சனி, 26 அக்டோபர், 2019

இராமாயணம் - பரதன் 7

 பரதனின் தந்தைப் பாசம் 


இராமாயணம் படிப்போர் எல்லாம் , இராமனுக்கும் தயரதனுக்கும் உள்ள நெருக்கமான உறவைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசுவார்கள். சொல்லப் போனால் தயாரதனுக்கு பரதன் மேல் கோபம் கூட உண்டு. தனக்கு அவன் பிள்ளை இல்லை, தனக்கு அவன் இறுதிக் கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு உயிர் விடுகிறான் தயரதன்.

ஆனால், தயரதன் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறான் பரதன்.

தந்தை மகன் உறவு எப்போதும் மௌனத்திலேயே நடக்கிறது. இருவரும் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

 பரதனின் தந்தைப் பாசம் கண் கலங்க வைக்கும்.

ஒரு பெண்ணைப் போல ஆணால் அன்பை, உணர்ச்சியை எளிதாக வெளிப் படுத்த முடிவதில்லை.

தயரதன் இறந்துவிட்டான். பரதன் , தயரதனைத் திட்டுகிறான்.

"நீ பாட்டுக்கு இப்படி பொறுப்பு இல்லாமல் இறந்து போய் விட்டாயே. நீ இறந்து விட்டால் இந்த அறத்தையும், அருளையும், நீதியையும், நீ சேர்த்த செல்வத்தையும் யார் காப்பாற்றுவார்கள். இப்படி பொறுப்பில்லாமல் இறந்து விட்டாயே" என்று ஏசுவது போல துக்கத்தில் குமுறுகிறான்.

பாடல்

‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?


பொருள்

‘அறம்தனை = அறத்தை

வேர் அறுத்து = வேரோடு அறுத்து

அருளைக் கொன்றனை = அருளை, கருணையை கொன்றாய்

சிறந்த= உயர்ந்த

நின் = உன்னுடைய

தண்ணளித் = தண் + ஒளி = குளிர்ந்த ஒளி பொருந்திய

திருவைத் = செல்வத்தை

தேசு = பெருமை, செல்வாக்கு

அழித்து = அழித்து

இறத்னை ஆம் எனின் = இறந்துவிட்டாய் என்றால்

இறைவ! = தலைவனே

நீதியை = நீதியை , ஞாயத்தை

மறந்தனை; = மறந்து விட்டாய்

உனக்கு = உனக்கு

இதின் = இதைவிட

மாசு = குற்றம்

மேல் உண்டோ? = அதிகம் உண்டோ


தயரதனை "இறைவ " என்று அழைக்கிறான். காக்கும் தொழில் இறைவனின் பிராதன தொழில். நாம் இறைவனிடம் எதிர்பார்ப்பது நம்மை காப்பாற்றுவதைத் தான்.  யாரும் கடவுளிடம் "கடவுளே என்னை படை , என்னை  உருவாக்கு" என்று கேட்பது இல்லை. நாம் தான் ஏற்கனவே படைக்கப் பட்டு  விட்டோமே. "ஆண்டவா என்னை அழித்து விடு "என்று யாரும்  ஆண்டவனை வேண்டுவது இல்லை. அழிப்பதும் ஆண்டவன் தொழில் தானே. கடவுளிடம் வேண்டுவது எல்லாம் காப்பாற்றுதல் ஒன்றுதான்.


யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் கடவுள்.

அரசனுக்கு "இறைவன்" என்று பெயர். இறைமாட்சி என்று ஒரு அதிகாரம் வைத்தார்  வள்ளுவர், அரசனின் கடமைகளை சொல்ல.

அறத்தை, நீதியை, அருளை, புகழை காக்கும் தொழில் அரசனுக்கு உண்டு.


அவன் இறந்ததே குற்றம் என்கிறான். இதெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று நீ பாட்டுக்கு  இறந்து விட்டாய் என்று புலம்புகிறான்.

நாங்கள் எல்லாம்  சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு என்ன தெரியும். அறமும், நீதியும், அருளும், புகழும் எல்லாம் உனக்குத்தான் தெரியும். நீ இறந்து விட்டால் நாங்கள் என்ன செய்வோம். நீ இப்படி இறந்தது தவறு என்று ஒரு சிறு பிள்ளை போல்  அழுகிறான்.

தந்தை இறந்த அந்த சோகத்திலும் அவனுக்கு மனதில் முதலில் வருவது "ஐயோ, இந்த அறத்தை இனி யார் காப்பார்கள்" என்பது தான். துக்கத்திலும் அற உணர்வே  அவனிடம் மேலிட்டு நிற்கிறது.

அறத்தை காப்பது அரசனின் கடமை . தயரதன் அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டான்  என்று புலம்புகிறான் பரதன்.

இப்படி ஒரு பிள்ளையை கண்டது உண்டா ?

இராமாயணம் - பரதன் 6

ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு கூட இலக்குவனும், சீதையும் போய் விட்டார்கள்.

பாட்டனார் ஊரில் இருந்து பரதன் வருகிறான். வந்தவுடன் , தாயான கைகேயிடம் "அப்பா எங்கே ?" என்று கேட்கிறான்.

அவர் இறந்துவிட்டார் என்று மிகச் சாதாரணமான ஒரு செய்தியை சொல்வதைப் போல சொல்கிறாள் கைகேயி.

துடித்துப் போகிறான் பரதன்.

"கணவன் இறந்தான் என்ற செய்தியை இதை விட சாதாரணமாக சொல்ல உன்னை விட வேறு யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள்" என்று சொல்லி அழுகிறான்.

பாடல்

வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான்.

பொருள்

வாய் = முகம்

ஒளி மழுங்கத் = ஒளி மங்கி வாடிப் போக

தன் = தன்னுடைய

மலர்ந்த தாமரை = மலர்ந்த தாமரை

ஆய் = போன்ற

அலர் நயனங்கள் = மலர் போன்ற கண்கள்

அருவி சோர்தரத் = அருவி போல கொட்ட

‘தீ எரி = எரிகின்ற தீயை

செவியில் = காதில்

வைத்து = வைத்தது

அனைய = போல

தீய சொல் = தீய சொல்லை

நீ அலது = உன்னைத் தவிர

உரைசெய = சொல்வதற்கு

நினைப்பரோ? = நினைப்பார்களோ

‘என்றான் = என்றான்

இராமாயணத்தை விமரிசிக்கும் சிலர், பரதன் , தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து கொண்டு , தாய்க்கு சொல்லிக் கொடுத்து அரசை அபகரித்துக் கொண்டான்  என்ற குற்றச் சாட்டை அவன் மேல் சுமத்துவார்கள்.

கதையில், பரதனின் செயலை உன்னிப்பாக கவனித்தால் அது எந்த அளவுக்கு ஒரு தவறான  குற்றச் சாட்டு என்று புரியும்.

இராமனைப் பொறுத்தவரை , தாயும் தந்தையும் சொல்லிவிட்டால் அது வேத வாக்கு. அது சரியா, தவறா என்றெல்லாம் அவன் ஆராய்ச்சி செய்வது கிடையாது.

"மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ" என்று சொல்லி காட்டுக்கு கிளம்பி விட்டான்.

 ஆனால்,பரதன் அப்படி அல்ல. யார் சொன்னாலும், கேட்பது இல்லை. எது அறமோ, எது தர்மமோ, எது ஞாயமோ  அதில் உறுதியாக நிற்பான்.

தாய் தானே என்று அவன் பார்ப்பது இல்லை.

"இந்த துக்கச் செய்தியை , உன்னைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்ல நினைக்கக் கூட  மாட்டார்கள்" என்று அவள் மேல் கோபம் கொள்கிறான்.

உறவுகளைத் தாண்டி , அறத்தின் பால் உறுதியாக நின்றது பரதனின் ஒரு குணம்.

மேலும் சிந்திப்போம்.

இராமாயணம் - பரதன் 5

நின்னினும் நல்லன் 



பரதன் அரசாள வேண்டும். நீ காடாள வேண்டும் என்று கைகேயி சொன்ன பின், கோசாலையை காண இராமன் வருகிறான். இராமனின் கோலத்தைக் கண்டு கோசலை , இராமனைப் பார்த்துக் கேட்டாள்  "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உளதோ" என்று . "முடி புனைய தடை இல்லை, ஆனால் முடி பரதன் புனைகிறான்" என்று சொல்கிறான்.

பங்கமில் குணத்து என் தம்பி, உன் காதல் மைந்தன் பரதன் முடி சூட்டுகிறான் என்று கூறுகிறான்.

கோசலை கலங்கவில்லை.

"அரச முறை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், உங்களை போல மூன்று மடங்கு நல்ல குணங்கள் கொண்டவன். உன்னை விட நல்லவன். ஒரு குறையும் இல்லாதவன் பரதன். அவனே ஆளட்டும் " என்று கூறுகிறாள்.


பாடல்

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

“முறைமை அன்று = அரச முறை இல்லை. மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது அரச தர்மம் இல்லை.

என்பது = என்று

ஒன்று உண்டு; = ஒன்று உண்டு

மும்மையின் = மூன்று மடங்கு

நிறை குணத்தவன் = நிறைந்த குணங்கள் கொண்டவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்; = குறை ஒன்றும் இல்லாதவன்

எனக் கூறினள்,= என்று கூறினாள் . கூறியது யார் ?

நால்வர்க்கும் = நான்கு சகோதரர்களுக்கும்

மறு இல் = குறை இல்லாத

அன்பினில் = அன்பினால்

வேற்றுமை மாற்றினாள் = வேறு பாடு இல்லாத கோசலை

நுணுக்கமாக அறிய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

முதலாவது, தன் மகனுக்கு அரசு இல்லை. தான் சக்ரவர்த்தியின் தாய் இல்லை  என்று அறிந்த கோசலை பேசுகிறாள்.

இரண்டாவது, தாய்மார்கள் பாடம் படிக்க வேண்டிய இடம். பிள்ளை ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலோ, அல்லது ஏதாவது போட்டியில்  வெற்றி பெறவில்லை என்றாலோ, பெரும்பாலும் தாய்மார்கள் பிள்ளைகளை திட்டுவது இயல்பு. சரி படிச்சாதானே, ஒழுங்கா படுகிறதே இல்லை, எந்நேரம் பார்த்தாலும் டிவி என்று கடிந்து கொள்வார்கள். பிள்ளை ஏற்கனவே  மனம் நொந்து வந்திருப்பான். அதற்கு மேல் தாயின் கடிய சொற்கள்.

கோசலை அறிவாள் . ஒரு வேளை இராமன் மனம் துன்பப் பட்டிருக்குமோ , அவனை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது என்று, "பரவாயில்லை, பரதன் உன்னை விட நல்லவன், அவனே ஆளட்டும் " என்று ஆறுதல் சொல்கிறாள்.

மூன்றாவது, அவள் பரதனைப் பற்றி கூறும் சொற்கள்.   மும்மையின் நிறை குணத்தவன் என்கிறாள். உங்கள் மூன்று பேரை காட்டிலும் நிறைந்த குணங்கள்  கொண்டவன் என்பது பொருள்.

நான்காவது, நின்னினும் நல்லன். உன்னை விட நல்லவன் என்கிறான். பரதன்  உயரும் இடம். இராமனை விட ஒரு படி மேலே போய் விட்டான். சொல்வது வேறு யாரும் அல்ல,  கோசலை கூறுகிறாள். இராமனின் தாய். எந்த தாய்க்கும் தன் பிள்ளை  உயர்வுதான். தன் பிள்ளையிடமே இன்னொரு பிள்ளையைப் பற்றி எந்தத் தாயும் பேச மாட்டாள். அதுவும் இராமனைப் போன்ற பிள்ளையை விட  வேறு யார் பெரிய நல்ல குணங்கள் கொண்டிருக்க முடியும் ? பாரதனால் முடிந்தது.  இராமனை விட நல்லவன் என்று கோசலை சான்றிதழ் தருகிறாள்.

ஐந்தாவது, இதுவரை பரதன் எதுவும் சாதித்தாக செய்தி இல்லை. இருந்தும் அவன்  உயர்ந்து நிற்கிறான். எப்படி ? அவன் குணங்கள் . குணத்தால்,மனத்தால் உயர்ந்தவன் பரதன்.

இராமனை விட நல்லவன் என்று இராமனின் தாய் கூறும் அளவுக்கு நல்லவன் பரதன்.

எப்படி அப்படி ஆனான் என்று கம்பர் காட்டுகிறார்.

மேலும் சிந்திப்போம்.

இராமாயணம் பரதன் 4

பங்கமில் குணத்து நம்பி 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தீர்மானம் ஆனது. மந்தரை செய்த சூழ்ச்சியால் , கைகேயி வரம் கேட்டு, இராமனுக்கு முடி இல்லை என்று தீர்மானம் ஆகி விட்டது. காட்டுக்குப் போ என்று கைகேயி சொல்லி விட்டாள் . இராமனும் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். கௌசலையை பார்க்க வருகிறான்.

கோசலை கேட்கிறாள் "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உள்ளதோ " என்று. மிக மிக நுணுக்கமான இடங்கள். அதை எல்லாம் விட்டு விடுவோம்.

இராமன் சொல்கிறான், "முடி புனைய ஒரு தடையும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம், நான் முடி புனையவில்லை, பரதன் முடி சூட்டப் போகிறான்" என்கிறான்.

அப்படி சொல்லும் போது , பரதனுக்கு ஒரு அடை மொழி தருகிறான் இராமன்..."ஒரு குற்றமும் இல்லாத குணங்களைக் கொண்ட , என் தம்பி பரதன்" என்கிறான்.

பாடல்


மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி “நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான்“ என்றான்.

பொருள்

மங்கை = கோசலை

அம்மொழி கூறலும் = அந்த மொழி கூறலும். அதாவது முடி சூட்டிக் கொள்ள தடை ஏதும் இருக்கிறதா என்ற மொழியை கூறவும்

 மானவன் = உயர்ந்தவன் (இராமன்)

செங்கை = சிவந்த கைகளை

கூப்பி = கூப்பி, வணங்கி

“நின் = உன்னுடைய

காதல் = அன்பான

திரு மகன் = சிறந்த மகன்

பங்கம் இல் = குற்றம் இல்லாத

குணத்து = குணங்களை கொண்ட

எம்பி = என் தம்பி

பரதனே = பரதனே

துங்க மா = பரிசுத்தமான

முடி சூடுகின்றான் = முடி சூட்டுகிறான்

என்றான் = என்றான்.

ஒரு காப்பியத்தில், அதன் கதாநாயன் இன்னொரு பாத்திரத்தை உயர்த்தி பேசுவது என்பது சற்று வித்தியாசமான  விஷயம் தான்.

அதுவும் எப்போது, தனக்கு வர வேண்டிய அரசை பரதனிடம் இழந்து, காட்டுக்கும் போக   வேண்டிய சூழ்நிலையில், இராமன் ,  பரதனைப் பற்றி குற்றமே இல்லாத குணத்தவன் என்று சொல்கிறான் என்றால் பரதனின் குணம் எப்படி இருந்திருக்க வேண்டும்.

பரதன் நல்லவனாகவே இருந்தாலும், இராமனின் இழப்பு மிகப் பெரிய இழப்பு. அரசு  போனது மட்டும் அல்ல, காட்டுக்கும் வேறு போக வேண்டும். கோபம் வருவது  இயற்கை. பரதன் முடி சூட்டப் போகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தாலும் யாரும் இராமன் மேல் குறை காண  முடியாது.

"பங்கமில் குணத்து எம்பி" என்கிறான்.

நல்ல குணங்கள் உள்ள பரதன் என்று சொல்லி இருந்தால் கூட சின்ன சந்தேகம் வரும். நல்ல குணங்கள் இருக்கிறது, அது கூடவே கொஞ்சம்  கெட்ட  குணமும் இருக்குமோ  என்ற சந்தேகம் வரும். எனவே இராமன் சொல்கிறான் "குற்றமே இல்லாதவன்" என்று.

அது மட்டும் அல்ல, 'என் தம்பி' என்று பாசம் காட்டுகிறான்.

"உன் காதல் திருமகன்" என்று தாயிடமும் சொல்கிறான். எங்கே கோசலை பரதன் மேல் கோபித்து விடுவாளோ என்று  நினைத்து,"உன் காதல் மகன்" என்று  சொல்கிறான்.

குற்றமில்லாதவன் என்று இராமன் தரும் முதல் சான்றிதழ். இராமனால் பாராட்டப் பட்டவன் பரதன்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் , என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவன் பரதன்.

மேலும் பார்ப்போம்.

இராமாயணம் - பரதன் 3


பிறப்பு

பரதன் பிறந்து தொட்டிலில் குழந்தையாக கிடக்கிறான்.

குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டும். யார் பெயரிடுவது ?

பெற்றோர் பெயரிடலாம், தாத்தா பாட்டி பெயரிடலாம். சில இடங்களில் மாமன் மடியில் வைத்து பெயரிடுவார்கள்.

இப்போதெல்லாம், அரசியல் தலைவர்களை பெயரிடச் சொல்கிறார்கள்.

தசரதன், குல குருவான வசிட்டரிடம் சொல்லி அவரை பெயரிடச் சொல்கிறான். குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. மதிப்பு.

வசிட்டன் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரிடுகிறான். மற்ற பிள்ளைகளின் பெயரிட்ட பாடல்களை விட்டு விடுவோம்.

பரதனுக்கு பெயரிட்ட பாடலை பார்ப்போம்.

தன்னுடைய தவத்தினால் வேதங்களின் உட்பொருளை அறிந்த வசிட்டன், உள்ளங்கை நெல்லிக் கனி போல ஒளி விடும் அவனுக்கு பரதன் என்று பெயர் தந்தான்.

பாடல்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரம் = கை , உள்ளங்கை

தலம் = இடத்தில்

உற்று = சேர்ந்து

ஒளிர் = ஒளிரும் , விளங்கும்

நெல்லி = நெல்லிக் கனியைப்

கடுப்ப = போல , ஒத்த

விரதம் = விரதத்தினால், தவத்தினால்

மறைப் = வேதம் போன்ற உயர் நூல்களின்

பொருள் = பொருளையும்

மெய்ந் நெறி = அவை சொல்லும் உண்மையான வழிகளையும்

கண்ட = கண்ட, அறிந்த

வரதன் = வசிட்டன்

உதித்திடும் = தோன்றிடும்

மற்றைய ஒளியைப் = வேறு ஒளியை

‘பரதன் ‘ = பரதன்

எனப் = என்று

பெயர் =பெயர்

பன்னினன் அன்றே = பண்ணினான் , தந்தான்

சற்று ஆராய்வோம்.

உள்ளங்கை நெல்லிக் கனி - அது என்ன உள்ளங் கை நெல்லிக் கனி போல என்ற தொடர் ? மற்ற கனிகள் உள்ளங்கையில் இருந்தால் தெளிவாகத் தெரியாதா ? மாங்கனி இருந்தால் தெரியாதா ? ஏன் நெல்லிக் கனியை மட்டும்
குறிப்பாகச் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

நெல்லிக் கனியைப் பார்த்தால் தெரியும், அதில் சில வரிகள் இருக்கும். மேலிருந்து கீழாக செல்லும். அந்த வரிகளின் மேல் கத்தியை வைத்து வெட்டிப் பார்த்தால்  , அந்த வரிகளுக்கு நேர் உள்ளே உள்ள விதையிலும் அதே போல  வரிகள் இருக்கும். அதாவது விதையில் எப்படி இருக்கிறதோ அதே போல வெளியிலும் இருக்கும்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அப்படியே வெளியிலும் இருக்கும். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும்.

உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேறுபாடு கிடையாது.

பரதனுக்கு மனமும் செயலும் ஒன்றாக இருந்தது. அல்லது இருக்கும் என்று முதலிலேயே கம்பர் காட்டுகிறார்.

யோசித்துப் பார்ப்போம். நாம் நினைப்பது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா ? நமக்கு மிக மிக நெருங்கியவர்களிடம் கூட நம் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாது.

மனதில் ஒன்றை நினைப்போம், வெளியில் ஒன்றைச் சொல்வோம், செய்வோம்.  கணவன், மனைவி, பிள்ளைகளிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்போம் என்று சொல்லவே வேண்டாம்.

உள்ளும் புறமும் பிரிந்து கிடக்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  இராமலிங்க அடிகளார் .


ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

என்பது திருவருட்பா.

எப்போது உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ?

மனம் தூய்மையாக இருந்தால் , அது அப்படியே வெளிப்படுவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. மனத் தூய்மை இல்லாவிட்டால் தான், அது வெளிப் படுவதை மறைக்க  வேண்டி இருக்கும்.

வள்ளுவரிடம் ஒரு மாணவன் கேட்டான், ஐயா உங்கள் 1330 குறளையும் படித்து அதன் உள் அர்த்தங்களை புரிந்து அதன் படி நடப்பது என்பது இயலாத காரியம்.

குறள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் உள்ள அறங்களை  தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டான்.

வள்ளுவரும், "சொல்லுகிறேன் , நாலே வார்த்தைகளில் சொல்கிறேன் குறித்துக் கொள் " என்றார்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"

அவ்வளவுதான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்பது வள்ளுவம்.

மனதில் எந்த விதமான குற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்து அறங்களும் சேர்ந்த ஒன்று என்றார்.

மனம் தூய்மையாக இருந்து விட்டால் , தவறு எப்படி நிகழும் ?

மனம் செயல் படுவதால் , மனிதன் என்று முன்னொரு பிளாகில் பார்த்தோம்.

மனம் சரியாகச் செயல் பட்டால் , சிறந்த மனிதனாக முடியும்.

அப்படி மனம் உயர்ந்ததால், தான் உயர்ந்தவன் பரதன்.

எப்படி என்று காப்பியத்துக்குள் சென்று பார்ப்போம்.


"உதித்திடும் மற்றைய ஒளியை" - உதித்தல் என்றால் முன்பே இருந்த ஒன்று மீண்டும் வெளிப்படுவது. சூரியன் உதித்தான் என்று சொல்ல வேண்டும். சூரியன் தோன்றினான் என்று   சொல்லக் கூடாது. சூரியன் எப்பவும் உள்ளது. இரவில் மறைந்து  இருந்தது. பகலில் உதித்தது.

ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எப்போதும் உள்ளவன். நெற்றிக் கண்ணில் உதித்தான். எனவே தான் முருக ஜெயந்தி ஒன்று கிடையாது.



அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
    பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்

என்பது கந்த புராணம். ( சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் அடங்கியது இந்தப் பாடல் என்பது பெரியவர்களின் கருத்து).

இராம , இலக்குவன , பரத  மற்றும் சத்ருக்கனன் என்போர் அவதாரம். எப்போதும் உள்ளவர்கள். இங்கு வந்து உதித்தனர் என்ற அவதார இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்லிப் போகிறான் கம்பன்.


"மற்றைய ஒளியை"....இராமனை மெய் பொருள் என்ற கம்பர், பரதனை "மற்றைய ஒளி" என்றார். மெய் பொருளில் இருந்து பிறக்கும் ஞான ஒளி பரதன்.  அஞ்ஞானத்தை இருள் என்று ஞானத்தை ஒளி என்றும் சொல்லுவது மரபு. பரதனை "மற்றைய ஒளி" என்றார்.

அவன் வாழ்க்கையைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

இராமாயணம் - பரதன் 2



இராமாயணம் என்பதே தவறான தலைப்பு. பரதாயணம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏன் ?

உலகில் இந்த ஒரு கதையோ, நாவலோ, இலக்கியமோ அதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் அதில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மேலான குண நலன்கள் உள்ளவர்களாக கட்டுவது இல்லை - இராமாயணத்தைத் தவிர.

ஒரு இடத்தில் அல்ல, மூன்று இடத்தில், மூன்று வெவ்வேறு முக்கியமான பாத்திரங்கள் மூலம் பரதன் இராமனைவிட பல மடங்கு உயர்ந்தவன் என்று சொல்ல வைக்கிறான் இராமன்.

கம்பனுக்கு இராமன் மேல் அளவு கடந்த வாஞ்சை உண்டு. இருந்தும், பரதன் இராமனைவிட மிக மிக உயர்ந்தவன் என்று சொல்கிறான்.

சொல்வது யார் ? இராமனின் தாய்.

இராமனின் செயல்களைக் கூட சரியா தவறா என்று வாதம் செய்யலாம்.

தாடகை என்ற பெண்ணைக் கொன்றது,  வாலியை மறைந்து நின்று கொன்றது, சீதையை தீ குளிக்க  சொன்னது, கும்பகரணனோடு சண்டை போடும் போது கை நடுங்கியது,  தந்தை சொன்னார் என்பதற்காக அரச கடமையை துறந்து  கானகம்  சென்றது என்று இராமனின் சில செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது.

பரதனின் ஒரு செயல் கூட , ஒரு நூல் கூட பிறழாதது. அதை பற்றி விரிவாக பார்க்கப்  போகிறோம்.

அதற்கு முன்னால் , ஒரு சின்ன முன்னுரை.

பரதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டு அவனைப் பற்றி படிப்போம்.

ஒரு நாள், வள்ளுவரிடம் ஒரு மாணவன் சென்று

மாணவன்: ஐயா, நீங்கள் எதையும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வீர்கள் தானே.

வள்ளுவர்: ஆமாம்

மா: அப்படியானால், வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் ? எந்தத் துறையானாலும்.....மாணவப் பருவம் ஆனாலும், வேலை செய்தாலும், தொழில் முனைந்தாலும், ஆன்மீகத் துறையில் சென்றாலும், பொது வாழ்வில் ஈடு பட்டாலும் ....முன்னேற என்ன வழி.

வ:  அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னால் , என்னோடு கூட நடந்து வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு குளத்தைக் காண்பித்தார்.

பார்த்தாயா, எவ்வளவு தாமரை மலர்கள் இருக்கின்றன.

மா: ஆமாம் ஐயா..அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே

வ: புன்னகைத்துக் கொண்டே, தம்பி, அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன ?

மா: ஐயா அது தண்ணீரில் மிதக்கின்றன...எனவே அவை நீரின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமே இருக்கும்

வ: சரி, அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் ..செய் பார்ப்போம் என்றார்.

மா: இது என்ன பிரமாதம் என்று குளத்தில் இறங்கி, ஒரு மலரை பிடித்து தூக்கிப் பிடித்தான்...அந்தோ, அது தண்டில் இருந்து பிரிந்து வந்து விட்டது.  சரி, இது சரி வராது என்று ஒரு உயரமான குச்சியை நட்டு, ஒரு தாமரை மலரை பிடித்து  உயர்த்தி, அந்த குச்சியின் மேலே வைத்து கட்டினான். பிடித்து இழுத்து கட்டியதில் தாமரை மலரின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்து அது வாடிப் போய் விட்டது.....

மாணவன் குழம்பிப் போய் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே...சரி நாளை வா உன் கேள்விக்கு விடை தருகிறேன் என்றார்.

அன்று இரவு நல்ல மழை பொழிந்தது.   குளத்தின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து இருந்தது.

மாணவனை அழைத்து வந்து வள்ளுவர் காண்பித்தார்....பார்த்தாயா நேற்று பெய்த மழையில் நீர் மட்டம் உயர்ந்து இருக்குறது என்றார்.

மா: ஆமாம் ஐயா.

வ: பார்த்தாயா, தாமரை மலரின் உயரமும் உயர்ந்து இருக்கிறது .

மா: ஆமாம் ஐயா. அதற்கு என்ன இப்போ. மழை வந்தால் குளம் நிறைவதும், அதனால் பூக்கள் உயர்வதும் இயற்கை தானே என்றான்.

வ: அது தான் உன் கேள்விக்கு விடை.

எப்படி மலரின் உயரம் நீர் மட்டத்தைப் போல இருக்கிறதோ, வாழ்வில் நீ அடையும் உயரம் உன் மனத்தைப் பொறுத்து இருக்கிறது.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

உன்னுடைய உயரம் , உன் உள்ளத்தின் உயரம்.

யோசித்துப் பார், ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னாலும், நீ அந்தக் காரியத்தைப் பற்றி யோசிப்பாய் , அதை எப்படி செய்வது, எவ்வளவு காலம் ஆகும், என்ன என்ன இடையூறு வரும், யார் துணை செய்வார்கள் என்று எல்லாம்  யோசிப்பாய் அல்லவா. உன் மனம் அந்த வேலையை முடிப்பதைப் பற்றை  சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் முதலில் உயர்ந்து விடுகிறது. பின் வேலை நடக்கிறது. நீ எவ்வளவு நினைத்தாயோ, அவ்வளவு செய்கிறாய்.

மா: ஐயா புரிந்த மாதிரி இருக்கு. முழுவதும் புரியவில்லை.

வ: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளியில் சேர்கிறான். அவன் மனம் எப்படி இருக்கும் ? நல்லா படிக்கணும், நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும், வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும், நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்க வேண்டும் என்றெல்லாம்யோசிப்பான் அல்லவா ? பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். சந்தேகம் இருக்கும். இருந்தும், மனம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறது அல்லவா ? நினைத்தால் மட்டும் நடந்து  விடாது. ஆனால், நினைக்காவிட்டால் நடக்கவே நடக்காது.

மனிதனின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயர்கிறதோ, அவ்வளவுக்கு அளவு அவன் உயர்வான்.

கூர்ந்து சிந்தித்தால் ஒன்று தெரியும்.

வள்ளுவர், மனிதன் எவ்வளவு படிக்கிறானோ, எவ்வளவு உழைக்கிறானோ, எவ்வளவு  மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானோ அவ்வளவு உயர்வான் என்று சொல்ல வில்லை. உயர வேண்டுமானால், மனம் உயர வேண்டும். அவ்வளவு தான்.

பரதன் , உயர்ந்தான், உயர்ந்தான், உயர்ந்து கொண்டே போனான். காப்பியம் பூராவும் அவன் உயர்வை காட்டுகிறது.

பரதனின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம்.

என்னென்ன பாடங்கள் ?

இராமாயணம் - பரதன் - 1



இராமாயணத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு குடும்பச் சண்டை. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு, மூத்த மகனுக்கு சேர வேண்டிய நாட்டை அவனுக்குத் தராமல், இளைய மனைவியின் மகனுக்கு ஒரு அரசன் தந்து விட்டான். அரசன் சொன்னான் என்பதற்காக , அந்த மூத்த மகன் கானகம் போனான். போன இடத்தில் அவனுடைய மனைவியை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். தூக்கிப் போனவனோடு சண்டை இட்டு, மனைவியை மீட்டு வந்தான்.

இவ்வளவுதான் கதை.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதை விட அருமையான கதைகள் எவ்வளவோ இருக்கிறது. இருந்தும் இராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது ?

அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போது இருப்பதை போலத்தான் இருக்கிறது. நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. நல்லவர்களிடமும் சில  தவறுகள் உண்டு. தீயவர்களிடமும் சில நல்ல குணங்கள் உண்டு.

நல்லவர்கள் பாதையில் போகலாம் என்றால் அவர்களும் அங்கங்கே சில சந்தேகத்து  இடமான காரியங்களை செய்து இருக்கிறார்கள். அது சரியா , தவறா என்ற சர்ச்சை இன்று வரை நீள்கிறது.

தீயவர்கள் போன பாதையில் போகக் கூடாது என்று நினைத்தால் , அவர்களும் பல நல்ல  குணங்களுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள்.

எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க.

இராமாயணம் என்பது , என்றோ எப்போதோ ஒரு அரசனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

இராமாயணம் முடிந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டது. சூழ் நிலைகள் மாறி விட்டது.  சமுதாயம், அதன் விதி முறைகள், சட்ட திட்டங்கள் மாறி விட்டன. இன்றும், இராமாயணம் படித்து, அதன் படி வாழ நினைத்தால் சரியாக இருக்குமா ?  சுவாரசியமான கதை என்று படிக்கலாமே தவிர அது நடைமுறைக்கு  வழி காட்டுமா ?

இதை எல்லாம் படிப்பது ஒரு கால விரயம். இராமன் நல்லவன், வல்லவன் என்றே இருந்து விட்டு ப் போகட்டும். ஒவ்வொரு கதையிலும் கதாநாயகன் நல்லவன் வல்லவனாகவே  இருப்பான். செய்ய முடியாத காரியங்களை செய்வான்.  அதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை சம்பவங்கள் . எனவே ஒரு கதையைப் படித்து விட்டு, அதன் படி வாழ நினைப்பது  யதார்த்தத்துக்கு ஒவ்வாத செயல் என்ற நினைப்பது வரும்.

அது இன்னொரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் முன்னேற, மிக உயர்ந்த நிலையை அடைய,  சிறப்பாக வாழ இராமாயணம்  வழி காட்டுகிறது என்பது உண்மை. சத்தியம்.

என்ன ஒரு சிக்கல் என்றால் அதை நேரடியாகச் சொல்லவில்லை.

கதையோடு, கதை மாந்தர்களோடு அதை பிணித்து வைத்திருக்கிறது.

மண்ணில் புதைந்து கிடைக்கும் வைரம் போல அது கிடக்கிறது. கொஞ்சம்  தோண்டித்தான் எடுக்க  வேண்டி இருக்கிறது.

வாருங்கள். இராமாயணம் தரும் வைரங்களை தோண்டி எடுப்போம்.

வாழ்வில் முன்னேற, மிக மிக உறுதியான வழியை பரதன் என்ற பாத்திரத்தின் மூலம் இராமாயணம் சொல்லுகிறது.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான் ? சண்டை போட்டானா ? அரக்கர்களை அழித்தானா ? மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ததாக குறிப்பு ஏதேனும் இருக்கிறதா ?  நாட்டை விரிவு படுத்தினானா ?

அப்படி என்ன தான் பெரிதாக  செய்து விட்டான் ?

வாழ்வின் மிகப் பெரிய இரகசியங்களை உள்ளடக்கியது பரதன் பாத்திரம்.

வாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிவோம்.