனடி எதிர்வினைகள் எனத் தொழில்நுட்பச் சாத்தியங்கள் பல முளைத்திருந்தாலும் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற வடிவங்கள் காலத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. அவற்றின் கூர்மையான வார்த்தைகள் நம்மைச் சீவிக்கொண்டேயிருக்கிறது. நமக்குப் பிறகு காலத்தின் ஆவணமாக வருங்காலத்திற்கும் அவை பேசப்படும். இன்னும் சொல்லப்போனால், கவிதை வடிவத்தைவிட நாவல்களும், சிறுகதைகளும் தொடர்ந்து பேசப்படுவதற்கான காரணம் இதுதான். அவையே நம் காலத்தின் தேவைகள். உணர்வுகளும், வாழ்வின் அர்த்தங்களும், கேள்விகளும், சமூக நிலைப்பாடுகளும் கவிதையாக மட்டுமே பதியப்படாமல் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பதியப்பட வேண்டும். அவலங்கள் சாட்டைச் சொடுக்கைப் போல கவிதைகளில் பதியப்பட்டாலும், அவற்றின் தழும்புகளை உணர்த்த, காலங்களுக்கு அவ்வுணர்வுகளைக் கடத்த புனைவுகளால் மட்டுமே சாத்தியமாகும்.
தமிழ் இலக்கியத்தில் நன்கு எழுதக்கூடிய பெண் கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புனைவுலகை எடுத்துக் கொண்டோமென்றால் அவர்களின் பங்களிப்பின் சதவிகிதம் மிகமிகக் குறைவானது என்பதே உண்மையான நிலை. அதுவும் பெண்கள் அதீத அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற, சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிற அல்லது குறைந்தபட்ச எல்லைகளுக்குள்ளாக சுதந்திரமாகப் புழங்க அனுமதிக்கப்பட்டிருக்கிற நம் சமூக கட்டமைப்பில் பெண்ணெழுத்தின் பங்கு இன்னும் அதிகமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?
பல சமயங்களில் நான் வாசித்தவைகளிலிருந்து மேற்கோள் காட்டி முகநூலில் பகிர்கிறதை நீங்கள் வாசித்திருக்கலாம். அப்போதெல்லாம் எனக்குள் எழுகிற கேள்வி இது. கவிதைகள் என்றால் நிறைய அழுத்தந்திருத்தமாக, ஆழமான கருத்துகளை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற பெண் கவிஞர்கள் (கவிஞர்களை பால் சார்ந்து பிரித்துச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை; இப்பத்தியின் நோக்கம் கருதி இங்கு குறிப்பிடுகிறேன்.) நிறைய இருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்தமான பல பெண் கவிஞர்களின் கவிதைகளை நான் பகிர்ந்திருக்கிறேன்.
ஆனால், புனைவுலகை எடுத்துக்கொண்டோமெனால், எனக்கு உடனே நினைவுக்கு வருகிற பெண் எழுத்தாளர்களின் பெயர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஹெப்சிபா ஜேசுதான், அம்பை, ஆர்.சூடாமணி, அநுத்தமா, கிருத்திகா, ராஜம்கிருஷ்ணன், உமா மகேஸ்வரி, பாமா அவ்வளவுதான் உடனடி நினைவுக்கு வருகிற பெயர்கள்.
இன்னும் சற்று யோசித்துச் சொல்வதானால், திலகவதி, சிவகாமி, தேன்மொழி, சு.தமிழ்ச்செல்வி, சல்மா, வெண்ணிலா, தமிழ்நதி, ஷர்மிளா செய்யத் இவர்கள் பெயர்களைக் குறிப்பிடலாம். இதுதவிர, நன்கு எழுதப்பட்ட ஒற்றைச் சிறுகதைத் தொகுப்போடு தேங்கிப்போன சிலரது பெயர் நினைவிருக்கிறது. வேறு எவரேனும் விடுபட்டிருந்தால் நீங்கள் குறிப்பிடலாம்.
உலக இலக்கியங்களில் எடுத்துக்கொண்டோமென்றால் காத்திரமான பல பெண் படைப்பாளிகளின் பெயர்களைப் பட்டியலிட முடியும். ஆனால், இந்திய/தமிழ்ச் சமூகச் சூழலில் புனைவுலகைப் பொறுத்தவரை பெண்ணெழுத்தின் பங்களிப்பு மிகமிகக் குறைவான சதவிகிதமே உள்ளது.
பெண்கள் தொடர்ந்து அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிற, காலம்காலமாக மறைமுக வரையறைகள் விதிக்கப்பட்டு, திணிக்கப்பட்டிருக்கிற சூழலைக் கொண்டது நம் சமூகம். கட்டுப்பாடின்றி வாழ்கிற ஆண் சமூகம் ஒரு புறம், ஒழுக்கப்பிறழ்வு என்ற ஒற்றைச் சொல்லில் அடிப்படையான பெண்ணுணர்வுகளை கீழ்மைப்படுத்திவிட முடிகிற பெண் சமூகம் ஒரு புறம். இந்த இரு பக்கத் தராசுத் தட்டுகளின் அநியாயமான கீழிழுத்தல்கள் நாம் கண்கூடாகப் பார்க்கிற ஒன்றுதான். இது அறிவுஜீவிகளின், பெண்ணியவாதிகளின், நவீன பெண் எழுத்தாளர்களின் பிரச்னை மட்டுமில்லை. சமூகத்தில், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லோரது பிரச்னையும்கூட.
வெளியே மகிழ்ச்சியாகவும், சுதந்திரத்தோடும், வலுவானதாகவும், வெகுளித்தனத்தோடும் இருப்பதாகக் காட்டிக் கொள்கிற பெண் மனம் ஆழ்மனதில் வர்ணிக்க இயலாத துயரங்களையும், தர்மசங்கடங்களையும், சமூக நிர்ப்பந்தங்களையும், கட்டுப்பாடுகளையும் நினைத்துக் கொண்டேதான் இருக்கிறது. சிந்தனைத் திராணியற்ற சாதாரண பெண்களுக்கு இது மிகவும் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அறிவுத்தளத்தில் செயல்படுகிற பெண்களுக்கும் இதே அகச்சிக்கல்கள் இருக்கிறது என்பதை அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற வார்த்தைகளில், வரிகளில் வாசித்து உணர முடிகிறது. தனிமையும், பாதுகாப்பின்மையும் வெவ்வேறு தளத்தில் இயங்குகிற பெண்களின் மன உலகை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது என்பதே நிதர்சனம்.
பெண்கள் அவமதிக்கப்பட்டு, உணர்வுகளுக்கு மதிப்பேதுமற்று எல்லாவிதத்திலும் நிர்ப்பந்திக்கப்படுகிற வாழ்க்கையை வாழ்கிற நிலையுள்ள சூழல் அப்படியேதான் இருக்கிறது. பெரும்பான்மைப் பெண்களின் நிலைமை இதுதான். இது பரிவு பேசுகிற விஷயமோ, அனுதாபப் பார்வையோ அல்ல. பெண்ணைத் தன்வயப்படுத்தி, சுயமாகச் சிந்திக்க விடாமல் தன் கருத்தைத் திணித்து, போகத்திற்குக் கொண்டாடப்படுகிறவளாய் ஆணால் ஆக்கப்படுகிறாள். இழந்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே எதிர்ப்புக் காட்டாத, விடுதலையாகாத, விடுதலை உணர்வற்றவளாக பெண் கட்டமைக்கப்படுகிறாள்.
எவ்வளவு மோசமான படைப்பிலும் அக/புற வய பாதிப்புகளும், அவற்றின் உணர்வுகளும் நிச்சயம் பதிவாகவே செய்கிறது. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எழுத விஷயமா இல்லை? பெண் சுதந்திரம் பற்றி மட்டும் எழுத வேண்டுமென்றில்லை. எவ்வளோ இருக்கிறதே? ஆனால், தமிழ்ப் படைப்புலகில் பெண்களின் புனைவுலகின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது ஏன் என்பதைக் குறித்து நாம் யோசிக்க வேண்டும். வெறும் பெண்களுக்கான சிக்கலாக இதைப் பார்க்காமல், எழுதும் முனைப்பும் திறனும் உள்ள பலரை நம் தமிழ்ச்சூழல் கொண்டிருந்தாலும் அவர்களின் வெளிப்பாடுகள் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் மட்டுமே இருந்துவிடுவதன் சாதக, பாதகங்கள் என்ன என்பதைக் குறித்து ஆராய வேண்டும்.
பெண் ஏன் புனைவுலகை எழுத வேண்டும்? கருத வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? அதை ஏன் விவாதப் பொருளாக்க அல்லது உரையாடலுக்கான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விகள் இங்கு எழலாம். அதுவும் ஒரு (எழுதுகிற) ஆணாக இதைப் பேசுவதன் அரசியல் என்ன என்ற நுட்பமான கேள்விகள் கூட இங்கு எழுப்பப்படலாம்.
பெண் புனைவுலகைப் பொறுத்தவரை பெரும் வெற்றிடம் இங்கே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் புனைவுலகில் பெண்களின் பங்களிப்பை யாரேனும் ஆய்வு செய்தால் இது தெளிவாகும். என்னுடைய சிறிய வாசிப்புப் பரப்பில் நான் அறிந்து கொண்டதுதான் இது. கவிஞர்களாக நிறைய எழுத வருகிறார்கள். சிறந்த பெண் கவிஞர்கள் கட்டுரையாளர்கள் அதிகம்பேர் தங்கள் எழுத்துக்களால் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், நாவல், சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் இங்கே யாருமில்லை அல்லது வெகு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களும் தொடர்ந்து இயங்குகிறவர்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
இன்றைய சமூகச் சூழலில் எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் உடனடி வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்ய எதிர்வினையாற்றல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் மட்டுமே போதாது. உணர்வுரீதியான பங்களிப்பை நிகழ்த்த, அதை வரும் காலத்திற்குக் கடத்த, ஆவணப்படுத்த நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றின் தேவை நிறைய உள்ளது.
அறிவுத்தளத்தில் தற்காலச் சூழலில் செயல்படுகிற பெண் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் எல்லோரும் தாங்கள் வாழ்கிற சமகால சமூகச்சூழல் மீதான அக எதிர்வினைகளையும், அறிவெதிர்வினைகளையும், அற எதிர்வினைகளையும் புனைவுலகில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான அவசியம் நிறையவே உள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




