செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

அம்புலிமாமா சில கதைகள்

TUESDAY, NOVEMBER 10, 2009


புலியைக் கொன்ற அதிசய பசுக்கள்!

சுவாரஸியமான நாட்டுப்புறக் கதைகள் அம்புலிமாமாவில்ஏராளம். அவற்றுள் ஒரு துளி இதோ...

முத்து ஒரு அநாதை வாலிபன். மாடு மேய்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த தொழில். நான்கு பசுமாடுகளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குக் கிடையாது. தினமும் தன் கிராமத்தின் எல்லையில்இருந்த காட்டிற்குத் தன் மாடுகளை அழைத்துச் சென்றபின், அவற்றை மேய விட்டு விட்டு, முத்து ஒரு மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதிக் கொண்டே பொழுது போக்குவான்.

ஒருநாள் முத்து அவ்வாறு குழல் ஊதிக் கொண்டிருக்கையில்,திடீரென ஒரு புலியின் உறுமல் சத்தம் கேட்டது. தன் மாடுகளைப் புலி கொன்று விடுமே என்று பதறிக் கொண்டே எழுந்த போது, அவன் கண்களில் ஓர் அதிசயக் காட்சி தென்பட்டது. புலியைக் கண்டு பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், அவனுடைய நான்கு மாடுகளும் புலியைச் சூழ்ந்து கொண்டு அதைத் தன் கொம்புகளால் தாக்கின. வாழ்வில் முதன்முறையாக தன்னைப் பசுமாடுகள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியுற்ற புலி தப்பித்து ஓட முயற்சித்தது. ஆனால் மாடுகள் அதைத் தப்பிக்க விடாமல் தன் கொம்புகளால் குத்திக் கிழித்துக் கொன்று விட்டன.

அன்று முதல், தன் மாடுகளின் மீது முத்துவிற்குப் பெருமதிப்பு ஏற்பட்டு விட்டது. அவற்றைப் பொக்கிஷம்போல், பத்திரமாகப் பாதுகாத்தான். அந்த ஆண்டு வானம் பொய்த்ததால், அவனுடைய மாடுகளுக்கு சரியானபடி தீவனம் கிடைக்கவில்லை. தன்னுடைய மாடுகள் அரை வயிற்றுக்கு உண்டு பட்டினி கிடப்பதைக் காண சகிக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தை விட்டுத் தன் பசுக்களுடன் வெகுதூரம் சென்று ஒரு மலைப்பிரதேசத்தை அடைந்தான். குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் புல் செழிப்பாக வளர்ந்திருந்தும், அவற்றை மேய மாடுகளே தென்படவில்லையென்பதைக் கண்டு முத்து வியப்படைந்தான். அப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தை அடைந்து அங்கு தன் குடிசையை அமைத்துக் கொண்டான்.

அந்தக் கிராமத்திலுள்ள ஏராளமான கால்நடைகள் எலும்பும், தோலுமாய் காணப்பட்டன. அருகிலேயே, குன்றுகளுக்கிடையே செழிப்பான புல்வெளி இருந்தும், கிராமத்தினர் தங்கள் மாடுகளை மேய்க்க அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. உடனே அவன் கிராமத்து மக்களிடம் அதற்கான காரணத்தை கேட்க, அவர்கள், "குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் பல புலிகளும், சிங்கங்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டன. அங்கு மேயச் செல்லும் எங்கள் மாடுகள் காணாமற் போய் விட்டன. புலிகளும், சிங்கங்களும் எங்கள் மாடுகளை அடித்துத் தின்றுவிடுவதால், அங்கு நாங்கள் மாடுகளை அனுப்புவதே இல்லை. எல்லா மாடுகளும் கிராமத்திலேயே மேய்வதால், நாளடைவில் இங்கு புல் குறைந்து விட்டது. அதனால்தான் எங்களுடைய மாடுகள் வற்றிப் போய் காணப்படுகின்றன" என்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், அந்தக் குன்றுப் பிரதேசத்தில் கஜராஜன் என்ற திருடன் வசித்து வந்தான். அங்கு மேய வரும் பசுக்களைக் கண்டதும் அவற்றைத் திருடுவதற்கு ஒரு யோசனையைக் கையாண்டான். அதன்படி புதரில் மறைந்து கொண்டு, புலியைப் போலவோ, அல்லது சிங்கத்தைப் போலவோ ஒலி எழுப்புவான். மாடு மேய்ப்பவர்கள் அதைக்கேட்டு ஓடி விடுவார்கள். பிறகு பயந்து போனப் பசுக்களும் அப்பகுதியை விட்டு ஓடிச் சென்று, எதிர் திசையை அடையும். பிறகு, வழிதவறிப்போன பசுக்களை அவன் அழைத்துச் சென்று வேறு கிராமங்களில் விற்று விடுவான். இப்படியே சில ஆண்டுகளில் அவன் நிறையப் பணம் சம்பாதித்து விட்டான்.

இவ்வாறு ஏகப்பட்ட மாடுகளைத் திருடி விற்றுவிட்ட கஜராஜனுக்கு சில மாதங்களாக திருடுவதற்கு மாடுகளே கிடைக்கவில்லை. ஒருநாள் நான்கு கொழுத்த மாடுகளை அங்கே கண்டதும் அவனுக்குப் பயங்கர மகிழ்ச்சி உண்டாகியது. கூடவே, மாடுகளை மேய்க்க வந்த முத்துவையும் பார்த்தான். விஷயம் தெரியாத புதிய ஆள் ஒருவன் மாடுகளை மேய்க்க வந்திருக்கிறான் என்று கஜராஜன் புரிந்து கொண்டான். அந்த மாடுகள் நான்கையும் கடத்தித் திருடத் தீர்மானித்து, ஒரு புதரினுள் பதுங்கிக் கொண்டான். முத்து தன் மாடுகளை கவனிக்காமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து குழல் ஊதத் தொடங்கியது அவனுக்கு வசதியாகப் போயிற்று.

புதரில் பதுங்கிய கஜராஜன் புலியைப் போல் உறுமினான். அவன் எதிர் பார்த்ததுபோல் மாடுகள் பயந்து ஓடவில்லை. அவன் பதுங்கியிருந்த புதரை சூழ்ந்து கொண்டு, புலி வெளியே வந்தால் தாக்கத் தயாராயின. புலியின் உறுமலைக் கேட்ட முத்து, தன் மாடுகள் புதரைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தயாராயிருப்பதைக் கண்டு வேடிக்கை பார்க்க எழுந்து நின்றான்.

முதன் முறையாக தன் சூழ்ச்சி பலிக்கவில்லை என்று அறிந்த கஜராஜன் உடனே சிங்கத்தைப் போல் கர்ஜித்தான். என்ன ஆச்சரியம்? அந்த மாடுகள் அப்போதும் பயப்படாமல் புதரைச் சுற்றி நின்றன. தங்கள் கொம்புகளை ஆக்ரோஷத்துடன் ஆட்டிக் கொண்டே சீறின. கஜராஜன் நடுநடுங்கிப் போனான். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மாடுகளைக் கடத்தித் திருடும் எண்ணத்தை விட்டு, தான் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்தான். எப்படியாவது முயற்சி செய்து மாடுகளை பயமுறுத்த எண்ணி, புலியின் குரலிலும், சிங்கத்தின் குரலிலும் மாறி மாறி ஒலிஎழுப்பினான். ஆனால் அந்த மாடுகள் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் கஜராஜனின் உரத்த கர்ஜனையைக் கேட்டு கிராமத்திலிருந்த ஆடு, மாடுகள் பயத்தில் சிதறி ஓடலாயின.

அதற்குள், முத்து கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் "என் மாடுகள் புலியையும், சிங்கத்தையும் புதருக்குள் முற்றுகையிட்டு விட்டன. இன்னும் சற்று நேரத்தில் அவை புதரில் புகுந்து அவற்றை கொம்புகளினால் குத்திக் கிளறும் காட்சியைப் பார்க்க வாருங்கள்" என்று கூவி அழைத்தான். ஆனால் பலரும் அவன் சொல்வதை நம்பவில்லை. தைரியமுள்ள சிலர் மட்டுமே அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தனர்.

அங்கு அவர்கள் ஒரு புதரைச் சுற்றி முத்துவின் மாடுகள் முற்றுகையிட்டுச் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். "முத்து, புலியும் சிங்கமும் எங்கே?" என்று அவர்கள் கேட்டனர். "என் மாடுகளுக்குப் பயந்து அவை புதரினுள் பதுங்கியுள்ளன. அவற்றை வெளியே வரச் செய்தால் போதும்! அப்புறம் பாருங்கள் நடப்பதை!" என்றான் முத்து.

உடனே அங்கு இருந்தவர்கள் கற்களைப் பொறுக்கிப் புதருக்குள் வீசினர். கல்லடி தாங்க முடியாத கஜராஜன் வெளியே வர, அவன் மீது மாடுகள் பாய்ந்து கொம்புகளால் குத்திப் புரட்டிப் போட்டு விட்டன. குற்றுயிரும், கொலையுயிருமாய் வெளியே வந்த கஜராஜனைக் கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

அனைவர் முன்னிலையிலும் கஜராஜன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். கிராமத்தினரின் கோபம் எல்லைமீறி, கஜராஜனை அடித்துத் துவைத்தனர். அன்றுமுதல், முத்து அந்த கிராமத்திற்குத் தலைவன் ஆகிவிட்டான். கிராமத்தினரும் பயமின்றி தங்கள் கால்நடைகளை அங்கு மேய்க்க அனுப்பினர்.

FRIDAY, NOVEMBER 6, 2009


வயித்துல குதிரை!

கிச்சு கிச்சு மூட்டும் இந்தக் குட்டிக் கதையை மறைந்ததென்கச்சி சுவாமிநாதன் ஸ்டைலில் படித்து ரசியுங்கள்!

இந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான். அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.

"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"

"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"

"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."

"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"

"சரி எதனால வலி?"

"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"

"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"

உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்.

அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"

"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"

"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"

"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"

"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"

அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

"பளார்!!"

எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.

"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"

டாக்டர் மயங்கி விழுந்தார்.

இது போன்ற அவரது அனைத்து நகைச்சுவை கதைகளும்அம்புலிமாமா இணையதளத்தில்!!

THURSDAY, OCTOBER 29, 2009


பீர்பால் கதை!

உங்களுக்கு பீர்பால் கதை தெரியும் தானே...அக்பரின் சபையிலிருந்த பீர்பால் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக மிகப்பிரபலமானவர். எந்த ஒரு பிரச்சினையையும், தன் மதியூகத்தால் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகரில்லை. ஆனால் பீர்பாலின் பின்புலம் என்ன? எப்படி அக்பரை சந்தித்தார்? அரசவையில் உயர்ந்த பதவி பெற்றது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை இதோ...

ஒருநாள் அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் பணிவுடன் வணங்கியபோது, அக்பர்அவனை நோக்கி, "நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!" என்றான் அவன்.

"உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?" என்று அக்பர் கேட்டார்.

"என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்" என்றான் மகேஷ்.

"எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!" என்றார் அக்பர். "பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

"அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!" என்றார் அக்பர். "பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?" என்று மகேஷ் கேட்டான்.

"முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!" என்றார் அக்பர். "நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!" என்றான் மகேஷ். "அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?" என்றார் அக்பர்.

"முப்பது சவுக்கடி கொடுங்கள்!" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். "உனக்கென்ன பைத்தியமா?" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

"அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் "அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!" என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை "நீ அடிக்கத் தொடங்கு!" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் "நிறுத்து!" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, "பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!" என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், "என்ன உளறுகிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, "தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்" என்றான்.

இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டை அடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி "இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், "நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்" என்றார்.

இந்தக் கதையுடன், உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஏராளமான பீர்பால் கதைகள் அம்புலிமாமாஇணையதளத்தில்...

TUESDAY, OCTOBER 27, 2009


நான் கடவுள்!

ஜீனியஸ் கோயிந்து, வாண்டு பாபு போன்றவர்களின் கிச்சு கிச்சு கலாட்டாக்கள் அம்புலிமாமா இணையதளத்தில்... குட்ட்ட்டி சாம்பிள் இதோ!


ஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!

நண்பர்: என்ன கோயிந்து சொல்ற?

ஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா 'அடக்கடவுளே! நீ திரும்பவும் வந்துட்டியா'ன்னு எல்லாரும் பயந்து 'ஆள விடுயா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டாங்க.

---------------

ஜீனியஸ் கோயிந்து (மனைவியிடம்) : நேத்து கண்ட கனவு செம காமெடியா இருந்துச்சி தானே...

மனைவி : உங்களுக்கு வந்த கனவு காமெடியா இருந்துச்சின்னு எனக்கு எப்படி தெரியும்?

ஜீனியஸ் : விளையாடாதே.. அந்த கனவுல நீயும் தானே இருந்த?!

----------


மொபைல் போன் கஸ்டமர் கேருக்கு போன் போட்டார் நம்ம ஜீனியஸ்....

கஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்?

ஜீனியஸ் கோயிந்து: ஹல்லோ....இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்!

கஸ்டமர் கேர்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, கரண்ட் பில் ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க!

ஜீனியஸ் (கோபமாக) : லூசு...!!

கஸ்டமர்: என்னாச்சு சார்.. ஏன் திட்றீங்க?

ஜீனியஸ்: உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன்? மொபைல் பில்லு தானே கேட்டேன்... எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்?

கஸ்டமர் கேர்: @#$%$!??


----------

நண்பர் : கோயிந்து.... நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

ஜீனியஸ் கோயிந்து : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.

நண்பர் : அட மக்கு... முதல் இட்லி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ...

(நம்ம ஜீனியஸ் வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜீனியஸ்: நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.

ஜீனியஸ் : அடச்சே... நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன்!

இதுபோன்ற நகைச்சுவை கலாட்டாக்கள் அம்புலிமாமாதளத்தில்.

THURSDAY, OCTOBER 22, 2009


மரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சுமந்து செல்கிறான்?

விக்ரமாதித்தன் -வேதாளம் கதையை சிறுவயதில் படிக்காதவர்களை/ கேள்விப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அம்புலிமாமாவில் நீண்ட ஆண்டுகளாக வெளிவரும் இத்தொடர் கதையின் நதிமூலம், அதாவது விக்ரமன் ஏன் மரத்தில் தொங்கும் வேதாளத்தை சுமந்து செல்கிறான் என்பதை அறிய ஆர்வமுள்ளோர்க்காக இந்தப் பதிவு....

கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கடித்தது. அப்போது அதிலிருந்த ரத்தினக் கல் கீழே விழுந்தது.

உடனே விக்ரமன் தன் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, அனைத்து பழங்களையும் சோதித்துப் பார்க்கச் சொன்னான். பழங்களைச் சோதித்த அதிகாரி, "மன்னா, பழங்கள் உலர்ந்து விட்டன. ஆனால் அவற்றில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருந்தன" என்றார். மறுநாள் வழக்கம் போல முனிவர் வந்து விக்ரமனிடம் பழம் கொடுத்தார். அவரிடம், "சுவாமி, தினமும் ஒரு பழத்தில் ரத்தினக் கற்களை வைத்து தருகிறீர்களே... ஏன்? என்று கேட்டான். அதற்கு பதிலளித்த முனிவர், மிகப் பெரிய நன்மையை என் மந்திரத்தால் செய்தாக வேண்டும். இல்லையெனில் பெரும் கேடு ஏற்படும். இச்செயலைச் செய்வதற்கு எனக்கு சுத்தமான வீரன் ஒருவனது துணை வேண்டும். அதற்காகத்தான் உன்னை அணுகினேன்," என்றார்.

தன்னால் மிகப் பெரிய நன்மை நடக்கப்போவதாகக் கூறியதால் மகிழ்ந்த விக்ரமன், இதற்கு ஒப்புக் கொண்டான். "வரப்போகும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று நள்ளிரவில் ஊருக்கு வெளியே இருக்கும் மயானத்துக்கு நி தனியே வரவேண்டும்," என்றார் முனிவர். சொன்ன நேரத்தில் மயானத்துக்குச் சென்றான் விக்ரமன். அவனுக்காக அங்கு காத்திருந்த முனிவர், "இங்கிருந்து தென் திசையில் சென்றால், அங்கு ஒற்றை மரம் இருக்கும். அதில் ஓர் ஆணின் உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அதை எடுத்துக் கொண்டு இங்கே வா. நடுவில் ஏதும் பேசக் கூடாது" என்றார்.

மன்னனுன் அவர் கூறிய திசையை நோக்கி நடந்தான். அங்கு ஓர் ஒற்றை மாத்தில் ஆணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் ஏறி கயிற்றை அறுத்து, பிண நாற்றம் அடிக்கும் அந்த உடலை கீழே தள்ளினான். கீழே விழுந்த அந்த உடல் அழுதது. அந்த உடலில் உயிர் இருப்பதாக நம்பிய விக்ரமன், அதைத் தூக்க முயற்சித்தான். உடனே உடல் சிரிக்க ஆரம்பித்தது. "ஏன் இப்படிச் சிரிக்கிறாய்" என மன்னன் கேட்ட அடுத்த நொடி மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது அந்த உடல். அது வேதாளம் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரமன், மீண்டும் அதை கிழே கொண்டு வந்து முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. "மன்னா, நாம் நடக்கும் போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்" என ஆரம்பித்தது. கதையின் முடிவைப் பற்றி புதிர் போட்டது. அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்ரமனை மிரட்டியது.

வேறு வழியில்லாமல் விக்ரமனும் பதில் கூறினான். பதில் கூறியதால் அவனது மவுனம் கலைந்த அடுத்த நொடி, வேதாளம் மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது. இப்படியே, ஒவ்வொரு கதையாகச் சொல்லி அவனிடம் கேள்விகள் கேட்கும். பதில் சொல்வதற்காக அவன் வாய் திறந்து பேசியதும் மரத்தில் ஏறிக் கொள்ளும். இது தான் விக்ரமன் - வேதாளத்தின் கதை!!

வேதாளம் சொல்லிய அத்தனை கதைகளும், அழகிய படங்களுடன் அம்புலிமாமா இணையதளத்தில்!!

WEDNESDAY, OCTOBER 21, 2009


ஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்!

விந்தையான + வித்தியாசமான செய்திகள் யாவும்அம்புலிமாமா தளத்தில்... சின்ன சாம்பிள் இதோ!

பேய்ப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை மட்டும் தான் மிரட்டி டென்ஷனாக்கும்...ஆனால் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் பேய்ப்படங்களில் வரும் பேய்களால், அந்நாட்டு அரசே மிரண்டு போய் டென்ஷனாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக பேய்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள அழகிய தீவுகளுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பேய்கள் துரத்துவது போலவும், அங்குள்ள இயற்கையே பேய்களாக மாறி தாக்குவது போலவும் படங்களில் சித்தரிக்கப்பட்டன.

துவக்கத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்நாட்டு அரசு, இப்போது கலங்கிப்போய உள்ளது. காரணம், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை சார்பில் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டனர்.

இறுதியில், அந்நாட்டு சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு, அங்கு வெளியாகும் பேய்ப் படங்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள இயற்கை அழகையும், மனிதர்களையும் பேய்களாக சித்தரித்து, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது போல தொடர்ந்து திரைப்படங்கள் காண்பிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளை மர்மப் பிரதேசங்களாக சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அச்சம் கொள்ள வைத்து வருவாயைக் கெடுக்கும் பேய்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை என்ன செய்யலாம் என்று தற்போது அந்நாட்டு யோசித்து வருகிறது.

மேலும் பல சுவையான, வியப்பில் ஆழ்த்தும் தகவல்களுக்கு...அம்புலிமாமா செல்லவும்
புகைப்படம்: நன்றி Two Barking Dogs

TUESDAY, OCTOBER 13, 2009


1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்கள்?

இப்போதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது தீபாவளி எப்படியிருந்திருக்கும்? 1950ம் ஆண்டுகளில்? 1960ம் ஆண்டுகளில்...? இந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, அந்தந்த ஆண்டுகளில் வெளியான அம்புலிமாமாவின் தீபாவளி மலர் அட்டைப் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...

இது அம்புலிமாமாவின் முதல் தீபாவளி மலர்....1947ம் ஆண்டு!

இது 1948ம் ஆண்டு தீபாவளி...



1950ம் ஆண்டுகள்...














அம்புலிமாமாவின் அனைத்து பழைய இதழ்களையும் பார்க்க,படிக்க இங்கு செல்லவும்!

ஞாயிறு, 22 மே, 2016

அந்த மூன்று நாட்கள்

எக்ஸைல் 1984
- நடேசன்
எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த noel Nadesan-1அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம்.

எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது.
வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக இருந்து. சூளைமேடு நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சலும் புகையும் மேலே எழுந்து 144 இலக்க முதல் மாடியில் இருந்த எமது காது, மூக்குத் துவாரங்களை மோதி அடைந்தன.

1985 ஜூலை சென்னை மரினா கடற்கரையில் தொடர் உண்ணாவிரம் நடத்த ஈழத்து இயக்கங்கள் தீர்மானித்தன. அதற்கு ஓருங்கிணைப்பாளராக தமிழ் மக்கள் விடுதலைக் கழக வாசுதேவா, என்னை முன்மொழிய விடுதலைப்புலிகளின் யோகியால் கைவிரல் மட்டும் உயர்த்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது

ஏற்கனவே ஈபி ஆர் எல் எவ் தலைவர் பத்மநாபா இப்படி தொடர் உண்ணாவிரம் நடத்த வேண்டும் என என்னிடம் பிரஸ்தாபித்திருந்தார். அக்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மற்றய இயக்கங்கள் சேர்ந்து இருந்த காலம். தங்களது ஒற்றுமையை வெளிக்காட்ட அவர்கள் செய்யும் அரசியல் முயற்சி என நினைத்து மறந்திருந்தேன்

இதில் நான் முன் தள்ளுப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் ஆதரவாளர் டாக்டர் ஜெயகுலராஜா இருந்தார். அவர் எமது நிறுவனத்தின தலைவர் மடடுமல்ல வயதாலும் பெரியவர். அத்துடன் வெலிக்கடை பின்பு மட்டக்கிளப்பு சிறைகளில் இருந்தவர்.
அவரை விட்டு என்னை பிரேரித்ததை மற்றய இயக்கங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

அக்காலத்தில் இயக்கங்கள் சேர்ந்திருந்தாலும் தங்களுக்குள் செல்லமாக ஒருவரை ஒருவர் சுட்டபடி இருந்தவர்கள். எல்லோரும் ஏகமனதாக ஒருவனை அங்கீகரிக்கும்போது என்னுள் பெருமைக்குப் பதிலாக பயம் ஏற்பட்டது. ஒருவிதத்தில் கிடாய் ஆட்டிற்கு மாலை போடுகிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டது.

மனத்தைத் திறந்து நினைத்ததை வெளியே சொல்ல முடியாது. இயக்க ஒற்றுமைகள் பற்றி பலரிடம் நான் வலியுறுத்தியவன். வெலிகடையில் இறந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்ணாவிரதம் இருந்து ஏற்படுத்துவது நல்ல காரியம் என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதுவரையும் மருத்துவ விடயங்களில் ஈடுபடும்போது மனத்தில் எதுவித தயக்கமில்லை . இந்த விடயம் உண்ணாவிரதம் என்று சொன்னாலும் ஒரு அரசியல் பிரச்சாரம். அதுவும் தமிழக மக்களிடையே ஈழத்தின் தேவையை எடுத்து செல்லும் வழி என்பது புரிந்தால் தயக்கம் ஏற்பட்டது.

வேறு வழியில்லை. ஏற்றுக் கொண்டேன்

அதற்கான வழிமுறைகள் பேசப்பட்டன. இந்தியக் கட்சிகளின் அரசியல் தலைவர்களைக் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் பண்ணுவது அதேபோல் தமிழ் இயக்கத் தலைவர்கள் பிரமுகர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. வேலைகள் பிரித்தளிக்கப்பட்டது என்னைப் பொறுத்தவரை அதிக வேலை இருக்கவில்லை. வருபவர்களை வரவேற்பது அவர்களுடன் பேசுவதும் கொடுக்கப்பட்டது.

எந்த இயக்கமும் நேரடியாக உண்ணாவிரதத்திற்கு சம்பந்தப்படவில்லை.

சிலகாலம் முன்பாக யாழ்பாணத்தில் உண்ணாவிரதத்தை குழப்பிய விடுதலைப்புலிகள், உண்ணாவிரமிருந்தவர்களை இந்தியாவுக்கு தூக்கி வந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் உண்ணாவிரதம் தங்களது வழியல்ல எனக்காட்ட வேண்டும். இலை குழை எங்கள் உணவு அல்ல. இது சாதாரண ஈழ மக்களின். உண்ணாவிரதம். எல்லாருக்கும் பொதுவானது. இயக்க அரசியல் இல்லாதது எனக் காட்டவேண்டியிருந்தது.

மரினா கடற்கரையில் தெருவிற்கும் மணற்பிரதேசத்திற்கும் இடையில் புல் முளைத்த பிரதேசத்தில் பந்தல் போட்டு பானர் கட்டி மூன்று நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத நிகழ்சிக்கு நான் நேரடியாக பல தலைவர்களை சென்று அழைத்தேன். என் நினைவில் இருப்பவர்கள் அக்கால எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வக்கீலாக இருந்த வானமாமலை போன்ற கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்.

அமிர்தலிங்கம் தம்பதியினரை மிகவும் நினைவில் இருப்பதன் காரணம் வீடு சென்ற அழைத்தபோது அவர்கள் வருவோம் என்று சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வந்துவிட்டார்கள் மற்றயவர்கள் எல்லோரும் சொல்லிய நேரத்திற்கு பிந்தியே வந்தார்கள்.

கத்தரி வெயில் எரிக்கும் பகல் முழுவதும் உண்ணாவிரதம் நடக்கும். குறைந்த பட்சம் நூறு பேர்களாவது பந்தலில் எப்போதும் இருப்பார்கள். இயக்கத்தினர்கள் தமிழநாட்டு பிரமுகர்கள் பலர் வந்து அமர்ந்து பேசி செல்லுவார்கள்.

வாழ்கையில் விரதமே இருக்காத நான் உண்ணாவிரமிருந்த நாட்கள். பெரும்பாலானவர்கள் வந்து சிலமணி நேரமிருந்து போவதால் ஒரு அடையாள உண்ணாவிரதம் எனத்தான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்தபடி தமிழ்நாட்டு பத்திரிகைள் எல்லாம் படத்துடன் பிரசுரித்தன.

இந்த நிகழ்சியை இலங்கை ஊடகங்கள் பதிவு செய்தார்களா எனத் தெரியாத போதும் ஈழவிடுதலை இயக்கங்கள் ராஜீவ்காந்தி, ரொமேஸ் பண்டாரி போன்றவர்கள் முன்பாக கட்டாயமாக ஓன்றாக கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூன்று நாட்கள் தன்னார்வமாக இருந்தததனால் உண்ணாவிரதம் இருந்த நாட்கள் முக்கியமானது.

30 வருடங்கள் பின்பாக இந்த மூன்று நாட்களில் எனது மனத்தில் நிற்கும் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக கருதுகிறேன்.
உண்ணாவிரதத்தின் முதல்நாள் என்னை நோக்கி மஞ்சள் அரைக்கை சட்டையும் அழகான மீசையும் கொண்ட சிவந்த நிறமான ஒருவர் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்தவிட்டு பக்கத்தில் நின்ற வாசுதேவாவைப் பார்தேன்

‘இவர்தான் உமா மகேஸ்வரன்’ என்றார்.
uma maheswaran
நான் அது வரையிலும் உமாவை நேரில் பார்த்ததில்லை இலங்கையில் இருந்தபோது படங்களில் பார்த்திருக்கிறேன்.
அவருடன் கை குலுக்கியது எனக்குள் சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.

அக்காலத்தில் தமிழர் மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த கொலைகளை கேள்விப்பட்டிருநதேன் அதைவிட எனது மனைவியின் உறவினர் மகன் உமாவின மெய்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அவரது பெற்றோர்கள் இயக்கத்தின் உட்கொலைகளினால் எப்போது மகனை யார் மூலம் இயக்கத்தில் இருந்து கழட்டி கனடா அனுப்பலாம் என்று பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு அவர்கள் பணம் தருவதற்கு தயாராக இருந்ததும் எனக்குத் தெரியும். இப்படியான விடயங்களால், காணாமலே உமாவின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

உமா பார்பதற்கு அழகான மனிதர் மடடுமல்ல அவரது தோற்றம் தன்னம்பிக்கையை காட்டும் தன்மையுள்ளது. தலைமைக்குத் தேவையான கவர்ச்சி உள்ள மனிதர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் அமிர்தலிஙகம் அவர்களுக்கு இருந்த அதே கவர்ச்சி உமாவிடம் இருந்தது. தோற்றத்தில் அப்படியானவர்கள் இன்னமும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் நான் காணவில்லை ஆனால் அவர்கள் இருவரும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.

உமா மகேஸ்வரன் மீது ஏராளமானவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் 15000 இளைஞர்கள் அவரை நம்பினார்கள். அதில் 6000 மேல் ஆயுதப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவரிடம் சிறந்த தளபதிகளாகவும் இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருந்தவர்கள் பலரை தனிப்பட்டரீதியில் அறிந்தவன். தமிழ்நாட்டில் முதல்வர் எம் ஜி ஆர் கூட நம்பிக்கை வைத்திருந்தார். தன்னிடம் இருந்த சிறந்த விதை நெல்லை சோறாக்கிய மனிதர் என்பது எனது கருத்து. சமீபத்தில் அவரது இயக்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை சந்தித்தபோது அவர் சொல்லிய விடயம் ஆச்சரியம் அளிக்கவில்லை.

அவர் சொன்னார் “ தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய கூட்டம நடக்கும்போது எவரும் குறிப்பு எடுப்பதில்லை காரணம் குறிப்பு லீக்காகிவிடும் என்பதால். ஆனால் உமா எழுதும்போது ஒரு பக்கத்தில் மற்றவர்கள் கருத்தை செவி மடுத்து எழுதுவார்.
ஒரு நாள் மற்றய அங்கத்தவர் சொன்னார் இன்றைக்குப் பார் இந்த குறிப்புக் கடுதாசிக்கு என்ன நடக்கிறது என்று.
நான் தொடர்ந்து உமாவைப் பார்த்தபோது அந்த கடுதாசி ஆரம்பத்தில் மடிக்கப்பட்டது பின்பு வெளியே செல்லும்போது மிகவும் கசக்கப்பட்டு, மெதுவாக நடைபாதையில் எறியப்பட்டது’

இந்த விடயத்தை மனக்கண்ணில் கொண்டுவர வேண்டுமா?

கற்பனை தேவையில்லை

சமிபத்தில் இராஜவரோதயம் சம்பந்தன் பத்திரிகையை பார்த்தபடி சிறையில் வாடும் கைதிகளை பற்றி பேசியது முகநூலில் உள்ளது

நாம் நம்பிய தமிழ்த் தலைவர்கள் பெயர் மாறினாலும் ஒரேமாதிரியான நிழல்கள் போல் தொடர்வதை காட்டவே இந்த சம்பவத்தைக்குறிப்பிட்டேன்.

மனிதர்களின் நிழல்களில் உருவ வித்தியாசம் தெரிவதில்லைத்தானே?

உண்ணாவிரதத்தின் போது முதல் இரண்டு நாளிலும் விடுதலைப்புலி இயக்கத்தினரில் முக்கியமானவர்கள் வரவில்லை என்பது ஒரு குறையாகத் தெரிந்தது. அவர்களும் ஏற்றுக்கொண்டே இந்த உண்ணவிரதம் அரங்கேறியது

தமிழகத்தில் இருந்த காலத்தில் எப்பொழுதும் சிலர் என்னுடன் இருப்பார்கள் அவர்கள் இயக்கத்தவர்களாகவோ இல்லை மருத்துவ நிலயத்தில் என்னுடன வேலை செய்பவர்களாகவே இருக்கும்.
மூன்றாம் நாள் மாலை ஏதோ வேலை செய்து கொணடிருந்த

என்னிடம் சில மட்டக்கிளப்பு நண்பர்கள் ‘அண்ணே காசியண்ணை வந்திருக்கிறார்’

‘சரி அவரை கூட்டிக்கொண்டு வந்து பந்தலில் இருந்துங்கோ. நான் வந்து பேசுகிறேன்’ என்kasi ananthanறு சொல்லி விட்டு, மீண்டும் அவர்களிடம் சொன்னேன் விடுதலைப்புலிகளும் சேர்ந்து கூட்டாக இருக்கிறபோது அந்த வவுனியாவில் ஏன் ஈபி ஆர் எல் எவ் தோழர் ஒருவரை சுட்டார்கள் எனக்கேள். அவர்களும் போராடத்தானே வந்தார்கள்?’

அக்காலத்தில் வவுனியாவில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்ற றீகன் என்ற தோழர் ஒருவர் எதுவித காரணமும் இன்றி விடுதலைப்புலிகளால் சுடப்படடிருந்தார்.

மாலை நேரமானதால் வங்காளகுடாவின் அலை மோதுவதற்கு போட்டியாக கடற்கரையில் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். எங்களையும் ஆவலுடன் பார்த்தார்கள். அவர்கள் தலைவர்கள் செய்து கொண்டிருந்த விடயங்களை ஈழத்தவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்திருக்கும்.

எனது பொறுமையும் கடைசி நாளானதால் குறைந்து விட்டது.
வேலைகள் பல முடிக்கவேண்டும் என்பதால் பரபரப்படைந்தேன்.

வந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரம் வந்து விட்டது பந்தலை கலைக்கவேண்டுமென்பதாலும் என பல விடயங்கள் மனத்தில் இருந்ததால் நம்நாட்டு புரட்சிக் கவிஞரை மறந்துவிட்டேன்.

எல்லா விடயங்கள் முடித்தபின்பு அந்த மட்டக்கிளப்பு நண்பர்களிடம் கேட்டேன் ‘என்ன நடந்தது கவிஞர் காசியானந்தன் வரவில்லையா?’

‘அண்ணே நீங்க என்னை வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை சுட்டது என் எனக் கேட்க சொன்னதால் நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் தம்பியிடம் கேட்டு சொல்கிறேன்’ என வந்த ஓட்டோவில் அடையாறு திரும்பிவிட்டார்’ என சிரித்தார்கள்.

பந்தலுக்கு வராமல் சென்ற காசியானந்தனை 2002ல் எஸ் போ நடத்திய சென்னை இலக்கிய மகாநாட்டில் எனது பக்கத்து சீட்டில் இருந்தபோது இன்னும் தம்பியிடம் வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை ஏன் சுட்டது என்று கேட்கவில்லையா எனக் கேட்க நினைத்தேன்.

இரண்டு விடயங்கள் என்னைத் தடுத்தன.

பக்கத்தில் இருந்த மனைவி மற்றது, அந்த கூட்டத்தில் இருந்து தம்பிடம் கேட்க என எழுந்துபோனால் எனது வண்ணாத்திக்குளத்தை பதிப்பித்த எஸ்போவிற்கு மனம் குழம்பி விடும் என்பதால் அவர் பக்கமே திருப்பாமல் மூன்று மணித்தியாலம இருந்தேன்.

நான் நினைக்கிறேன் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டால் ஆனால் ‘அதற்குள் தம்பி 2009 மே18 ல் போய்விட்டது’ எனப் பதில் வரலாம

புதன், 27 ஏப்ரல், 2016

புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்..



சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.


சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார். துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார். தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.















































கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி

பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது
உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

சரி அப்போ இந்த பதிவு எதுக்கென்று கேட்கிறீங்களா? பாதுகாப்பு இந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறதால இனிமேல் ஹக்கிங்கோ ஸ்பாம் பிரச்சினையோ குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவம் அந்த நினைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. நேற்று திடீரென்று நண்பரிடம் இருந்து வந்த Message இல் is this your mom என்ற தகவலுடன் ஒரு பேஸ்புக் Application இணைப்பு வந்திருந்தது. அதை கிளிக் செய்தபோது ஒரு Facebook Application இற்கு தேவையற்ற விதத்தில் எனது பேஸ்புக் கணக்கின் பெரும்பாலான உரிமைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியை கோரியது. சந்தேகப்பட்டு குறிப்பிட்ட அந்த Message ஐ அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த Message ஐ தான் அனுப்பவில்லை என்று கூறினார். இணையத்தில் தேடிப்பார்த்தபொழுது அது ஸ்பாம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மீண்டும் முன்னரைப்போலவே ஒரு சில ஸ்பாம்/ வைரஸ்கள், பேஸ்புக்கின் சில பாதுகாப்பு ஓட்டைகளை பயன்படுத்தி உலாவத்தொடங்கியுள்ளன. ஆகவே முற்றுமுழுதாக பேஸ்புக்கை நம்பிக்கொண்டிருக்காமல் எமக்கான பாதுகாப்பை நாமே ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது.


வைரஸ் / ஸ்பாம்
என்னை பொறுத்தவரை ஹக்கிங்கை விட இந்த ஸ்பாம் ஆபத்தானது. ஹக்கிங்கால் உங்கள் கணக்கு மட்டும்தான் பாதிக்கப்படும். ஆனால் ஸ்பாம் உங்களை பாதிப்பதோடு உங்கள் மூலமாக உங்கள் நண்பர்களையும் அவர்கள் மூலமாக அவர்களுடைய நண்பர்களையும் என தொடர்ச்சியாக பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் இப்படியான ஸ்பாம் இனால் பாதிக்கப்பட்டால், அந்த ஸ்பாம் Automatic ஆக உங்களுடைய பெயரில் உங்கள் நண்பர்களின் Wall இல் செய்திகளை பகிர்கிறது. உங்கள் நண்பரோ நீங்கள்தான் அந்த செய்தியை பகிர்ந்ததாக நினைத்து கிளிக் பண்ணி செல்வார். இது தொடர்ச்சியாக இப்படியே பரவிக்கொண்டு செல்லும்

பேஸ்புக் Timeline இற்கு மாற்றம்பெற முன்னர் இத்தகைய இணைப்புக்களை உங்கள் நண்பர்களின் Wall இலோ அல்லது உங்களது Wall இலோ அவதானித்திருப்பீர்கள். பலர் இதுபற்றி அறிந்திருந்தாலும், இணைப்புக்கள் மாத்திரமே ஸ்பாம் என கருதியிருந்தனர். ஆனால் இதைவிட போலியான பேஸ்புக் குழும இணைப்புக்கள், போலி Fan Page இணைப்புக்கள் என பல வடிவங்களில் பரவி வந்தது.

மேலுள்ள படத்தில் உள்ளதை போன்று விநோதமான, பார்க்கத்தூண்டும் செய்திகளுடனான இணைப்புக்களே உங்கள், உங்கள் நண்பர்களது Wall களில் பகிரப்படுகிறது. இவற்றை கிளிக் பண்ணினால் இருவிதமான செயற்பாடுகள் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட சில இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகின்றது. பின்னர் உங்களுக்கு தெரியாமலே உங்கள் தகவல்களை திருடிக்கொள்கிறது. சில இணைப்புக்கள் உங்களை பேஸ்புக் தளத்தை விட்டு வேறோர் ஆபத்தான தளத்திற்கு எடுத்து செல்கிறது.

அடுத்து பேஸ்புக்கில் முக்கியமானதொரு ஸ்பாம் Clickjacking அல்லது Likejacking எனப்படும் முறை. மேற்கூறப்பட்டதுபோன்ற சில இணைப்புக்களை கிளிக் பண்ணும்போது உங்களை போலியானதொரு Facebook Page இற்கு எடுத்து செல்லப்படுகிறது. நீங்கள் தற்செயலாக அந்த பக்கத்தில் எங்கேயாவது கிளிக் பண்ண நேர்ந்தால் உடனடியாக அந்த கிளிக் Like ஆக மாற்றப்படுகிறது. இதன் மூலம் உங்கள் கணக்கிற்கு ஸ்பாம் பரப்பப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் சார்பில் தகவல் அனுப்புகிறது. 

Fake Pages


பேஸ்புக்கில் எமது நட்பு வட்டத்தை தாண்டி ஏனையவர்களோடு தொடர்பினை பேணுவதற்கு Facebook Page ஒரு சிறந்த வழி. கூடவே ஸ்பாம் பரப்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழி என்பதுதான் கவலைக்குரிய விடயம். இப்படியான போலி பக்கங்களை எப்படி அடையாளம் காண்பது? மேலே உள்ள படத்தை பாருங்கள். இது ஒரு போலி பக்கம். ஏதாவது ஒரு பேஸ்புக் பக்கத்தில் பார்க்கத்தூண்டும் செய்தியின் சாராம்சத்தை தந்து Like பண்ணினால்தான் மிகுதியை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தால் 100% அது போலி பக்கம்தான்.

இப்படியான பக்கங்களை நீங்கள் Like பண்ண முயற்சிக்கும்போது உங்கள் பேஸ்புக் கணக்கின் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகிறது. விடயம் அறியாமல் நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் தகவல்கள் திருட்டு போவதுடன் உங்கள் சார்பில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

Facebook Chat ஸ்பாம்


இதுதான் எனக்கு நடந்த சம்பவம். நண்பர் வட்டத்தில் ஸ்பாம் இனை பரப்புவதற்கு சாட்டிங் ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம். Wall இல் பகிரப்படும் இணைப்புக்களை விட சாட் மூலம் பகிரப்படும் இணைப்புக்கள் அதிகம் கிளிக் பண்ணப்படுகின்றன என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான காரணம் Wall Sharing இலும் பார்க்க Chatting தனிப்பட்டு விளங்குவதும், குறிப்பிட்ட அந்த நண்பர் ஆன்லைனில் இருக்கும்போதே ஸ்பாம் இணைப்பு வருவதால் அவர்தான் அனுப்பியிருக்கவேண்டும் என்ற தோற்றத்தை உண்டாக்குவதுமே. இதற்கு உடனடி தீர்வு, இப்படி வரும் இணைப்புக்களை கிளிக் பண்ணமுதல் அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு அந்த இணைப்பு தொடர்பாக விசாரியுங்கள், அவர்தன் அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லை எனில் அந்த இணைப்பை அகற்றிவிடுங்கள்.

சர்ச்சைக்குரிய தலைப்புடனான ஆக்கங்கள்

“Something Unbelievable is here, and I can’t believe they let it on the Internet!”  சில சமயங்களில் இதுபோன்ற தகவலுடன் கூடிய ஆக்கம் ஒன்றிற்கான இணைப்பினை கண்டிருப்பீர்கள். இதுகூட ஒரு வகை ஸ்பாம் தான். ஆனால் இது ஏனையவற்றை விட கொஞ்சம் ஆபத்து கூடியது. காரணம் இந்த இணைப்பை கிளிக் செய்தாலே உங்கள் பெயரில் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

இதுபோன்ற இணைப்புக்களை காணும்போது அந்த இணைப்பின் மேல் Mouse Cursor ஐ கொண்டு செல்லுங்கள்( கிளிக் பண்ணவேண்டாம்). கொண்டு சென்றதும் இணைய உலாவியின் கீழ் Bar இனை பாருங்கள். அதில் அந்த இணைப்பிற்கான உண்மையான URL காட்டப்படும். பெரும்பாலும் அந்த URL ஆனது Short செய்யப்பட்ட URL ஆகவே இருக்கும். உதாரணமாக bit.ly, tinyurl.com, t.co போன்ற URL ஆக இருக்கும். பெருமபாலான Short பண்ணப்பட்ட இணைப்புக்கள் பாதுகாப்பானவை அல்ல.

திங்கள், 11 ஏப்ரல், 2016

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு


இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.  


தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க




ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள். 
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.

நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.

புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது. 

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார். 

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். 

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம். 

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க