வியாழன், 26 அக்டோபர், 2023

காலம் நிற்பதில்லை



ப்பவும் போலவே
மழை மழையாகவே
இருக்கிறது...!

 

நிகழ்வு வெவ்வேறு
வாழ்வையும் வீழ்வையும்
விகாரப்படுத்துகிறது !

 

ஒற்றை மனம் ஒன்று
இருமைக் கொள்கைகுள்
முக்கு முடங்கி
முகவரி முடிந்து போன
உறவுகளின் நினைவு !

 

ஒற்றை குடைக்குள்
நடப்பவனிடம்
உள்ளேயும் வெளியேயும்
தனக்கான நம்பிக்கைகள்
காலம் தொடர்கின்றது அவன் பின் !

 

-பங்கிரையன்-

திங்கள், 9 அக்டோபர், 2023

வாழ்ந்த வீடு

வாழ்ந்த வீடு
மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு.
குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது.
சத்தமிட்டு
விழித்தெழுகின்றன
உறைந்த மௌனத்தின்
உறங்காத குரல்கள்.
பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்

சனி, 24 ஜூன், 2023

ஈர் இருபத்தைந்து ஆண்டு அகவையாள்

***************
பூமி பிரயாளத்தின்
தமிழுக்காய் உழைக்கும் வல்லொலி
என்பது சபையோர் தற்குறிப்பேற்ற அணி
தாவடி புகழ் பேசும் உன் தரணி
பூப் போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னலிட்டு
புதியதோர் அகவை நிறைவு.
நறுமணவீசும் ஐந்து தசாப்தம்
ஆகாசம் வாழ்வில்
அழகான தருணங்களில்
எனக்குக்கிடைத்த அன்பான மித்திரன்
அவன்பால் ..நட்பில்
உருவானாய். அழகான நட்பாய்
அதில் என்றுமே அழியாத தோழியாய்
கை பிடித்து கை தளராய்
தோளில் முகம் சாய்த்து
ஆசை தான் அதிகமாகி
அங்கம் தான் புனிதமாகி
அகிலத்தை ரசித்து
அகம் முழுதும் நிறைந்தவலாய்
அகமதியால் காதலை இழந்து
அன்புக்கு அடையாளமாய்
வையம்‌ போற்றும்‌
நுண்ணறிவு மிக்க
ஈர் ஆண் மகன்கள் - உன்
கரம் பெற்றடுத்தாய்
வாழ்வை பதியென கொண்டபின்
விதியை வென்றிடத்துணிந்து
கடமைக்கு என்றவர்
இசைந்து போகையில்
அவன் துணையாய்
எதிர்கொண்டாய்
அலெக்சீவா சேவை
புரிவீரென வாழ்த்தி
மகிழ்வது நான் கூறும்
உவமையணி
உளமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்து.!

ஞாயிறு, 18 ஜூன், 2023

அப்பாவின் பொக்கிஷம் -பங்கிரையன்-

 



அப்பாவின் வரைபட
கிறுக்கலில்
நிரம்பி இருக்கும்
நாள்கள் வருடங்ககள்
என்று சுருண்டு சுருங்கி
கிடக்கும் இந்த டைரி !

சில பக்கங்கள் அப்பாவின்
கடவுள் நம்பிக்கைபோல்
காட்சி இன்றி மறைந்திருக்கும்

அழுக்கேறிய டைரியில்
வாங்கிகணக்கு,
வழக்குகளும்
ஆன்மிக கொடுப்பனவு
ஆசாரியர் ,பூசாரியர்
விரிவாக்க பதிவுகளும்
அந்த டைரியெங்கும்
அப்பாவின் எழுத்துக்களில்
நிரம்பியிருக்கும்

டைரியின் பக்கங்களில்
மருமக்கள் ,
பிறமக்கள்
உற்றவர்கள் ,
உறவினர்கள்
கணக்குகளும்,
கருத்துக்களும்
நீதிகோரி மௌனித்திருக்கும்

வாழ்த்த காலங்களின்
கணங்களை
பொத்திவைத்து
சொல்வதாய் இருந்த
அந்த கடைசிச் சொல்
சொல்லாமலே உறைந்துபோன
இந்த உறவு மூட் டை பொக்கிஷம்

- பங்கிரையான்-


வெள்ளி, 12 மே, 2023

தமையன் 60 ,வாழ்வின் சிறு பக்கம்




இலங்கையின்
வடபுலத்தின்
செம்மண் விதை நிலத்தில்
கற்றவர்கள் கற்று விளைந்த
கட்டுவனாம் இவன் ஊர் !

அடர்ந்து வளர்ந்த
பனைமர சோலையில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று அழகையும்
கிராமத்தானின் மனதையும்
அம்பலவாணர் ஓடுபாதையோரத்தில்
உட்கார்ந்து ஆளுமை பேசும்
பங்கிரை கிராமத்தில் ..

கந்தனும் நகுலையும்
தவமிருக்க
புது தளிர்களை ஏந்தி,
பூத்துக்குலுங்கும்
வசந்த கால பங்குனி திங்கள்
இவன் ஜனனம்

காரடையான் நோன்பு,
காதல் பண்டிகையாம்
காமன் பண்டிகை,
கொண்டாடும்
பங்குனி உத்திரம்
இவனை பெற்றவருக்கு
பெரும் விழா

தனித்துவ குடும்பத்தின்
மூத்த அடையாளம்
பெற்றவர் ஒரு புறம்
பெற்றிடாதவர் மறுபுறம்
தவம் கொன்று
தினம் தவழ்ந்து செல்ல
தலை பிள்ளை இவன்

சின்னம்மாள்
பெரியம்மாள் கருவறைதனில்
பிறந்திடா மகனாய்
என்னம்மாள் என்றெண்ணி,
கொடுந்தமிழில் கொஞ்சிபேசும்
பாசக்காரன்

என்னப்பன் என்னம்மாள் அவர்தம்
அம்மம்மாள் அம்மப்பன்
கதை பேசி கரம் வீசி
பேரன்பு கொண்ட பேரன் இவன்

தம்பி என்ற உறவை
மித்திரன் என்று உறவுகொண்டு
ஓர் கோப்பையில் உண்டு
ஓர் உடையை மாற்றி அணிந்து
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்த
தமையன் இவன்

எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன் வருவான்
என்று நம்பும் தங்கயைகள்
தங்கை அவள் தனக்கு மேல் என்ற
எண்ணம் கொண்டு
அக்காத்தால் என்றழைத்து
பாசமழை பொழியும் அண்ணன்!

பக்கத்து வீட்டு
புளியமரத்தில்
இரவு வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்
இவன் எண்ணம் !

கடவுள் நம்பிக்கை
நற்செயல்களுக்கும்,
நல்சிந்தனைக்குள்ளும்
ஏற்றத்தாழ்வற்ற
கருணை உள்ள இவன் !

ஊரெல்லாம் சுற்றிவந்து
உருளாக பொதிகையெல்லாம்
உள்மனம் ,வெளிமனம் ஏதும் இன்றி
நகைச்சுவையை புதினம்
கூறும் ஊர் குருவி இவன் !

தொலை தூரம் கடந்து
இரு மனம் இணைந்து
திருமணம் புரிந்து
இரு சிறார்களின்
தந்தை !

பணம்மின்றி மனிதரை
மதிக்க தெரிந்த இவனுக்கு
போகும் ஊரெல்லாம் உறவு !

தனக்கான நேரத்தில்
தன்னலம் கொண்டு
தனியாகவே தனி இன்பம்
காண்பவன் !

அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறளுக்கு இணங்க
நல்லறம் கொண்டு
வாழ்க காலம்முழுதும் வளமுடன்
வாழ்க வாழியவே 

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

 

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) தத்துவம் என்றால் என்ன?
இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.

2) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?
முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.  

3) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா?
இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும். கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

4) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?
தொடக்கக் காலத்தில், இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது

5) இந்த இரண்டு பிரிவு எது?
ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்

6) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

7) அது என்ன கேள்வி-பதில்?
கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

8) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

9) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?
ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.

10) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

11) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

12) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?
ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.

13) இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
       இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.

14) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?
மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

 மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தன் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.


15) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?
தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.

16) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?
இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.

17) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?
ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.

18) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?
ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.

19) இயக்கவியலுக்கும் இயக்கமறுப்பிலுக்கும் என்ன வேறுபாடு?
இயற்கையிலோ, சமூகத்திலோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் காரியம் காரணத்தின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணக் காரிய இயக்கத்தை அறிவியல்படி விளக்குவது இயக்கவியல் விதியாகும். காரணக் காரியத்தை மறுப்பது இயக்கமறுப்பியல்.

20) இயக்கவியல் விதி எவை?
இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.
1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)
2. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)
3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

21) இந்த மூன்றையும் அறிந்தால் இயக்கவியலை அறிந்து கொள்ளமுடியுமா?
எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடியும்.

22) இயக்கவியலின் வகையினங்கள் எவை?
1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)
2. காரணமும் விளைவும் (Cause and Effect)
3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)
4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)
5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)
6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

23) இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்தை காரணக் காரியத்துடன் அதாவது அதன் இயக்கப் போக்குடன் விளக்குவது இயக்கவியல். இன்றைய இருப்பிற்கான காரணத்தையும், நாளை ஏற்படப் போகும் மாற்றத்தையும், அதன் இயக்க விதியின் அடிப்படையில் கூறப்படுவதால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.

மார்க்சிய பொருள்முதல்வாத தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையின் இருப்பைப் பற்றிப் பேசுகிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மற்றொன்று சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

24) மார்க்சியப் பொருள்முதல்வாத்துடன் இணைந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவை?
நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொணடு தம்மை நிலைநிறுத்தியது. 1.ஆற்றலின் உருமாற்றம், 2.உயிரணு, 3.பரிணாமக் கொள்கை ஆகியவை, விஞ்ஞானத்தின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளாகும்.

25) இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் என்ன முடிவுகளைத் தருகின்றன?
பொருளும் அதன் இயக்கமும் நிரந்திரமானவை, தோற்றுவிக்கவும் அழிக்கவும் முடியாதவை என்பதை ஆற்றலின் உருமாற்றம் பற்றிக் கோட்பாடு அறிவித்தது.

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உயிரிகளும் ஒரேவித உயிரணுக் கட்ட்டமைப்பைப் பெற்றுள்ளதை உயிரணு பற்றிய கோட்பாடு கண்டறிந்தது.

எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன. இன்றைய உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும் என்பதைப் பரிணாமக் கோட்பாடு வெளிக்கொண்ர்ந்தது.

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் வழியாக, இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை எவ்வித அயலான கலப்பின்றி, உள்ளதை உள்ளவாறு நவீன பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டது. கருத்துமுதல்வாதத்தால் இதுவரை முன்வைக்கப்பட்ட மேலுலகத்தின் அப்பாற்பட்ட தொடர்பு தேவையற்றது என விஞ்ஞான வழியில் மறுக்கப்பட்டது.

26) இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவற்றை எல்லாம் விளக்குகிறது?
குறிப்பாகப் பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பும் காலமும், உணர்வுநிலை என்பது பற்றிப் பேசுகிறது.

27) பருப்பொருள் என்றால் என்ன?
பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது.

28) பருப்பொருளும் இயக்கமும் என்றால் என்ன?
உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் எதுவும் இல்லை. பருப்பொருளின் இருப்பு என்பது இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் தவிர்த்து வேறு நிலையில் செயற்படுவதில்லை.

29) விசும்பும் காலமும் (Space and Time) என்றால் என்ன?
பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது. விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆகப் பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்ற பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பு என்பது விசும்பில் தான் நிகழ்கிறது. கண்ணில் படும் பருப்பொருளுக்குத் தான் நீளம் அகலம் உண்டு அதனால் தான் பொதுவாகப் பருப்பொருளுக்கு என்று கூறப்பட்டது. கண்ணில் படாத ஆனால் அதனைக் கருவிகள் மூலமோ மற்றவற்றின் உதவியோடு அறிந்திடும் பருப்பொருட்கள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள்அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றனஇந்த உறவுகள் எல்லையற்றதுஇதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறதுஇது காலத்துக்கும் பொருந்துகின்றதுகுறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறதுஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளனஅதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்குப் பின்பும் தொடர்கிறதுஆக இந்தத் தொடர் நிகழ்வுக்குத் தொடக்கமும் இறுதியும் இல்லைவிசும்புமும் காலமும் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

30) உணர்வுநிலை (Consciousness) பற்றிக் கூறுங்கள்?
உணர்வுநிலையைக் கொண்டே மனிதன் தமது செயல்களை அமைத்துக் கொள்கிறான். அதனால் தான் தத்துவ விவாதங்களில் உணர்வுநிலை முதன்மை இடம் பெறுகிறது.

31) உணர்வுநிலையைக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?
கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.

ஆசீவகம்

 ஆதித் தமிழர் மெய்யியல்

ஆதி. சங்கரன்




முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம்.

பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம்.

1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல்.
2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல்.
3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை.
என்ற மூவகை முன்வைப்பில் காண்போம்.

முதலாவதாக,
இடத்திணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி முதல் பாலையீறாக ஐவகையாகப் பகுத்தனர்.

குறிஞ்சியில் முருகன் தெய்வமாகவும்,
முல்லையில் திருமால் தெய்வமாகவும்
மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும்
நெய்தலில் வருணன் தெய்வமாகவும்
பாலையில் கொற்றவை தேய்வமாகவும்

கருப்பொருள் இலக்கணம் கண்டனர். இன்றைக்குச் செம்மையாகப் பரவியிருக்கும் சிவனியமும், இந்து என்ற சமயமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் யாண்டும் காணப் பெறாத ஒன்று. குறிஞ்சி நிலத் தெய்வமாகக் கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு மனைவியரும், வினாயகர் போன்ற உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கௌமார சமயம் எனும் நிலைக்கு முருக வழிபாடு வந்த பின் பிற்கால நாடக ஆசிரியர்களின் புலமையாலும், திரைத்துறையின் பக்தித் திரைப்படங்களாலும் குறிஞ்சி நில முருகனின் பொதுவான வடிவம் காண்போர் மயங்கும் வண்ணம் இவ்வாறு திரிக்கப் பட்டுள்ளது.

முல்லை நிலத்தின் திருமாலும் இரண்டு மனைவியர்களுடன்தான் பிற்காலத்தில் மாற்றம் செய்யப் பட்டார். ஆழ்வார்களும், சமயாசிரியர்களும் (திருமாலை உயர்த்திப் பேசுவதாக நினைத்து) அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தியதில் சங்க இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதனை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

அடுத்ததாக, மருத நிலத்தின் இந்திரன் ஆசீவகச் சமயத்தின் ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப் பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த இலக்கியச் சான்று கொண்ட மருத நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர் வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள் இழிவு செய்தன. அவரது உடல் முழுக்கவும் பாலுறுப்பு முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த் தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது, ஒரு காலத்தின் கொடுமை.

நெய்தல் நிலத்து வருணனோ ஒரு துணைத் தெய்வமாகப் படியிறக்கம் செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில் ஒருவனாக முதன்மை யிழந்து போகச் செய்தனர்.

பாலை நிலத்துக் கொற்றவை நமது முன்னோர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு மூல வடிவமானவள். ஆனால் அவளை அடங்காப் பிடாரி என்றும், தீமையே செய்யும் இரக்கமற்றவள் என்றும் வைதீக வந்தேறிக் கதைகள் உருவகப் படுத்தின. இவ்வாறாக இடத்திணையின் பிரிவாக நாம் காணும் ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் வைதீக வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை அப்படியே நாம் நம்பி ஏற்றுக் கொள்ளும் இழிநிலைக்கு நம்மையும் கொண்டு வந்து, அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’ என்றொரு புதுச்சொல் ஒன்றை நம் தலைமீது சுமத்தினர்.

ஒரு சமயம் என்று சொன்னால் அது தோன்றிய இடம், பல்வேறு மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை, அதன் பதிவுகள், சமூக அடையாளங்கள் இன்னோரன்ன பிறவும் தான் அது ஒரு சமயம் என்பதனை வரையறுக்கும். ஆனால் இந்த இந்து என்கிற சமயத்துக்கு ஏதேனும் தோற்ற இடமும், காலமும் உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத் தொகுதியினர் யார் என்ற விவரமும் உண்டா? கூற முடியாது.

இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல் குற்றவாளிகளாக உருவகப் படுத்தும் வல்லடிச் சமயமே இந்து என்ற சமயம். இதன் மூலம் தமிழனின் தொன்மங்களைக் கொச்சைப் படுத்தினர். நமது விழுமியங்களைத் தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள் கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும் ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட் படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு விரும்பிய கருத்துக்கொப்பத் தனது சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும் அறிவு உரிமையும் சமய விடுதலையும் நமக்கு இன்றளவில் வழங்கப் படாமையையே அது காட்டுகிறது.)

நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும்.

இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

இரண்டாவதாகப் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது,
1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப் படியும்,
2. மெய்யியல் வளர்ச்சியில் படிநிலையிலும்

இருவகைப் பகுப்புகளில் ஆதித் தமிழரின் மெய்யியலை ஆய்வோம்.
முதலாவதாக அறிவு வளர்ச்சிப் படிநிலையில் துவக்கக் காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள் என்று பெயர் வைக்கும் முறையும் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. "சப்த மாதாக்கள்" என்று கன்னியர் எழுவரின் வழிபாட்டு வழக்கம் இன்னமும் சில குடிகளிடையே உண்டு. ஏழு கன்னியரில் ஒருவரான அம்பிகா எனும் அம்பிகையே சமணத்தின் இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும் அம்பிகையே பின்னாளில் சிவனியக் கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப் பெரும் தெய்வமாக சிவனின் மனைவியாக மாற்றம் பெற்றாள்.

பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான இருளர் இன மக்கள் இன்னமும் கன்னியர் வழிபாடு செய்து வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம் குறிசொல்லும் வழிபாடும் உண்டு. இந்த யட்சினி எனும் தெய்வத்தின் பெயரால் இன்றும் பலர் குறி சொல்கின்றனர். இந்த யட்சினி யார் என்று பார்ப்போம்.

கணி நந்தாசிரியனுக்கு இயக்கன் என்றொரு பெயரும் உண்டு. மொழி முதல் வாரா எழுத்துக்களின் முன் எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது. எனவே இராமன் என எழுதி ராமன் என ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும் வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன் எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது. இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும் பெயர்கள் சமணத்தை விழுங்கிய சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன் என்பதற்கு இணையான பெண்பால் பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப் பட்டது.

இதல்லாமலும் சிற்சில விடங்களில் தாய்த் தெய்வ வழிபாடு மூதாள் வழிபாடு என்ற பெயரில் இன்று வரை தொடர்வதைப் பல ஊர்களில் நேரில் கண்டு வருகிறோம். மூதாள் என்ற சொல் தாய்த் தெய்வத்தின் அன்பினையும், முதன்மையினையும் பகரும் சொல்லாகும். இருளாயி, கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம் என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றபின் பழைய தாய்த் தெய்வ வழிபாடு தனது முதன்மையினை யிழந்தது. இன்றும் கூடப் பல ஊர்களில் அம்மன் திருவிழாக்கள் முடிந்த மறுநாளில் ஒரு களிமண்ணாலானதோர் பெண் உருவச் சிலையினை வைத்துப் பலவாறாக ஏசியும் திட்டியும் கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர். இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும் அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும் பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி என்ற சொல் ஆசீவக மெய்யியலில் சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின் பெயராகும். திருநிலைகளிலும் கால்காசுகளிலும் இருக்கும் பெண் உருவமே இந்த மாதங்கியாகும்.

பழைய ஆசீவக வழிபாட்டு மரபு செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றதனையே இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு வழிபாடுகள் பெரும்பாலும் இலக்கியங்களில் பதிக்கப் பெறாதவை.

அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப் படிநிலையில் காணும் போது பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக மரபே பெரிதும் முதன்மை பெறுகிறது.
எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. 

கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.

ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவக மெய்யியலை அறிய முற்படு முன் ஒருசில:

1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆசீவக எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த வைதீக நஞ்சினாலும் இழித்துக் கூறப்பட்டு அவரவர் நூல்களில் பதிவு செய்யப்பட்ட மாற்றார் கூற்றுக்களே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2. ஆசீவகத்தின் தோற்றம், காலம் போன்றவற்றில் மயக்கம் ஏற்படக் காரணம் வார்த்தைப் புரட்டும், வரலாற்றுப் புரட்டுமே.

வார்த்தைப் புரட்டு

ஆசீவகத்தை அறிவு வழியிலும், அறிவியல் வழியிலும் நேர் கொள்ள இயலாத வைதீகச் சார்பு மற்றும் ஆசீவக எதிரணியினரால் ஆசீவக அடிப்படைக் கூறுகள் குறித்துத் தவறான பொருள் தரும்படிச் சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை நிகழ்வு’ என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். (இவ்வூழ் பற்றிப் பின்னர்க் காணலாம்.)

ஆனால் எதிரணியினரோ ஆசீவகம் கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு எனத் திரித்துப் பொருள் கூறினர்.

இந்தப் பொருள் முரண்பாட்டால் ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின் அடிப்படையே தகர்ந்து போகிறது.

அமணர் என்பது ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் சொல்.

அமணர் = அம் + அணம் + அர்

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி
மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அணம் - ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் - அணம் என நின்றது.)

அர் - பலர்பால் சிறப்பு விகுதி

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

அது போன்றே சூத்திரர் என்ற சொல்லும் தவறாகவே பொருள் சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத் துறைகளிலும் எவ்வகைச் சிக்கல்களுக்கும் விடை காணும் நுட்பமான வழிமுறைகள் சூத்திரம் என வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே இலக்கண நூற்பாக்களும் கணக்கியல் வழிமுறைகளும் சூத்திரம் என்ற சொல்லால் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த சூத்திர முறைகளை அறிந்தவர் எனும் பொருள் படும் சூத்திரர் என்ற சொல்லுக்கு இழிவானவர் என்ற பொருள் கற்பிக்கப் பட்டு தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற சொல் சூழ்ச்சி எனும் சொல்லின் வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் + திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என வருவிக்கப்பட்ட சொல்லாகும்.

சூழ் > விடையைச் சூழ்தல். பல்லாற்றானும் பட்டறிவாலும் தருக்க அறிவினாலும் விடையைச் சூழ்தல்.
திரம் > அவ்வாறு விடைகாணும் ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப் பிழையால் வந்த மயக்கு வழூஉ.

அது போலவே, சமணம் வேறு; சைனம் வேறு. சமணம் ஆசீவக மரபில் கிளைத்தது. மூன்று நல்வெள்ளை நிலையினரால் நெறியாளப்பட்டது. அவர்களில் மூன்றாமவரான மற்கலியும், மகாவீரருமே ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில் மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இருவரும் பிரிய நேர்ந்தது. தாய் மரபான ஆசீவகத்தில் உலகாய்தம், பொருளியல், மாந்த வாழ்வியல் போன்றவற்றிற்கான கருத்துகளுக்கு இடம் உண்டு. அதாவது குமுகத்தைப் புறக்கணித்துத் துறவி கூட வாழ இயலாது என்ற கருத்து ஆசீவகத்தினுடையது.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

எனும் திருக்குறளும் இங்கு எண்ணத் தகும்.

மாறாக மகாவீரரோ துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவும் கை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். துறவிகள் இல்லறத்தாருக்கு வழிகாட்டும் பொறுப்பாளர்களாக இருப்பதனை அவர் விரும்பவில்லை. துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே தமக்குப் போதும் என்பது அவர் கருத்து. இக் கருத்து வேறுபாட்டால் ஆசீவக சமணத்தை விட்டு சைன சமயத்தை உருவாக்கினார்.

மூன்று ஐயனார்களைத் தவிர நல்வெள்ளை நிலையை அடைந்ததாக தமிழ் அறிவர்களால் யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23 திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப் பட்டதில் இன்றளவும் நமக்கு உடன்பாடில்லை. அது குறித்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சைனம் தனது மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா என்பதே நம் ஐயம். ஒரு வேளை திருத்தங்கரர் மரபினை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத் தனிச் சமயத்தை உருவாக்கிய பின், அவருக்கு முன்பிருந்த திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எள்ளுப் பேரனுக்குப் பிறந்த கொள்ளுப் பாட்டன் என்பது போலிருக்கிறதல்லவா இந்த வாதம்? சைனம் சமணத்திலிருந்து 23 திருதங்கரத் தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட சமயமே சைனம் என்பது தெளிவு. இந்த சைனம் பழைய கள்ளைத் திருடிப் புதிய மொந்தையில் வைத்த கதையாக சமணம் - சைனம் எனும் இரு சமயமும் ஒன்று என்பதான ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர் கூடத் தாங்கள் சமணரா அன்றிச் சைனரா என்று கேட்டால் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர்.

இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும் மேலானதோர் வரலாற்றுப் புரட்டும் உண்டு. அதுதான் ஆசீவகத்தின் தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23 திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப் பின் சமணத்தை ஆசீவகக் கருத்துகளின்று பிறழாமல் ஒரு சமய வரைவிற்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு முன்பே 23 திருத்தங்கரத் தலைமுற்களும், அதற்கும் முன்பே  குமுக மரபு கொண்டதுமான ஆசீவகத்தை மற்கலிதான் உருவாக்கினார் என்பது தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி, அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின் சைனத்திற்கு சேர்த்து விடும் வரலாற்றுப் பிழையே இது என்பது தெளிவு.

 வைதீகம் வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம் வினைமறுப்புக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருத்தில் இன்றளவும் ஆசீவகம் நீர்த்துப் போகவில்லை. ஆனால் ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின் உடன்பாட்டாளர்கள் என்பதான வீண் புரளியும் உண்டு.

ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை மக்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வைதீகம் வருணக் கோட்பாட்டைக் கொண்டு வந்தது. நிறம் என்பது வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக் கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு என்று பேசியது. உண்மையில் ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர் மேல்நிலை யடையும் வரை அறுவகை நிறத்தால் குறிக்கப்பட்டனர். அது அவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக் கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் பதினோராம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் விதிக்கப் படுவது போல ஒரு ஆசீவகப் பள்ளியில் உறையும் புதியவர், இயல் மாந்தர் போன்றோர் அங்குள்ளோரை வகைப் படுத்தி அடையாளங் காணவே இந்த நிறக் கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி நிலையினை அறியவும் இந்த நிறக் கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர் மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சியில் கச்சை அளிப்பதில் இன்னமும் இந்த நிறக் கோட்பாடு பின்பற்றப் படுவது கண்கூடு. ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம் பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ ஆடையின் சிறப்பு தெரியாதவர்களால் உருவாக்கப் பட்டதாகையால் மக்களின் தோலின் நிறத்தையே வகைப்படுத்திப் பிறக்கும் போதே பாகுபாடு செய்தனர்.

மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி வைத்து விட்டு ஆசீவகத்தைப் பார்த்தால் மட்டுமே அது யானையாகத் தெரியும். இன்றேல் அது வெறுங் கல்லாகவே தெரியும்.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். வைதீகமோ பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப் பணிவிடை செய்து படையலும் போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும் என்கிறது. நெய்யும், பருப்புமாகச் சாப்பிட்டு விட்டு உழைக்காமல் உட்கார்ந்திருந்தால் அவனது சிந்தனை மெய்யியலை நோக்கியா போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா போகும்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

1. கருமை & சாம்பல் - துவக்க நிலை
2. நீலம் - இரண்டாம் நிலை
3. பசுமை - மூன்றாம் நிலை
4. செம்மை - நான்காம் நிலை
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை
6. வெள்ளை - இறுதி நிலை

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.
 
2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.

3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

கரும்பிறப்பில்
1. கருமை முதல் படி
2. கருமை இரண்டாம் படி
3. சாம்பல் மூன்றாம் படி
நீலப் பிறப்பில்
1. கருநீலம் முதல் படி
2. நீலம் இரண்டாம் படி
3. வான்நிறம் மூன்றாம் படி
பசும் பிறப்பில்
1. அடர்பச்சை முதல் படி
2. பச்சை இரண்டாம் படி
3. வெளிர்பச்சை மூன்றாம் படி
செம்பிறப்பில்
1. செம்மை முதல் படி
2. இளம்சிவப்பு இரண்டாம் படி
3. காவி மூன்றாம் படி
மஞ்சள் பிறப்பில்
1. அடர் மஞ்சள் முதல் படி
2. இளமஞ்சள் இரண்டாம் படி
3. பொன்மை மூன்றாம் படி
வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும். கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே. இந்த நிலையினை வீடடைதல் என்று சொன்னால், வைதீகம் கூறும் சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும் கூறுகிறதோ எனும் ஐயம் எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது வைதீகர்களின் சொர்க்கப் புரட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது என்பதனை விளக்க ஊழ்கத்தை விளக்குவோம். ஊழ்கம் (யோகம்) எனும் சொல் ‘ஊழ்’ எனும் சொல்லினைக் கொண்டு கிளர்த்தலால் ஆசீவகம் கூறும் ஊழினை முதற்கண் விளக்குவாம்.

உழு எனும் சொல்லினடியாக ஊழ் எனும் சொல் கிளைத்தது. ‘விழு’ என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’ என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும் செயலைக் குறிக்கும்.

நிலத்தை உழுகின்ற போது ‘மண்’ எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன் சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம் எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின் கண்ணறைகளில் சேமிக்கப்படுவதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. உயிர்வளி சேமிக்கப்படும் போது மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும் பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி) பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தில் வளி சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கமைவு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பூதங்களில் ‘வெளி’ என்பது இடத்திணையாதலால் இது ஆசீவகக் கோட்பாடுகளில் தெரிநிலை பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம், நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும் உண்டு. வெளிக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் இல்லை. எனவே இது தெரிநிலை பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால் மண், நீர், தீ, வளி ஆகியவை தெரிநிலை பூதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறது.

1. மூலஅணு
2. விளைவணு

மூல அணு என்பது வளியணுவாம். இவ்வளியணுக்கள் வெவ்வேறு விழுக்காடுகளில் தமக்குள் புணர்ந்து நிலவணுவையும் நீரணுவையும் விளைவிக்க வல்லன. எனவே வளியணு மூலவணுவாகக் கருதப் படுகிறது. நீரணுக்களையும், நிலவணுக்களையும் வளியணுக்களாலப் பகுக்க இயலும். ஆனால் வளியணுக்களைப் பகுக்க இயலாது. இவ்வளியணுவே ஏனைய பூதங்களுக்கு அடிப்படை அலகாய் அமைதலின் இது ‘இயக்கணு’ எனவும் வழங்கப்படும். ஆசீவக அணுவியம் மூலவணுவை அழிக்க முடியாது என்கிறது.

விளைவணு

நீரணுவும், நிலவணுவும் வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன. எனவே இவை ‘இயங்கணு’ எனவும் மூல அணுவால் விளைவிக்கப் படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படும்.

நீரணு, நிலவணு, வளியணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கின்ற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது. ஆனால் ஏனைய மூன்று பூதங்களிலும் உள்ளுறைந்து நிற்றலால் ‘தீ’ உள்ளுறைப் பூதம் என வழங்கப் பெறும். அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும் பிரிதலும்) வெப்பத்தின் முன்னலையில் மட்டுமே நிகழும். வெப்பமின்றி அணுவிய நிகழ்வுகள் நடப்பதில்லை. இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப் படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுறைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.
 
நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்
நீரணு பாய்சீரும்
வளியணு கிடைச்சீரும்
தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.
சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும்.

ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும்.

பால் தன்மைக்கேற்பப் பொருட்களின் வடிவமையும். களிமண், சேறு, பானை, ஓடு போன்றவை ஒரே பொருளின் பல்வேறு பால் தன்மையால் வந்த புற வேற்றுமை வடிவங்களே.

பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும்.

இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.

ஊழ்கமும் மெய்யியலும்

ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை.

ஊழ்கமும் உடலும்

உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும்.

வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும்.
 
இடகலை நாடி வாதமென்றும்
பிங்கலை நாடி பித்தமென்றும்
சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும்.
வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும்
பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும்
ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும்

சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர்.

இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும்.

சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)

உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும்.

 வாயில் பாலூற்றுதல்.
 அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.
 உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல்
 நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி)
 நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.)
 தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)
 தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல்.
 உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல்.
 நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.

இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர்.

ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,

நிலப்பூதியத்தில் 11/2 
நீர்ப்பூதியத்தில் 11/4
நெருப்புப்பூதியத்தில் 1
வளி பூதியத்தில் 3/4
வெளிபூதியத்தில் 1/௨

ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம்.

இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.

ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல்,
 
ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)
போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)
சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)
கூறுகின்றது.

இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும்.

இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது அவையாவன:

1. கடைமிடறு
இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான்.

2. இறுதிப் பாடல்
இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து.

3. இறுதி ஆடல்
கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்.

4. இறுதி வரவேற்பு
ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே.

5. காரிருள்
இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது.

6. நிறையாவழிகையமிழ்தூற்று
உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர்.

7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு
ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க மெய்யியல் கூறுகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

8. ஐயன் நிலை அடைதல்
இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.

முடிவுரை
இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த வந்தேறி சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.