வியாழன், 26 டிசம்பர், 2019
NIS: தாழ்த்தப்பட்டவர்கள்
NIS: தாழ்த்தப்பட்டவர்கள்: தாழ்த்தப்பட்டவர் சரித்திரம் பா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம...
திங்கள், 9 டிசம்பர், 2019
வெள்ளி, 1 நவம்பர், 2019
அழகு
என்னிடம் சண்டையிடும் - உன்
கர்வம் கூட அழகு !!!!!
என்னை மிரட்டும் - உன்
கோபங்கள் கூட அழகு!!!
நிஜத்தை விட உன்
இனிமையான நடிப்பு கூட அழகு !!
சில நேரங்களில் உன்
பொய்கள் கூட அழகு !!
கண்ணீர் திரளும் உன்
கண்கள் கூட அழகு!!!
கவலை கலைந்திடும் - உன்
புன்னகை கூட அழகு!!!!!
ஊடல் பொழுதில் - உன்
கெஞ்சல் கூட அழகு !!!!
கூடல் பொழுதில் -உன்
ஸ்பரிசமும் அழகு!!!
என்னை சிறையெடுக்கும் - உன்
விழிகள் கூட அழகு!!!!!
எனக்கோ நீதான் அழகு !
கர்வம் கூட அழகு !!!!!
என்னை மிரட்டும் - உன்
கோபங்கள் கூட அழகு!!!
நிஜத்தை விட உன்
இனிமையான நடிப்பு கூட அழகு !!
சில நேரங்களில் உன்
பொய்கள் கூட அழகு !!
கண்ணீர் திரளும் உன்
கண்கள் கூட அழகு!!!
கவலை கலைந்திடும் - உன்
புன்னகை கூட அழகு!!!!!
ஊடல் பொழுதில் - உன்
கெஞ்சல் கூட அழகு !!!!
கூடல் பொழுதில் -உன்
ஸ்பரிசமும் அழகு!!!
என்னை சிறையெடுக்கும் - உன்
விழிகள் கூட அழகு!!!!!
எனக்கோ நீதான் அழகு !

சனி, 26 அக்டோபர், 2019
இராமாயணம் - பரதன் 15
அறம் கெட முயன்றவன்
உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.
பாடல்
‘அறம் கெட முயன்றவன்,
அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
துயரம் சூழ்ந்துேளான். ‘
பொருள்
அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்
அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்
பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்
பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்
மறம் கொடு = சண்டையிட்டு
மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை
கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்
துறந்த = பற்றினை துறந்த
மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு
அருந் துயரம் = பெரிய துயரை
சூழ்ந்துேளான்.= செய்பவன்
இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்
அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம் என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
என்பது வள்ளுவம்.
பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.
நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.
அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி கருணை.
"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.
இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.
அதன் முடிவில் ....
இராமாயணம் - பரதன் 14
ஐய! நீ அறிந்திலை போலுமால்?
தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.
பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.
இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.
பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?
பார்க்கப் போனான்.
கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.
உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது. நாம் மேலே போக வேண்டுமே அல்லால் நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.
பாடல்
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.
பொருள்
மை = கருமை, தீய எண்ணங்கள்
அறு = அறுந்த , இல்லாத
மனத்து = மனதை கொண்டவன் (பரதன்)
ஒரு மாசு = ஒரு குற்றம் கூட
உளான் அலன் = இருப்பவன் அல்லன்
செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்
என்பது = என்பதை
தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த
சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)
‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி
இழைத்த = செய்த
கைதவம் = வஞ்சனை
ஐய! = ஐயனே
நீ = நீ
அறிந்திலை = அறியவில்லை
போலுமால்? = போலிருக்கிறது
‘என்றாள் = என்றாள்
பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். அதில் மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.
பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று அவள் அறிவாள் .
இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?
அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும் வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும். ,கோசலை ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதை சரி செய்கிறான் கம்பன்.
அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான்.
கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள் போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான்.
எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.
அவை என்னென்ன என்று பார்ப்போம்.
இராமாயணம் - பரதன் 14
"தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?
தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது.
பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது.
தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன் பெயர்.
தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம்.
ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம்.
எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது.
தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது.
தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும்.
‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘
என்பான் கம்பன்.
தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.
அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்
"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.
பாடல்
நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?
பொருள்
நீ = நீ, கைகேயி
இனம் = இன்னும்
இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்
யானும் = நானும் (பரதன்)
நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்
“ஏ” = ஏ
எனும் = என்று
மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்
எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்
ஆயவன் = தாய் போன்ற இராமன்
முனியும் = கோபம் கொள்வான்
என்று = என்று
அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்
அலால் = இல்லை என்றால்
“தாய்” எனும் = தாய் என்ற
பெயர் = பெயர்
எனைத் = என்னை
தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.
குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?
கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.
தவறு செய்த தாய் ஒருபுறம்.
தவறிப் போன அரச நீதி மறுபுறம்.
தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.
தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.
தவிக்கிறான் பரதன்.
சோதனைகள் மனிதனின் உண்மையான குணத்தை வெளியில் காட்டும்.
பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம்.
இராமாயணம் - பரதன் 13
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்
நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.
ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.
எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.
அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.
பாடல்
‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?
பொருள்
‘மாண்டனன் = இறந்தான்
எந்தை = என் தந்தையாகிய தயரதன்
என் = என்னுடைய
தம்முன் = முன் பிறந்த இராமன்
மா தவம் = பெரிய தவம்
பூண்டனன் = மேற்கொண்டான்
நின் = உன்னுடைய
கொடும் = கொடிய
புணர்ப்பினால் = சூழ்ச்சியால்
என்றால் = என்றால்
கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை
அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்
நின்ற யான் = இருக்கும் நான்
ஆண்டனெனே = ஆண்டேன்
அன்றோ = இல்லையா
அரசை ஆசையால்? = அரசை ஆசையால்
இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்றான்.
ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.
இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.
இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.
பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.
பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது அறச் சிந்தனையே
இராமாயணம் - பரதன் 12
நெடியவன் முனியும்
"உன் தந்தை இறந்து விட்டார். இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு சீதையும், இலக்குவனும் போய் விட்டார்கள்" என்று கைகேயி பரதனிடம் கூறினாள் .
“குற்றம் ஒன்று இல்லையேல்,
கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்
இராமன் குற்றம் எதுவும் செய்யவில்லையென்றால், வேறு ஒருவர் செய்ய வில்லையென்றால், தெய்வத்தால் ஆனது இல்லை என்றால், பெற்றவன் இருக்க இராமன் ஏன் கானகம் போனான் என்று பரதன் கேட்கிறான்.
உன் தந்தை எனக்கு தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பினேன், தயரதன் அது கேட்டு மாண்டு போனான் என்றாள்.
பரதனால் தாங்க முடியவில்லை.
இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசிப்போம்.
பரதன் நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்.
அரசு கையில் வந்து விட்டது. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். தயரதனும் இறந்து விட்டான். இனி என்ன வேண்டும் ? அரசை மகிழ்ச்சியாக ஆளலாம் என்று நினைக்கலாம். சந்தோஷப் படலாம்.
அல்லது, இது சரி இல்லை. நமக்கு எதுக்கு இந்த பழிச் சொல். பேசாமல் இராமனிடமே இந்த அரசை கொடுத்து விடலாம் என்று நினைக்கலாம். என்று பழிக்கு அஞ்சி இருக்கலாம்.
அல்லது, இந்த அரசு என்பது பெரும் பாரம். இதை யார் கட்டி இழுப்பார். இராமனே இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க நினைக்கலாம்.
பரதன் இது எதுவும் செய்யவில்லை.
கோபத்தில் கொந்தளிக்கிறான்.
கைகேயியை கொல்லப் பார்க்கிறான். இப்படி ஒரு பாதகத்தை செய்த அவளை தண்டிக்க நினைக்கிறான்.
ஆனால், அப்படி செய்தால் இராமன் கோபப் படுவான் என்று நினைத்து கைகேயியை ஒன்றும் செய்யாமல் விடுகிறான்.
பாடல்
கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;
பொருள்
கொடிய = கொடுமையான
வெங் = வெம்மையான
கோபத்தால் = கோபத்தால்
கொதித்த = கொதித்த
கோளரி = சிங்கம் போன்ற பரதன்
கடியவள் = கடுமையானவள்
தாய் எனக் = தாய் என்று
கருதுகின்றிலன் = நினைக்கவில்லை
‘நெடியவன் முனியும்’ = பெரியவன் கோபிப்பான்
என்று = என்று
அஞ்சி = பயந்து
நின்றனன் = நின்றான்
இடிஉரும் = இடி இடிப்பது
அனைய = போன்ற
வெம் மொழி = சூடான சொற்களை
இயம்புவான் = சொல்லுவான்
ஒரு பக்கம் தாய். என்னதான் அவள் தவறு செய்திருந்தாலும் , தாயின் மேல் உள்ள அன்பு இல்லாமல் இருக்காது. கைகேயி பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராஜ்யத்தை பெற்றுத் தந்திருக்கிறான். சொல்லப் போனால் பரதன் அவளுக்கு நன்றி சொல்லலாம். இல்லை என்றால் சும்மா இருக்கலாம். அவள் மேல் கோபம் கொள்ள ஒரு காரணமும் இல்லை - அறம் பிழைத்த ஒன்றைத் தவிர.
இன்னோரு பக்கம், இராமன். அவன் மேல் கொண்ட பக்தி. காதல்.
இன்னொரு பக்கம், அரச நீதி. தர்மம். அறம் .
தாயே ஆனாலும், தனக்கு ஒரு பெரிய அரசையே பெற்றுத் தந்தாலும், அது அறம் அல்லாத வழியில் வந்தது என்று அறிந்து கொதித்துப் போகிறான். அப்படி செய்த கைகேயியை கொன்று விடலாமா என்று கூட நினைக்கிறான்.
ஆனால், அப்படி செய்தால் இராமன் சினம் கொள்வான். கைகேயியை கொன்றால் இராமானுக்குப் பிடிக்காது என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் நின்றான்.
அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான்.
இராம பக்தி.
பின்னால் பார்க்கப் போகிறோம். இராமனே சொன்னால் கூட , அறம் என்று அவன் நினைத்ததை , பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.
அதுதான் பரதன்.
இராமாயணம் - பரதன் 11
தீயன இராமனே செய்யுமேல்
இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.
உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். "இந்த துக்கத்தை மாற்ற இராமனின் திருவடிகளை பற்றினால் தான் சரி வரும் " என்று எண்ணி, இராமன் எங்கே என்று கேட்கிறான் பரதன்.
இராமன் கானகம் போய் விட்டான் என்று சொல்கிறாள் கைகேயி.
ஆடிப் போய் விடுகிறான் பரதன். இராமன் ஏன் கானகம் போனான் ? அவனை யார் போகச் சொன்னது ? அவன் என்ன தவறு செய்தான் ? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போலல்லவா எண்ண வேண்டும் . இராமன் தயரதன் இறக்கும் முன் போனானா ? அல்லது இறந்த பின் போனானா என்று கேட்கிறான்.
பாடல்
தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.
பொருள்
தீயன = தீமையான செயல்களை
இராமனே = இராமனே
செய்யுமேல் = செய்து இருந்தாலும்
அவை = அந்தச் செயல்கள்
தாய் = ஒரு தாய்
செயல் =செய்த செயல்
அல்லவோ = அல்லவோ ?
தலத்துளோர்க்கு எலாம்? = இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்
போயது = இராமன் போனது
தாதை = தந்தை
விண் = வானம்
புக்க = புகுந்த
பின்னரோ? = பின்னாலா ?
ஆயதன் = அல்லது
முன்னரோ? = அதற்கு முன்னாலா ?
அருளுவீர்’ = தயவு செய்து சொல்லுங்கள்
என்றான் = என்றான்
இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே செய்து இருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் பரதன்.
அது என்ன தாய் செய்த தவறு ?
சில சமயம் குழந்தை பால் குடிக்காமல் அடம் பிடிக்கும். ஒரு தாய் அந்த குழந்தையை இறுக்கிப் பிடித்து கட்டாயமாக பால் புகட்டுவாள். பார்ப்பதற்கு ஏதோ அசுர வைத்தியம் போல இருக்கும்.
குழந்தை நோய் வாய்ப்பட்டால் , மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கசக்கும் என்று குழந்தை குடிக்காது. தாய், தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையில் குழந்தையை இறுக பிடித்துக் கொண்டு, வலு கட்டாயாமாக வாயைத் திறந்து மருந்தை புகட்டி விடுவாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன இவள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே என்று தோன்றும்.
அவள் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும், அது அந்த குழந்தையின் நல்லதுக்கே.
அது போல, ஒரு வேளை இராமன் தவறே செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.
பல பேர் ஒரு சின்ன துன்பம் வந்தால் கூட இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா ? அவனை வணங்குவது சரி தானா ? நாம் எவ்வளவு எல்லாம் பூஜை பண்ணினோம், நமக்கே இந்த துன்பங்கள் வருகிறதே என்று இறைவனை சந்தேகப் படுவார்கள், அல்லது
கடவுளே உனக்கு கண் இல்லையா, உனக்கு கருணை இல்லையா என்று கடவுளை ஏச தலைப்படுவார்கள்.
பரதன் சொல்கிறான், இராமன் துன்பமே தந்தாலும், அது தாயின் அன்பில் விளைந்த துன்பம் , அது நல்லதுக்கே என்று கொள்ள வேண்டும் என்கிறான்.
நன்றே செய்வாய். பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!
நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?
என்பது திருவாசகம்.
நல்லது எது கெட்டது எது என்று அவளுக்குத் தெரியும். எனக்கு என்ன தெரியும். நீ தீமை செய்தால் கூட அது என் நன்மைக்கே. என்னுடையது என்று இருந்த அனைத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று உருகுகிறார் பட்டர்.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
சரணாகதி தத்துவத்தின் சாரம்.
கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுவது.
இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது.
அது எப்படி துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். கேட்க வேண்டுமானால் நல்லா இருக்கும். நடை முறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வி வரும்.
துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்றால், அந்த துன்பத்தை நாம் வெறுக்க மாட்டோம் அல்லவா ?
வள்ளுவர் சொல்கிறார். துன்பத்திலும் ஒரு நண்மை உண்டு. அந்தத் துன்பம் நமக்கு உரியவர்கள் யார். நமக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள உதவும் அளவு கோல் என்கிறார்.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
சிந்தித்துப் பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

2 comments: