ஞாயிறு, 5 மார்ச், 2023

பண்டைத் தமிழரின் பாரம்பரிய உணவு

 

பண்டைத் தமிழரின் பாரம்பரிய உணவு முறைகள்,உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் -ஓர் ஆய்வு. (Ancient Tamils Traditional Food Cultures, Food preservation and Saving food Method)

 முனைவர் பிரியா கிருஷ்ணன் கெளரவ விரிவுரையாளர், அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை  08 May 2021 Read Full PDF

முனைவர் பிரியா கிருஷ்ணன்

கெளரவ விரிவுரையாளர், அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை

*

ஆய்வுச்சுருக்கம்:

உலகில்  மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை, உணவு அவசியமானதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் விளங்குகிறது.  உணவானது அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான உணவாக இருப்பதில்லை. அந்தந்த நாட்டின் கால நிலைக்கு ஏற்றவாறும் , அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறும் விளையும் உணவின் பயன்பாடு மாறுபடுகிறது. இன்றையக் காலத்தில் பரவலாக அனைத்து நாட்டு உணவுகளும் கிடைத்தாலும் அனைவரும் அந்தந்த நாட்டு உணவுப் பழக்கங்களிருந்து மாற விரும்புவதில்லை என்பது கண்கூடு. இவ்வாறாக உணவு  மனிதனுக்கு முதன்முதலில்  அறிமுகமானபின்  அதன் அறுவடையினை பொறுத்து அதனைப் பாதுகாப்பதும் மற்றும் விதவிதமாக சமைப்பதும் சேர்ந்தே அறிமுகமாயின. பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், அதன் பின்னர் பல நூற்றாண்டுகளாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மனிதர்கள் பிற்கால நுகர்வுக்கு   உணவுகளைப் பாதுகாக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினர்.   அன்றைய காலத்தில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் பாதுகாத்தனர். அவை சேமிக்கவும் நீண்ட காலப் பயணத்திற்கும் எடுத்துச் செல்லவும் உகந்ததாக  இருந்தது. அமீபா முதல் மனிதன் வரை உலகில் வாழும் அனைத்து உயிரிகளுக்கும் உணவு என்பது உயிருக்கு நிகரானது. நெருப்பைக் கண்டறிந்த மனிதனின் அதீத வளர்ச்சியில் உணவின் தேவையும் புதிய உணவுகளை உருவாக்குவதும் உணவை விதவிதமாக சமைத்து அதனைப்  பக்குவப்படுத்துவதும்  பதப்படுத்துவதும்  இன்றுவரை நிகழக்கூடிய  ஒன்றாகும் .  பண்டைத் தமிழரின் உணவு முறைகளையும் , அதனை அவர்கள் பதப்படுத்திக் காத்த செயல் முறைகளையும்   இலக்கியம் மற்றும் தொல்லியல் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்:பண்டைத் தமிழர் ,அகழாய்வுகளில் உணவுப் பொருட்கள்  , உணவு பதப்படுத்துதல் , உணவு முறைகள், தானிய கிடங்கு

முன்னுரை:

மனித வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் மனித சமுதாயம் வேட்டைச் சமுதாயமாக இருந்தது.  அதனால் மனிதர்கள்  உணவினை வேட்டையாடியும் ,காடுகளில் கிடைத்த  இயற்கைப் பொருட்களை உண்டும் காலத்தைப் போக்கினர். பச்சை மாமிச உணவுகளை  உண்டுவந்த மனிதனுக்கு  நாளடைவில் இயற்கையாகக்  காடுகளில்  தீப்பற்றி எரிந்த மாமிசம் கிழங்கு போன்றவற்றை  உண்ணும்போது அதன் சுவை மேலும் கூடியிருப்பதை உணர்ந்தான்.   அதன் அடுத்த நிலையாக நெருப்பைக் கண்டறிந்தபின்  உணவினை சுட்டும் வாட்டியும் உண்டான்.  மண்பாத்திரங்கள் கண்டறிந்தபின் பாத்திரங்களில் கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என அடுத்தடுத்த நிலைக்குச் சென்றான். இவ்வகையில் உணவானது பசியை மட்டும் போக்குவதற்கானது மட்டுமல்லாமல்  உடலுக்குத்  தேவையான அறிவையும் ஆற்றலையும் தரவல்லது என்பதையும் உணர்ந்து கொண்டான். இதனால் உணவினை வகைவகையாக சமைக்கவும் , உணவுப் பொருட்கள் கிடைக்காத பருவங்களில் அதனைப் பாதுகாத்து  சேமிப்பது, பதப்படுத்துவது எனப் பலவாறு தன்னை தயார்ப் படுத்திக் கொண்டான். உலகில் உணவுகள் ஆங்காங்கே  கிடைக்கும் விளைப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவுகளைக் கொண்டே உணவு சமைக்கும் முறைகள்  நிகழ்கிறது. அதனால் உலகெங்கும் ஒரே வகையான உணவைச் சமைத்தனர் என்று சொல்ல இயலாது. உணவுகளைச் சமைத்தல், பதப்படுத்துதல், சேமித்தல் போன்றவை ஏறக்குறைய ஒரே மாதிரியானவை என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை . சங்க கால மக்கள் உணவினை எவ்வாறு சமைத்தனர், பதப்படுத்தினர், சேமித்தனர், அகழாய்வுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி  இனி காண்போம்.

சங்க கால தமிழர் உணவுகள்:

சங்க கால மக்கள் அவர்களின் உணவுத் தேவைகளை அந்தந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துக் கொண்டனர். அவர்கள் தம் நிலங்களில் கிடைத்த உணவுகளையும், பண்டமாற்றுக்குக் கிடைத்த உணவுப் பொருட்களையும் உண்டு வந்தனர். மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்கள்  திணை, ஐவனம்,  மூங்கில் நெல் ,கிழங்குகள் ,பால் ,கள் ,ஊனுணவு ஆகியவற்றை உணவாகக் கொண்டனர். காடும் காடு சார்ந்த முல்லை நில மக்கள் ஆனிரைகளைக் கொண்டு கிடைக்கும் பால்.தயிர்,நெய் ஆகியவற்றோடு வரகு அரிசி,கிழங்கு வகைகள் ,ஊனுணவு போன்ற பிற உணவுகளையும் உண்டனர். வயலும் வயல் சார்ந்த மருதநில மக்கள் பண்பாடும் நாகரிகமும் செல்வச்செழிப்பும் கொண்டவர்கள். ஆதலால் சோற்றுணவு,பாலுணவு,ஊனுணவு,கள்ளுணவு ஆகியவற்றை உண்டனர். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில மக்கள் முக்கிய உணவாக மீனை உண்டனர்.மீனுக்கும் உப்புக்கும் கிடைக்கும் பண்டமாற்றுப் பொருட்களைக்  கொண்டு சமைத்து உண்டனர். மணலும் மணல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த  பாலை நிலத்து மக்களுக்கு முக்கிய உணவு வேட்டையில் கிடைக்கும் விலங்குகள்.அதனோடு வழிப்பறியில் கிடைக்கும் உணவுகளையும்  சேர்த்து உண்டுவந்தனர்.

சங்க கால மக்களின் உணவுகளைப் பற்றிக் குறிப்பிடும் தேவநேயப்பாவாணர்

 ”உலகில் முதன்முதலில் உணவை நாகரீகமாய்ச் சமைத்து உண்டவன் தமிழனே! ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும் ,சுட்டும் வெறுமையாக அவித்தும் உண்டுவந்த காலத்தில் உணவைச்  சோறும் கறியும் என இரண்டாக வகுத்து ,நெல்லரசியைச் சோறாக்கி சமைத்தும் ,கறி அல்லது  குழம்பு வகைகளைச் சுவையூட்டுவனவும்,உடம்பை வலுப்படுத்துவனவும் நோய் வராது தடுப்பனவுமான     பலவகை மருந்துச் சரக்குகளை உசிலை (மசாலை)யாகச் சேர்த்து ஆக்கியும் உயர்வாக உண்டுவந்த பெருமை தமிழனதாகும்”     என்று கூறுகிறார். (ப24.பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும் ) ஏனெனில் பண்டைக் காலத்தில் சங்க கால மக்கள் பலவகையான உணவுகளைப் பல  முறைகளில் சமைத்து  உண்டனர். அதேபோல் உணவை தான் மட்டும் உண்ணாது அனைவருக்கும் பகிர்ந்து உண்ணும் உயரிய பழக்கத்தை  கொண்டிருந்தனர். உணவை மற்றவருக்குக் கொடுப்பது உயிரையே கொடுப்பது போன்றது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தனர். தான் உயிர் வாழ துணைபுரியும்  உணவையும் நீரையும் மதித்துப் போற்றினர். இதனைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

”உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே ” 2 (புறம் 18:18-24) என்றனர்.

உணவு வகைகளும் நிலங்களும்:

சங்க கால மக்கள் உணவைத்  தாளித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெய்யில் பொரித்தல், வேக வைத்தல்   போன்ற பல்வேறு முறைகளில் சமைத்து உண்டனர் என்று இலக்கியங்கள் வழி அறியலாம். இவை மட்டுமல்லாது அவர்கள் திருமண நாளில் சிறப்பு விருந்து மற்றும்  கணவனைப் பிரிந்த பெண்டிர் உண்ணும் உணவு , கணவனை இழந்த பெண்டிர் உணவு,  குழந்தை  உணவு , தெய்வத்திற்குப் படைத்தல் என பலவகைப்பட்ட சிறப்பு உணவு பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்தனர் என்று நோக்கும்போது அவர்களின் உணவு மேலாண்மை  எவ்வாறு சிறப்புற்று  இருந்தது என்பதை உணரமுடிகிறது. இந்த உணவு முறைகளில் பலவற்றை இக்காலத்திலும் நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலும் மருத்துவர்கள் நமது பாரம்பரிய உணவுகளைத்தான் பரிந்துரை செய்கின்றனர். அந்தளவு நமது முன்னோர்களின் உணவு முறை ஆரோக்கியமானதாக இருந்திருக்கிறது.செயற்கை உரமற்ற நச்சுத் தன்மையற்ற உணவு முறையினை நமது முன்னோர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர்.அதனைத்தான் தற்போது இயற்கை உணவு என்று நாம் சொல்லி வருகிறோம்.

குறிஞ்சி நில உணவு:

குறிஞ்சி நில மக்களின் சிறப்பு  உணவாகத் தினையினைச் சொல்லலாம். ஏனெனில் தினையினைப் பயிரிட்டு அவற்றைக் குற்றி அரிசியாக்கிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தினையில்  சிறுதினை, கருந்தினை, செந்தினை என்று மூன்று வகையுண்டு. நுவணை எனப்படும் தினை மாவினை  மிக நுண்னியமாக அரைத்து அதனுடன் இனிப்புச் சேர்த்து  உண்ட செய்தியும் அறிய முடிகிறது.

மென் தினை நுவணை உண்டு  (ஐங் 285:2)

மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்( பதி 30:24)

விசையம் கொழித்த பூழி அன்ன

உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை (மலை:445)

அதேபோல் மலைநெல்லிருந்து எடுக்கப்பட்ட ஐவன அரிசியினை மலைவாழ் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இயற்கையில் கிடைக்கும் மூங்கில் அரிசியும் அவர்களின் முக்கிய  உணவாக இருந்திருக்கிறது. தினைப் பயிரின் ஊடே அவரை மற்றும் கிழங்கு  பயிர்களை விதைத்திருந்தனர் என்பதனை,

பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்

கொழுங்கொடி அவரை பூக்கும் (குறு:82:4-5)

………………………………………குன்றத்துப்

பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு(குறு:379:1-2)

என்பதன் மூலம் பயிர்களின் ஊடே சில பயிர்களை விதைத்து அதனையும் ஒரே அறுவடையில் இரண்டு அல்லது மூன்று வகைப் பயிர்களை பயிரிட்டு உணவுக்குப் பயன்படுத்தியுள்ள நுண்ணறிவு இங்கு புலப்படுகிறது .

வெள்ளெலி இறைச்சியும்,ஆட்டிறைச்சியும் ,நெய்விடப்பட்ட வெண்ணிறச் சோற்றினையும் குறிஞ்சி மக்கள் உணவாக உண்டனர் என்பதை பின்வரும் பாடல் அடிகளால் அறியலாம்.

மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல்,

எலி வான் சூட்டொடு,மலியப் பேணுதும் (நற்:83:5,6)

மேலும் முள்ளம்பன்றியின் இறைச்சியினை குறவர்க்குடியில் உள்ளோர் பகுத்து உண்டனர் (நற்: 85)என்றும்,தினைப்புனைகளில் உலாவரும் பன்றிகளைக் கொன்று உண்டனர் (நற்: 336)என்றும் அறிகிறோம்.பன்றிகள் வளர்க்கப்பட்டு உணவாக்கப்பட்ட செய்தியினையும் (பெரு.பாண:339-345) அறிகிறோம். இதோடு மான்கறியினையும் உண்டனர்.

முல்லை நிலத்து உணவு:

முல்லை நிலத்து மக்கள் புதியதாக வருபவர்களுக்குப் பாலை கொடுத்து மகிழ்ந்தனர் என்றும்,பாலில்  வரகரிசியைச் சேர்த்துச் சமைத்த உணவையும் உண்டனர்.

களிபடு குழிசிக் கலடுப்பு ஏற்றி

இணரததை கடுக்கை ஈண்டிய தாதின்

குடவர் புழுக்கிப் பொங்கவிழ்ப் புன்கம்

மதர்வை நலான் பாலொடு பகுக்கும்(அகம்:393:14-17)

வருகுவை ஆயின் தருகுவென் பாலென(அகம்: 54: 19)

வரகரிசியோடு ஈயலைப் போட்டு அதில் வெண்ணெய்யினை பெய்து புளிப்புச் சுவையினை கொண்ட கலவைச் சோற்றை உண்டனர்.நெய் சோறும் ,கிழங்குப் பொரியலும் முல்லை நில மக்களின் முக்கிய உணவுகளுள் ஒன்று. முல்லை நில மக்கள் காய்ச்சிய பாலில் உரை ஊற்றி தயிராக்கி அதனை வெண்ணெய் ,நெய், எனப் பிரித்தெடுத்து பயன்படுத்தினர்.பாலில் தயிரைக் கலந்து சோற்றுடன் கலந்து உண்டனர்.இதனை தீம்புளிப்பாகர் என்று அழைத்தனர்.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் ,கழாஅது உடீஇ

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தாந்துழந்து அட்ட தீம்புளிப் பாகர் (குறு ;167;1-4)

முல்லைநில மக்கள் ஆனிரை மேய்ச்சலுக்கு  இந்த  தீம்புளிப் பாகர் உணவினை துளையிடப்பட்ட மூங்கில் குழாய்களில் அடைத்து பசுக்களின் கழுத்தில் தொங்கவிட்டுச் செல்வார்களாம்.

வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி

செவியடை தேரத் தேக்கிலைப் பகுக்கும் (அகம்:311:9-11)

மருத நில உணவு:

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் (பெரும்256-257)

மருத நிலத்து உழவர்கள் நெல்லரசிப் சோற்றோடு தங்கள் மனையினில் வளர்க்கும் கோழிப்பெடைகளை சேர்த்து, சமைத்த உணவினை விருந்தினர்களுக்குத் தந்து உபசரிப்பர் என்று அறிகிறோம்.(இன்றும் கிராமங்களில் காணப்படும் பழக்கம்தான்)

கொள்ளொடு பயுறுபால் விரைஇ, வெள்ளிக்

கோல் வரைந்தனன வாலவிழ் மிதவை

வாங்குகை தடுத்த பின்றை…..(அகம்:37:12-14)

இப்பாடலின் வழி மருத நில மக்கள் உணவில் கொள்ளும் பயிறும் பாலும் கலந்த கூழுணவை விரும்பி உண்டனர் என்று அறிகிறோம்.உழுந்தினை பயன்படுத்தி பணியாரம் செய்து உண்ட செய்தி,உழுந்து சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவினை கும்மாயம் என்று அழைத்தனர்(அகம்86)

உழுந்தினும் துவ்வா,குறுவட்டா….(ம.கா.29:27)

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை ( அகம்:86:1)

சோற்றில் புளியங்கக் குழம்பிட்டுச் சுவைமிக்க உணவினை மருதநில மக்கள் உண்டனர் என்றும் அறிகிறோம்(அகம்:196:5,6)

உழவர் விடியற்காலையில் பழஞ்சோற்றை உண்டனர்.இது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கமாகும். இதனை,

……………………………………………………………. வைகிற்

பழஞ்சோ றயிலும் (புறம் 399:10-11)

மாங்காய்ச் சாற்றில் புளிப்பையுடைய மாதுளங் காயைச் சேர்த்து அச்சாற்றினை வெயிலில் காயவைத்துப் பதப்படுத்தி விரும்பு உண்டனராம். இது உடல் உழைப்பால் ஏற்பட்ட களைப்பையும் கள்ளுண்ட மயக்கத்தையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம்.(அகம்37;6)

……………………………….மாஅத்துக்

கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்

புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை

வெயில்வெரிந் நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடைக்

கயமண்டு பகட்டின் பருகி…..(அகம்:37:7_11)

இவர்கள் பனையிலிருந்து எடுக்கப்பட்ட கள்ளை உண்டனர்

நெய்தல் நில உணவு:

உப்பையும் மீனையும் கொண்டு கிடைத்த நெல் அரிசியினை உணவாக் கொண்டு தமக்கும் விருந்தினர்களுக்கும் தந்து மகிழ்ந்தனர்.நெல்லரிசியால் ஆக்கப்பட்ட வெண்சோற்றோடு அயிலை மீனைவிட்டுப் புளிப்பு சுவையுடைய குழம்பினை ஊற்றிக் கொழுமீன் கருவாட்டுடன் உணவு உண்டனர் என்பதை,

உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு

அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து

கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்(அகம்60:4-6)

இவர்கள் உண்ட கள் பனங்கள்ளாகும்.மீனுக்கு மாற்றாகப் பெற்ற பனங்கள்ளினை உண்டு மகிழ்ந்தனர்.

பாலை நில உணவு:

பாலை மறவர்கள் வழிப்பறி செய்யும் உணவே முதன்மையானது.அவர்கள் வேட்டையாடுதலுமுண்டு.இவர்கள் எறும்புகள் சேர்த்துவைத்த புல்லரிசியினையும் எடுத்து வந்து உண்டனர்.(அகம்:377:2-5)வறண்ட நிலத்தில் வாழும் பலை நில மக்கள் பறவைகள் கொத்திப் போட்ட பஞ்சினையும் வெண்மையான ஒட்டைகளையும் சேர்த்து வைத்து உணவுக்கு எனப்  பயன்படுத்தியதை,

போக்கில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்

நல்கூர்பெண்டிர் அல்குற் கூட்டும்(அகம்:129:9-,10)

பசுவின் கொழுப்பினையும்,மாமிசத்தையும்  உண்டனர்.(அகம்;249:10.11)

எருதின் கொழுப்புக்கூடிய தசையினை நெருப்பில் இட்டுச் சுட்டு உண்டனர் என்பதை,

இன்சிலை எழிலேறு கெண்டி புரைய

நிணம்பொதி விழுத்தடி நெருப்பி வைத்துஎடுத்து

அணங்கரு மரபின் பேஎய் போல்

விளரூன் தின்ற வேகை (அகம்:265:12-15) என்ற அடிகளால் உணரலாம்.

யானை,முள்ளம்பன்றியின் மாமிசத்தையும் உண்டனர் என்று பின்வரும் பாடலால் அறியலாம்.

புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்

கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை (அகம்:169:3-4)

சங்க கால உணவுகளில் அரிசி:

பழந்தமிழர்களின் பிரதான உணவு நெல் சோறு அதாவது அரிசிச் சோறு.வள்ளுவர் கஞ்சியினை நீரடுபுற்கை என்கிறார்.நீர்+அடு+புல்+கை.  சோற்றுக்கான அரிசி முல்லைப் பூப் போல வெண்மையாகவும்,மென்மையாகவும் இருக்கும். ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ முரிவோ காணப்படாது.சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக வெந்திருக்கும் என்று இலக்கியங்கள் இயம்புகின்றன. அபிதான சிந்தாமணி என்னும் நூல் பின்வருமாறு அரிசி வகைளைப்  பட்டியலிடுகிறது.

ஈர்க்குச்சம்பா,புழுகு சம்பா,கைவரைச்சம்பா,செஞ்சம்பா,மல்லிகைச்சம்பா,குண்டு சம்பா,இலுப்பைப்பூச்சம்பா,மணிச்சம்பா,வளைதடிச்சம்பா,கோரைச்சம்பா,குறுஞ்சம்பா,மிளகுசம்பா,சீரகச்சம்பா,காளான்சம்பா,மைச்சம்பா,கோடைச்சம்பா,காடைச்சம்பா,குன்றுமணிச்சம்பா, அன்னமழகி அரிசி, கார்அரிசி, மணக்கத்தை அரிசிவாலான், கருங்குருவை, சவ்வரிசி  மூங்கிலரிசி, கோதுமையரிசி, கம்பரிசி, தினையரிசி, சோள அரிசி, வரகரசி, கேழ்வரகரசி இவையின்றி கேடிலிச்சம்பா, கலிகஞ்சம்பா, கனகம்சம்பா, கலப்புச்சம்பா, கம்பஞ்சம்பா, காடைக்கழுத்தன்  சம்பா, கோடன் சம்பா, பாசடைச்சம்பா, சன்னசம்பா, சின்னசம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக்காய்ச்சம்பா, சுகுதாச்சம்பா, செம்பாளைச் சம்பா, சொரியஞ்சம்பா, திருவரங்கச்சம்பா, துய்யமல்லிகைச்சம்பா, பாலாஞ்சம்பா, பெருஞ்சம்பா ,பேய்வள்ளைச்சம்பா, பைகோச்சம்பா, மங்கஞ்சம்பா, மணல்வாரிச்சம்பா, மலைகுலிக்கிச்சம்பா, மாவம்பைச்சம்பா, முனைவெள்ளைச்சம்பா, கார்த்திகைக்கார், முட்டைகார், சித்திரைகார், கருமோசனம், வெள்ளைமோசனம், வால்மோசனம், பொச்சாரி, அருஞ்சோதி, இரங்கமாட்டான், ஈசுரக்கோவை, பிச்சவாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட்டரிசி, குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்வரிசி முதலிய பலவாம். "(அபிதான சிந்தாமணி-ப-231)

இதிலிருந்து பண்டைய காலத்தில் பல்வேறு அரிசி வகைள் வழக்கத்தில் இருந்ததை இதன் மூலம் ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

அட்டில் சாலை எனப்படும் உணவு சமைக்கும் அறை:

சங்க கால மக்களுக்கு உணவை அடுப்பில் சமைத்து உண்ணும் பழக்கம் இருந்ததை இலக்கியங்கள் வழி அறிகிறோம்.அடுப்பில் ஏற்றிச் சமைப்பதுஅடுதல் எனப்படும். சங்க கால மருத நிலமக்கள் , தம் வீட்டினுள்  சமைப்பதற்கென்று தனி  அறையினை கொண்டிருந்தனர். இது ஏனைய நிலங்களில் காணப்படாத சிறப்பு என்றே சொல்லலாம். இந்த சமையல் அறைக்கு அட்டில் சாலை என்ற பெயர். இந்த அட்டில் சாலை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. இந்த அறை அவ்வீட்டின் வடகிழக்கு  மற்றும் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்தன.

அந்துகில் தலையில் துடையினள்நப்புலந்து

அட்டிலோளே……..(நற்:120:8-9)

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் (சிறு.பாண:அடி 132)

அறம் நிலைஇய அகன் அட்டில் (பட்டினப்பாலை :அடி 43)

அட்டில் ஓலை தொட்டனை நின்மே (நற்:300:12)

இந்த அட்டில் சாலைகளில்  பலவகையான அடுப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுப்பை மூட்ட, நெருப்பை உண்டாக்கும் ஞெலிகோலால் கடைந்து நெருப்பை உண்டாக்கியுள்ளனர் . இதனை,”இல் இறைச் செரி இய ஞெலிகோல் போல”  என்கிறது புறப்பாடல். மேலும், சங்க கால மக்கள் முடித்தலை அடுப்பு, ஆண்டலை அணங்கடுப்பு, ஆடு தனிமற்ற கோருடர் அடுப்பு , முறியடுப்பு போன்ற பலவகையான அடுப்புகள் பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது.

மட்பாண்டங்கள்:

பழங்காலத்திலிருந்தே மக்கள் உணவு பொருட்களை சமைக்கவும்,சேமிக்கவும், சாப்பிடவும் மண் பாத்திரங்களையே அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். மண்பாண்டங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன் தாவரங்களில் செய்யப்பட்ட குடுவைகள் மற்றும் பாறை இடுக்குகளில் நீரே சேமித்துப் பயன்படுத்தி வந்தனர். சங்க காலத்தில் உலோக பயன்பாடு இருந்தபோதும் மட்பாண்டங்களில்தான் உணவு சமைக்கவும் ,உணவு உண்ணவும் ,உணவைச் சேமிக்கவும் பயன்பட்டு வந்துள்ளது. தொல்லியல் ஆய்வுகளிலும் கூட இத்தகைய மண்பானைகளின் ஓடுகள், மண்பானைகள் தமிழரின் வரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாக அமைந்திருப்பதை அனைவரும் அறிந்ததே. மண்ணால் ஆன பானைகளைக் குழிசி, கலம், தாழி, சாடி, மண்டை, தசும்பு, கன்னல்,  அகல், முழவு, பத்தர், தடவு, மிடா, அகழி, இந்தளம், கடம், முகை, குடம், வள்ளம் போன்ற சொற்களால் வழங்கப்பட்டன.  பெரும்பாணாற்றுப்படையில்  எயின  மகளிர் பனையில் புல்லரியினை இட்டுச் சமைத்தனர் என்றும் ,புறநானூற்றில் மான் இறைச்சியினை மண் பாத்திரத்தில் சமைத்தனர் என்றும் அறிகிறோம். கள்ளினை பருக மண்கலங்களைப் பயன்படுத்தினர் . உணவுப்பொருட்களைக் குழிசி என்று என்னும் பானையில் இட்டு அடுப்பில் வைத்தனர். மண்ணால் ஆன  பானைகளை முல்லை நில மக்கள் தயிர் கடையவும்,சேமித்து வைக்கவும் பயன்படுத்தினர் என்றும்,நெய்தல் நிலமக்கள் மீன்களைச் சேகரிக்கப் பயன்படுத்தினர் என்றும் அறிகிறோம். மருத நிலமக்கள் சிறிய உறிகளில் மண்பானைகளைக் கயிற்றால் கட்டி உயரத்தில் தொங்க விடுவர் . இதற்கு உறி என்று பெயர். 

இதில் தயிர்,ஊறுகாய்,வெண்ணெய் போன்றவற்றைச் சேமித்து பாதுகாத்தனர் .

தயிர் கொடு வந்த தசும்பு (புறம்:33:3)

பாணர் பசுமீன் சொரிந்த மண்டை(குறு:169:4)

வெள்ளிகோள் தோன்றாக் குழிசியோடு

நாள் உறை மத்து ஒலி கேளாதோனே (புறம்:257:12,13)

உறித் தாழ்ந்த் கரகம் (கலி:9:2)

இமிழ் இசை மண்டை உறியொடு( கலி :106:2)

திண்கால் உறியன் பானை(அகம்:276:6)

ஆகிய பாடல் வரிகளால் அறியலாம்.

வனைகலம் திகிரியின் குமிழி சுழலும்

துணை செலல் தலைவாய் ஓவிறந்து வரிக்கும் (மலை:474,475)

வேட்கோச் சிறா அர் தேர்க் கால்வைத்த

பசு மண் குரூஉத் திரள் (புறம்32:8,9)

என்ற பாடல் அடிகளால் சக்கரம் பயன்படுத்தப்பட்டு ,அதனைச் சுழலவிட்டு மண் பாண்டங்களை உருவாக்கினர் என்ற தொழில்நுட்பம் தெரிகிறது.

தீயினால் சரியான வெப்பத்தில் சுட்டால்தான் அவை நீரினால் கரைந்து போகாமலும், நெருப்பினால் வெடிக்காமலும்  இருக்கும் என்பதனை அறிந்திருந்தனர். சூளைகளை அமைத்து மட்பாண்டங்களைக் குறிப்பிட்ட வெப்பத்தில் சூடு படுத்தப்பட்டுப் பதப்படுத்தியதை சங்க இலக்கியங்கள் பின்வருமாறு  பதிவு செய்கின்றன.

பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல

உள்ளம் தாங்க வெள்ளம் நீந்தி(குறு:29-2,3)

ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்

பெர் மழைப்பெயற்கு ஏற்றாங்கு (நற்_308:8,9)

கலம் செய் கோவே கலம் செய் கோவே

இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் புகை

அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை

நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே (புறம்:228:1-4)

இலங்கு மலை புதைய வெண்மழி கவைஇ

கலம்சுடு புகையின் தோண்றும் நாட (அகம்:308:5,6)

சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற

பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன (நற்:84:6,7)

   இப்பாடல்கள் வழி சங்க கால மக்களின் மண் சார்ந்த அறிவும் ,கைத்திறனும் தொழில்நுட்பமும் அறியமுடிகிறது.

நீர் பயன்பாடு:

சங்க கால மக்கள் கிணறு,குளங்கள் ஏரிகள்,மலை அருவி ஆகியவற்றிலிருந்து நீரை எடுத்து உணவிற்காகவும் குடிநீருக்காகவும் பயன்படுத்தினர்.சங்க காலத்தில் கிணற்றிலிருந்து கலங்கல் நீரை மண்சட்டியில்  ஊற்றி அதில் கடுக்காயை இட்டுத்  தெளிய வைத்து நீர் மாசில்லாமல் பயன்படுத்தியுள்ளனர்.

கலங்கிய நீரைத் தேற்றாங்கொட்டை தெளிய வைப்பது பற்றி கலித்தொகை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

"இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து"

                            கலித்தொகை 142:64

இதிலிருந்து ஊருணியிலிருந்து எடுத்துவரும் நீரைத் தூய்மைப்படுத்த பண்டைத் தமிழர் தேற்றாங்கொட்டையினைப் பயன்படுத்தினர் என்று அறிகிறோம்.

குழந்தை உணவு:

அடிசில் என்பது குழைவாகச் சமைத்த நெல்லரிசிச் சோறு.ஆனால் இவற்றில் பலவகையான அடிசில்கள் சமைக்கப்படுகின்றன .எடுத்துக்காட்டாக,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை……….(புறம்:188:3-6)

குழைந்த உணவையே குழந்தைகளுக்கு ஊட்டுவர்.இதனையே இங்கு நெய்யுடை அடிசில் என்கிறது புறப்பாடல். இங்கு இக்குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட உணவானது நெய் கலந்த குழைந்த உணவு. இதுவே இங்கு நெய்யுடை அடிசில் எனப்படுகிறது. இது ஒரு வகை அடிசில்.

குழந்தைகளுக்கு அன்று முதல் இன்று வரை பால் உணவே தரப்படுகிறது.அவ்வகையில் குழந்தைகளுக்கு நெய்யோடு கலந்த பாலினைக் கொடுத்து வளர்த்த செய்தியை,

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்பது (நற்:172:3)என்ற அடியால் அறியமுடிகிறது.

அடிசிலோடு வேறு பொருட்கள் சேர்த்துச் சமைக்கப் படும் போது அவை வேறு வேறு பெயர்களை பெறுகிறது.பாலுடை அடிசில்(அகம்394:11,12),கொழும் துவை அடிசில் ((புறம் 250:1,2)நிணம் சேர்த்த நெய் அடிசில்  (குறி 204-207), ஊன் துவை அடிசில் (பதி 45:13,14)இவ்வாறான பலவகை அடிசில்கள் சங்க கால மக்களால் உண்ணப்பட்டன.

திருமண உணவு:

மருத நிலத்தில் நடைபெறும் திருமணங்களில் சுவையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டதாக அறிகிறோம். இவ்வகை சிறப்பு உணவுகள் பிற நிலங்களில் இல்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது. உளுந்தஞ்சோற்றுப் பொங்கலும்,நெய்யும் சேர்த்துச் செய்த வெண்சோற்று இறைச்சியும் திருமண உணவாக வழங்கப்பட்டதை ,

உளுந்து தலைப் பெய்த கொழுங் -கனி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரை கால் (அகம்:86:1,2)

மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி(அகம்:136:1,2)

(அமலை- மிகுதியான சோறு ,மிதவை - மிதவை என்பதற்குச் சோறு, கூழ், கும்மாயம் என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி)

திருமணமான தம்பதியருக்கு இரவில் பாற்சோறு தருவது பண்டு தொட்டுத்  தொடரும் வழக்கம். திருமணமான இரவில் மணமகள் மணமகனுக்குத் தரக்கூடிய உணவு.இதற்கு பாலுடை அடிசில் என்று பெயர். இதனை

பாலுடை அடிசில் தொடீஇய  ஒருநாள்

மாவண் தோன்றல்!வந்தனை சென்மோ! (அகம் 394:11,12)

கணவனைப் பிரிந்த பெண்டிர் உணவு:

அக்காலத்தில் பரத்தையர்  ஒழுக்கம் இருந்து வந்தது . அதனால் சில காலங்கள் பெண்கள் கணவனைப் பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த மாதிரியான காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடு மிக அவசியமானதாகும்.

……………சில்பதங் கொழித்துத்

தாழாட்டு உண்டு தமியர் ஆகி (அகம்:316:13.14)

தலைவன்பால் ஊடல் கொண்டு ,சுவைமிகு உணவுகளைத் தவிர்த்து, தம்மிடத்துத் திருமகள் விலகிச் செல்ல  எளிய உணவான நொய்யரிசியை முறத்தால் புடைத்து தாமே சமைத்துண்டு தனிமையை மேற்கொண்டனர் என்று இதிலிருந்து தெளிவாக அறியலாம்.

கணவனை இழந்த பெண்டிர் உணவு:

கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச் சோறு , எள்ளுத் துவையல், புளியுடன் சமைத்த வேளைக்கீரை,பாயின்றிப் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோன்பு நோற்பர் என்று பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பின்வரும் புறப்பாடலில் பதிவு செய்கிறார்.

அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட

காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,

அடைஇடைக் கிடந்த கை பிழி பண்டம் ,

வெள் எட் சாந்தொடு ,புளிப் பெய்து அட்ட

வேளை வெந்தை,வல்சி ஆக (புறம்:246;4-8)

சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்

கழி கல மகளிர் போல (புறம்-280)

இனியே பெரு வளக் கொழுநன் மாய்ந்தென ,பொழுது மறுத்து

இன்னா வைகல் உண்ணும்

அல்லிப் படூஉம் புல் ஆயினவே (புறம் 248)

கைம்மை மகளிர் பிடி யானையும் அடி போன்ற சிறிய இடத்தை மெழுகி ,இலையிட்டு அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்துச் சுவையில்லாத உணவை உண்பர் என்பதை

பிடியடி யன்ன சிறூவழி மெழுகித்

தன்னமர் காதலி புன்மேல் வைத்த

இன்சிறு  பிண்டம் (புறம்:234:2-4) என்று அறிய முடிகிறது

தெய்வத்திற்குப் படைத்தல்:

சங்க காலத்தில் கடவுளுக்கு உயிர்ப்பலிகள் மிகுதியாக இருந்துள்ளது.அதனால் ஊனுணவு இறை வழிப்பாட்டில்  முக்கிய பங்கு வகித்திருக்கிறது எனலாம். பசுநெய்யினை இட்டு வெண்சோற்றைச் சமைத்து தெய்வத்திற்குப் படைக்கப்பட்டதாக  அறிகிறோம்.

கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு

சூருடைப் பலி (நற்:367: 3,4)

மருத நில மக்களின் கடவுள் வழிபாட்டின் போது கடவுளுக்குக் கள் படைக்கப்பட்ட செய்தியும் அதனைப்  படைத்தபின் உண்ட செய்தியும் அறிய முடிகிறது.

கள்ளும் கண்ணியும் கையுறை யாக

நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி (அகம்156:13,14)

பண்டைத்தமிழர்களிடம் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வணங்கும் வழக்கம் இருந்தது.மலர்கள் தூவியும், இரத்தங்கலந்த அரிசியைப் பலியாக வைத்தும் வணங்கினர்.

            "சிறுதினை மலரொடு விரைஇ, மறி அறுத்து

             வாரணக்கொடியடு வயிற்பட நிறீஇ,

             ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்"   (திருமுருகு_218-220)

 

சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும்,ஆடறுத்தும், கோழிக்கொடியடு முருகனை வரிசையாக நிறுத்தியும்,ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்கள் செய்தனர்.

உணவிற்கான பலப் பெயர்கள்:

உணவு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தனர்.பிளக்கப்பட்ட மாமிசத் துண்டுக்குப் பிளவை என்று பெயர்.

முழவுமா தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலை :176)

வேக வைத்த சோற்றுக்குச் சொன்றி என்று பெயர்.

சுவல் விளை நெல்லின் செவ் அவிழ் சொன்றி( பெரும்.131)

வேக வைத்த இளம் தசையினை திற்றி என்று பெயர்.

இரவுக் குறும்பு அலற நூரி நிரை பகுத்து

இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் (அகம்:97:4,5)

நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற (அகம்249:11-13)

அழித்து ஆனாக் கொழும் திற்றி(மது.காஞ்சி:211)

துழாவி துழாவி சமைப்பதை துழவை என்றும்,

அவையா அரிசி அம் களித்துழவை (பெரும் 275)

பண்ணியம் என்பது பலவகையான பலகாரங்களையும் ,கடவுளுக்குப் படைக்கும் பலவகையான பல உணவு பொருட்களையும் ,பல வகையான பொருட்களையும் குறிக்கும்.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் (பரி:19:38)

பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்(நற்:31:8)

பொம்மல் பெரும் சோறு என்பது அதிகளவு சோற்றைக் குவித்து வைப்பதைக் குறிப்பது.

பகர்வை அரிசி பொம்மல் பெரு சோறு (நற் 60:5)

மிளர்வை என்பது புரண்டு கிடப்பது.மீன் குழம்பில் புரண்டு கிடக்கும் மீன்களை மிளிர்வை என்கிறார் நற்றிணை புலவர்.

கரும் கண் வராஅல் பெரும் கடி மிளிர்வையொடு

பகர்வை அரிசி பொம்மல் பெரு சோறு (நற் 60:4,5)

இவ்வாறு  உணவுக்கும் உணவைச் சார்ந்துப் பொருட்களுக்கும் பலவகையான   பெயர்கள் இருந்ததைச்  சங்க இலக்கியங்களிலிருந்து  பலவற்றை எடுத்துக் காட்டலாம்.

உணவு சமைக்கும் முறைகள் மற்றும் பதப்படுத்துதல்

குய் - தாளித்தல்:

குய் என்பது தாளித்தலைக் குறிக்கும்.இன்றும் உணவினை  தாளிக்கும் பழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சங்க கால மக்கள் தாவர உணவு மற்றும் ஊனுணவைத் தாளித்து  சமைத்துண்டதை பின்வரும் பாடல்கள் தெரிவிக்கின்றன.

குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில் புலவர் (புறம் 250:1,2)

நெய் குய்ய ஊன் நவின்ற

பல்சோற்றான்,இன்சுவைய (புறம் 382)

குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில் (புறம்:160:7)

அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் (புறம் 10:7)

சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் (புறம்127:7)

கருங்கண் கருனை செந்நெல் வெண்சோறு (நற்:367:3)

உண்கண் குய்ப்புகை கழுமத் (குறு;167:3)

விருந்து கண்மாறாது உணீஇய ,பாசவர்

ஊனத்து அழித்து வல்நிணக் கொழுங்குறை

குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப(பதிற்:21)

சுடுதல் -சுட்டு உண்ணுதல்:

மறவர்கள் மரநிழலில் இளமையான பசுங்கன்றின் கறியினை அரிந்து சுட்டுத் தின்றதை  இந்த அகப்பாடல் வழி அறியலாம்.(இது இக்காலத்தில் தந்தூரி என்று அழைக்கப்படுகிறது.)

பல்பூங்கானத்து அல்குநிழல் அசைஇத்

தோகைத் தூவிக் கொடைத் தார் மழவர்

நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற (அகம்249:11-13)

பச்சைக் கறியினை துண்டுகளாக்கிப் பொரித்தும்,நெருப்பில் சுட்டும் செய்யப்படும்  பொரித்த உணவைக் கருனை என்றனர்.

பசுங்கண் கருனை சூட்டோடு மாந்தி (புறம்:395:37)

பால் வறை கருனை காடியின் மிதப்ப (பொரு:115)

மண்டைய கண்ட மான் வறை கருனை( புறம்:398:24)

வேட்டைக்கு செல்லும் போது வேட்டையாடிய விலங்குகளை அங்கேயே உணவாக்கி  ,நெருப்பை உண்டாக்கிச் சுட்டுத் தின்பர்.

குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு ( புறம் 43:11)

குறுமுயலிம் குழை சூட்டோடு (புறம்:395:3)

கொழுந்தடிய சூடு என்கோ (புறம்396:15)

ஆட்டுகிடாயின் கறியினை தீயிலிட்டுச் சுட்டு ,காயம் பெய்து அட்ட இடம் அகன்ற் மிழுவிய உணவை,

மை விடை இரும் போத்துச் செந்தீச் சேற்த்தி

காயம் கனிந்த கணகன் கொழுங்குறை(புறம்;364)

பொரித்தல்:

பொரித்தல் என்பது நெய்யிலோ கொழுப்பிலோ பொரித்து எடுக்கும் உணவுகளைக் குறிக்கும். இதை  சங்க இலக்கியங்களில்  வறை என்பர்.

நெய் கனிந்து வறை ஆர்ப்ப  (மது :756)

பால் வறை கருனை காடியின் மிதப்ப (பொரு :115)

இப்பாடல்களில் பொரித்த மாமிசத் துண்டுகளை வறை என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

வாட்டுதல்:

மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் (பெரும்256)

உணவுக்காக வீட்டில் வளர்க்கப்படும்  கோழியினை இறகுகளை நீக்கி அதனை வாட்டியெடுத்து மீண்டும் மஞ்சள் பூசி வாட்டுவர். இது இக்காலங்களிலும் பயன்பாட்டில் உள்ள முறையாகும்.

வாடூன் - இறைச்சியை உப்புக்கண்டம் இடுதல்:

உணவு சமைப்பதற்குப் போக மீதியான உணவுகளைக் கெட்டுப் போகாமல் காப்பது அவசியமானதாகும்.சங்க கால மக்கள் உணவுக்குப் போக மீதும் இறைச்சியினை  மஞ்சள் மற்றும் உப்பு கலந்து வெயிலில் உலர்த்தியபின் காய்ந்த இறைச்சித் துண்டுகளை எடுத்துச் சேமித்து  வைத்துக் கொள்வர். இதனை வேண்டும்போது  சுட்டோ அல்லது வேகவைத்தோ உண்பர். இது இன்றும் நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.இதனை,

முரவு வாய்ச் குழிசி முரி அடுப்பு ஏற்றி

வாராது அட்ட வாடூன் புழுக்கல் (பெரும் 100)

சூடு கிழித்து வாடூன் மிசையவும் (புறம்:386:4)

………..வாடூஊன் கொழுங்குறை

கொய்குரல் அரிசியோடு நெய்பெய்து அட்டு(புறம் 328)

இந்த உப்புக்கண்டத்தைச் சோற்றுடன்  சேர்த்து நீரிலும் வேகவைத்து உண்பர் என்பதனை,

வாடூன் கொழும் குறை

கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு

துடுப்பொடு சிவணிய தளிக்கொள் வெண்சோறு (புறம் :328:9-11)

துடுப்பொடு சிவணிய தளிக்கொள் வெண்சோறு (புறம் :328:9-11)

வெயிலில் ஊனை உலர்த்துதல்:

கணமா தொலைச்சித் த்ன்னையர் தந்த

நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பு

நலமா ணெயிற்றி (ஐங் 365:1-3)

இப்பாடல்வழி எயிற்றியர் பகற்பொழுதில் தன் தமையன் மார் பகற்பொழுதில் வேட்டையாடி கொணர்ந்த நிணமுடைய ஊனை வெய்யிலில் காய வைத்தனர் என்பதை அறிய முடிகிறது.

நொதித்தல்-கள்ளை பதப்படுத்துதல்

தோப்பிக்கள்,நறவு,காந்தாரம்,கலங்கல்,தேறல்,அரியல் என பலவகைப்பட்ட கள் சங்க கால மக்களால் பருகப்பட்டனவாகத் தெரிகிறது.

தோப்பிக் கள்ளோடு  துருஉப்பலி கொடுக்கும்(அகம்:35)

முட கால காரை முது பழன் ஏய்ப்பத்

தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்(புறம்:258)

வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு(நற்:276)

வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப (பதிற்;40)

எமக்கே கலங்கல் தருமே தானே

தேறல் உண்ணு மன்னே …..(புறம் 298)

குறவர்கள் மூங்கிலில் கள்ளை இட்டு இனிய மாம்பழத்தையும்,பலாச்சுளையினையும் ,தேனையும் கலந்து மண்ணில் புதைத்தனர்.இதனைப் பல நாள் கழித்து எடுத்து உண்டு களித்தனர்.இதனை,இங்குக் கள் என்பது நெல்லிருந்து எடுக்கப்பட்ட தோப்பி எனப்படும் கள்ளாகும். பொதுவாகக் கள் என்பதை நெல்,தென்னை,பனை,தேன் போன்ற பல பொருள்களிலிருந்து எடுக்கப்படுகிறது.பல நாட்கள் நொதித்து  (”கடுந்திறல் பாப்புக் கடுப்ப அன்ன தோப்பி”)அதிக மயக்கத்தைத் தரக்கூடியதாக இருந்திருக்கிறது தேனிலிருந்து எடுக்கப்பட்ட கள்ளையும் குறவர்கள் விரும்பி உண்டனர்.பெண்களும் இதனை விரும்பி உண்டனராம்.விருந்துகளிலும் கள்ளுணவு சிறப்பாக இருந்திருக்கிறது.

தேன் தேர் சுவைய,திரள் அரை,மாஅத்து

கோடைக்கு ஊழ்த்த ,கமழ்நறுந் தீம்கனி,

பயிர்ப்புறப் பலவின்  எதிர்ச்சுளை அளை

இறாலொடு கலந்த வண்டுமூக அரியல்

நெடுங்கண் ஆடு அமைப் பழுநி, கடுந்திறல்

பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி…..(அகம்: 348:2-7)

கருவாடு- உலர்த்துதல்

பரதவர்கள் விற்றது போக மிஞ்சியதையும் விற்பனைக்குப் போகாமல் காலம் கடந்துவிட்டால் அந்த மீன்களை  உப்பு தோய்த்து , வெண் மணலில் வெயிலில்  உலர்த்தக் காயவைப்பர். இதற்கு உணக்கல் என்று  பெயர்.

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள்

ஒப்பும்……(நற்:45:6-7)

வேகவைத்தல்

சங்க கால மக்கள் நெல்லை வேகவைத்து சோறாக்கியும் ,அரிசியோடு ஊன் கலந்து வேகவைத்தும் உண்டனர்.அவரை,துவரை போன்றவற்றை வேகவைத்தும் உண்டனர்.சங்க இலக்கியம் வேகவைத்தலைப் புழுக்குதல் என்கிறது.

உண்மின் கள்ளே !அடுமின் சோறே!

எறிகதிற்றி !ஏற்றுமின் புழுக்கே! (பதிற்:18)

ஊறுகாய்

முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்குந்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன்னியம் கடுப்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறந் துரப்பக் (  பெரும்பாண் ; 51-58)

 குதிர்-தானிய சேமிப்பு:

சங்க கால மக்கள் அக்காலத்தில் வீடுகளில் தானியங்களைச் சேமிப்பதற்குக்  குதிர்களை அமைத்தார்கள். வரகு வைக்கோல் பிரியால் குதிர் சுற்றப்பட்டு களிமண் பூசப்பட்டிருக்கும். இது  ஆறடி உயரத்தில் வட்டமாக இருக்கும்.இதன் வெளிப்பகுதியில் சாணம் பூசப்பட்டிருக்கும். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும்.மேல் மட்டத்தை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியைச் செய்வார்கள். இதனால் எலி கடிக்காது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிப் பயன்படுத்துவார்கள் ( இந்து தமிழ் ஜனவரி20,2018). வீட்டின் முன்னே இருந்த முன்றிலும், வீட்டின் உள்ளே இருந்த முற்றத்திலும் குதிர் இருந்தது  என இலக்கியங்கள் சுட்டுகின்றன. அதன் அடுத்த வளர்ச்சியாக நெல்லைக் கொட்டுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக, வீட்டின் கொல்லைப் புறத்தில் பத்தாயம் உருவாக்கப்பட்டது. இதனை  கிராமங்களில் தொம்பை என்று அழைப்பர். அடுத்த விளைச்சல் நடவுக்குத் தேவையான கோட்டை என்ற  நெல் விதைகளைச் சேமிக்கும் முறையும் உண்டு. பிற்காலங்களில் நிறையத் தானியங்களைச் சேமிக்க நெற்களஞ்சியங்கள்,தானிய கிடங்குகள் என உருவாக்கப்பட்டன.

எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில்

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்

களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் (பெரும்பாண:185-187)

தமிழக அகழாய்வுகளில் கிடைத்த உணவுப் பொருட்கள்:

தமிழக அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் தமிழக வரலாற்றைப் பலவகையில் முன் நிறுத்திருக்கிறது. கீழடி போன்ற அகழாய்வுகள்  நமது நாகரிகத்தை மேலும் பின்னோக்கிச் சென்று பண்டைய தமிழரின் ஆதி காலத்தை இவ்வுலகிற்கிற்கு எடுத்துக் காட்டியது . அந்த வகையில் பொருந்தல், கோவை, ஆதிச்சநல்லூர்  போன்ற தொல்லியல்  இடங்களில்  அகழாய்வுகளில் கிடைத்த உணவுப் பொருட்கள்  இங்குக்  குறிப்பிடத்தக்கதாகும் .இலக்கியங்களில் படிக்கும் அத்தனை செய்திகளையும் தற்போது தொல்லியல் ஆய்வுகள்  மூலமாக நிரூபித்து வருகிறோம். சங்க கால மக்கள் பயன்படுத்திய உணவுகளான நெல், சாமை, தினை,  சோளம் ஆகியவை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இந்த கட்டுரைக்கு  மேலும் உரம் சேர்ப்பதாய் அமைகிறது.

1.நெல்

2010ஆம் ஆண்டு நிகழ்த்திய  பொருந்தல் அகழாய்வு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இங்குக் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து  எடுக்கப்பட்டவையாகும்.

2.நெல் ,சாமை,தினை,உமி

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் (Dr.Jagor) என்ற  அறிஞர்  1876 இல் ஆதிச்சநல்லூரில்  மேற்கொண்ட அகழாய்வில்,  ப முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள், பழைய மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கல பொருட்கள்   ஆகியவற்றுடன் உட்கார்ந்த நிலையிலிருந்த எலும்புக்கூடுகளுடன், இறந்த மனிதர்களின் விருப்பமான உணவாக இருந்த சாமை, தினை, உமி போன்றவையும், இற்றுப்போன துணிகளும் இருந்தன என்று பதிவு செய்கிறார். (இந்து தமிழ் நாளிதழ் ;09/08/2017)

”ஒரு பெரிய மண் தாழிக்குள் இருந்த இரண்டு சிறிய பானைகள் அந்த  பெரிய மண் தாழிக்குள் ஒரு மனிதனின் முழு எலும்புக்கூடு இருந்தது.அத்துடன் நெல்லும் ,திருநெல்வேலி பகுதியில் சாமை என்று அழைக்கப்படும் தானியமும் காணப்பட்டது. எங்களை வியப்பில் ஆழ்த்தியது” என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்டூவர்ட் என்பவர் கிழக்கிந்தியக் குழுமத்துக்குக் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.(ப.84/ஆதிச்சநல்லூர்-கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம்/அமுதன்/தினத்தந்தி பதிப்பகம்/ஜனவரி 2017)

அதன்பின் நிகழ்ந்த பல்வேறு அகழாய்வுகளின் அறிக்கைகள் இன்னும் வெளிவரவில்லை என்பது வறுத்ததற்குரியதே . அண்மையில் செய்த வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluniscence dating ) வழியாக இந்த இடம் பொ.ஆமு 1500 லிருந்து பொ.ஆ 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று கருதப்படுகின்றது. அதாவது இன்றிலிருந்து 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம் என்று பேரா.முனைவர் வீ.செல்வகுமார் குறிப்பிடுகிறார்.(http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/adichanallur.htm)

3.மகரந்தம் (தினை)

ஈம் டொரெய்ன் புல்லர் என்பாரால் பேரூரில் நடந்த அகழாய்வில்  மண்ணில் கிடைத்த மகரந்தங்களைச் சேகரித்து அவற்றை காலகணிப்பு செய்தபோது அவை தினைப் பயிர்கள் என்பதையும் ,காலம் கிபி 3 ஆம் நூற்றாண்டு என்றும் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளிப் பகுதிகளில் ஏர்கலப்பை விவசாயத்திற்கு முந்தையது  இந்த பேரூர் ( ஹோஸ் பயன்பாடு) அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சார்ந்தது என்றும் அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

4.சோளம்

ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வில் முதுமக்கள் தாழிகளில் சோளம் கண்டறிந்ததாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பேரா.முனைவர் கந்தசாமி கூறுகிறார்.அதனை பதிவும் செய்திருக்கிறார்.

கல்வெட்டுகளில் உணவு:

பிற்காலங்களில் நமக்கு கிடைத்த  சில சான்றுகளையும் இங்கு பார்ப்பது அவசியமென்று கருதுகிறேன். சோழர் கால கல்வெட்டுகளில் சருக்கரைப் பொங்கல் (அக்கார அடிசில்) பணியாரம் ஆகிய உணவுகள் பேசப்படுகின்றன.விசய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுகளில் இட்டளி(இட்டிலி) ,தோசை, அதிரசம்  போன்ற உணவு வகைக் குறிப்புகள் கிடைக்கின்றன.

 

 

உப்பின் பயன்பாடும் வரலாறும்:

பண்டைத் தமிழர் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பிற்கு வெள்ளுப்பு என்று பெயர் .பண்டைத் தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளமையின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது.நெல்லின் நேரே வெண்கல் உப்பு என்று பெண்ணொருத்தி கூவி விற்பதனை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.செய்த வேளைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாஷம்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் கவளம் (salary salt) என்ற பெயர் உருவானது என்பர். உப்பு விளையும் இடம் அளம் என்று அழைக்கப்பட்டது. இவ்வகையான உப்பளங்களுக்கு அரசர்களின் பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது.எடுத்துக்காட்டாகப் பேரளம் ,கோவளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கிபி 1268) அதும்பூர் என்னும் ஜன்னாதப் பேரளம் ,செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம், இடையன் குழி என்றும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்றும் ராஜநாராயணப் பேரளம் , திரு நல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஆளப் பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்தத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுது படிக்கும் கோயில் சீரமைப்பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன என்று தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் எடுத்துக் காட்டுகிறார். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகே இருந்தன என்று கல்வெட்டுகளில் தெரிய வருகிறது.

பிற பகுதிகளிலிருந்து உணவுப் பொருட்களின் வருகை:

கிபி 15 ஆம் நூற்றாண்டில் சிலி நாட்டிலிருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டினுள் வழக்கத்திற்கு வந்தது.மணிலா எனப்படும் நிலக்கடலை எண்ணையும் விசய நகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகம் ஆனது.

முடிவுரை:

இதுகாறும்  இக்கட்டூரைவழி  பண்டைத்தமிழர்களின் உணவுகள், உணவுகளைச் சமைக்கும் முறைகள் பதப்படுத்துதல்  மற்றும் சேமித்தல் ஆகியவற்றை நோக்கும் போது சங்க கால மக்கள் உணவுகள் சார்ந்து அதன் தன்மையினை உணர்ந்து இயற்கையோடு  வாழ்ந்துள்ளனர் . உணவிற்கும்  உண்ணும்   முறைகளுக்கும்கூட   பல்வேறு பெயர்களை   வழங்கிய   மொழியாற்றலும்  , உணவுகளை வகைவகையாக  சமைக்கும் உத்திகளும் ,உண்ணத் தகுந்தவை எனத்  தேர்ந்தெடுக்கும் நுண்ணறிவும் ஆகியவற்றை அவர்கள் கையாண்டவிதம் இங்கு  வியக்கத்தக்கவையாகும். உலகெங்கும் வாழ்ந்த அன்றைய மனிதக்குலத்திலிருந்து  தனித்து, மொழியில் செம்மையும் அறிவாற்றலில் வளமையும் கொண்டவர்கள் சங்க கால தமிழ் மக்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

 

துணை நின்ற நூல்கள்:

1.அகநானூறு ,முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

2.நற்றணை   , முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

3.புறநானூறு ,முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

4.குறுந்தொகை, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

5.சிறுபாணாற்றுப்படை, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

6.பெரும்பாணாற்றுப்படை, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

7.பதிற்றுப்பத்து, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

8.ஐங்குறுநூறு, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

9.மதுரைக்காஞ்சி, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

10.மலைபடுகடாம்., முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

11.பொருநராற்றுப்படை, முனைவர். கு வெ பாலசுப்பிரமணியன் (உரை) ,முதல் பதிப்பு ஏப்ரல் 2004 , நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் ( பி)லிட்,41,சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-98

12. ஆதிச்சநல்லூர்-கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம்(தினத்தந்தி பதிப்பகம்).

13. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/adichanallur.htm

14. இந்து தமிழ்நாளிதழ் ;09/08/2017

15. பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும் (தமிழ் மண் பதிப்பகம்)

   (மற்றும் இணையத் தகவல்கள்)

ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு

 

ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு


இராஜ சுப்பிரமணியன்,

இணை மென்பொறியாளர் &வரலாறு ஆய்வாளர்,

சரவணம்பட்டி

கோயமுத்தூர்

ஆய்வுச் சுருக்கம்:

தமிழி எழுத்துக்கள் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது. தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கஜபாகு காலம்காட்டி முறைமை எவ்வாறு ஒரு கால நங்கூரமாய் அமைந்ததோ அது போலவே இனி தமிழர் சிங்களவர் வரலாறு சேந்தன் மாறன் காலம் காட்டி முறைமை மூலம் இணைக்கப்படும். தமிழரசர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து காலம் கணிக்கப்படுவார்கள். சேந்தன் மாறன், விஜயனுக்கு பெண் கொடுத்த பாண்டியன், மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசமரபுகள் என்ற ஆய்வு முன்னேறும். வரலாற்று ஆய்வு வழியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு அளவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசை வெளியிடும் முதல் கட்டுரை இதுவே எனலாம்.

 

திறவுச் சொற்கள்:

பழந்தமிழ்க்காசு, ஈழத்தமிழர்_வரலாறு, தமிழ்_தொன்மை, தொல்லியல்

 

தமிழீழத்தில் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக

 

"அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது.

 

தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். கொடுமணல் பொருந்தல் போன்ற அகழாய்வில் கிடைத்த அசோகனுக்கு முற்பட்ட பானையோடுகளிலும் தமிழி எழுத்துக்களுக்கு மட்டுமே ஊரிய ழ ள ற ன போன்ற நான்கு எழுத்துக்கள் இல்லை. அதனால் அசோகனுக்கு முன்னர் தமிழகத்தில் கிடைத்த எழுத்துக்கள் தமிழுக்கான எழுத்துக்களா பாகதங்களுக்கான எழுத்துக்களா என்று ஆய்வாளர்கள் இடையே வாதங்கள் நடந்த வண்ணமே உள்ளன.

 

ஆனால் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசில் சேந்தன் மாறன் என்பதில் னகரமும் றகரமும் சேர்ந்தே உள்ளன. ஈழத்தில் விஜயன் வந்தேறியதாக கூறப்படும் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாகும். ஆனால் ஜயந்தன் அரசன் விஜயனுக்கு முன்னரே ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படுகிறான். அதனால் தமிழ் எழுத்துக்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே ஈழத்தில் வழக்கில் இருந்ததாக இக்காசு உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். ஈழத்தின் பண்டைய காசுகளை சேகரிக்கும் ஆர்வலர்களில் ஒருவரான சிரிமுனசிங்கே இக்காசை தன் வலைபூவில் வெளியிட்டுள்ளதோடு அல்லாமல் அக்காசை ஈழத்தின் வரலாற்று நூல்களிலும்1 பதிவு செய்துள்ளார்.

 

ஆனால் அக்காசில் உள்ள எழுத்துக்களை 'ராணா சிநதி நாமா' (Rana Cinathi Nama)என தவறாக படித்துள்ளார். அதில் ‘தி’ எழுத்துகான வலப்பக்க கோடும் அதன் மேல் வரும் நெடுங்கோடும் இல்லை. அதனால் இது தகரமாக இருக்க வேண்டும். ந என்ற எழுத்தும் நா என்ற எழுத்தும் அக்காசில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கூர்ந்து கவனித்தால் அதில் அந்த இரண்டு எழுத்துக்களும் ‘ன்’ என்ற னகர மெய் எழுத்தே என்பதை உறுதிப்படுத்த முடியும்.

 

சிரிமுனசிங்கேவின் படிப்பு முறைப்படி அவரது வலைபூவில் உள்ள காசு

 

பட உதவி: https://sirimunasiha.wordpress.com/about/inscribed-coin-like-pieces-of-sri-lanka/

 

சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களின் பொறிப்பு: (என் படிப்பு முறைப்படி)

 

நான் இக்காசில் சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களை எப்படி பிரித்துப்படித்துள்ளேன் என்பதை கீழே வரைபடத்தில் காட்டியிருக்கிறேன். சேந்தன் மாறன் பெயரில் வரும் அன் விகுதியில் ‘ன்’ என்ற கடை மெய்யெழுத்தில் கீழ் பாதி உடைந்துள்ளது. ஆனால் சேந்த'ன்' மாற'ன்' பெயரில் வரும் இரண்டு ன் மெய்யெழுத்துக்களும் வலப்பக்கம் மேலே கொக்கி போல் வளைந்துள்ளதால் இவை தமிழ் ‘ன்’ மெய்யெழுத்தே.


இக்காசில் சகரத்தை முதல் எழுத்தாக நான் கொள்கிறேன். றகரம் வரும் இடம் நன்கு சிதைந்துள்ளது. ஆக காசில் எழுதப்படுள்ள எழுத்துக்கள் சேந்தன் மாறன் என்பது தானே ஒழிய சிரிமுனசிங்கே சொல்வது போல் 'ராணா சிநதி நாமா' அல்ல என்ற முடிவுக்கு வரலாம். அக்காசில் ஈழத்தில் கிடைத்துள்ள மற்ற மீன்பொறிக்கப்பட்ட சங்ககால பாண்டியர் காசு போலவே இக்காசின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் பொறிக்கப்பட்டுள்ளது இது பாண்டியர் காசு என்பதை மிகத்தெளிவாகவே காட்டுகிறது. பின்பக்கத்திலும் சேந்தன் மாறன் என்ற பெயரின் முதல் எழுத்தான 'சே' என்ற எழுத்து சங்ககால தமிழக பாண்டியரின் கோட்டு உருவ மீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் காசுகளிலும் பின்புறத்தில் ‘சு’ என்ற பெயரின் முதல் எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும் பாண்டியர் வழக்கை இங்கு ஒப்பு நோக்குக.

 

சேந்தன்மாறன் காசின் பின்புறம் ‘சே’ எழுத்து என் படிப்பு முறைப்படி

 


ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் கிடைத்த கோட்டுருவ மீன் பொறிக்கப்பட்ட பாண்டியர் காசுகள்:

 

நாணவியல் ஆய்வாளரான இரா.கிருஷ்ணமூர்த்தியால் கண்டறியப்பட்ட பெருவழுதி என்ற பெயர் பொறித்த காசுகளில் ஈழத்தில் கிடைத்த மீன் பொறிக்கப்பட்ட பெருவழுதி காசும் அடக்கம்.2 இதே போல மேலும் இரண்டு பெருவழுதி பெயர் பொறித்த காசுகள் மதுரையிலும் கிடைத்துள்ளன. மூன்று பெருவழுதி காசுகளிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் பொறிக்கப்பட்ட கோட்டு வடிவ மீன் சின்னம் ஒரே பாணியில் தான் உள்ளன. அதனால் சேந்தன் மாறன் ஈழத்தின் பாண்டிய அரசனே என்பது உறுதியாகிறது.


பட உதவி: தினமலர்

 

 

தமிழ்நாட்டில் கிடைத்த சங்ககால சேந்தன் காசு:

 

குடவாயில் பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள "சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு" என்ற ஆய்வுக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள சங்ககாலக்காசில்3 சேந்தன் என்ற பெயர் எவ்வாறு பொறிக்கட்டுள்ளதோ அதே எழுத்துமுறையில் தான் ஈழப்பாண்டியனான சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஈழத்திலும் சேந்தன் என்ற பெயர் ஒரே முறையில் எழுதப்பட்டிருப்பது சிரிமுனசிங்கே கண்டுபிடித்த காசில் எழுதப்பட்டுள்ளது தமிழே என்பதையும் அது பாகதம் அல்ல என்பதையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதை கீழுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.

பட உதவி: http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=441

 

மகாவம்சத்தில் சேந்தனின் போர்:

 

மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.

 

ஈழத்திற்கு தேவநாம்பிய தீசன் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் சென்றது என்பதால் காசிபன் என்ற பெயர் பெற்ற வேறொரு முனிவர் இப்போரை தடுத்திருக்கலாம். ஈழவரலாறு பௌத்தமயமாக்கப்பட்ட போது காசிப முனிவர் பௌத்தராக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

சுபகூடம் என மகாவம்சத்தில் குறிக்கப்படும் காசிபன் அமர்ந்த இம்மலை இன்றைய அனுராதபுரத்தின் மிகிந்தலையில் உள்ள மலையே என்பதால் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு போன்ற வடபகுதிகளை சேந்தன் மாறனும் அனுராதபுரம் சுபகூடம் போன்ற நடு ஈழப்பகுதிகளை சேந்தனின் தம்பியும் ஆண்டிருக்க வேண்டும். மகாவம்சத்தில் கூறப்படும் விஜயனும் கூட பாண்டிய நாட்டில் இருந்தே சில பெண்களை அழைத்து அவர்களில் இளவரசியை மணந்து பட்டத்தரசியாகவும் அவளது தோழிகளை தனது நண்பர்களுக்கு மணந்து கொடுத்ததாகவும் எழுதப்பட்டிருப்பது ஈழம் பாண்டியர் ஆளுகைக்கு கி.மு. ஆறாம் நூற்றாண்டி ற்கு முன்னரே உட்பட்டிருந்ததை காட்டுகிறது. ஈழத்தின் இரு சகோதர அரசர்களுக்கு நடந்த போர் பற்றிய மகாவம்ச வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

 

“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ” மகாவம்சம் 15:127-131

 

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இயக்கன் என்ற அமைச்சர் இருந்ததும் மதுரை புலவர்களில் மதுரை தமிழக்கூத்தனார் நாகன் தேவனார், மதுரை பூதன் இளநாகனார், மதுரை பூவண்ட நாகன் வேட்டனார், மதுரை பெருமருது இளநாகனார், மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகனார், மதுரை கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார், மதுரை கொல்லன் வெண்ணாகனார் போன்ற நாகர் என்ற பெயர் பெற்ற புலவர்கள் இருந்ததும் பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் ஈழ வரலாற்றோடு தொடர்புள்ள இயக்கரும் நாகரும் இருந்ததை காட்டுகின்றன.

 

மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:

 

மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை. அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம். மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.            வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து            மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து            மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்            இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்                         - மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61

 

ஈழத்தில் எழுதப்பட்ட மகாவம்சமும் தமிழகத்தில் எழுதப்பட்ட மணிமேகலையும் நாகநாட்டு அரசர்களுக்கு ஏற்பட இருந்த போரை ஒருவர் தடுத்தாட்கொண்டதாகவே கூறுகின்றன. மகாவம்சத்தின் தொடர்சியாக எழுதப்பட்ட மகாவம்ச திக்கங்களில் சேந்தனோடு போர் புரிய இருந்த அவனது தம்பியின் பெயர் சமித்தா எனக்குறிப்பிடுகிறது. ஆனால் சமித்தாவின் பெயர் மகாவம்சத்திலும் சேந்தனின் பெயர் மணிமேகலையிலும் குறிப்பிடப்படவில்லை. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் நடந்த போரில் பங்குபெற்ற யாழ்ப்பாண மண்டைத்தீவு அரசன் சேந்தன் மாறனும் ஈழத்தின் நடுப்பகுதி அரசனான சமித்தனும் ஈழ பௌத்த கதைகளில் கூறப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக மணிமேகலை காலத்தில் அது செய்தியாக வந்தாலும் போரில் பங்குபெற்ற நாகநாட்டு பாண்டியர்களின் பெயரை குறிப்பிடவில்லை. எனில் காலப்போக்கில் இருவரின் பெயரும் மறைந்தன என கூறலாம்.

 

பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:

 

கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான். அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் சேந்தன் என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில்ஜயந்தவர்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும். வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும். தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.            சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன்            செங்கோற்சேந்தன்                        - வேள்விக்குடிச்செப்பேடு வரி 30

 

           ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
           ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி                       - சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11

 

நாடகங்களில் பாண்டியர்களின் சீதன நிலமான ஈழம்:

பாண்டியர் தொடர்பான நாடகக்கதைகளில் பாண்டிய அரசி அல்லிராணி கதை ஈழத்தில் நடந்ததாக ஈழமக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அல்லிராணிக்கோட்டை என்ற ஒரு கோட்டை மன்னார்தீவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதை பாண்டியரசி அல்லி அரசாண்டதாகவே அம்மக்கள் கருதுகின்றனர். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம் போன்ற அல்லி தொடர்பான அம்மானை பாடல்களை எழுதிய புகழேந்திப்புலவரும் தென்காசி பாண்டியனான பராக்கிரம்மன் காலத்தில் வாழ்ந்தவர் தான். தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட பராக்கிரம்மனின் காலம் பதினைந்தாம்

 

நூற்றாண்டாகும். ஆக பாண்டியர்கள் மதுரையை இழந்து தென்காசி போன்ற சிறுநிலப்பகுதிகளில் ஆட்சிப்பரப்பை குறுக்கிக்கொண்டபோதும் கூட பாண்டியரின் ஈழம் தொடர்பான கதை பாண்டியர் மத்தியில் வழக்கில் இருந்ததை காணலாம். ஏனியேற்றம் அம்மானைப்பாடலில் துரியோதனனை அல்லி அவமானப்படுத்தி பாண்டியர்களிடம் அனுப்புவதாக கதை உள்ளது. எனில் அல்லி அரசாணி மாலை கதையில் வரும் பாண்டியர்கள் அல்லியின் தமையன் முறை அரசர்களாக இருந்திருக்க வேண்டும். அல்லிக்கு சீதனமாக ஈழம் கொடுக்கப்பட்டதாலேயே அல்லி பாண்டிய அரசர்களிடம் துரியோதனனை அனுப்புவதாக கதை உள்ளது.4

 

மெகஸ்தனீசு குறிப்புகளில் பாண்டிய இளவரசியின் சீதனம்:

 

சந்திரகுப்த மோரியனின் அரசவைக்கு விருந்தினராக வந்த மெகசுதனீசு மதுரையை எரக்கல்சு என்ற பாண்டிய அரசன் ஆண்டதாகவும் அவனின் மகளான பாண்டியாவுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பாண்டியா இளவரசிக்கு அந்த தானம் கொடுக்கப்பட்ட ஊர்களில் இருந்து திறை செலுத்த வேண்டும் என்றும் குறிப்புகளை கொடுத்துள்ளார்.5 இந்த குறிப்புகள் பாண்டிய இளவரசிகளுக்கு திருமணச்சீராக சில ஊர்கள் கொடுக்கப்பட்டதை காட்டுகின்றன.

 

சான்றுகளும் ஒப்பீடுகளும் ஒரு தொகுப்பு:

 

 

  • மாறன் என்ற பெயர் பாண்டியர்களுக்கே இருந்தமை.
  • ஈழத்தில் கிடைத்த பாண்டியன் பெருவழுதி காசிலும் சேந்தன் மாறன் காசிலும் கோட்டுருவ மீன் பின்புறத்தில் ஒரே வடிவில் பொறிக்கப்பட்டுள்ளமை
  • தமிழ்நாட்டில் கிடைத்த சேந்தன் காசிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற சொல் ஒரே எழுத்துமுறையில் குறிக்கப்பட்டுள்ளமை.
  • சேந்தன் மாறன் பெயரில் வரும் றகரமும் னகரமும் தமிழில் மட்டும் உள்ளமை. பாகதங்களில் இல்லாமை.
  • விஜயன் பாண்டிய நாட்டில் பெண்ணெடுத்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளமை
  • ஈழ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் விஜயன் காலம் முதல் இரண்டாம் பாண்டியப்பேரரசு காலம் வரை கொண்டு கொடுத்தல் இருந்தமை
  • பாண்டியர் அவையில் இயக்கரும் நாகரும் அமைச்சர்களாகவும் புலவர்களாகவும் இருந்தமை.
  • இயக்கருக்கும் நாகருக்கும் ஈழவரலாற்றில் ஆதிகாலம் தொட்டே தொடர்புள்ளமை
  • மணிமேகலையிலும் மகாவம்சத்திலும் இரு அரசர்களுக்கு போர் நடக்க இருந்ததை ஒருவர் தடுத்தாட்கொண்டமை
  • சேந்தன் ஆண்டதாக மகாவம்சம் கூறும் மண்டதீபா மண்டைத்தீவு என்ற பெயரில் இன்றைய யாழ்ப்பாணத்தீவுகளில் ஒன்றாக உள்ளமை.
  • நயினாத்தீவான மணிப்பல்லவ தீவின் அரசர்கள் நாகர்களாக இருந்தமை.
  • சேந்தனின் தம்பியான சமித்தா ஆண்ட சுபகூடம் இன்றும் அனுராதபுரத்தின் அருகில் உள்ள மிகிந்தலை மலையாக உள்ளமை
  • சேந்தன் என்ற பாண்டியரின் தமிழ்ப்பெயர் சங்கதத்தில் ஜயந்த என செப்பேடுகளில் வழங்கப்பட்டுள்ளமை
  • அல்லி என்ற பாண்டியரசி ஈழத்தை ஆண்டதாக கருதப்படும் மக்கள் வழக்காறு
  • மெகசுதனீசு பாண்டியரசர்கள் தங்கள் மகளின் சீதனமாக நிலங்களை கொடுத்ததற்கு தரும் குறிப்புகள்

சான்றுகள்

  • 1. Anslem de Silva, Kavan Ratnatunga, Frederick Medis, Indraneil Das, Sirimunasinghe, "Ancient lead coins, amulets and artifacts depicting turtles from Akurugoda, Southeastern Sri Lanka", in Page 20
  • 2. R. Krishnamurthy (2005), 'Sangam Age Pandya Coins with Legend Peruvaluthi in the National Museum, Colombo,' Studies in South Indian Coins, pp.58-63.
  • 3. Kudavayil Balasubramanian, சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 053 & 054 - June & December 1998, Page 145-154
  • 4. முனைவர் பி. புஷ்பம், புராணக் கதைப்பாடல்கள், 4.2.1 அல்லி அரசாணி மாலை
  • 5. MccrindleJ.W, Ancient India as described by Megasthenes and Arrian, FRAGM.LVIII, Page 158-159

சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் வழிபாட்டு மரபுகள்

 

  • Home
  •  

  • Articles
  • சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் வழிபாட்டு மரபுகள் [Cognitive Construction Grammar based Patriotic Discourse Analysis of Bharathiar’s Tamil Poems]


    கோ.சதீஸ்

    உதவிப்பேராசிரியர்

    முனனவர்பட்ட ஆய்வாளர்

    தமிழ்த்துறை,

    அரசு கலைக்கல்லூரி,

    சீர்காழி

     

    ஆய்வுச் சுருக்கம்

    சிலப்பதிகாரம் காலத்தால் பழமையான காப்பியமாகும் சங்க இலக்கியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் காலவேறுபாடுகளும் இலக்கிய அமைப்பு வேறுபாடுகள் இருந்தாலும் சங்ககால மக்கள் வாழ்வியலின் தொடர்ச்சியும், தொல்குடிகளின் பதிவுகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்கப்பாடல்களுடன் இந்தப் பனுவலை ஒப்பிட்டு பல சமூக நிறுவனங்களின் வளர்ச்சியினை அறிந்துகொள்ளலாம். மானிடவியலின் ஒரு உட்பிரிவாக இன்று மிக கவனமாக மேற்கொள்ளப்படும் துறையாக இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்னும் பயில்துறை வளர்ந்துவருகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை மானிடவியல் கோட்பாட்டு அடிப்படையில் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

     

    திறவுச்சொல்

    பண்பாட்டு மானிடவியல், தொல்குடிகள், சிலப்பதிகாரம், எயினர், ஆயர், சாலினி, வழிபாட்டு மரபு, கள் குடித்தல், குடும்பம், நம்பிக்கைகள் இலக்கியப் பனுவல்கள் பற்றி, இலக்கியவியல் நிலையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், பிற துறைவழியே தமிழ் இலக்கியத்தைக் காணும் போக்குகள் வளர்ந்து வருகின்றன. இச்சூழலில், தொடர்புள்ள துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது தமிழ்ச்சமூகத்தின் ஆய்வுத்தரத்தை மேம்படுத்த உதவும். மானிடவியல் மொழியியல் சமூகவியல், இலக்கியவியல், வரலாற்றியல், கல்வெட்டியல் இவை ஒன்றொடு ஒன்று தொடர்புடைய துறைகள். ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ள துறைகளாக மானிடவியல், மொழியியல், இலக்கியவியல் இவற்றைக் குறிப்பிடலாம் (பக்தவத்சல பாரதி 2008:5 முன்னுரை இரா.கோதண்டராமன்). மானிடவியலின் ஒரு உட்பிரிவாக இன்று மிக கவனமாக மேற்கொள்ளப்படும் துறையாக இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்னும் பயில்துறை வளர்ந்துவருகிறது அதன் அடிப்படையில் செவ்வியல் இலக்கியமாகவும் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகவும் திகழும் சிலப்பதிகாரத்தை மானிடவியல் கோட்பாட்டு அடிப்படையில் சிலப்பதிகாரதில் காணப்படும் மூன்று வகையான சமூகப் பொருளாதார வாழ்க்கை முறையினை இனவரைவியல் நோக்கில் காணவேண்டிய தேவையுள்ளது.

     

    1.சிலப்பதிகாரம் எனும் பனுவல்

    தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ச் சமூக வழக்காறுகளிலும் இடம்பெற்ற கதைப்பொருள் சிலப்பதிகாரம். இது தமிழ்ச் சமூகத்தின் அடையாளத் தொன்மமாகத் திகழ்கிறது. சங்க இலக்கியங்கள் காதல், போர் ஆகிய அகத்திணை, புறத்திணை பொருள்களை மையமாகக் கொண்டு பாடப்பட்டவை. சிலப்பதிகாரம் அதற்குச் சில நூறாண்டுகளுக்குப் பின் தோன்றியது. இதனில் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாழ்க்கைக் கூறுகள், பல உள்ளன. நகர வாழ்க்கை, கலைப்பயிற்சி, சமயத்தத்துவச் சொற்போர், ஊழ், பொய்புரட்டு ஆகிய மனித வாழ்க்கை நடத்தைகள் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

     

    தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிற பண்பாட்டு மரபிற்கு திருமண வாழ்க்கைமுறை மாறியுள்ளது. கோவலன், கண்ணகி இருவரும் பெற்றோர் மணவணி காண மகிழ்ந்து மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத் தீவலம் செய்து மணம்புரிந்துள்ளனர். வடக்கத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகள் தமிழரின் வாழ்க்கைமுறையோடு கலந்துள்ளன. இவ்வகையான பண்பாட்டு மாற்றம் சங்க காலத்திலும் அதற்குப் பின்னும் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, மேட்டுக்குடிச் சமூகங்களிடம் இப்பண்பாடுகள் மிகுதியாக ஈர்க்கப்பட்டிருந்தன. இயற்கைதெய்வங்கள் மறைந்து வச்சிரப்படை, ஐராவதம், பலதேவன், சாதவாகனன், அருகன், சந்திரன், சூரியன் போன்றவைகளும், சிவன், முருகன், திருமால் போன்ற சைவ, வைணவ சமய மரபுகளும் சமணம் பௌத்தம், போன்ற சமயங்களும், மணிமேகலா தெய்வம், ஏழு கன்னிகள், பத்தினி தெய்வம், போன்ற வழிபாட்டு மரபுகளும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. எயினர், ஆயர், குன்றக்குறவர் போன்ற தொல்குடிச் சமுகங்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம் சமயநம்பிக்கை போன்றவைகளைப் பதிவுசெய்துள்ள ஆவணமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

     

    2.மானிடவியல்

    மானிடவியல் என்பது மனிதஇனத்தினைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வு எனலாம். மனிதனைப் பற்றி முழுமையாக அறியவேண்டுமாயின் நான்கு பரிமாணங்களில் அறிய வேண்டும் என மானிடவியல் அறிஞர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர். அவை, 1.கடந்த கால மனிதனை அறிவது, 2. நிகழ்கால மனிதனையும் வருங்கால மனிதனையும் அறிவது, 3.மனிதனை உயிரியல்சார் (biological) நிலையில் அறிவது, 4.மனிதனைப் பண்பாட்டு (cultural) நிலையில் அறிவது.

     

    மனிதனின் வாழ்க்கைமுறை, பண்பாட்டு எச்சங்கள், பொருள்சார் பண்பாடு, பழக்க வழக்கம், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டுமுறை ஆகிய அனைத்துப் பதிவுகளும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மானிடவியல் பலவகையான நிலைகளில் பரந்துவிரிந்த துறையாகத் திகழ்ந்தாலும் அடிப்படையில் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) உலகம் முழுவதும் விரிவாக வளர்ந்து பரந்த ஆய்வுத்தளத்தை கொண்ட இன்றியமையாத துறையாகும்.

     

    3.பண்பாட்டு மானிடவியன் நோக்கில் சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் முழுமையும் பண்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு நூல் ஆதலால் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் அணுகலாம். பண்பாட்டை ஆய்வுப் பரப்பாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து வரும் பண்பாட்டு மானிடவியல் இதன் உட்பிரிவாக இனவரைவியல் (ethnography), இனக்குழு ஒப்பாய்வியல் (ethnology) ஆகியவை விளங்குகின்றன. தொடக்க காலம் முதல் இன்றுவரை இனக்குழுக்கள் அல்லது பழங்குடிகளிடம் நேரடியாகக் களஆய்வு செய்து அந்தத் தரவுகளை முறைப்படுத்தி, தனிவரைவாக அல்லது ஆய்வு அறிக்கையாகவோ தனிநூலாகவோ எழுதப்பட்டன. அதில் பின்பற்றப்படும் ஆய்வு முறைகளைக் கொண்டு இலக்கியத் தரவின் வழி பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆய்வுமுறை வளர்ந்துள்ளது. மனிதனுடைய வரலாற்றைத் தொடக்க காலம் முதல் இன்று வரை மனிதனின் செயல்முறைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகிறது. இதை மனிதனின் உணவு ஈட்டும் திறனில் ஏற்பட்ட மாறுதல்களைக் கொண்டு அறியமுடியும் ( டுர்காட் 1750 நூல் The Historical Progess of the Human mind) என டுர்காட் குறிப்பிடுகிறார்.

     

     

    சிலப்பதிகாரத்தில் இந்த மூன்று விதமான வாழ்க்கைமுறையும் காணப்படுகின்றன. வேட்டை வாழ்க்கையினை எயினர், குன்றக்குறவர் ஆகிய குடியினைச் சுட்டலாம், ஆயர் வாழ்க்கை ஆய்ச்சியர் குரவை என்னும் பகுதியிலும் அதற்கு முன் பின் பகுதிகளிலும் அவர்களின் வாழ்க்கை முறை படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. வேளாண் வாழ்க்கை என்பது நாகரீக வாழ்க்கை ஆகும். கோவலன், கண்ணகி, அரச குடும்பங்களின் வாழ்க்கை ஆகியவை வேளாண் வாழ்க்கைக்கு அடுத்தநிலைகளான வணிகக்குடி வாழ்வியலுக்குச் சான்றாகச் சுட்டலாம்.

    4.வழிபாட்டுமுறைகள்

     

    சிலப்பதிகாரத்தில் பலவகையான வழிபாட்டுமுறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வைதீக மரபு, சமண மரபு, தொல்குடிமரபான எயினர், ஆயர் ஆகியோர்களின் வழிபாட்டுமரபுகள் காணப்படுகின்றன.

     

    4.1.எயினர்

     

    எயினர் வழிபாட்டு மரபு வேட்டுவரியில் இடம்பெற்றுள்ளது. எயினர்குடி சிலப்பதிகாரத்தில் காணப்படும் தொன்மையான குடிகளுள் ஒன்று. இது வழிப்பறி செய்தும் வேட்டைத் தொழிலை மேற்கொண்டும் வாழும் வாழ்க்கையை உடையவர்கள் என்னும் கருத்து நிலவுகிறது. தொல்குடியான எயினர் குடியில் உள்ள இளம்பெண்ணை கொற்றவை போல் அலங்கரித்து வழிபட்டுள்ளனர். சிறிய வெள்ளை நிறப் பாம்பின் குட்டி போல் கயிற்றைத் தன் நீளமான கூந்தலில் சுற்றியும், பன்றியின் பல்லினை நெற்றியில் பிறைபோல சூட்டியும், வலிய புலியின் பல்லை எடுத்து தாலிபோலவும், புள்ளிகளும் வரிகளும் கலந்துள்ள புலியின் தோலை மேகலையாகவும், கையில் வில்லும், முறுக்கிய கொம்புகளையுடைய மானின் மேல் அப்பெண்ணை ஏற்றிக் கொற்றவையாக அலங்கரித்துள்ளனர். கையில் மதனப்பாவை, கிளி, சிறுமயிரினையுடைய அழகிய சிறகை உடைய காட்டுக்கோழி, நீலநிறம்பொருந்திய மயில், பந்து, கழங்கு ஆகியவை அவள் கையில் கொடுத்து வணங்குகின்றனர். வண்ணக்குழம்பு, பொற்பொடியும், குளிர்ந்த மணமுள்ள சந்தனம், புழுக்கப்பட எள்ளுண்டை, நிணத்துடன்கூடிய சோறு, மலர்கள், புகை, விரும்பிய மணப்பொருள்களும் ஆகிய இவற்றை பணிசெய்யும் மறப்பெண்கள் தாங்கி நிற்பர் (வேட்டுவவரி:22-44).

     

    வழிப்பறி செய்யும் போது பறை கொட்டியுள்ளனர். சூறை கொள்ளும்போது சின்னம் என்னும் இசைக் கருவியை ஊதியுள்ளனர். இந்த இசைக் கருவிகளைக் கொற்றவைக்கு வழிபாடு செய்யும்போதும் இதனுடன் கொம்பு, குழல், மணி ஆகிய இசைக் கருவிகளை இசைத்து வணங்கியுள்ளனர். எயினர் கூட்டுவழிபாட்டு மரபும் கூட்டமாக உண்ணும் பழக்கம் உடையவர்கள்.

     

    4.1.1. சாமியாடல்

     

    மதுரைக் காண்டம் வேட்டுவ வரியில் ஒரு பெண், தெய்வம் உற்று உரைக்கும் காட்சி உள்ளது. தெய்வம் உறுதல் அல்லது சாமியாடுதல் ஷாமானிசத்தின் கூறாகத் தெரிகிறது. “ஷமானிசம் என்பது கடைசிக் கற்காலத்தில் (upper palaeolithic) தோன்றியது. இதன் காலம் ஏறக்குறைய 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்குரியதாகும். வேட்டைச் சமூகங்களில் ஷாமானிசம் ஒரு தனித்த நிகழ்வாக வளர்ந்துவிட்டது” (பக்தவத்சலபாரதி 2010:37) இன்றும் தென்னாப்பிரிக்க பழங்குடிகளிடம் ஆண்கள் தெய்வம் உற்று ஆடும் வழக்கம் உள்ளது. தெய்வ பரவசநிலையில் அடைதல். இது சங்கப் பாடல்களில் வரும் வேலன் வெறியாட்டுடன் தொடர்புபடுத்திக் காணலாம். தந்தை வழிச் சமூகத்தில் ஆணும் தாய்வழிச் சமூகத்தில் பெண்ணும் தெய்வம் உற்று ஆடுகின்றனர். இன்றும் சில தாய் தெய்வக் கோயில்களில் ஆடும் ஆண் பெண்வேடம் அணிந்து ஆடுவது ஒப்பு நோக்கத்தக்கது.

     

                முழங்குவாய்ச் சாலினி*             தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்             கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப             இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்             நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடி (வேட்டுவ வரி : 7-11)

     

    (* சாலினி என்பது சாமிஆடும் பெண்ணைக்குறிக்கும் சொல் இது சங்க இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மதுரைக்காஞ்சியில் 610.)

     

    சாமியாடும் போது வாயிலிருந்து ஒலி ஏழுப்புவது இன்றும் காணப்படுகிறது. தொல்குடி எயினரிடமும் இவ்வழக்கம் இருந்துள்ளது. சாலினி முழங்கும் வாயை உடையவள், தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்தி, கை எடுத்து வணங்கி, நடுவூர் மன்றத்தில் அடி பெயர்ந்து ஆடினாள் என்று பாடலில் வருகிறது. சாமியாடுதலுடன் வாக்கு சொல்லுதலும் காணப்படுகிறது. இதுவும் தொன்மையான வழக்கமாக இருந்தாலும் சங்கப்பாடல்களில் தெய்வமேறுவது மட்டும் இடம்பெற்றுள்ளது. வாக்குரைத்தல் எதிர்காலத்தைக் குறித்துச் சொல்லுதல். கண்ணகியைப் பார்த்து சாலினி அவளின் எதிர்காலம் பற்றிச் சொல்லப்படுகிறது. “தெய்வமேறி வாக்குரைத்தலின்போது சாலினி தொடங்கி, இன்றுள்ள சாமியாடிகள் வரை ஒரு வகையான மருள்நிலைக்குச் செல்கின்றனர். இந்த மருள்நிலையானது ஒருவகை நனவுநிலைப்பிறழ்வு (altered state of consciousness) எனலாம். இந்த நனவுநிலைப் பிறழ்வானது பெண்களுக்குச் சற்று வேகமாக வருவது இயல்பு என்பது இனவரைவியல் தரவுகள் மூலம் பெறப்படும் ஒப்பியல் முடிவாகும் (வின்கெல்மன் 1977:395) வேட்டுவ வரி காட்டும் தமிழ் மரபும் மனித குலத்தின் புராதன முறைகளுக்கு இணையானதாக இருப்பதை இங்கு ஒப்பிட்டுக் காணமுடிகிறது”. (பக்தவத்சல பாரதி :2010:39)

    4.2.ஆயர்

    ஆயர்கள் குரவை என்னும் கூத்தினை நிகழ்த்துகின்றனர். குறிப்பாகத் தீய நிமித்தம்2 ஏற்படும்போது கண்ணன் பலராமன் நம்பினை போன்ற தொன்மத் தெய்வத்தை போற்றி வணங்கிக் கூட்டமாகப் பாடி ஆடும் வகையைச் சார்ந்தது. கறவை கன்றுகளின் துயர்நீங்க, ஆயர்ப்படியில் மாயவனிடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடங்களில் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுவோம் எனக் கூட்டமாக இக்குரவை நிகழ்த்தப்படுகிறது. கண்ணனின் தொன்மங்கள் மிகுதியான அளவில் சொல்லப்பட்டுள்ளன. “ஆவின் கன்றின் மேல் ஏறிக் கனியை உதிர்த்தவன், பாம்பை கயிறாகக் கடல்கடைந்த மாயவன், குருந்த மரத்தை ஒடித்த மாயவன், பெண்களின் ஆடைகளை ஒளித்துக்கொண்டவன், கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கி குடையாகப் பிடித்தவன். மூன்று உலகத்தையும் இரண்டு அடியில் அளந்தவன், தம்பியுடன் காட்டிற்குச் சென்றவன், தொல் இலங்கையை அழித்தவன், பஞ்சவர்களுக்கு தூது நடந்தவன் எனக் கண்ணன் தொன்மம் மிகுதியா ஆயர் குடியில் காணப்படுகின்றன. [எயினர்களின் வழிபாட்டு முறையில் இதுபோன்ற தொன்மத்தோடு தொடர்புடைய தெய்வங்கள் காணப்படவில்லை. கொற்றவையை வணங்கும்போது சில தொன்மம் பெண் தெய்வதோடு பொருத்திக் காட்டப்பாடுள்ளது. இந்நிகழ்ச்சியை இளங்கோவடிகளின் உள்ளத்தின் வெளிப்பாடாகவே கொள்ளவேண்டும். கதை போக்கினை நகர்த்திச் செல்லும் போது படைப்பாளனின் மனவுணர்வும் வெளிப்படுவது இயல்பு. கதையின் முடிவு இளங்கோவடிகளுக்கு நன்கு தெரியுமாதலால் பின் நிகழப்போகும் சில நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லிச்செல்கிறார். அந்த அடிப்படையில் இளங்கோவடிகளின் கல்விப் பயிற்சியின் விளைவாக சில இடங்களில் வைதீக்கத்தையும் சில இடங்களில் சமணத்தையும் அவரை அறியாமல் காப்பியத்திற்கு இடம்பெறச் செய்திருக்கிறார்.]

     

    ஆயர்களின் வாழ்க்கை முறையின் காணும்போது ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும்/ கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடு இல்லை [அடைக்கலக் காதை:120-121] பசுக்களைப் பிணிமுதலியவறின்னின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப்பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறுதும் தீமை இல்லை என்பது அவர்களின் பொருளாதார நிலையைக் காட்டுகிறது. ஆய்ச்சியர் குரவையில் கண்ணன் பற்றிய தொன்மமும் கண்ணனின் வழிபாட்டு மரபும் காணப்பட்டாலும் இயக்கி என்னும் பெண் தெய்வத்தை மாதிரி என்னும் ஆய முதுமகள் பால் கொடுத்து வழிபட்டுள்ளார். அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய / புறஞ்சிறை மூதூர்ப் பூக்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்து [அடைக்கலக்காதை:115-117]. இயக்கி ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்குவதாகும். ஆரியங்கனை எனவும் கூறுவர், ஆரியங்கனை கணவர் இருக்கும்பொழுதே துறவு பூண்ட தவப்பெண் என்னும் குறிப்பு உரையில் காணப்படுகிறது. யக்ஷி என்னும் சமணத் தெய்வம் எனவும் கருதப்படுகிறது.

     

    4.2.1. ஆயர்களின் பொருள்சார் பண்பாடு

    கோவலர்கள் வைக்கோலால் தீயை மூட்டக் கற்றிருந்தனர். உணவு சமைக்க அதற்கெனத் தனியான கலன்கள் வைத்திருந்தனர். பல வகையான காய்கறிகளைச் சமைக்க அறிந்திருந்தனர். பனை மரத்தின் ஓலையில் பாய்போல் முடைந்து அதனைக் கீழே அமர்வதற்கும் (தாலப் புல்லின் வால்வெண் தோட்டு கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசு. -கொலை:35-37 ) உணவு உண்பதற்கு முன் கை, கால்களைக் கழுவியுள்ளனர். கை, கால்களைக் கழுவ மண்ணால் செய்யப்பட்ட தட்டைப் பயன்படுத்தியுள்ளனர். (கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி கொலை-39-40). கொழுந்தாக உள்ள வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். (குமரிவாழை குருத்தகம் விரித்து), உணவு உண்ட பின் வெற்றிலைப் பாக்கு பயன்படுத்தியுள்ளனர் (அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்து) இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் வீடுகள் அமைத்து வாழ்க்கை நடத்தியுள்ளனர். தொகை நூல்களில் இல்லம் என்னும் பொருளில் நான்கு இடத்தில் மட்டும் வந்துள்ளது. “பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர்க் காவல் சிற்றில் கடிமனைப் படுத்து” (கொலை:5-6) செம்மண்ணால் பூசப்பட்ட காவலை உடைய புதிய மனை என்கிறது அடியார்க்கு நல்லார் உரை. இதுபோல் அரச பரத்தையும் வெற்றிலைப் பாக்கு பயன்படுத்தியுள்ளனர். அதற்காகப் பொன்னால் செய்த பெட்டியும், அதனுடன் அரசன் கொடுத்த ஒரு குறுவாளும் வைத்திருந்தனர். (தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளும் தம் கோமகன் கொடுப்ப ஊர்காண்:128-129)

     

    4.2.2. ஆயர் நம்பிக்கைகள்

    ஆயர் வாழ்க்கை நம்பிக்கையில் அவர்கள் சார்ந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன. குடத்தில் பால் உறையாததும், காளை மாடுகள் கண்களில் கண்ணீர் வருவதும், வெண்மை உருகாத நிலையும், ஆட்டுக் குட்டிகள் துள்ளி ஓடாமல் துவண்டு கிடப்பதும், பசு மெய் நடுங்கி நின்று அரற்றுவதும், பசுக்களின் கழுத்தில் கட்டும் மணி அறுந்து நிலத்தில் வீழ்வதும் தீய சகுணமாக நம்பினர். அதுபோல் ஆன் ஏறு வந்து முட்டுவதும் தீய சகுணமாகும் கோவலன் மதுரை நோக்கிச் செல்லும் போது ஒரு ஆன் ஏறு வந்து முட்டுகிறது. இது தீய நிமித்தம் என கோவலம் அறியவில்லை என இளங்கோவடிகள் சுட்டிச்செல்கிறார்.

     

    4.3.வேளாண் வாழ்க்கை

     

    வேளாண்வாழ்க்கை நாகரீக பெற்ற வாழ்க்கை என்னும் பொருளில் கையாளப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் முதன்மைப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி, கோப்பெரும்தேவி, பாண்டியன், சேரன் செங்குட்டுவன், போன்றவர்களும் அவர்களுக்குத் துணையாய் வாழும் சில குடிகளும் வேளாண் வாழ்க்கைக்குச் சான்றாக்க்காட்டலாம். இவர்களின் வாழ்க்கைமுறை தனித்தனியே எடுத்து ஆராயப்படவேண்டும். கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழும் காலத்தில் கண்ணகியின் தோழி தேவந்தி அவள் வாழ்ந்த கால நம்பிக்கை ஒன்றை சொல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. பூம்புகார்க்கு அருகில் உள்ள காமவேள் கோட்டத்தில் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் குளம் உள்ளதாகவும் அதில் மூழ்கி எழும்போதும் பாவங்கள் இருப்பின் நீங்கி மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்வாய் என்னும் நம்பிக்கை சுட்டப்படுகிறது. வேளாண் வாழ்க்கையில் பெண்கள் மிகுந்த அடிமையாக இருந்துள்ளனர். குறிப்பாகக் கண்ணகி கோவலனுக்குக் கூறும் சொற்களை இங்குச் சுட்டலாம். கோவலனின் கருத்தை கண்ணகி மனதால்கூட மாற்ற நினைக்காத உள்ளம் உடையவள் எனக் காட்டப்பட்டுள்ளது. கோப்பெரும்தேவி என்னும் பாண்டியனின் பட்டத்தரசி உடன் இருக்கும்போதே அவையில் பிறபெண்களின் நடனநிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

     

    5.குடும்பத்தின் வகைகள்

    குடும்பம் என்னும் அமைப்பு மிக பழமையானதாகும். சங்க இலக்கியங்களில் தமிழர்களின் குடும்ப அமைப்புக்கள் பதிவாகியுள்ளன. உலகம் முழுவதும் இரு வகைக் குடும்பங்கள் உள்ளன. அவை 1.மணவழிக் குடும்பம் conjugal family இருவரும் மணவாழ்வு மேற்கொள்ளும் போது தொடங்குவது. இதன்விரிவு தனிக்குடும்பம் (nuclear family) 2.விரிந்த குடும்பம் (extended family) 2.1.நேர்வழி விரிந்த குடும்பம் (lineally extended family) குடிவழி நேராக வரும் பாட்டன் பாட்டி பெற்றோர், மக்கள் பேரன், பேத்தி ஆகியோர் இடம்பெறுவர். 2.2.கிளைவழி விரிந்த குடும்பம் (Laterally extended family) சிற்றப்பா, சிற்றான்னை,பெரியப்பா, அத்தை, போன்ற கிளைவழி.

     

    குடும்பம் என்னும் சமூக அங்கீகாரத்தைப் பெற சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணமுறைப்படி மணம்செய்து கொள்ளவேண்டும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவி என்ற உறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுதான் அவர்கள் ஒரு குடும்பமாக அமைகிறார்கள். கணவன் மனைவி - ஒரு கூறையில் உணவு உண்டு வாழ்ந்தாலும் பிரிந்து தனித்தனியே உண்டு வாழ்ந்தாலும் கணவன் மனைவி என்னும் பிணைப்பால் அது ஒரு குடும்பம் ஆகும். ஒரே விட்டில் ஒரு ஆண், ஒரு பெண் காதலர்களாக அல்ல வேறு வகையான உறவு பெற்று உண்டு வாந்தாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத வரை குடும்ப அமைப்பை ஏற்படுத்த முடியாது. (பக்தவத்சல பாரதி 2003: 351-352). குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக் கருத்தாக்கதின் மூலம் அளிக்கப்படுகிறது என மானிடவியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணத்தில் சமூகத்தின் அகவயமான அங்கீகாரம் வழங்கப்பட்டதின் அடையாளமாக அவர்களின் திருமண நிகழ்ச்சியை இளங்கோவடிகள் விளக்கியுள்ளார்.

     

    கோவலன் மற்றும் கண்ணகியின் பெற்றோர் ஒரு நல்ல நாளில் மணவணி காண விரும்பினர். யானையின் பிடரியில் அழகான பெண்களை அமரச்செய்து புகார் நகரத்திற்கு மணச்செய்தியை அறிவித்தனர். மண நிகழ்ச்சியை அறிவித்தல் முறையான சமுக அங்கீகாரம் பெறும் திருமணத்தின் முதல் பணியாகும் அது இன்றளவும் வழக்கில் உள்ளது. (மங்கல வாழ்த்துப் பாடல் )

     

    கோவலனைத் திருமணம் முடிந்த சில நாட்களில் தனி இல்லத்தில் கண்ணகியுடன் தங்கவைத்துள்ளனர். பெற்றோடு இல்லாமல் தனியாக வாழ்க்கைத் தொடங்குகிறது. சங்க மரபு போல கண்ணகியுடன் ஒரு தோழியுடன் உள்ளாள். மாதவியின் குடும்ப அமைப்புத் தாய்வழிக்கிளை விரிந்த குடும்பமாகும். சித்திராபதி, மாதவி, தோழி சுந்தமதி, மகள் மணிமேகலை கூட்டுக்குடும்ப வகையைச் சார்ந்தது. ஆயர் குடும்ப அமைப்பிலும் மாதிரி ஐயை என இரு மகளீர் மட்டுமே காணப்படுகின்றனர் இவர்களின் கணவர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

     

    ஆயர் வாழ்வில் காட்சி அளித்த சிறிய இல்லம், வேளாண் வாழ்க்கையில் எழுநிலை மாடங்களாகக் காணப்படுகின்றன. ஐவகை மன்றம், கட்டடக் கலையில் மிகுந்த வளர்ந்த சமூக அமைப்பாகப் பும்பூகார் பகுதியின் வேளாண வாழ்க்கை அமைந்துள்ளது.

     

    திருமணம் ஒரே இரத்த உறவில் நடைபெற வில்லை இது உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுப்பண்பாக உள்ளது. அது சிலப்பதிகாரத்தில் சிறப்பாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுப் புறப்பட்டு கவுந்தியடிகள் தங்கியுள்ள ஒரு பொழிலை அடைகின்றனர். அப்போது அங்கு வந்த புதிய பரத்தைத் தன்மையுடையாள் ஒருத்தியும், பயனில சொல்லும் விடனொருவனும் “காமனும் தேவியும் போல் காட்சி அளிக்கும் இவர்கள் யார்” எனக் கவுந்தியடிகளிடம் வினவுகின்றனர். இவர்கள் என்னுடைய மக்கள், காமனும் தேவியும் அல்ல, மானிட யாக்கை காண் என்கிறார்கள். நூல்களையும் கற்று அதன்பயனையும் அறிந்தவரே ஒரு வயிற்றி உடன்பிறந்தோர் கொழுநனும் மனைவியுமாய்க் கூடிவாழக் கடவதென்று நீர் கற்ற நூல்களில் சொல்லிக்கிடப்பதும் உண்டோ, உண்டாகில் சொல்லும் என்றார் என்க (அடியார்க்கு நல்லார் உரை 2013: 284) என அடியார்க்கு நல்லார் உரையிலும் காணப்படுகிறது. இதிலிருந்து மிகத் தொன்மைக்காலத்திலே (Parallel cousin) ஒரே நேர்வழி ரத்த உறவில் திருமணம் நடைபெறவில்லை என்பதை அறியமுடிகிறது. கிளை வழி ரத்த உறவிலே (Cross cousin) திருமணங்கள் நடந்துள்ளன.

     

    6.உயிர்ப்பலி

    மனிதனை மனிதன் கொலைச் செய்தல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே தொடங்கிவிட்டது. இனக்குழு நிலையில் பொருளுக்காகப் பிறரின் தலையை வேட்டையாடுதலும் தொல்குடிகளிடம் காணப்படும் மிகத் தொன்மையான ஒரு பழக்கமாகும்.            இட்டுத்தலை எண்ணும் எயினர் அல்லது             சுட்டுத் தலை போகாத் தொல்குடி” (வேட்டுவ வரி:20-21)

     

    சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் எயினர்கள் பகைவர் தலையை அறுத்துப் பலி பீடத்தில் இடும் பழக்கம் கொண்டவர்கள். (பக்தவச்சல பாரதி: 2010:33). பிறர் தலையை அறுத்துக் கொள்வது நிலவுடைமை சமூதாயத்தின் முற்பகுதியில் அல்லது வீரயுகக் காலத்தில் மன்னர்களுக்காக மறவர்கள் தன் தலையை வெட்டிக்கொள்ளும் (Self Scarification) போக்கு நிலவியுள்ளன.

     

               மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்             பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்                       முந்தச் சென்று முழுப்பலி பீடிகை (இந்திரவிழவூர் எடுத்த காதை 76-78)

     

    மருவூர்ப் பாக்கத்தில் உள்ள மறத்தினைக் கொண்ட வீரரும் பட்டினப்பாக்கத்திலுள்ள படைக்கலமுடைய வீரரும் முற்படச் சென்று பெரிய பலிபீடத்தில் வெவ்விய திறலையுடைய எம் அரசற்கு உறும் இடையூற்றை ஒழித்து வெற்றி தருக வெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தவர்.            “ஆர்அமர் அழுவத்துச்             சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை             வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென             நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு             உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து             மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி ” (இந்திர விழவூர் எடுத்த காதை:83-88) அரிய அமர்க்களப் பரப்பில் அச்சத்தைச் செய்து சுடுங்கொள்ளி போல் கடைசிவந்த பார்வையுடன் தனது பசுந்தலையை வேந்தன் வெற்றி கொள்க என்று நல்ல பலி பீடத்தில் நன்மை பொருந்த வைத்து. அப்பொழுதே உயிர்ப்பலி உண்ணும் இடியின் குரல்போலும் முழக்கத்தையுடை மயிர்சீவாத தோலால் போர்த்த வீரமுரசத்தால் உயிராகிய சிறந்த பலியை உண்பிக்க.             உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து             மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர (கால்கோட்காதை:195-196) உயிர்ப்பலி நடக்கும் போது மயிர்நீக்காத தோலால் முரசம் செய்து ஆதில் அதிர செய்துள்ளனர். தண்டனை முறைகளில் எழு செங்கல்லைத் தலையில் ஏற்றும் வழக்கம் இருந்துள்ளது. இது பரத்தையர்கள் கூத்தில் பிழைசெய்தால் அவர்களுக்கு இத்தண்டனை வழங்கியுள்ளனர். இது பற்றிய குறிப்பு மணிகேகலையிலும் பதிவாகியுள்ளது. சுடுமண் ஏறாவடு நீங்கு சிறப்பின் (ஊர்காண்:146) “மற்றவன் தன்னால் மணிமே கலைதனைப் பொற்றேர்க் கொண்டு போதேனாகில் சுடுமணேற்றி யாங்குஞ் சூழ் போகி வடுவொடு வாழ மடந்தையர் தம்மோடுஅனையேன்ஆகி யாங்கக் கூத்தியர், மனையகம் புகாஅ மரபினள்” என, மணிமேகலையில் சித்திராபதி வஞ்சினங் கூறுதலானும் அறிக (சிலம்பு :உரை; அடியார்க்கு நல்லார்.)

     

    6.உயிர்ப்பலி

     

    உண்வின் ஒரு பகுதியாக கள் இருந்துள்ளது. ஆண் பெண் என பாகுபாடு இல்லை. சங்கப் பாடல்களில் வரும் அரசர் புலவர் போர்வீரகள் என்னும் பகுப்பினைக் கடந்து அரச பரத்தை அல்லது காமக்கிழத்தியர் அரசனோடு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அழகிய இனிய தெளிவைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி (செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம்தீந் தேறல் மாந்தினர் மயங்கி - ஊர்காண்:132-133). வளைந்த வளையல் அணிந்த தோளின் கண்ணும் மார்பின் கண்ணும் படிந்து சேறாடுகின்ற கோலத்தோடு அழகுபெறத் தோன்றி மிகுந்த மயக்கம் தரும் கள்ளை உண்டு தொலைத்ததனால் உண்டான இசைவொடும் பழகிப் போதாத பாடலும். “வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்” -(நாடுகாண்:131) கள்நொடை யாட்டியர் (இந்திரவிழவூர் எடுத்த காதை:24) கள் விற்பர்வகள்.

     

    8.பண்பாட்டு மாற்றம்:

     

    சங்கப் பாடல்களில் மீன், உப்பைக் கொடுத்து ஈடாக நெல்லினை வாங்கியுள்ளனர். பூம்புகார் ஒரு வணிகப் பட்டினமாக இருப்பதால் சிலப்பதிகாரத்தில் கள், தயிர், மீன், வெள்ளை உப்பு, இறைச்சி ஆகியவை விலைக்கு விற்கப்பட்டுள்ளன. சங்கப் பாடலில் வரும் வேளாண் சமூகத்திற்கும் சிலப்பதிகாரத்தில் வரும் வேளாண் சமூகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. திங்கள் சகடம் (உரோகிணி) சேர்ந்திருக்கும் ஒரு நல்ல நாளில், விடியற்காலை, பறவைகளின் நிமித்தம் அறிந்து அதன்பின் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. வாகை இலை, அருகன்புல், ஆகியவை கட்டிய ஒரு வெண்ணூல் சூட்டும் வழக்கம் இருந்துள்ளது. சிலப்பதிகாரக் காலத்தில் திங்கள் உரோகிணி சேர்ந்திருக்கும் நாள் பார்த்துள்ளனர். இந்த இரண்டு காலத்திலும் வானியலோடு தொடர்புடைய நம்பிக்கை வெளிப்படுவது கிரேக்கம், சீனம், ஆரியம் ஆகிய இவற்றில் எதன் தொடர்பு என அறிதற்கில்லை. தமிழர்களிடம் வானியல் தொடர்பான சிந்தனை இருந்துள்ளது. ஆனால் இங்கேயே உருவானது என்பதற்கான வலுவான சான்றுகள் இல்லை. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்து என்னும் நிகழ்வு தமிழர்களிடம் காணப்படாதது. ஆரியச் சிந்தனை தமிழகத்தில் பெற்றச் செல்வாக்கும் செல்வ வளம்முள்ள குடிகளிடம் ஆரிய மரபுவழிச் சடங்குகளை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர் என்பதையே இந்தச் செய்தி உணர்த்துகின்றது.

     

    பண்பாடு இயற்கையாக உருவாவதில்லை ஏதேனும் ஒரு நிகழ்வின் தொடர்ச்சியின் காரணம் பற்றிச் சடங்காகவோ பிறநிலைகளாக உருவாகின்றன. இதற்குப் புறநிலை தாக்கம் மிக இன்றியமையாதது. மூன்று விதமான சமூக வாழ்க்கை முறைகள் சிலப்பதிகாரதில் காணப்படுகிறது. மேலும் கோட்பாட்டு நிலையில் இத்தரவினை ஆய்வு செய்யவேண்டியுள்ளது. காலத்தால் பழமையான இக்காப்பியத்திற்குப் பல்கலைக் கழகங்களில் தனி இருக்கைக்கள் உருவாக்கி பல வகையான ஆய்வுகள் செய்யதல் வேண்டும்.

     

    சான்று நூல்கள்

     

    • காந்தி, க. 2003 தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
    • சண்முகம்பிள்ளை, மு.1996 சங்கத்தமிழரின் வழிபாடும் சங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
    • சாமிநாதையர் உ.வே.சா., 2013 (மறுபதிப்பு) சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
    • பக்தவத்சல பாரதி, 2003, பண்பாட்டு மானிடவியல், சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம்,
    • பக்தவத்சல பாரதி, 2002, தமிழர் மானிடவியல் சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம்
    • பக்தவத்சல பாரதி, 2012, மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு
    • பக்தவத்சல பாரதி, 2007, தமிழக பழங்குடிகள் அடையாளம் வெளியீடு
    • பக்தவத்சல பாரதி, 2013, பாணர் இனவரைவியல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
    • வேங்கடசாமி நாட்டார், ந.மு. 1953 சிலப்பதிகாரம் மூலமும் உரையும், கழக வெளியீடு.
    • Lewis H. Morgan, Ll.D, 1877, Ancient Society Or Researches In The Lines Of Human Progress From Savagery, Through Barbarism To Civilization, New York, Henry Holt And Company.
    • http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamapr14/26380-2014-04-25-07-18-08