ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
செவ்வாய், 9 பிப்ரவரி, 2016
தமிழில் ரகுவம்சம்
இரகுவம்சமும் யாழ்ப்பாணமும்
வரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்தே பரதகண்டம் பண்பட்ட வாழ்வு கண்டது.அந்த வாழ்வை நிலை பெறுமாறு செய்தவர்கள் அக்கால அரசர்களேயாவர். அவ்வரசர்களது வாழ்வைப் போற்றிப் பாடுவதில் புலவர்கள் அடங்காத ஆர்வம் கொண்டிருந்தனர். காவியங்களாக வரைந்து இன்பம் கொண்டனர்.
அந்த கவிஞர்களுக்கெல்லாம் மஹாகவியாக வந்தவர் தான் காளிதாசர். செம்மொழியான வடமொழியில் இருதுசங்கார கவிநூலையும், மேகசந்தேச காதல்நூலையும், சாகுந்தல நாடக நூலையும், குமாரசம்பவ வீரம் கலந்த பக்தி நூலையும் படைத்த அந்தக் கவி வல்ல பெருமானார் தந்த வரலாற்று நூலாக, ஸ்ரீ ராமனின் உன்னத வம்ச பாரம்பரியத்தைக் கூறும் நூலாக, இரகுவம்சம் விளங்குகிறது.
இரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து, அக்கினி வருணன் வரை சென்று, அந்நூல் நிறைவடைகிறது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைச் சங்ககாலப்புலவரான ‘ஈழத்துப்பூதந்தேவனார்’ என்னும் புலவரிலிருந்து தொடங்குவதே மரபு என்றாலும், அதன் தொடர்ச்சியான நூல்களைப் பொ.பி 13-ஆம் நூற்றாண்டு வரை காண இயலவில்லை. எனவே, யாழ்ப்பாண அரசு அமைந்து அதில் சோதிடம், வைத்தியம், வரலாற்று நூல்கள் நிறைவாக எழுந்த காலமே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.
இக்கால நூல்களில் தலைமை மிக்கது இரகுவம்சமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் செய்தது போலவும், வில்லிபுத்தூரர் வியாசபாரதத்தைத் தமிழாக்கியது போலவும், கச்சியப்பச் சிவாச்சார்யார் ஸ்கந்தத்தை தமிழில் கந்தபுராணமாகச் செய்தது போலவும், யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தைத் தமிழில் செழுங்கவிகளாக, பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.
தமிழ் இரகுவம்சம்
சம்ஸ்கிருத மொழியில் எழுந்த பஞ்சமஹா காவியங்களுள் ஒன்றான, 19 சர்க்கங்களையும் 1569 செய்யுள்களையும் கொண்ட ரகுவம்ச மஹாகாவ்யம், தமிழில் அரசகேசரியால் இரகுவம்ச காவியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.15-ஆம் , 16-ஆம் நூற்றாண்டுக்குரிய வித்துவச் சிறப்பைக் காட்டும் மிகக் கடுமையான தமிழ் நடையில் இது எழுந்திருக்கிறது. பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என்கிற மூன்று பெரும்பிரிவுகளை உடைய இந்தத் தமிழ் நூல் 26 படலங்களையும் 2444 செய்யுள்களையும் கொண்டிருக்கிறது.
காவியப் பொருள் மரபை மூல பாடத்திலிருந்து நேரடியாக அப்படியே முழுமையாக அரசகேசரி தமிழில் பின்பற்றவில்லை. வடமொழியில் இராமகாதை விரிவாகச் சொல்லியிருப்பது போலத் தமிழில் இல்லை. அது போல நிறைவுப்பகுதியான அக்கினி
வர்மன் வரலாறு தமிழில் காணப்படவில்லை.
படலங்களும் செய்யுள்களும்.
காவிய மரபிற்கேற்ப எழுந்த இத்தமிழ் நூல் பல படங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை முறையே,காப்பு- 1 செய்யுள்
பாயிரம்- 9 செய்யுள்
பொதுக்காண்டம்
ஆற்றுப்படலம்- 26 செய்யுள்நாட்டுப்படலம்- 64 செய்யுள்
நகரப்படலம்- 75 செய்யுள்
அரசியல் படலம்- 22 செய்யுள்
குறைகூறு படலம்- 74 செய்யுள்
தேனுவந்தனப் படலம்- 122 செய்யுள்
இரகுவுற்பத்திப் படலம்- 51 செய்யுள்
யாகப்படலம்- 105 செய்யுள்
திக்கு விசயப்படலம்- 277 செய்யுள்
அயனுதயப்படலம் -55 செய்யுள்
அயனெழுச்சிப் படலம்- 139 செய்யுள்
மாலையீட்டுப் படலம்- 129 செய்யுள்
கடிமணப்படலம்- 85 செய்யுள்
மீட்சிப்படலம்- 129 செய்யுள்
இரகு கதியுறு படலம்- 47 செய்யுள்
இந்துமதி பிறப்பு நீங்கு படலம்- 96 செய்யுள்
சிறப்புக் காண்டம்
தசரதன் சாபமேற்ற படலம்- 125 செய்யுள்திருவவதாரப்படலம்- 56 செய்யுள்
சீதை வனம்புகு படலம்- 157 செய்யுள்
இலவணன் வதை படலம்- 108 செய்யுள்
சம்புகன் வதை படலம்- 53 செய்யுள்
அவதார நீங்கு படலம்- 71 செய்யுள்
பொதுச் சிறப்புக் காண்டம்
குசன் அயோத்தி செல் படலம்- 108 செய்யுள்வாகு வலயப்படலம்- 104 செய்யுள்
முடிசூட்டுப் படலம்- 123 செய்யுள்
குலமுறைப்படலம்- 33 செய்யுள்
சில மாற்றங்கள்
அரசகேசரி இராமன் வரலாற்றைச் சொல்லாமைக்கு அவரே தனது நூலில் காரணம் சொல்கிறார்.‘பொற்றாமரை மான் ஒழியாது பொலியு மார்பஎனும் பாடலில் கவிஞர் சொல்வதன் வண்ணம், கவியில் பெரிய கம்பநாடாழ்வான் கம்பராமாயணமாக ராமசரிதையைச் சொல்லியிருப்பதால், அதை நீக்கி பிறவற்றைச் சொல்கிறோம் என்கிறார். ஆக, கம்பராமாயணத்தில் அரசகேசரிக்கு மிகுந்த பற்றும் நிறைவணர்வும் இருந்திருக்கிறது.
வெற்றாழு மேனி ரகுராம சரிதை யாவும்
கற்றார் கவியின் பெரிதாம் தமிழ்க்கம்பநாடன்
உற்றான் அங்குரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்’
நிறைவுப்பகுதியான அக்கினிவர்மன் கதையை அரசகேசரி ஏன் தமிழாக்கவில்லை என்று தெரியவில்லை. அது ஒழுக்கம் குறைவான அக்கினி வர்மன் கதையாதலால் அரசகேசரி தவிர்த்திருக்கலாம் என்று சிலரும், அரசகேசரி அப்பகுதியை எழுதியிருக்கலாம் ஆனால், இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்று சிலரும், இன்னும் காவியம் முற்றுப்பெறவில்லை என்று சிலரும் கருதுகின்றனர்.
நூல் எழுந்த சமூக -அரசியல் பின்னணி
அரசகேசரியின் காலம் 15-ஆம் 16-ஆம் நூற்றாண்டுகள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர் யாழ்ப்பாண அரசவம்சத்தவர் என்றும் கருதப்படுகிறது.இக்காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மூவேந்தரின் அரசும் உடைந்து போயிருந்தது. விஜய நகரப் பேரரசு ஓங்கியிருந்தது. ஆனால், திருநெல்வேலிப்பகுதியில் சிற்றரசர் போல ஒதுங்கியிருந்த பாண்டிய அரசர்கள் தமிழிலக்கியப்பணியில் ஈடுபாட்டுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக, அதிவீரராம பாண்டியன் கூர்மபுராணம், லிங்கபுராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, மதனகோவை, நைடதம் போன்றவற்றைத் தமிழ்ப்படுத்தியிருப்பது சிந்திக்கத்தக்கது.
தமது இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி இவற்றால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க அரசகேசரி இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம் என்றும், எதிர்கால மன்னர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பியிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுவர்.
ரகு என்பதற்கு கலைக்கடலையும் கைக்கடலையும் கடக்கவல்லவன் என்று பொருள் கொள்வர். இச்சிறப்பு யாழ்ப்பாணத்தரசரிடமும் இருந்தமையால் (அதாவது கல்வி, கலை அறிவும், பகைவரை அடக்கும் திறனும்) அவர்கள் ரகுவம்சத்தை விரும்பி ஆதரித்திருக்கலாம் என்பதும் சிலரது ஊகம்.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்ற பரராஜசேகரனே இந்நூலாக்கத்திற்குத் துணையாகவும் ஊக்கமாகவும் இருந்தான் என்பது வெளிப்படை. அது இரகுவம்சத்திலேயே அரசகேசரியால் ‘பன்னு செஞ்சொல் பரராசசேகர மன்னன் இன்பம் மனங்கொள வாய்த்தது’ என்று சொல்வதாலும் பிற வசனங்களாலும் தெளிவாகிறது. யாழ்ப்பாணத்து நல்லூரில் வைத்து இரகுவம்சத்தை அரசகேசரி எழுதினான் என்றும் அதனை தஞ்சாவூர் இரகுநாத நாயக்கர் அரச சபையில் அரங்கேற்றியதாகவும் சிலர் கருதுகின்றனர். இவற்றுக்கு மாறாகக் கருதுவோரும் உளர்.
தமிழ் இரகுவம்சமும் கவிச்சிறப்பும்
அரசகேசரியின் கவிதைகளில் வித்துவச்சிறப்பு நிறைந்திருக்கிறது என்று கருதும் பலருள் அதில் கவித்துவம் நிறைவாக உள்ளது என்று கருதுதல் குறைவே. ஏனெனில் இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.காளிதாசர் வடமொழியில் எழுதாது தமிழில் அரசகேசரியே எழுதியிருக்கும் இரகுவம்சத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றில் அரசகேசரியின் கவித்துவம் புலப்படுகிறது.
சங்கு ஒன்று கரு ஒன்றை ஈனும் நுணுக்கமான காட்சி அரசகேசரியால் படமாக்கப்படுகிறது.
‘பசிய இலைகளை உடைய தாமரையாகிய தாதி பக்கத்தில் இருக்க, பாய்கிற கால்வாய் நீர் உண்மையாகவே மருத்துவம் செய்ய, நீலோத்பலங்கள் மனம் நெகிழ, தேரைகள் வாய் விட்டுப் புலம்ப, மெல்லிய அணை போல இருக்கிற ஆமை மீது ஏறி சங்கு கருவை ஈனும்’ என்று காட்டும் கற்பனைக்கு அளவேது..?
‘பச்சடைப் பதும தாதி பாங்குறப் பாய் கால் பாணிஇவ்வாறெல்லாம் சிறப்பொடு காவியம் படைத்த அரசகேசரியின் இரகுவம்சம் பிரபலமடையாமைக்குக் காரணமாக பலவற்றைக் காட்டுவர்.
நிச்சய மருத்துச் செய்ய நீலங்கள் நோக்கி நெக்க
வச்சில தேரை வாய் விட்டலாற்ற மெல்லணையினாய
கச்சபவேரிந் மீதேறிக் கம்புசூல் கழிக்குமாறோ’
அவற்றுள் முக்கியமானதாக, வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்கள் கூற்று என்னவெனில் ‘கடினமான சொற்பிரயோகங்கள் உடைமையானும், வடமொழி நூலைப் பெயர்த்துப் பாடியமையானும் கற்றார்க்கன்றி மற்றோர்க்கு உவந்து சுவைத்தல் கூடாததாயிற்று’ என்கிறார்.
சைவனாயினும் அரசகேசரி இராமபக்தி மிக்கவனாயிருந்திருக்கலாம் என்றும் இந்நூல் மூலம் தெரிகிறது. இவற்றை விட தமிழ்ச் சொற்பயன்பாட்டிலும் அரசகேசரி அக்கறை செலுத்தியிருக்கிறார்.
பேரருளாளரான இராமானுஜாச்சார்யார் தமது கையொப்பத்தை ‘இராமானுசர்’ என்றே இட்டிருக்கும் சிறப்போடு இதனை ஒப்பு நோக்கலாம்.
ரகுவம்சத்தை இரகுவம்மிசம் என்றும், திக் விஜயத்தை திக்கு விசயம் என்றும், அஜனை அயன் என்றும் அரசகேசரியார் பயன்படுத்தியிருக்கக் காணலாம். ஆனாலும், காவியம் முழவதும் அங்கிங்கெணாத படி அக்கால வழக்கிற்கு ஏற்ப வடசொற்கள் விரவிக் கிடக்கின்றன.
இன்றைக்கும் அரசகேசரி பேரில் பல ஐதீக, செவி வழிக் கதைகள் யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற. இவற்றின் ஊடாகவும் அரசகேசரி எவ்வளவு தூரம் அக்கால மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டான் என்பது புலப்படுகிறது.
அதிலும் வரலாற்றை நோக்குகிற போது அரசகேசரி என்பவன் ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது கண்டு இன்புறத்தக்கது.
அரசகேசரியின் கவி வன்மை பற்றி அறிய இன்னும் சில செய்யுள்கள் தருதலே பொருந்தும்..
பாயிரத்தில் அவர் தாம் எழுதுகிற இரகுவம்சம் காளிதாசரது வடமொழிச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்பதுடன், அது ஒரு ஒலியை பெரிய மலை தடுத்து எதிரொலி செய்வது போல என்கிறார்.
‘வன்றிசைக் காளிதாசன் வடமொழிஇவரது உவமையணியைக் காண ஒரு பாடல்..
தென்றிசைத் தமிழால் நனி செப்புகேன்
நன்றிசைக்கும் உரைவழி நன்னெடும்
குன்றிசைப்பது போலும் குறிப்பரோ’
இந்துமதிக்குச் சுயம்வரம் நடக்கிறது.. அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்து செல்கிறாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிற போது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவு செய்கிறது இப்பாடல்..
‘தேடுலாம் குமுதச் செவ்வாய் சுந்தரி இரவில் தொக்கஅதாவது இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிற போது ஒவ்வொரு மாடமும் ஒளி பெற்று பின்னர் இருளடைவது போல, இவள் வருதலைப் பார்த்து ஒளி பெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார்.
மாடு சால் அரசவீதி வயின் வயின் ஒருவிச் செல்லும்
வீடிலா தெரிசெஞ் சோதி விளக்கமதொத்தாள் வேந்தர்
நீடுகாள் இருள்சேர் மாட நிரையினை நிகர்த்திட்டாரே’
ஆக, வடமொழியில் சொல்லமுதமெனப் பிறந்த இரகுவம்சத்தின் சிறப்பை தமிழர்கள் அறியும் வண்ணம் தமிழில் அதே சுவையுடன் தந்த பெருமை அரசகேசரிக்கே உரியதாகும். எனவே, அதனைத் தமிழர்கள் யாவரும் சாதாரணமாகவேனும் அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது எனலாம்.
இரகுவம்ச பதிப்பு முயற்சிகள்
இந்நூல் முழுவதையும் காரைக்குடி மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுதலின் பேரில் ஆறுமுகநாவலரின் மருகரான பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் 1887-ல் பதிப்பித்திருக்கிறார்கள்.எனினும், கற்றோரும் மலைக்கத் தக்க இக்காவியச் செய்யுள்களுக்குச் சீரிய பொருள் கண்டு இரு பகுதிகளாக 1915-லும் 1932-லும் வெளியிட்டவர் வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்களாவர். இவரது இவ்வுரையோடு கூடிய இரகுவம்சத்தை மஹாமஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் படித்து
‘உலம் பூத்த புயவரசகேசரி ஆராய்ந்து முனதுரைத்ததாயஎன்று சிறப்புப் பாயிரம் அளித்திருக்கிறார்.
நலம் பூத்த சுவை இரகுவம்சத்திற்கினிய உரை நன்கியற்றி
பலம் பூத்த தமிழ்வலவர் மதிப்பவெளிப்படுத்தினன் யாழ்ப்பாண மேயோன்
குலம் பூத்த நலமுடையான் கணேசையப்பேராளன் குணமிக்கோனே’
என்றாலும், நுண்ணிய தமிழ் இலக்கண இலக்கிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமற் போயுள்ள இன்றைய சூழலில் இரகுவம்சம் காணற்கரிய நூலாய் புலவரகங்களில் உள்ள பெட்டகங்களுள் மறைந்து வாழ்தல் வருத்தத்திற்குரியதேயாகும்.
ஆக, தமிழ் ஹிந்து தர்மத்திற்கு சிறப்புச் சேர்க்க வல்லதாய் திகழ்கிற இந்நூல் பற்றித் தமிழ்ஹிந்துக்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியம் மிக்கதாகும்.
ooOOOOoo
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
யா / தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கல்விப் பணியில் 200 ஆண்டுகள்…
கல்விப் பணியில் இரு சகாப்தங்களை நிறைவு செய்யவுள்ள ஆசியாவின் முதல் கலவன் பாடசாலையாகிய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி தனக்கு வேண்டிய பல்வேறு வளங்களை பூரணப்படுத்துவதன் மூலம் பயனுறுதி மிக்க கல்லூரியாக மிளிர்வதற்காக காத்திருக்கின்றது. இன்று வலிகாமம் வடக்கில் நிலைமாறும் ஒரு பாடசாலையாக இக் கல்லூரி காணப்படுகின்றது. இக் கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் மீளக் குடியமர்வையும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் துரிதப்படுத்த முடியும். மத்திய தர குடும்பங்கள் மீள குடியமர்வதற்கு இழுவிசைக் காரணியாக இப் பாடசாலையின் பயனுறுதி மிக்க கற்றல் பேறு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வண. கலாநிதி. டானியல் பூவர், வண. எட்வேட் வாறன் தலைமையிலான அமெரிக்க மிஷனரியினர் யாழ்ப்பாணத்தில் தேவ ஊழியம் செய்வதற்காக 1816ஆம் ஆண்டு
ஐப்பசி மாதம் 15ஆம் திகதி தெல்லிப்பழையை தமது மதப்பணிக்குரிய மத்திய நிலையமாகத் தேர்ந்தெடுத்தனர். இந்நாள் தெல்லிப்பழையின் கல்வி வரலாற்றிலே மிகவும் முக்கியமான நாளாக அமையப் பெற்றது. 1816.10.15 அன்றே யூனியன் கல்லூரியின் நிறுவுநர் நினைவு நாளாகக் கொள்ளப்பட்டது. 1816இல் தெல்லிப்பழையில் பொது இலவசப் பாடசாலை (Common FreeSchool) வண. கலாநிதி டானியல் பூவர் ஆரம்பித்து வைத்தார். இத் தமிழ் மொழிப் பாடசாலையில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், கணிதம், புவியியல், விவிலியத் திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டன. சிறிது காலத்தின் பின்னர் ஆங்கிலம் போதிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க மிஷனரி முதலாவது ஆங்கிலப் பாடசாலையாக இப் பாடசாலை அமையப் பெற்றது. இப் பாடசாலையில் ஆசிரியரும் மாணவர்களும் சைவ சமயத்தவர்களாக அமையப் பெற்றிருந்தனர். இவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தே நாளாந்தம் பாடசாலைக்கு சமுகமளித்தனர். இதனால் அமெரிக்க மிஷனரியினரின் மத மாற்ற நோக்கம் பெரிதளவில் வெற்றி அளிக்க வில்லை. இக் குறைபாட்டை நீக்கும் முயற்சியாக 1818ஆம் ஆண்டு 06 மாணவர்களுடன் குடும்ப விடுதிப் பாடசாலை தொடங்கப் பட்டது. வசதி படைத்த அமெரிக்க ஆங்கிலேயர் இவ் விடுதிப் பாடசாலைக்கு நிதியீட்டம் செய்தனர். இங்கு ஒவ்வொரு மாணவனும் சராசரி 10 ஆண்டுகள் கல்வி கற்றதாக அறியமுடிகின்றது. 1828இல் முதலாவது சுதேசிய கிறிஸ்தவராக இக் கல்லூரியின் பழையமாணவரான சாமுவேல் வோசெஸ்ரர் ஆசிரிய நியமனத்தை இங்கு பெற்றுள்ளார். 1818இல் 5 பெண் மாணவிகளும் இங்கு கல்வி கற்கதொடங்கியதாக அறியமுடிகின்றது. இக் கல்லூரியில் கல்வி கற்ற முதல் பெண் மாணவியின் பெயர் மிறாண்டா செல்லாத்தை என அறியமுடிகின்றது. 1825இல் தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் வளாகத்திலே ஆயத்தப் பாடசாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இதில் திறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பிற்காக வட்டுக்கோட்டை செமினறிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை அமெரிக்கமிஷனரியின் செயற்பாட்டினை மீள் நோக்குவதற்காக வந்த அன்ரசன் தொம்சன் குழுவினர் அமெரிக்க மிஷனரியினரின் முயற்சிகளுக்கு தெல்லிப்பழையில் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அமையப் பெற்றதால் இக் குறித்த பாடசாலைகளை மூடி விடுமாறு பணிப்புரை விடுத்தனர். இந்நிலையில் 1856 முதல் 1869 வரையான 13 வருட காலத்தில் எந்தவொரு கல்வி முயற்சிகளும் தெல்லிப்பழை வளாகத்தில் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. தெல்லிப்பழையில் பாடசாலைகள் இயங்காத நிலையில் 1869இல் உள்ளூர்வாசியான சைவப் பெருமகன் உயர்திரு செல்லப்பா என்பவர் ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவினார். 1901ஆம் ஆண்டு வரை அதன் தலைமை ஆசிரியராக கடமையாற்றி தான் இறக்கும் தறுவாயில் அப்பாடசாலையை அமெரிக்க மிஷனரியினரிடம் ஒப்படைத்தார். இப் பாடசாலையிலேயே பின் நாளில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனராக பரிணமித்த பாவலர் துரையப்பாபிள்ளை கல்வி கற்று 1901இல் செல்லப்பாவின் மறைவிற்கு பின் இப் பாடசாலையின் தலைமை ஆசிரியரானார்.
1878ஆம் ஆண்டு தெல்லிப்பழை வளாகத்திற்கு வண. சிமித் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் இவ் வளாகத்திலே தொழில் பாடசாலை ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார். இத் தொழில் பாடசாலையில் மரவேலை, மேசன் வேலை, தகரவேலை, அச்சுக்கலை, புகைப்படக் கலை என்பன போதிக்கப்பட்டன. 1910ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய 2 தொழிற்பாடசாலைகளில் இது முதன்மையான தொழிற்பாடசாலையாக துலங்கியது. 1921இல் தெல்லிப்பழையில் இருந்த அமெரிக்க மிஷனரிப் பாடசாலைகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மேற்பார்வைக்குள் வந்தன. யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் வண. பிக்னெல் இவ் வளாகத்தின் முகாமையாளர் ஆனார். இந்நிலையில் 1929 செப்டம்பரில் தெல்லிப்பழை விடுதிப் பாடசாலையானது இருமொழிப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இப் புதிய இருமொழிப் பாடசாலைக்கு 1930ஆம் ஆண்டு முதலாவது சுதேச அதிபராக ரட்ணவரதர் பொறுப்பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் 225 மாணவர்கள் இக்கல்லூரியில் பயின்றதுடன் இவர்களில் 1/3 பகுதியினர் விடுதி மாணவர்களாக காணப்பட்டனர். யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியராக இருந்தவரும் இப் பாடசாலை பழைய மாணவருமாகிய ஐ.பி. துரைரத்தினம் 1935இல் இப் பாடசாலையின் அதிபராக பதவியேற்றார். இவர் பதவியேற்றது முதல் அமெரிக்க மிஷனரியின் தெல்லிப்பழை வளாகம் புதுப்பொலிவு பெற்றது. 1939ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தெல்லிப்பழை வளாகத்தில் இருந்த அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து யூனியன் கல்லூரி எனப் பெயர்சூட்டினார். அன்று தொட்டு 1964 ஜனவரி வரை யூனியன் கல்லூரியின் வளர்ச்சியும் உயர்ச்சியும் அபரிதமாக இருந்தது. கல்லூரியை அவரிடமிருந்து தவிர்த்து நோக்க இயலாத அளவிற்கு கடின உழைப்பினை வழங்கினார். 1960ஆம் ஆண்டு The Union Magazine துரைரத்தினம் அவர்களது வெள்ளி மலராக வெளிவந்தது. இம் மலரானது கல்லூரியின் வரலாற்றிற்கு சிறந்த மூலாதாரமாக இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் சஞ்சிகையினை எடுத்து நோக்குமிடத்து 1940ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் சஞ்சிகையாக The Union Magazine வெளியிடப்பட்டு வருகின்றது. 1970களின் பிற்பகுதிகளில் இம் மலர் இடைநிறுத்தப்பட்ட போதும் முன்னைநாள் அதிபர் திரு. புண்ணியசீலன் அவர்களது முயற்சியினால் 2001ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1659இல் Union Primary என்ற பெயரில் பாடசாலையின் கனிஷ்ட பாடசாலையின் இதழ் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. யூனியன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு 1979 முதல் தந்தை செல்வா தொடக்கப் பள்ளி என்ற நிலையில் தனிப்பாடசாலையாக
இயங்கி வருகின்றது. 1987இல் யுத்த நடவடிக்கைகள் காரணமாக கல்லூரியின் நிர்வாக கட்டிடமாகிய சான்டேஸ் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் கல்லூரியின் அனைத்து நிர்வாக ஆவணங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந் நிகழ்வானது கல்லூரியின் நிறுவக ஞாபகத்தை பலமிழக்கச் செய்ததுடன் நிர்வாக ரீதியாக பல பின்னடைவுகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது.
இக் கல்லூரியானது 1947ஆம் ஆண்டு அதிஉயர் தர பாடசாலையாக (Super Grade School) தரமுயர்த்தப்பட்டமுதல் இன்று வரை பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய, சர்வதேச சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இக் கல்லூரியின் மூன்றாவது அனர்த்த செயற்பாடாக 1990ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகள் காரணமாக தனது சொந்த வளாகத்தை விட்டு இடம்பெயர்ந்தது. 1990.06.16 அன்று தெல்லிப்பழையில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாகம் மகாவித்தியாலயத்திலும், பின்னர் இராமநாதன் கல்லூரியிலும் இயங்கியது. 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது தென்மராட்சி வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் இக் கல்லூரி இயங்கியது. பின்னர் மீண்டும் இராமநாதன் கல்லூரியில் 10.09.2002 வரை இயங்கி பின்னர் 12 வருடங்களின் பின்னர் தனது சொந்த வளாகத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பல்வேறு வகைப்பட்ட வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கத்தொடங்கி படிப்படியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலுகின்றது. உயர்பாதுகாப்பு வலயத்தினுள் 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கல்லூரி இயங்கிய போது அக் காலத்தில் கடமையாற்றிய அதிபரும் ஆசிரியர் குழாத்தினரும் பல்வேறு பட்ட இடர்பாடுகளுடன் கல்லூரியை இயங்கச் செய்து பல்வேறு சாதனைகளை நிலைநாட்டினர். இக்காலத்தில் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மாகாண, தேசிய, சர்வதேச சாதனைகளை இக் கல்லூரி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கடின உழைப்பை வழங்கிய முன்னைநாள் அதிபர் திரு. புண்ணியசீலனும், ஆசிரியை திருமதி ஜெயந்தி ஜெயதரன் பாராட்டுக்குரியவர்கள். ஏறத்தாழ 14வருடங்கள் தொடர்ச்சியாக மாகாண மட்டத்தில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கவை. 2009ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரத்தில் 100% சித்திகளையும் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலைப் பாடசாலையாக தன்னை தரமுயர்த்தியது. இவ்வாறு கல்லூரியின் கடந்த கால புகழ்பூத்த அதிபர்கள் வரிசையில் அமரர் ஐ.பி. துரைரத்தினம் மற்றும் திரு.கே.பாலசுந்தரம், திரு. புண்ணியசீலன் முதலானோர் குறிப்பிடத்தக்கோர். இன்று கல்லூரியானது அதிபர் திரு.வே.க.இரத்தினகுமார் தலைமையில் இயங்கி வருகின்றது. இது தனது சொந்த வளாகத்தில் இயங்கி வருகின்ற போதிலும் பிரதான ஒன்றுகூடல் மண்டபம், மூடிய வகுப்பறைகள், மனையியல் கூடம், விவசாய அறை, செயற்பாட்டறைகள், சிற்றுண்டிச்சாலை, மைதான பார்வையாளர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு, வலைப்பந்தாட்டதிடல், கூடைப்பந்தாட்டதிடல், ரெனிஸ் மைதானம் முதலானவை இன்று அழிவுற்றுள்ளன.
கல்லூரி தனக்குரிய ஏந்துபிரதேசத்தினை 1990 ஆம் ஆண்டு முதல் இழந்துள்ளது. தற்பொழுது இக் கல்லூரியின் ஏந்து பிரதேசத்தில் ஒருபகுதி மக்கள் மீளக்குடியமர்வு நடைபெற்று வருகின்றது. இம் மக்கள் நீண்ட காலமாக முகாம் வாழ்க்கையில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்தனர். இம் மக்களது பிள்ளைகள் உரிய தரங்களில் உரிய தேர்ச்சிகளை அடையாது இன்று வகுப்பறைகளில் விளிம்பு நிலை மாணவர்களாகக் காணப்படுகின்றனர். இம் மாணவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை மாணவர்களது நாளாந்த கலைத்திட்டத்திற்கு மேலதிகமாக கற்பித்து வருவதில் தற்போதைய அதிபர் திரு.வே.க.இரத்தினகுமார் அதீத கவனம் செலுத்தி வருகின்றார்.
கல்லூரி தனது வரலாற்றுத் தடத்திலே புகழ்பூத்த பழைய மாணவர்களான சி.வை தாமோதரம்பிள்ளை, தந்தை செல்வநாயகம் முன்னை நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் குணரட்ணம் மற்றும் பல்வேறு நிலைப்பட்ட பழையமாணவர்களை உருவாக்கியுள்ளது. எனினும் இக் கல்லூரியானது இன்று ஒரு நிலைமாறும் பாடசாலையாக (Transition of school) காணப்படும் நிலையில் தனது 200 வருட நிறைவை எதிர்வரும் 15.10.2016 அன்று கோலாகலமாக கொண்டாடவுள்ளது. இதற்காக இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபமொன்றினை இலண்டன் பழையமாணவர் சங்கத்தினை முதன்மையாகக் கொண்டு ஏனைய அனைத்து பழைய மாணவர் சங்கங்களும் இணைந்து கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. இதன் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் 05.12.2014அன்று மாலை கொழும்பு பழையமாணவர் சங்கம் இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபத்திற்கு நிதி சேகரிப்பதற்காக மாபெரும் கலைவிழாவினை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் கலை அரங்கில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இவ் விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிவடக்கு பிரதேசத்தை வலுவூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல் லண்டன் பழைய மாணவர் சங்கம், சிட்னி பழையமாணவர் சங்கம், மெல்போர்ன் பழைய மாணவர் சங்கம், கனடா பழையமாணவர் சங்கம் முதலானவை நிதியீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்
ஞாயிறு, 17 ஜனவரி, 2016
முத்தமிழ் அறிவாலய பொங்கல் திருவிழா !புலன்பெயர் மாணவர் பெருவிழா !
மாணவர்களால் மாணவர்களுக்கு எடுத்து காட்டான விழாவாக இருந்தது
இந்த மண்ணிற்கும் நமக்கும், இந்த விவசாயத்திற்கும் நமக்கும், ஆனா உறவு முறையை கருப்பொருளாக கொண்ட
கண்காட்சி திருவிழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்தது மிகவும் முக்கியமாக இதுவொரு அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில்
இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது என்பதை வரைபடங்கள் ,பொருகள் உடைகள் உணவுகள் ஆதரப்ப்டுத்தப்பட்டது முக்கியமாக
பார்க்க முடிந்தது
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து,
பானையின் கழுத்தில்
மஞ்சள் பூசி மாவிலை
கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று
மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். என்ற அவர்களின் விளக்க உரை சுவாரசியமாக இருந்தது
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை" என்று அன்றே
சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை அவர்கள் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்து உண்மையான "வள்ளுவ நினவு பூஜை'யாக திருவள்ளுவரின் தினத்தையும்
அடையலப்படித்தி நினவு கூறினார்கள் .
இன்றிய தை பொங்கல் திருநாள் ஒரு இனத்தின்
கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்த கூடிய அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம்
உணர்ந்து கொள்ள முடிந்தது இது அறிவுக்கும் உயர்வளிக்கும் நிகழ்வாகவே இருந்தது
எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
கிடைத்த பெருமையாகும்.
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு
அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய நற்றமிழர்! வாழிய தமிழ்!
முத்தமிழுக்கு ஒரு பெருமை !
செவ்வாய், 12 ஜனவரி, 2016
இந்தியா கொண்டாடும் விவசாயிகள் திருவிழா!
ஜனவரி 15 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 15 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்
உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.
இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.
ஆந்திரா
இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.
கர்நாடகா
மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு. இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.
கேரளா
கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.
ஞாயிறு, 10 ஜனவரி, 2016
ஜோக்ஸ் கணவன் மனைவி..
தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....
***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!???
***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க
**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்
***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..
**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி
**************
கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்
**************
வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!
*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..
யாவும் ஆங்காங்கே படித்ததில் பிடித்தது..
வெள்ளி, 18 டிசம்பர், 2015
தனிமை
நாள் முழுவதும் அமைதி
இதயத்தில் அடைபட்ட
வார்த்தைகளுக்கு
விடுதலை என்றோ??
தெரியவில்லை.
பேச்சு சுதந்திரம் என் உரிமை
பேசுவதற்கு ஆள் இருந்தால் தானே ??
அதை நடைமுறைபடுத்துவதற்கு.
ஒருவேலை
ஊமையாக பிறந்திருந்தால்
தனிமை இனிமைதானோ என்னமோ??
தெரியவில்லை.
என் இன்பங்களும் துன்பங்களும்
தனிமையிலே கரைகின்றன.
தனிமையின் அவதி
மரணத்தின் கடைசி நாள்
கடைசி நிமிடம்.
ஞாயிறு, 13 டிசம்பர், 2015
எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.
இயலாமையிலிளகும் நெஞ்சினை
அயராத ஒன்றென மாற்றுதற்கு
அப்பொழுதெல்லாம் முயல்வதே
இருப்பின் பெரும் பொறுப்பாக
மாறி விட்டதெந்தன் இருப்பு.
இருப்பின் அழகை இரசிப்பதற்கு,
அதன் பின்னால்
பொதிந்திருக்கும் அறிவை,
ஆதியின் அடிப்படையை,
அந்தத்தின் காரணத்தை,
புரிதற்கு,
இருக்கும் பொழுது போதவில்லை
என்றே படுகிறது.
அப்பொழுதுதான் மீண்டும் , மீண்டும்
நெஞ்சிலொரு வினா எழும்:
ஏன்? ஏன்? ஏன்?
இருந்தும் இருப்பவற்றின்
இயல்பை, அழகை இரசிப்பதற்கு,
வியப்பதற்கு என் இனிய பொழுதினை
நான் பயன்படுத்துவதே அதிகம்.
ஏனெனில் அதில் அடையும்
இன்பத்தால்தான்.
கண்ணுக்குத்தெரியா சிற்றுடல்
தொடக்கம் , பெருவரை வரை
எனக்குத்தெரிவதெல்லாம்
நேர்த்தி மிக்க படைப்பின் தன்மைதான்.
அறிவின் ஆட்சிதான்.
அவ்வறிவினை அறிதற்கு முயலுதலே
அடியேனின் வழக்கமாகிக் கழியும் பொழுதில்
சிறக்குமென் வாழ்வு!
அயராத ஒன்றென மாற்றுதற்கு
அப்பொழுதெல்லாம் முயல்வதே
இருப்பின் பெரும் பொறுப்பாக
மாறி விட்டதெந்தன் இருப்பு.
இருப்பின் அழகை இரசிப்பதற்கு,
அதன் பின்னால்
பொதிந்திருக்கும் அறிவை,
ஆதியின் அடிப்படையை,
அந்தத்தின் காரணத்தை,
புரிதற்கு,
இருக்கும் பொழுது போதவில்லை
என்றே படுகிறது.
அப்பொழுதுதான் மீண்டும் , மீண்டும்
நெஞ்சிலொரு வினா எழும்:
ஏன்? ஏன்? ஏன்?
இருந்தும் இருப்பவற்றின்
இயல்பை, அழகை இரசிப்பதற்கு,
வியப்பதற்கு என் இனிய பொழுதினை
நான் பயன்படுத்துவதே அதிகம்.
ஏனெனில் அதில் அடையும்
இன்பத்தால்தான்.
கண்ணுக்குத்தெரியா சிற்றுடல்
தொடக்கம் , பெருவரை வரை
எனக்குத்தெரிவதெல்லாம்
நேர்த்தி மிக்க படைப்பின் தன்மைதான்.
அறிவின் ஆட்சிதான்.
அவ்வறிவினை அறிதற்கு முயலுதலே
அடியேனின் வழக்கமாகிக் கழியும் பொழுதில்
சிறக்குமென் வாழ்வு!
வியாழன், 10 டிசம்பர், 2015
திங்கள், 16 நவம்பர், 2015
போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்
போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்
யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்ரீபன் அடிகளாரின் ‘உயிர்ப்பதிவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘போர் இலக்கியங்கள்’ தொடர்பான சிறப்புரையை ஆற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்
– தமிழ் நேசன் அடிகளார்
உலக இலக்கியங்களில் ‘போர் இலக்கியம்’ என்பது தனியான ஓர் இலக்கிய வகையாகும். நவீன தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். உலகப் போர் இலக்கிய வரிசையில் ஈழத்துப் போர் இலக்கியங்களுக்கும் நிச்சயம் ஓர் இடம் உண்டு.
யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்ரீபன் அடிகளாரின் ‘உயிர்ப்பதிவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘போர் இலக்கியங்கள்’ தொடர்பான சிறப்புரையை ஆற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.
போரின் இறுதி நாட்களில் மக்களோடு இருந்து பெற்ற போர்க்கால துன்ப அனுபவங்களை ‘உயிர்ப்பதிவு’ என்ற பெயரில் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 16.06.2014 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மன்னார் மறைமாவட்டச் சமூகத்தொடர்பு அருட்பணி மையமான ‘கலையருவி’ இயக்குனரும், மன்னா பத்திரீகை ஆசிரீயரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது:
உலக வரலாற்றில் எங்கெல்லாம் போர்கள் நடைபெற்றனவோ அங்கெல்லாம் உன்னதமான போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. உலக யுத்தங்களின் விளைவுகள் மட்டுமன்றி அதன்பின்னர் உலகெங்கிலும் நடைபெற்ற பல புரட்சிகளின்போதெல்லாம் சிறந்த போர் இலக்கியங்கள் மலர்ந்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இரஷ்ய இலக்கியங்களில் போர் இலக்கியங்களே பிரசித்திபெற்றவையாக விளங்குகின்றன. இந்தப் போர் இலக்கியங்கள் எவற்றைப் பற்றிப் பேசுகின்றன? உரிமையும் உரிமை மறுப்பும், ஆயுதமும் ஆயுத எதிர்ப்பும், சமாதானமும் சமாதான மீறலும் பற்றி இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. அதுமட்டுமன்றி, காட்டிக்கொடுத்தல், பொருளாதாரத் தடை, பழிவாங்கல், பண்பாட்டு அழிப்பு போன்ற விடயங்கள் பற்றியெல்லாம் இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. ஒரு நாட்டுக்குள் இன, மத, ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரீமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடிய உள்நாட்டுப் போர்களிலிருந்தும் பல உன்னதமான இலக்கியங்கள் தோன்றின. ஐரீஷ், பலஸ்தீன இலக்கியங்கள் இதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றன.
தமிழில் போர் இலக்கிய மரபின் ஆரம்பமாகச் சங்ககாலத்தில் எழுந்த புறத்திணை நூல்களைக் கொள்ளலாம். புறநானூற்றிலிருந்து பதிற்றுப்பத்து வரையிலான புறத்திணை நூல்கள் போரை மட்டுமன்றி அதற்கான மன்னராட்சி அரசியலையும் முன்னிறுத்தின. காவியங்களின் பெரும் பகுதியான காண்டம்கூட ‘யுத்த காண்டம்’ என்னும் பெயரைக்கொண்டு விளங்கியது. சிற்றிலக்கியங்கள் என இன்று அறியப்படுகின்ற ‘பிரபந்த மரபிலும் இந்த நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாகப் ‘பரணி’ முதலிய சிற்றிலக்கியங்களின் ஆரம்பம் என்பது போர், வெற்றி அரசியல் போன்றவற்றைச் சார்ந்ததாக இருந்தது.
நவீன தமிழிலக்கியத்திலே போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் பாரதியின் வருகையோடு ஆரம்பிக்கின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றது. நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்றவொரு தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். இவ்விலக்கியம் உலகெங்கிலும் தோன்றிய போர் இலக்கியங்களுக்கு இணையானதாக மதிக்கப்படுகின்றது. ஈழத்தமிழ் போர் இலக்கியம் பற்றி ஆங்கில மொழியில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
1985ஆம் ஆண்டு வெளிவந்த “மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு போரைப் பதிவுசெய்த முதலாவது இலக்கியத் தொகுப்பாகும். இதனைத் தொடர்ந்து போரையும் போரின் வலிகளையும் பிரதிபலிக்கும் பல கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத்தொகுதிகளும் நாவல்களும் நாடகங்களும் வெளிவந்துள்ளன.
‘உயிர்ப்பதிவு’ என்ற இந்த நூலையும் ஓர் போர் இலக்கியமாகவே நோக்கவேண்டும். போரின் இறுதிநாட்களின் கண்கண்ட சாட்சியான இந்நூலாசிரியரின் அனுபவப்பதிவுகள் உலகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் தட்டியெழுப்பும். உண்மைக்குச் சாட்சிபகர வந்த இயேசுவின் பணியாளன் என்ற வகையில் அருட்திரு. ஸ்ரீபன் அடிகளாரும் இந்நூலின் பதிவுகள் ஊடாக உண்மைக்கு சாட்சியம் பகர்ந்துள்ளார்.
இந்நிகழ்விற்கு யாழ் குருக்கள் மன்றத் தலைவர் அருட்திரு. இ. ஸ்ரலின் அடிகளார் தலைமை தாங்கினார். யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. யஸ்ரீன் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். யாழ் மறைமாவட்ட மனித உரீமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு. மங்களராஜா அடிகளார் ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கான நயப்புரையை அருட்திரு. இரவிச்சந்திரன் அடிகளார் வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
























